ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மார்கழி மடமைகள்! சொர்க்கவாசல் மகிமை? - தந்தை பெரியார்


மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே _- அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் _- சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் -_ அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
* * *
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை?
பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றான். அதற்கு பத்மாசூரன், நான் யார் தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும் என்றானாம்.
சிவனும், அவ்வளவுதானே! அளித்தேன் போ! என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங்களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அதற்கு விஷ்ணுவானவன், அதுதானா பிரமாதம், இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன் என்று கூறி, அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்துப் பத்மாசூரன் முன் சென்று நின்றான்.
அந்த மோகினிப் பெண்ணைக் கண்ட அசுரன், அவளைக் கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள், நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கிறாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டு வா என்று கூறினான்.
அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும்போது, தம் தலையில் கை வைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான்.  அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான்.
விஷ்ணு சிவனிடம் சென்று, பயத்தை விடுத்து வெளியே வாருங்கள்! நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்றுவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.
அதற்கு சிவன், எப்படிப் பெண் வேடம் போட்டுச் சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள் என்றான். விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான். அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டே ஓட, இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட, இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.
இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு.
எனவே, இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம் கூட வெட்கப்பட வேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன். இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.
-உண்மை இதழ்,16-31.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக