திங்கள், 30 அக்டோபர், 2017

மோகினியில் கரைந்தாள் காயத்ரி


மா.பால்ராசேந்திரம்



 

‘ஆன்மீகக் கோயில்கள்’ என்ற பெயரில் 2017 ஆகஸ்டு 6 ‘தினமலர்’ வாரமலரில் வெளிவந்த கருநாடக மாநிலம் கட்டீல் துர்கா பரமேஸ்வரியின் பெருமைக்காகக் கூறப்பட்டக் கதைகளுக்குச் சில விளக்கங்களும், பகுத்தறிவு வினாக்களுமே இக்கட்டுரை.

அருணாசுரன் ஓர் அரக்கன். அவன் முனிவர்களின் யாகங்களுக்கு இடையூறு விளைவித்தான். மிருகவதை செய்து குத்தாட்டம் போட்டப் புரோகிதக்குடுமிகள் மீது இரக்கங்காட்டாதவர் திராவிடர். ஆகவே, அவர்கள் அரக்கர்கள், அசுரர்கள், தாசர்கள், தஸ்யூக்கன் எனப் பார்ப்பனர்களால் இழித்துச் சுட்டப்பட்டனர்.

திரேதாயுகம், துவாபரயுகம் எனும் இரு யுகங்களிலும் கவட்டையை விரித்து ஆட்டம் போட்ட ஆரியக் கூட்டத்தின் செயல் கலியுகத்தில் சற்றே குறையத் தொடங்கியது. திராவிடர்கள் சிறிதே விழிப்புக் கொள்ளத் தொடங்கினர். பொறுக்குமா ஆரியம்? ‘அரக்கரின் அக்கிரமம்’, என்று ஓவெனக் கதறிக் கதைகளை இட்டுக்கட்டி எழுதத் தொடங்கியது - என்னவென்று?

‘அரக்கன் அருணாசுரன், தானே இறைவனென்று சொல்லியும், இறைவனை அவமதித்ததாலுமே பஞ்சம், பசி மேலோங்கியது’ என்று எழுதியது.

நம் மக்களைப் பொதுநலத்திற்குக் கேடு விளைவிப்பவர்களென்று திட்டமிட்டுப் பரப்பியவர்கள் பார்ப்பனர்கள். ‘எல்லாம் அவன் செயல்’ என்போரே! பஞ்சம், பசி, பட்டினி யார் செயலாகும்? யாரோ ஒருவர் அவமதித்தார் என்பதற்காகத் தன்னையே நம்பி வாழும் மக்களை இப்படிப்பட்டத் துன்பத்திற்கு ஆளாக்கலாமா? ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பாரே வள்ளுவப் பெருமகனார். எதன் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளாதவராகத் தனக்குரிய கடமையைச் செய்வதுதானே இறையின் செயலாகும்? அதனை விடுத்துத் தனியொருவனுக்காக மொத்த மக்களையும் வருத்திக் கொல்வது தனக்குவமை இல்லாததுகள் செய்யும் செயலாகுமா? அறிவுலகம் இதனை ஒப்பலாமா? அய்யா கேட்கிறார்.
“இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்கிறவனைவிட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?” என்று.

அசுரன் குணத்தை மாற்ற இறைவனால் இயலவில்லை என்னசெய்வது?

‘ஜாபாலி முனிவர் காயத்ரி மந்திரத்தை உபதேசித்து அரக்கனைப் புனிதப்படுத்த முயன்றார். ஆனால், அது அவனை மேலும் அக்கிரமக்காரனாக்கியது’ எனப் போகிறது கதை. ‘காயத்ரி மந்திரம் நினைத்ததை யெல்லாம் தரும்’ எனக்கூறுவோரின் பதில் என்ன?

தினமலர் 8.8.2017 பக்திமலர் கூறுவதைப் பார்ப்போம். ‘காயத்திரி மந்திரம் ஜபிப்பதால், கம்பீரத்தோற்றம், தரமான பேச்சு, வறுமை, குறைநீக்குதல், பாதுகாப்பு, கண்ணில் அறிவொளி வீசுதல், அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்குதல், நரம்புகளும் சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படுதல், எந்தச் சூழுலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுதல் என நற்பயன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையைப் பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினைத் தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரியவரும். எனவே, ‘ஓம் பூர்: புவ : ஸ்வ : தத் ஸவிதுர் வரோண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோத: ப்ரசோத யாத்’ எனும் நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்’, என்கிறது. இதைத்தானே உச்சரித்தான் அருணாசுரன்? பரமாத்மாவால் அசுரனின் புத்தியைப் பார்ப்பனப் பரதேசிகள் நினைத்தவாறு மாற்றம் செய்ய முடியவில்லையே! அன்றைக்குக் கவைக்குதவாது போன காயத்ரியைத்தான் இன்றைக்கும் பாழாய்ப்போகிற பக்தனை நாளும் ஓதிக் கொண்டிருங்கள்; நாங்கள் பண்டி புடைத்துப் பணத்தில் திளைத்தப் பெருவாழ்வு வாழ்கிறோம் என்று போக்குக்காட்டுகிறது ஆரியம். நாம் ஏமாளியாய்த் திரிவதா? வாழப் பிறந்தவன் ஆரியப் பார்ப்பான் மட்டும் தானா?

பார்ப்பாரக் குஞ்சுகள் பசி, பட்டினியால் கிரங்கின போலும். பொறுக்குமா ரிஷி களுக்கு? தொல்லை வந்தது. அக்கிரகாரச் சேரிக்கல்லவா! ஜாபாலி முனி களத்திலிறங் கியது. புனிதனாக மாறவேண்டியவன் புக்கசனாகவல்லவோ மாறிவிட்டான். மந்திரத்தின் மகத்துவம் மரித்து விட்டது. ஆனாலும் அந்த மந்திரத்தைத்தான் இன்றும் ஆற்றங்கரைகளில் முணுமுணுக் கிறார்கள். அதனால்தான் ஆறுகளும் கெட்டுவிட்டனவோ? ‘ஆறுகெட நாணலிடு’, என்பதோடு ‘காயத்ரியும் எடுத்து விடு’, என்றுதான் சொல்ல வேண்டும் போலும்.

விடாது விரட்டி அழித்திட எண்ணிய ஜாபாலி முனிவர் இந்திரனிடம் முறை யிட்டார். அய்யா கேட்கிறார், ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர் யாரிடமாவது ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா?”, என்கிறார். அந்த யோக்கிய முனி இந்திரனை வேண்டினான்.

‘யாகம் மூலம் அரக்கனைத் திருத்திடக் காமதேனுவின் மகளான நந்தினிப் பசுவைத் தேவேந்திரன் தந்தான்’ என்று போகிறது கட்டுரை.

மந்திரம் அருணாசுரனை அசைக்க வில்லை. யாகமாவது கை கொடுக்குமா? என மூட்டினர் தீயை. காமதேனு, பசு என்கின்றனர். அதன் வேலை, பாலைச் சொரியோ சொரியென்று சொரிந்திடுவது தானே? அதற்கும் உறவுகள் இருந்தனவாம். அது அதனின் மகளாம். பெயரோ நந்தினியாம். எந்தத் தகப்பனுக்கு அது பிறந்ததாம்? மிருகக் காளைக்கா? இல்லை, மனிதக் காளைக்கா? அய்யம் ஏன்? முனி வர்கள் பலர் மிருகங்களுக்குப் பிறந்ததாகச் சொல்கிறார்களே அதனால்தான் அய்யம் தோன்றுகிறது.

இதற்கிடையில், ‘பிரம்மா, சரஸ்வதி இருவரின் அருள் பெற்று யாராலும் மரணம் சம்பவிக்க முடியாத சக்திவாய்ந்த வனானான் அருணாசுரன்’. அப்படிப்போடு. பார்ப்பனரின் கடவுள்கள் அவரைப் போன்றே பின்புத்தியுடையன போலும். அசுரனை யாராலும் அழிக்க முடியாத வரத்தை அள்ளிக்கொடுத்தன. அகத்தின் அழகு முகத்திலென்பது போல ‘நியாயம்’ அருணாசுரன் முகங்காட்டியதால் பார்ப் பனக் கடவுளரை வென்று நின்றான்.

எதிலும் வீழாத அசுரனை அணைத்துக் கொல்வது என முடிவெடுத்தனர்.

‘ஆதிசக்தியின் ஆலோசனை கேட்டுத் தேவர்களின் குருவான பிரகஸ்பதி மூலம், “நீயே தெய்வம், பின் ஏன் உனக்குக் காயத்ரி மந்திரம்?” என்று புகழச்செய்தனர்’. மந்திரம் சொல்வதை நிறுத்திய அசுரன் முன் ஆதிசக்தி மோகினியாய் நின்றாள். அவளை, அசுரன் நெருங்குகையில் தேனீயாகிக் கொட்டிக் கொன்றான், என்கிறது கட்டுரை. இங்குதான் பார்ப்பனர் சூழ்ச்சியும், திராவிடர் வீழ்ச்சியும் நன்கு புரிகிறது. நேருக்கு நேர் மோதி வெற்றி காண இயலாத ஆரியம் பெண்களை விடுத்துக் கதையைச் சரிசெய்ததாகவே புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. மந்திரமோ மண்ணாங்கட்டி, யாகமோ வெறும் தெருப்புழுதி. மோகினிதான் கை கொடுப்பாளென்ற இழிச்செயலுக்குள் இறங்கிச் சாதித்துக் கொண்டதாகக்கதை புனைந்துள்ளனர். இச்செயல் கேவலமென எங்கேணும் ஆரியம் எண்ணியதுண்டா? இல்லையே! ஏன்? அய்யா சொல்கிறார், “பார்ப்பான், தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. காரணம், பார்ப்பான், பிராமணனாக வாழ வேண்டுமே! அதனால்தான் என்கிறார் பெரியார் அவர்கள்.

‘நந்தினி’ பசுவாக வராமல் நதியாக ஓடி வந்தாளாம் ‘நந்தினி நதியில் நடுவில் காணப்படும் லிங்க வடிவப் பாறையே துர்கா பரமேஸ்வரி. விலை மதிப்பில்லாத நம் பொருள் ஏதேனும் பறிபோய்விட்டால் இங்கு முறையிட்டால் திரும்பக்கிடைக்கு மென்பது அய்தீகம்’ என்று முடிகிறது. அது என்னங்கடா அய்தீகம்? ‘உண்மை’ என்று சொல்ல அச்சம் ஏன்? அய்தீகமென்ற திரைமறைவுக்குள் எத்தனை காலம் பதுங்குவீர்கள்?  பாறைக்குரிய வரலாறு இவ்வளவும். பாறைப் பரமேஸ்வரி காவிரி நீரைத் தமிழர்க்கு நியாயமாக வழங்கச் செய்யட்டுமே! சுவிஸ்க்குக் கடத்திய கருப்புப் பணமெல்லாம் உடனே திரும்பிட வழி வகுப்பாளா பாறை பரமேஸ்வரி? வந்தால் தலைக்குப் பதினைந்து லட்சம் தருவாரே நம் பாரதப் பிரதமர். வருமா? ஏனிந்த ஏமாற்று வேலையெல்லாம்?

“மூடப்பழக்கம், முடிவற்றக் கண்ணு றக்கம் ஓடுவதென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்,” என்றாரே புரட்சிக் கவிஞர்.

தங்கள் இனம் காக்கத் தினமலர்கள் பழைமைகளைப் புதுமைகளாக வண்ண மடித்துக் காட்டிடும். வீழ்ந்த திராவிடம் விழிப்புற்றுச் சிந்திக்க வேண்டுமல்லவா! திராவிடர் நலன் பேணும் ‘விடுதலை’ ஏட்டினை வீடுதோறும் வரவழைத்து விவரம் அறிந்திட வேண்டாமா? புனைக் கதைகளுக்குக் காலம் ஒதுக்கி வாழ்வை அழிக்கலாமா? ஆரியம் அணைத்திட இயலாத கொள்கை பெரியாரியம். அஃதோர் எரிமலை. தொட்டால் சாம்பல் மிஞ்சுமென்பது ஆரியத்திற்கு தெரியும். “இந்துமதம் நம்மதம் என்று கருதிக் கொண் டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் ‘இமயமலை அளவு’ முட்டாள்தனமாகும்” என்கிறார் அய்யா பெரியார். நம்மில் பலர் இந்துமதத்தை, பார்ப்பனக் கலாச்சாரத் தையே தூக்கிப்பிடித்து விளக்கம் வேறு தந்துகொண்டிருந்தால் நாம் உயர்வ தெப்போது? வாருங்கள் திசைமாறிடுங்கள். தமிழர் தலைவர் தலைமைக்கு வினை தீர்க்கும் வீரராய் நம்மை நாம் ஒப்படைப் போம். நம் சுயமரியாதைப் படை விரையும் வேகத்தில் மோகினிகளும், காயத்ரிகளும் புளுதிப் படலமாகிச் சிதைந்திடட்டும். புதியதோர் அறிவியல் உலகினைத் தமிழர்க்கெனப் படைத்திடுவோம். வாரீர்!.
-விடுதலை ஞாயிறு மலர்,21.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக