டெஸ்ட் டியூப் குழந்தை என்றால் என்ன என்றே தெரியாதவர்களின் உளறல்!
பாண்டு மகாராசா தன் மனைவி குந்தி தேவியைப் பார்த்து, கிந்தம முனிவரின் சாபத்தால் நான் உன்னிடம் குழந்தை பெற முடியாத வகையில் உள்ளேன். எனவே, முனிவர் மூலமாகவோ, தேவர் மூலமாகவோ குழந்தை களைப் பெற்றுக்கொள் என்று குந்தி தேவிக்கு அனுமதியளிக்கிறான்.
கணவனின் வேண்டுகோள்படி எமதர்மனுடன் குந்தி தேவி உடலுறவு கொண்டு தருமனைப் பெற்றாள். குந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்த காந்தாரி ஆத்திரம் பொங்க, என் வயிற்றில் இரண்டு வருடங்களாக கரு வளர்ந்தும் குழந்தை பிறக்கவில்லையே என்று உணர்ச்சிவயப்பட்டு, தன் வயிற்றில் அடித்துக்கொள்ள, அந்த அடியால் அவள் வயிற்றிலிருந்த கரு, கருப்பை யோடு கீழே குருதி சொட்ட வந்து விழுந்தது.
வியாசன் அந்தக் கருவை நூறுகூறு செய்து நெய் நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப் பகுதியை ஒரு கலசப் பானையிலிட்டு வைத்தான்.
சஞ்சலமானகோசத் தசையினைத் தாழிதோறும்
எஞ்சலவாகநூறு கூறுசெய்திழுதிலேற்றி
நெஞ்சலர்கருணையாள னின்றவக்குறையுஞ்சேர்த்தி
அஞ்சில்வார்குழலியாகென்
றாங்கொருகடத்தில்வைத்தான்.
காந்தாரியின் வயிற்றிலிருந்து கருப்பையுடன் வீழ்ந்த கருவை வியாசர் நூறு கூறாக ஆக்கி, ஒவ்வொன் றையும் நெய்யுள்ள கலயத்தில் போட்டார். அந்த சதைப்பிண்டம் ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக கலயத்துள் பிறந்தது என்கிறது மகாபாரதம்.
கரு பத்து மாதத்திற்குமேல் வயிற்றில் இருக்காது. 10 மாதத்திற்கு முன்புகூட குழந்தை பிறந்துவிடும். அப் படிப் பிறக்காமல் போனால் தாயும் குழந்தையும், இறந்து போவர். இதுதான் உலகம் அறிந்த அனுபவ உண்மை.
ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? இரண்டு வருடமாக காந்தாரி வயிற்றிலே கரு அப்படியே இருந்ததாம். இதுதான் அறிவியலா? மகப்பேறு அறிவியல் இப்படித்தான் சொல்கிறதா? இக்கருத்து மகப்பேறு அறிவியலுக்கு எதிரானது, மூடத்தனமானது, அறியாமை யில் பிதற்றியது என்பது விளங்கவில்லையா?
அடுத்து, கருவைச் சுமந்து கொண்டுள்ள பெண் தன் வயிற்றில் அடித்தால், கரு கலையும். கலைந்த கரு இறந்துபோகும். இதுதான் அறிவியல்.
ஆனால், இந்துமதம் என்ன சொல்கிறது தெரியுமா? கலைந்த கரு இரத்தமும் சதையுமாய் வெளிவர அதை துண்டுகளாக வெட்டி, 101 கலயங்களில் மூட 101 குழந்தைகள் பிறந்தன என்கிறது இந்து மதம்.
வயிற்றில் உள்ள ஒரு கரு கலைந் தால், 100 குழந்தைகள் எப்படி பிறக்கும்? கரு கலைந்தால் அக்கரு இறந்து போகும் என்பதே அறிவியல். ஆனால், கலைந்த கருவை 101 கலசத்தில் அள்ளி வைத் தார்களாம்? ஏன் கலசத்தில் அள்ளி வைக்க வேண்டும். கலைந்த கருவை குப்பையில்தானே போடுவார்கள்?
ஒரு கருவுற்ற பெண் தடுமாறி கீழே விழுந்தால் அவள் வயிற்றிலுள்ள கரு கலைந்து போகும். அந்தக் கருவை அள்ளி ஒரு கலயத்தில் போட்டு மூடினால், அது குழந்தையாக மாறுமா?
அப்படியிருக்க இப்படியொரு அறிவுக்கும், உண்மைக்கும், நடப்பிலும் பொருந்தாக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப் படையாகும்?
இவை சோதனைக்குழாய் குழந் தைகள் என்கிறார் ஒரு துணைவேந்தர்.
அது மட்டுமல்ல, கலைந்த கரு கலசத்தில் அள்ளி வைக்கப்பட்ட முறையைக் கொண்டுதான் குளோனிங் முறையைக் கண்டுபிடித்தார்கள் என்பது அதைவிட அறிவற்ற பிதற்றல் அல்லவா?
குளோனிங் என்பது ஒரு உயிரணுவைக் கொண்டு அந்த உயிரினத்தை உருவாக்குதல் ஆகும். அதற்கும், கலசத்தில் அள்ளி வைப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
டெஸ்ட் டியூப் குழந்தை என்பது என்ன?
டெஸ்ட் டியூப் குழந்தை என்றால், டெஸ்ட் டியூப்பில் குழந்தை வளரும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் விளைவே அந்தத் துணைவேந்தரின் கருத்து. டெஸ்ட் டியூப் குழந்தை என்பது டெஸ்ட் டியூபில் வளர்ந்த குழந்தை என்று பொருள் அல்ல.
கருப்பைப் பாதையில் அடைப்பு இருக்கும் பெண் களுக்கு உடலுறவு மூலம் ஆணின் விந்தணு கருப் பையுள் செல்லாது. எனவே, ஆணின் விந்தணுவையும், பெண்ணின் சினை முட்டையையும் எடுத்து அதை டெஸ்ட் டியூபில் சேர்த்து கருத்தரிக்கச் செய்வர். கரு உருவானவுடன் அதை ஊசியின் வழி பெண்ணின் கருப்பையுள் செலுத்துவர். பிறகு அக்கரு தாயின் கருப்பையுள் வளர்ந்து வழக்கம்போல அவள் பிள்ளை பெறுவாள்.
கருப்பையும் சரியில்லாத பெண்களுக்கு, வேறு ஒரு பெண்ணை வாடகைக்கு அமர்த்தி அவள் கருப்பையுள் டெஸ்ட் டியூபில் உருவான கருவை ஊசிமூலம் செலுத்தி அப்பெண்ணின் வயிற்றில் அக்குழந்தை வளர்ந்து அவள் பெற்றெடுப்பாள். இதுதான் டெஸ்ட் டியூப் குழந்தை என்பது. ஆனால், இந்த அறிவியல் உண்மை அறியாத அடிமுட்டாள்கள் அறிவியல் மாநாட்டிலே கவுரவர்கள் கலசத்தில் பிறந்தவர்கள், அவை டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்று பிதற்றுகின்றனர்.
இதைவிட அந்த அறிவியல் மாநாட்டிற்கு கேவலம் உண்டா? இந்த ஆளெல்லாம் துணைவேந்தர் என்றால் அப்பல்கலைக்கழகம் உருப்படுமா?
இன்னும் வேடிக்கை என்னவென்றால் குழந்தை பிறப்பது பற்றி இந்து மதம் கூறுவதுதான்.
ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் உடலுறவு கொண்டு அவனது விந்தணு பெண்ணின் கருப்பையில் உள்ள சினை முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாகி அது வளர்ந்து குழந்தை பிறக்கும்.
ஆனால், இந்து மதம் குழந்தைகள் எப்படிப் பிறந்தன என்கிறது தெரியுமா?
கவுதம முனிவரின் பிள்ளை சரத்வான். ஒருமுறை ஜாலவதி என்ற தேவகன்னிகை அவர் ஆசிரமத்தருகில் ஒற்றைத் துணியுடன் சென்றாள். முனிவர் கண்டார். விந்து வெளிப்பட்டது. அது நாணல் தண்டில் விழுந்தது. இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. அவற்றிலிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை யொன்றும் பிறந்தன. காட்டிற்கு வேட்டையாடச் சென்ற சந்தனு அவர்களை எடுத்து கிருபையோடு வளர்க்கிறார். ஆண் குழந்தை கிருபாச்சாரியாகிறது. பெண் குழந்தை கிருபியாகி பின்னர் துரோணரை மணக்கிறாள்.
கங்கை பிறக்கும் இடத்திற்கு அருகில் பரத்வாஜ முனிவர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவர் கங்கையில் நீராடிக் கொண்டிருந்த க்ருதாசி என்ற தேவகன்னி கையைக் கண்டு காமுற்றார். வெளிப்பட்ட விந்தை அந்த முனிவர் துரோணம் என்ற பாத்திரத்தில் ஏந்திக் கொண் டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர். அயோநி ஜனாகப் பிறந்தவர். (யோனி x அயோனி)
துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்பினை நாரதரால் அறிந்த ருத்திரன், அதனையறிய நிருவாண பிச்சை கேட்டு அவள் அழகினைக் கண்டு விந்தைத் தட்டிலிட அதனை அவள் துரோணர் குதிரையிடம் வைத்ததனால் குதிரையின் முதுகைக் கிழித்துக்கொண்டு அசுவத்தாமன் பிறந்தான். (அசுவம் - குதிரை)
('அபிதான சிந்தாமணி', பக்கம் 24, 1934 - பதிப்பு)
துருபதன் எப்படிப் பிறந்தான்?
மகனில்லாத பாஞ்சால அரசன் தனக்கு மகன் வேண்டித் தவம் செய்ய காட்டிற்குச் செல்கிறான். பல ஆண்டுகள் கடுந்தவம் செய்கிறான். அப்போது மேனகை அசோக மரங்களினூடே மறைந்து மெல்ல நடந்து வந்தாள். அரசன் அவளைப் பார்த்து விட்டான். அவள் இவனருகில் வந்தபோது இவனது விந்து வெளிப்பட்டு கீழே விழுந்துவிட்டது. அவ்வரசன் வெட்கத்துடன் கால்களினால் அதனை மறைத்தான். அதிலிருந்து ஒரு மகன் தோன்றினான். அங்கிருந்த முனிவர்கள் அந்தப் பிள்ளைக்குத் துருபதன் எனப் பெயரிட்டனர். (த்ரு - மரத்தடியில், பதன் - கால் வைத்ததனால் உண்டானவன்) அவனே பின்னர் பாஞ்சால நாட்டு அரசன் ஆகிறான்.
எப்படிங்க... இப்படி அறிவற்று உளறும் இந்து மதம் தான் அறிவியலுக்கு அடிப்படையா?
இவை மட்டுமல்ல, கர்ணன் பிறப்பு பற்றியும், பாண்டவர்கள் பிறப்பு பற்றியும் இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?
சூரியனை தியானித்து கர்ணனைப் பெற்றாள். பாண்டுவின் அனுமதியின் பேரில் குந்தி எமதர்ம தேவனுக்குத் தருமரையும், வாயுதேவனுக்குப் பீமனையும், இந்திரனுக்கு அருச்சுனனையும் பெற்றாள். மாத்திரி அசுவின் தேவர் மூலம் நகுல சகாதேவர்களை ஈன்றாள்.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால் குந்திதேவி எமனுடன், வாயுவுடன், இந்திர னுடன், மாத்திரி அசுவினி தேவர்களுடன் உடலுறவு கொண்டு பெறவில்லை. இவர்களை மனதால் தியானித்தாளாம் (நினைத்தாளாம்). உடனே குழந்தை பிறந்துவிட்டதாம்! எப்படிங்க?
ஒருவரை மனதால் நினைத்தாலே வயிற்றில் கருவுண்டாகும் என்று உலகில் எந்த அறிவியல் கூறுகிறது? சொல்லுங்க! இதைவிட ஓர் அறிவில்லா உளறல் உலகில் வேறு இருக்க முடியுமா? இந்த இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட எந்தப் பித்தலாட்டமும் செய்வர், எந்த மோசடியும் புரிவர் என்பதற்கு இந்து மதம் அறிவியலுக்கு அடிப் படையென்பதும், இதிகாச காலத்திலே இராக்கட், விமானம், ஏவுகணை எல்லாம் இருந்தது என்பதும் எடுத்துக்காட்டு. இராமாயண காலத்தில் விமானம் இருந்தால் இலங்கைக்குச் செல்ல ஏன் அணை கட்ட வேண்டும்? விமானத்திலே சென்றிருக்கலாமே! ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பார்ப்பனர்களும், அவர்களது கைக்கூலிகளும் பதில் சொல்வார்களா?
- விடுதலை நாளேடு, 12.1.19