சனி, 5 ஜனவரி, 2019

விஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்!

மின்சாரம்


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தின் (4.1.2019) கேள்வி - பதில்கள் இங்கே...

கேள்வி: ஹோம குண்டத்தில் பட்டுப் புடவைகள், பழங்கள், நாணயங்கள் போடுவது வீண்தானே?

பதில்: அக்னியில் நிவேதனம் செய்வதை தெய்வம் ஏற்று நமது எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதுதான் பதில்.

ஓ, அப்படியா? முன்னோர்கள் நம்பிக்கை எல்லா வற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டுதான் வாழ் கிறோமா? முன்னோர்கள் போல்தான் முன் குடுமி வைத்துள்ளார்களா? பஞ்சகச்சம் போய் பேண்ட், சூட் வந்தது எல்லாம் எப்படி?

ஏன் கோயில்களில் தீவட்டியைத் தானே முன் னோர்கள் பிடித்து வந்தனர். இன்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்த நியான் விளக்கு வந்தது எப்படி?

ஆள் வடம் பிடித்து இழுத்து முட்டுக்கட்டைகள் போட்டு நிறுத்தப்பட்டத் தேர்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் வந்தது எப்படி?

அது சரி கடவுளுக்குத் தான் உருவம் இல்லையே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ஆயிற்றே! அவர் எப்படி அக்னிபகவான் ஆனார்? இரவு உணவு இல்லாமல் 20 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் உணவுப் பொருள்களை நெருப்பில் கொட்டுவதும், குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் செய்வதும்தான் முன்னோர்கள் வழியா?

பாட்டன் வெட்டியது என்பதற்காக உப்புத் தண்ணீர்க் கிணற்றைப் பயன்படுத்தி சமைக்க முடியுமா?

அக்னி - தெய்வமாம்; நாம் கொடுக்கும் பொருள்களை ஏற்று நமது எண்ணங்களைப் பூர்த்தி செய்யுமாம்.

இதற்கு அரசாங்கமே தேவையில்லையே! அரசாங்கமே அக்னியை வளர்த்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூபாய்க் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் நெருப்பில் போட்டு  நமது கயிலாயநாதன் பிராந்தியங் களைக் கைவசம் வைத்துள்ள சீனாவிலிருந்து மீட்க வேண்டியதுதானே! 'ரபேல்' வம்புகள் எல்லாம் தேவையில்லையே!

என்ன சாமர்த்தியம்! முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் ஒன்றை செய்வது - அது பற்றிக் கேள்வி கேட்டால் நமது முன்னோர்களின் நம்பிக்கை என்னும் படுதாவுக்குள் மூஞ்சைப் பதுக்கிக் கொள்வது இவை எல்லாம் முற்றிவிட்ட பைத்தியத்தின் கிழிசல் இல்லாமல் வேறு என்னவாம்?

«««


அடுத்த கேள்வி: பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா?

பதில்: பலரை தவறுகள் செய்யாமல் தடுப்பது இந்தப் பாவ புண்ணியம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

பார்த்தீர்களா - பார்த்தீர்களா? இங்கும் நம்பிக்கை வந்து குதித்துவிட்டதை.

தவறு செய்யாமல் தடுக்கிறதாம். இந்தப் பாவ புண்ணியம் நம்பிக்கை. அப்படியென்றால் காஞ்சி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் ஏன் கம்பி எண்ணி னார்கள்?

நாதுராம் கோட்சே ஏன் காந்தியைக் கொன்றான்? கீதை வாக்கியத்தை எடுத்துக்காட்டிதானே காந்தியைக் கொன்றது தர்மம்தான் என்று நீதிமன்றத்தில் கூற வில்லையா! பாவம் செய்து விட்டு அதற்குக் கழுவாயும்/பிராயச் சித்தமும் வைத்த பின்னர் பாவம் செய்ய அஞ்ச வேண்டிய அவசியம் எங்கேயிருந்து குதிக்கிறது?

12 வருடம் பாவம் செய்தவன் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விடுவதாலேயே பாவங்கள் போகும் என்றால் பாவம் செய்ய பயப்பட வேண்டிய அவசியம் என்ன? குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் தானே இந்த ஏற்பாடு (மகாமகக் குளத்தில் 28 விழுக்காடு மலம், 40 விழுக்காடு மூத்திரம் என்பது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசோதனைக்குப் பின்னர் கொடுத்த அறிக்கை) இதனால் இ.கோலி, ஓ157-எச்7 பாக்டீரியாக்களால் உணவை நஞ்சாக்கும் - மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உருவாக்கும். இது அல்லாமல் என்னென்ன பொருளைக் கொடுத்தால், அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ற பட்டியல் வேறு.

பக்தி முட்டாள்தனத்துக்கும், சுரண்டலுக்கும் - ஒழுக்கக்கேட்டுக்கும் அளவேயில்லையா?

«««




கேள்வி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என்ன விசேஷம்?

பதில்: தர்பாரண்யேஸ்வரரை சனி பகவான் வழிபட்ட தலம். மேடையில் வாய் கிழிய நாத்திகம் பேசும் தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட தங்களது அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட சனீஸ்வரரை நாடி செல்கிறார்கள்.

முதல் கேள்விக்கு அளித்த பதில்தான் இதற்கும். "ஒன்றே கடவுள் அவன் உருவம் அற்றவன்" என்று சொன்னபின் அக்னி பகவான் எங்கே வந்தான்? சனி பகவான் எப்படி வந்தான்? விநாயகன் வந்த விதம் எப்படி? அவன் சகோதரன் சுப்பிரமணியன், தோப்பனார் சிவனும், தாயார் பார்வதியும் என்று கடவுளுக்குக் குடும்பங்கள், கூத்தியாள்கள் வந்த தெல்லாம் எப்படி? (மதுரையில் அழகர் வண்டியூருக் குப் போவது, சீரங்கப் பெருமாள் உறையூருக்குப் போவது)

ஓசை உள்ள கல்லை நீர்

உடைத்து இரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு பதித்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே?

என சிவவாக்கிய சித்தரின் பாடலுக்கு 'விஜயபாரதம்' பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

சனீஸ்வரனை எந்த தி.க.காரன் நாடி செல்லுகிறான்? விஜயபாரதத்துக்குச் சற்றேனும் அறிவு நாணயமிருந்தால் ஆளைக் குறிப்பிட்டுச் சொல் லட்டும் பார்க்கலாம். அழி - பழி என்பது ஆரியத்தின் பிதுரார்தசொத்து போலும்!

இப்படிதான் சனீஸ்வரன் கோயில் பற்றி ஒரு 'புரூடா' விட்டார்கள்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குமேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒரு கதை கட்டி விட்டனர். இதுபற்றி 'சன்' தொலைக்காட்சி பேட்டியில் (24.11.2015 காலை 8.00 - 8.30 மணி) சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை என்ன கூறினார்? "கிட்டத்தட்ட 10 இந்திய செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றிரண்டாவது திருநள்ளாறுக்கு மேலே போயாகனும். இது போலவே புரளிகளை செய்கிறார்கள் என்பதற்காக எங்கள் குழுவினர் ஆய்வு செய்து பார்த்தோம். திருநள்ளாறில் இந்திய செயற்கைக்கோள்கள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை" என்று அழுத்தமாகப் பதிவு செய்தாரே - பார்ப்பனப் பித்த லாட்டத்திற்கு உச்ச வரம்பே இல்லையா?

«««


கேள்வி: எனது விருப்பம் நிறைவேறினால் நான் கடவுளுக்கு மொட்டை போடுகிறேன் என வேண்டுதல் செய்வது சரிதானே?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான் காரணம் எப்படியோ பக்தி இருந்தால் சரி....

பார்த்தீர்களா - இங்கும் அந்த நம்பிக்கை மூடுதிரை வந்து குதித்து விட்டதே. நம்பிக்கையை நம்பினால் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விடுவார்கள்.

மொட்டை போடுவதற்கு நாணயமான பதில் உண்டா? நம்பிக்கைதான் காரணமாம். நம்பிக்கையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தன்னம்பிக்கை - வாழ்வை உயர்த்துவது - இன்னொன்று மூடநம்பிக்கை - இன்னும் கெட்டுப் போறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய் என்பது. கெட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டால் பந்தயம் வேறு கட்ட வேண்டுமா?

கடைசியாக என்ன எழுதுகிறது விஜயபாரதம்? எப்படியோ பக்தி இருந்தால் சரி என்கிறது. இங்கேதான் கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டி வெளியே வருகிறது.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் அல்லவா! புத்தி போனால் மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுத்து மொடக் மொடக்கென்று பயபக்தி யோடு பஞ்சகவ்யம் என்று குடிப்பான் அல்லவா! அதுதான் எப்படியோ பக்தி இருந்தால் சரி என்பது.

ஆனால் ஒன்று - இந்த மூத்திரக் கலவையைக் கண்டிப்பாக சங்கராச் சாரி குடிக்க மாட்டார் - விஜய பாரதத் தார்கள் குடிக்க மாட்டார்கள். இராம. கோபாலனோ,  இல. கணேசனோ, 'எச்'சகளோ குடிக்கவே மாட்டார்கள்.

அடி மாட்டுப் பக்தி கொண்ட 'சூத்திரனும்', 'பஞ்சமனும்' தான் குடித்துத் தொலைவான். இந்த அஸ்தி வாரத்தில் தான் அவாளின் 'ரேக்ளா' ஜாம் ஜாமென்று ஓடுகிறது.



«««


கேள்வி: பெண்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் எது?

பதில்: பொதுவாக மனைவி, அம்மா, ஆகியோர் கடைசியில் பயன்படுத்தும் ஆயுதம் கண்ணீர்தான்.

எப்படிப்பட்ட பதில்? பெண்கள் என்றாலே கண்ணீர் தானாம். அவாளின் இந்துத்துவா அகராதியில் இதுதான் பொருள். அழுமூஞ்சி என்கிறார்களா? கோழை என்கிறார்களா? அழுது சாதிப்பவர்கள் என்கிறார்களா?

பெண்களை அய்ந்தாம் வருணத்தவர்களுக்கும் கீழேதானே வைக்கிறது இந்து மதம். மனுதர்மம் ஒன்ப தாம் அத்தியாயம் 19ஆம் சுலோகத்தைக் கேளுங்கள் - கேளுங்கள்.

"மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர் களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன" - இதுதான் மனுதர்மம். அதன் மறுபதிப்புதானே விஜயபாரதத்தார்கள்.

தன்னைப் பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரியும், பெற்றெடுத்த மகளும் அந்தப் பெரும்பாலோரில் அடங்குவார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்ல! அதனால்தான் அந்த மனு தர்மத்தைக் கொளுத்தும் போராட்டத்தை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அறிவித்துள்ளார் தமிழர் தலைவர். (பெண்களே திரண்டு எழுவீர் என்பதே கழகத்தின் வேண்டுகோள்)

«««


கேள்வி: 'தேசம் காப்போம்' என்ற பெயரில் திருமாவளவன் ஒரு மாநாடு ஏற்பாடு செய்துள்ளாரே?

பதில்: அது சரி.. 'தேசம்' என்ற சொல்லே சமஸ் கிருதமாச்சே!

இதுதான் பதில், கேள்வி எதைக் குறிக்கிறது? பதில் எங்கே போகிறது?

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்களே - அந்தக் கெட்ட நடத்தைதான் (Foulgame) இவாளுடையது.

அந்த சொல்லில்தான் பிரச்சினை.... மற்றபடி அந்த மாநாட்டை 'விஜயபாரதம்' வரவேற்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சமஸ்கிருதமாச்சே என்று அவர்கள் சொல்லுவது அவாளின் உள்ளுணர்வின் தாண்டவம் - அதனைக் கக்கி விட்டார்கள் பார்த்தீர்களா? என்னதான் மூடி மறைத்தாலும் பார்ப்பனத்தனம் முண்டியடித்துக் கொண்டு வெளியில் வந்துவிடுகிறதே!

- விடுதலை நாளேடு, 5.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக