காஞ்சீபுரத்தில் கச்சீஸ்வரர் கோவிலென்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவில் எனத் தெரிகிறது. இக்கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன.
கோவில் உள்மண்டபத் திலும்` சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற் றொரு ஆதாரமிருக்கிறது. அஃதாவது: இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.
கச்சீஸ்வரர் கோவிலுக்கு நான் சென்று பார்த்த போது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண் டேன், கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரயபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோவில் என்னும் இராஜ சிம்மேச்சுரம் ஆதியில் புத்தர் கோவி லாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோவிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப் படுகின்றன.
காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலை யில் உள்ளதுபோன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவ ரின் கீழே வைத்துக் கட்டப்பட்டி ருக்கிறது.
காஞ்சீபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோவில் என்னும் புத்தர் கோவில் இருந்தது. அதற்கு மானியமாக செங் கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோவில் என்னும் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன; அவை, முன்பு காஞ்சி மேட்டுத் தெருவில் இருந்தனவாம்.
காமாட்சியம்மன் கோவில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்தவிக்கிரகங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தர் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோவிலில் இருந்த வேறு புத்தவிக்கிரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டு களுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.
காமாட்சி யம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக் கிரகம் ஒன்று இப்போதும் நன்னி லையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் காட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங் களைப் புதைத்து இருக்கிறார்களாம்.
(நூல்: பவுத்தமும் தமிழும் மயிலை சீனிவேங்கடசாமி பக்கம் 53,54,55)
-விடுதலை ஞா.ம.,6.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக