சனி, 19 செப்டம்பர், 2015

பிரம தேவனின் ஒரு தலை கிள்ளப்பட்டதற்கு காரணம்

பிரம தேவனின் ஒரு தலை கிள்ளப்பட்டதற்கு காரணம்
பிரம்மா சகல சிருஷ்டிக்கும் வேதத்திற்கும் கர்த்தர். மனைவி சரஸ்வதி. ஆயுதம்-பாசம், கொடி-மறை, வாகனம்-அன்னம் முதலிய ஆசனம்-தாமரை, பொன்மேனியுடையவர் இந்த பிரமம் முதலில் 5 முகத்தோடிருந்தார். பிறகு நான்முகம் ஆனார். ஓர் முகம் இல்லாமைக்குக் காரணம் பல வாறு கூறப்படுகிறது.
தேவர் கூடிச்சிவனுக்குக் கல்யாணம் செய்யு முன் பிரமன் அக்கலியாணப் பெண்ணாகிய பார்வதியைக் காண நினைத்தார். அவள் பெருவிரலை மாத்திரம் காணமுடிந்தது. உடனே காமம் தலைக்கேறிற்று. விந்து வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அதைப் பெருவிரலாலே தேய்த்தார். கோபி சந்தனப்பார்ப்பனர் உண் டாயினர்.
இருவிரலால் தேய்த்தார்; நாமக்காரப் பார்ப்பனர் உண் டாயினர். மூன்று விரலால் தேய்த்தார். விபூதிப் பார்ப்பனர் உண்டாயினர். அனைவரும் வேதகோஷம் செய்வது கேட்ட சிவன் யோசிக்க-பிரமனின் அயோக்கியத்தனம் தெரிந்தது. உடனே சிவன் பிரமனின் 5 தலையில் ஒரு தலையைக் கிள்ளினார்.
எவற்றையும் ஆக்கி அழிக்கும் ஒரு பெரும்பொருளின் அம்ஸமென்று அவ் வரலாற்றிற் குறிக்கப்படும் பிரமனை ஒப்புக்கொள்வது எங்ஙனம்? மனிதரிலும் கடைப்பட்ட மனிதனும் செய்தலில்லாத செயல்கள் இவ் வரலாற்றிற் குறிக்கப்படுகிறது. மக்களின் அறிவை மாய்க்கச்சிறிதும் யோக்கியப் பொறுப்பற்றவர்களால் இது உண்டு பண்ணப்பட்டி ருக்கிறது. இதுவன்றிப் பிரமனின் ஒரு தலை பறிபோனதற்கு மற்றொரு வரலாறும் வரைந்துள்ளனர்.
சிவனுக்கும் பிரமாவுக்கும் 5 தலைகள் இருந்ததால் சில வேளைகளில் இவர் மனைவிமார் அடையாளம் கண்டறியக்கூட வில்லை. ஆதலால் சிவன் பிரமனின் ஒரு தலையைக் கிள்ளினார். என்ன ஆபாசப்பொய்! பார்வதியிம் - சரஸ்வதியும் தம் கணவர் களை அடையாளம் கண்டறிய கூடவில்லையா?
அனைத்தும் சிருஷ்டித்த பிரமன் சிவனல் கிள்ளப்பட்ட தலையைச் சிருஷ்டிக்க முடியாதா? ஜீவர்கள் கதி இன்னசமயம் இவ்வாறு ஆகும் என்று தலையெழுத்தெழுதும் பிரமாவின் தலை கிள்ளப்பட்டது. இப்படி இவர் தலையில் எழுதியது யார்?
இதுவன்றிப் பிரமன் தலை காலியானதற்கு மற்றொரு கதை.
பிரமனின் மகள் ஊர்வசி, மகள் மேல் தகப்பன் காதல் கொண்டான். ஊர்வசி தந்தையைப் புணர நாணினள். ஆனால் இருவரும் மான்களின் உருவங்கொண்டு கலந்தனர். இந்த ஆபாச சேர்க்கையைக் கண்ட சிவன் பிரமன் தலையில் ஒன்றை வெட்டினான். இதனால் பிரமதேவன் யோக்கியதை நன்றய் விளங்கும்.
மக்களைச் சிருஷ்டித்த மகா பெரியாரின் யோக்கியதை இவ்வாறனால் பிறருக்குக் கேட்பானேன்? காமப்பித்துடைய மூடர் கட்டிவிட்ட கட்டுகளை நம்மவர் இன்னும் எத்தனை நாள் விட்டுவைத்திருக்க முடியும்? இதுவன்றி இன்னொரு காரணம்:-
பிரம்மாவுக்கும், சிவனுக்கும் சண்டை ஏற்பட்டது. நான் தான் உன்னைச் சிருஷ்டித்தேன் என்று பிரமன் சொன்னதால் சிவன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டினார். மற்றெல்லாவற்றிலும் இது அதிக வேடிக்கை! நன்று. நான் என்னும் அகந்தையும் இவர்களை விட்டபாடில்லை.
கர்வங் காரணமாகச் சண்டையும் ஒன்றா? பிரமனும், சிவனும் சேர்ந்து உலகு உய்ய நல்ல பாடங் காட்டியருளு கின்றனர். நன்று! அனைத்தையும் சிருஷ்டித்ததாய்ச் சொல்ல ஓர் பிரமனைச் சிருஷ்டிப்பானேன்? அப்பிரமாவுக்கு 5 முகம் என்பா னேன்? பிறகு நான்கு முகமாக்குவானேன்? ஒரு முகம் தீர்ந்ததற்கு கதை வளர்ப்பானேன்? அந்தக்கதையையும் பலவிதமாக ஒன்றுக்கொன்று முரண்பட உளறி வைப்பானேன்?
இதையெல்லாம் சொல்லி மக்களிடம் போர் கிளப்புவானேன்? இந்த புராணங்களைச் சொல்லும் சோம்பேறிகட்கு வஞ்சகர்கட்குப் பணத்தை விரயம் செய்யும் படி விடுவானேன்? இவைகளால் மக்கள் இந்நாள் மட்டும் அடைந்த பயன் என்ன? இனித்தான் என்னபயன் ஏற்படக்கூடும் என்பதை வாசகர்கள் யோசிக்க! அதனோடு இந்த ஆபாச நடனத்தையுடைய பிரமன் தந்ததாய்ச் சொல்லும் வேதம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதையும் யோசிக்க!
(புதுவை முரசு, 1930)
-விடுதலை,18.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக