வெள்ளி, 31 மார்ச், 2017

பெரியபுராணம்  (ஈ.வெ.ரா.)


02-10-1943-  குடிஅரசிலிருந்து



பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக் கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்கு மானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களையெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்பு கிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண்மையா?    
உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?    
சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதைவிட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனைகளா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப்பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலாமிருகமும் நிஜமாய்த் தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன் மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ் வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங் களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?

முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரியபுராண சிவன் இருக்கிறாரா?
சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?

அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வைணவர், மாத் துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா?
-விடுதலை,31.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக