வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஆண்டாள் யார்?


சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தில் ஆண்டாள் ஒரு தேவடியாள் எனக் குறிப்பிட்டதே இந்தக் குழப்பங்களிற்கெல்லாம் காரணம்.  இதனை இவர் ஒன்றும் சொந்தக்கருத்தாகக்கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement – some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என மேற்கோளே காட்டியிருந்தார்.  உடனேயே ஆண்டாளினை வைரமுத்து கேவலப்படுத்திவிட்டார் என இந்துமதவாதிகள் பொங்கியெழுந்து அவரது தலையினை வெட்டவேண்டும் என தலிபான் அவதாரம் எடுத்துவிட்டார்கள். இன்று இவ்வாறு கூச்சலிடும் மதவாதிகளின் முன்னோர்களே இந்துமதத்தின் ஒரு சடங்காக தேவடியாள்/ தேவதாசி முறையினைப் பேணியவர்கள் என்பதுதான்  இங்கு வேடிக்கையானது.

தேவடியாள்(பரத்தை)வரலாறு:

இந்த விலைமகளிர் தொழிலே உலகின் முதற்தொழில் என வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த விலைமகளிரின் தோற்றம் என்பது வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்தபோது எல்லோருமே பொதுமகளிராகவேயிருந்தார்கள்(1). அதே போன்று சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன் தொடர்புபடுத்தியது பார்ப்பன வைதீக(இன்றைய இந்து) மதமேயாகும்.  வைதீக மதமே தேவடியாள் (தே= தெய்வம்+அடியாள்= பணிபுரிபவள்) எனும் கருத்துருவாக்கத்தினை உருவாக்கி அதனை பொட்டுக்கட்டல் எனும் சடங்காக கோயிலிலேயே அந்தணர்களைக் கொண்டு நடாத்திவைத்தது.  இதனை பெருமளவிற்கு நிறுவனரீதியான நடைமுறைக்குள்ளாக்கியது இராசராச சோழன் ஆட்சியிலேயிலேயே இடம்பெற்றது என்பதற்கு தரவாக தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுக்கள் (2)காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்திலேயே இவ்வாறு தேவடியாள் முறை நிறுவனரீதியாக மதச் சடங்காக ஆக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோயில்களில் நிறுவனரீதியற்ற முறையில் பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. அக் காலப்பகுதியிலேயே (குறிப்பாக எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ) ஆண்டாள் வாழ்ந்தாகக் கருதப்படுகிறது.

ஆண்டாள் உண்மையிலேயே தேவடியாளா (தேவதாசியா) என்றால் அது விவாதத்திற்குரியது. இந்துமத விளக்கத்தின்படி தெய்வத்திற்கே (தே) பணிபுரிபவள்(அடியாள்) என்றவகையில் தேவடியாள் எனத் துணிந்து கூறலாம். மறுபுறத்தில் பொதுவழக்கிலுள்ள தேவதாசி என்ற சொல்லிற்கான விளக்கத்தின்படி பொதுமகளா எனப் பார்த்தால், அதற்கான நேரடித்தரவுகள் எதுவுமில்லை.  மேலே குறிக்கப்பட்ட இண்டியானா பல்கலை ஆய்வானது ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் பாலியல் விடுதலைத் தன்மையினை அடிப்படையாகக்கொண்டே குறித்த முடிவிற்கு வந்திருக்கலாம். அதாவது பெண்களின் விடுதலை பெருமளவிற்கு அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்றைய நிலையில் ஒரு இளம்பெண் இவ்வாறு பாலியல் வேட்கை சொட்ட சொட்ட பாடல்களைப் பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். அது முடிந்த முடிவல்ல என்பது உண்மையே.

ஆண்டாள் அவமானக் குறியீடா?

ஒரு வாதத்திற்காக ஆண்டாள் அவ்வாறு பரத்தையாகவிருந்திருந்தாலும்கூட, அது அவரிற்கான அவமானமல்ல, மாறாக அது அந்த மதப் பிற்போக்குத்தன மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானமாகவே கருதப்படவேண்டும்.  ஆண்டாளின் பாடல்கள் கூட ஒரு பெண்ணின் பாலியல் விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படவேண்டும்.  அதே போல ஆண்டாளின் தமிழ்ப் புலமையும், தமிழே வழிபாட்டு மொழியாகக் கருதப்படவேண்டும் என்ற மொழியுணர்வும் போற்றப்படவேண்டும். இதனால்தானோ என்னவோ  வைணவத் தென்கலை  சித்தாந்தத்தின் படி  ஆழ்வார்கள் பத்து  பேர் மட்டுமே (ஆண்டாள் , மதுரகவி ஆகியோரிற்கு இடமில்லை) . பின்பு ஆழ்வார்கள் பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டாலும், சில வைணவர் ஆண்டாளையும், மதுரகவியினையும் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லை.  அதே போன்று ஆண்டாள் என்பதே ஒரு கற்பனைப் படைப்பு என ஏற்கனவே ராஜாஜி கூறியபோது (3) எதுவுமே பேசாதிருந்த மதவாதிகள், பா.ராகவன் ஆண்டாளைப் பற்றி ஏற்கனவே கிழக்குப் பதிப்பகத்தின் பெயரில் இதனைவிட கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்டபோது மவுனமாகவிருந்த  மத வாதிகள் இப்போது பொங்குவதன் நோக்கம் கவனித்திற்கொள்ளப்படவேண்டும்.

வைரமுத்து எதிர்ப்பு அரசியலின் பின்னனி:

மேலே குறிப்பிடப்பட்ட பா.ராகவனும், ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள்.  வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை.  இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான   சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும்  உண்டு.  வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார்.  அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை  என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும்.  எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.  துணைநின்றவை

  1. குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழாக்கம்) (page7) -பிரடெரிக் எங்கல்ஸ்
  2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்(p.137) – க. கைலாசபதி
  3. “வாடாத மலர் ஆண்டாள்” – the tamil hindu.com (1-1-2015)

http://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/

(சாவித்திரி கண்ணன்)

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆண்டாள் குறித்த சர்ச்சையை பக்தர்களுக்கும் – பகுத்தறிவாளர்களுக்குமான சர்ச்சையாக பலரும் புரிந்து கொள்கிறார்கள்.
இது மிகத்தவறான புரிதல்!

இதை பக்தர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமான மோதலாக உருவாக்கி வளர்த்தெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை!
உண்மையில் உண்மையான பக்தர்களும், உண்மையான பகுத்தறிவுவாதிகளும் இதில் சம்பந்தப்படவேயில்லை. இந்த சர்ச்சைக்குள் அவர்கள் இல்லை.
இந்த சர்ச்சைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமேயில்லை. அப்படி சம்பந்தப்படுத்திவிட நினைப்பவர்கள் முற்றிலும் தோல்வியே அடைவார்கள்.Image result for ஆண்டாள்

பக்தனின் மனநிலையும், பகுத்தறிவாளரின் மனநிலையும் முற்றிலும் வெவ்வேறான தளத்தில் இயங்குபவை. பக்தி மனநிலை என்பது உணர்ச்சி பிரவாகமானது, நெகிழ்ச்சியானது, எதையும் பிரித்து பார்க்கத் தெரியாதது, அனைத்தையும் ஒன்றாக பாவிப்பது. தன்னை எதிரியாகக் கருதுபவனைக் கூட தன்னுள் ஒருவனாக பாவிக்கும் பரந்துபட்ட மனநிலையை கொண்டது.

பகுத்தறிவானது நிகழ்காலத்தில் தான் தேடிப்பெற்ற தகவல்களோடு எது ஒன்றையும் அதன் சமூகம் மற்றும் சரித்திரம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவது! வைரமுத்துவின் கட்டுரை என்பது பகுத்தறிவு சார்ந்தது.

பகுத்தறிவு என்பது உண்மைக்கான தேடலை அடிப்படையாகக் கொண்டது. அது எப்போதும் கட்டமைக்கப்பட்ட மாயைகளோடு சமரசம் கொள்ளாது.
எல்லா மனிதர்களுக்கும் பகுத்தறிவும் உண்டு, பக்தியும் உண்டு. இவை இரண்டும் களந்தவன் தான் எந்த மனிதனும்! ஒருவன் தான் பிறந்து வாழும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்ததே ஒன்றை பக்தியோடு அணுகுவதும், மற்றொன்றை பகுத்தறிவு கொண்டு அணுகுவதும் அமைகிறது.
அந்தக் கட்டுரையில் வைரமுத்துவின் பகுத்தறிவையும் நான் கண்டேன். பக்தியையும் நான் உணர்ந்தேன். அவரது பக்தி என்பது தமிழமொழிசார்ந்தது. ஆண்டாளின் தமிழ் ஆளுமை வைரமுத்துவை தமிழ்பக்தி பரவசத்தில் ஆழத்தியிருப்பதை கட்டுரை நெடுகிலும் எவராலும் உணரமுடியும். அந்த தமிழ்பக்தி தான் அவரை, ‘ஆண்டாள் ஆன்மீகம் சார்ந்தவர்களுக்குரியவள்’ என்று புறக்கணித்து சொல்லமுடியாமல், நெஞ்சில் வாரியெடுத்து புளகாங்கிதம் அடைய வைக்கிறது. தலையில் தூக்கி வைத்து ஆனந்தக்கூத்தாட வைத்துள்ளது.

பாருங்கள், அவர் தேடிகண்டடைந்த ஆய்வு ஆண்டாளை தேவதாசி குலத்தவள் என்றதை ஆண்டாளுக்கான ஒரு குறையாகவோ, அவமானத்திற்குரியதாகவே வைரமுத்துவிற்கு கருதத்தோன்றவில்லை. ஆண்டாள் யாராக இருந்தாலும் அவளை கொண்டாடத் தயங்காத மனநிலை அவருக்கு பூரணமாக வாய்த்துள்ளதால் தான் அவர் தைரியமாக தன் கட்டுரையிலும், சொற்பொழிவிலும் அதை பதிவு செய்துள்ளார்.

ஆண்டாளின் பக்தர்களுக்கும், உண்மையான ஆன்மீக அன்பர்களுக்கும் வைரமுத்துவின் அதே மனநிலை தான் இருக்கமுடியும். ஓரே வித்தியாசம் வைரமுத்துவினுடையது மொழிசார்ந்த தமிழ் பக்தி! மற்றவர்களுடையதோ தெய்வீக உணர்வு சார்ந்த பக்தி.

பக்தி சார்ந்த மனநிலை என்பது மிகவும் நுட்பமானது. அதேசமயம் திட்பமானது. அது எந்த அறிவுசார்ந்த வாதங்களாலும், நிருபணங்களாலும் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள முடியாதது. அதை பொருட்படுத்தாதது.

“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் 
கந்தனே உனை மறவேன்….”

என்று பரவச மனநிலையிலேயே ஒரு பிசிறும் இல்லாமல் பின்தொடர்வது! அது தான் நம்பும் ஒன்றிற்காக தன்னைத்தானே முழுமையாக அர்பணிப்பது. சர்வபரித்தியாகத்திற்கும் சித்த மாயிருப்பது. எந்த மதமோ, குலமோ பாகுபாடு பாராதது!

கல்லோ, கதிரவனோ, மரமோ, விலங்குகளோ, ஊர்வனவோ, பறப்பனவோ… அனைத்திலும் தெய்வத்தைக் காண்பது.

தமிழ்நாட்டில் ‘குலதெய்வம்’ என ஒவ்வொரு குடும்ப மரபிற்குமான தெய்வவழிபாடு உள்ளது. இந்த குலதெய்வம் சாமிகளில் பலரும் வாழ்ந்து மறைந்தவர்களே! நாட்டார் தெய்வங்கள், தமிழ்மண்ணின் சாமிகள் எனப்படும் கண்ணகி, இசக்கியம்மன், நல்லதங்காள், பாப்பாத்தி, கருப்பாயி, சுடலைமாடன், மதுரைவீரன்… இவர்களின் கதை என்ன? இவர்களெல்லாம் ரத்தமும், சதையுமாக பல மனிதர்களையும் போல குற்றங்கள், குறைகளோடு வாழ்ந்து மறைந்தவர்களே…!

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பதவிகளில் இருந்தாலும், அந்தஸ்து பெற்றிருந்தாலும், அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மறப்பதில்லை. அந்த சாமிகளின் கதை எவ்வளவு அவலமானதாக, சோகமயமானதாக இருந்தாலும் நம்பிக்கை சிதைவதில்லை. இது தான் பக்தியின் இயல்பு!

காரணம் ஒருவர் யாரை அல்லது எதை வழிபடுகிறார் என்பதை விடவும், அப்படி வழிபடும் போது அவருக்கு கிடைக்கும் உணர்ச்சி நிலை, உருவாகக்கூடிய உன்னதமான மனநிலை தான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை, பிடிமானத்தை ஏற்படுத்துகிறது. இந்த நம்பிக்கையும், பிடிமானமும் ஏற்பட்ட பின்பு அவர் நிச்சயம் பகுத்தறிவு கண்கொண்டு தான் வழிபடும் இறையை ஆராய முற்படுவதில்லை. மாறாக அதனோடு ஐக்கியப் படுவதில் தான் பேரார்வம் கொண்டவராக இருப்பார்.

பக்தி என்ற உன்னதமான விஷயத்தை கொண்டு பல்வேறு ஆதாயம் தரும் அணுகுமுறைகள் நடக்கலாம். பணத்திற்கான, செல்வாக்கிற்கான ஒரு கருவியாகவும் பலர் இதை பயன்படுத்தலாம். ஆனால் இதெயெல்லாம் பக்தர்கள் உணராமலில்லை. எனினும் இதனால் மனமாச்சரியங்கள், துவேஷங்கள் ஏற்படாதவண்ணம் சமூகமானது ஒரு இணக்கமான சூழலை பேணவிரும்புகிறது. அவரவர் வினையின் பலனை அவரவர் அனுபவிக்காமல் தப்பமுடியாது. ஆகவே, நம்மை நாம் சரியாக வைத்துகொள்வதற்கான ஒரு கருவியாக பக்தியை, இறைநம்பிக்கையை கைகொள்ளவேண்டும் என்பதே பெரும்பாலான கோடானகோடி பக்தர்களின் மனநிலையாக உள்ளது.Image result for ஆண்டாள்

பகுத்தறிவாளர்கள் பக்தர்களுக்கு எதிரியல்ல. பக்தியின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளையும். சமூக அநீதியையும் எதிர்ப்பவர்களே பகுத்தறிவாளர்கள். பக்தி வசப்பட்ட மனிதனை கடந்த காலங்களில் ஆதிக்க சக்திகள் தவறாக வழிநடத்தியுள்ளன. அதனால் உடன்கட்டை, பால்யவிவாகம், சாதி ஆதிக்கம், சாதிபாகுபாடு, பெண்களுக்கு எதிரான அநீதி, போன்றவை நிகழ்ந்தன. அனைவருக்கும் கல்வி, சமத்துவத்திற்கான போராட்டம் போன்ற விஷயங்களில் பகுத்தறிவாளர்கள் தலையிட்டு இருக்காவிட்டால் இன்று இந்த அளவுக்கு, சமூகம் முன்னேற்றம் கண்டிருக்கவாய்ப்பில்லை.

சகமனிதனான பக்தன் மீது கொண்ட அக்கறையினால் தான் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி பெரியார் ஈறாக பலர் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூடநம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார். ஆகவே, பகுத்தறிவாளர்களை பகைவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கும் பக்தர்கள் இறையாகக்கூடாது!
பக்த்தறிவாளர்களின் பார்வையை பக்தர்கள் பரிசிலனைக்கு உரியதாக கருதலாம் அல்லது புறக்கணித்துவிட்டுச் செல்லலாம்.
அப்படி ஒருவர் பரிசிலனைக்கு எடுத்துக் கொளவதன் மூலம் ஏதோ ஒரு அறியாமையிலிருந்தோ. ஆபத்திலிருந்தோ கூட விடுபடும் வாய்ப்பு அமையலாம். ஆனால் இதனால் பகுத்தறிவாளர்கள் அடையக்கூடிய ஆதாயம் ஏதுமில்லை. அவர்களின் பேச்சை புறக்கணிக்கப்பதாலும் பகுத்தறிவாளர்கள் இழப்புதற்கு ஏதுமில்லை.
ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு எதிராக பக்தர்களை கொம்பு சீவி விடுபவர்களுக்கு நிறைய உள்நோக்கங்கள் உள்ளன.
பக்தி நெஞ்சம் யாரையும் பகையாய் கொள்ளாது என்பதற்கு பாரதிபாடலே உதாரணம்.

தின்னவரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்நெஞ்சே
அன்னை பாராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவோம் நன்செஞ்சே!

பகுத்தறிவாளர்களுக்கும் பாரதியிடமே விளக்கம் பெறுவோம்.

உண்மையின் பேர் தெய்வமென்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம்.

ஒரு மக்கள் சமுதாயமானது சமச்சீரோடு இயங்குவதற்கு பெருமளவு பக்தர்களும், சிறிதளவு பகுத்தறிவாளர்களும் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள்!


வருந்துகிறேன்: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து

 11th January 2018     

vairamuthu

‘தமிழை ஆண்டாள்’ என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.

அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.

ஆண்டாளைப் பற்றி அந்தக் கட்டுரையில் என்னால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

– வைரமுத்து


தினமணி வருந்துகிறது!

தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயரிய எண்ணத்துடன்தான் ‘இலக்கிய முன்னோடிகள்’ குறித்த கட்டுரைகள் ‘தினமணி’யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரைகளின் வாசிப்பும் அதன் தொனியும் எத்தகையவை என்பதை இளம் தலைமுறையினர் அறிவதற்காகவே, முதல்நாள் கவிஞர் வைரமுத்து வாசிக்க அடுத்த நாள் ‘தினமணி’யில் கட்டுரை வெளியாகிறது.

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இராஜபாளையத்தில் அரங்கேற்றியதன் காரணமே, ஆண்டாளின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும், அவரது தமிழ் ஆளுமை உரக்க ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

கவிஞர் வைரமுத்து தனது உரையின் தொடக்கத்திலேயே ஆண்டாள் அவதரித்த மண்ணைத் தொட்டு வணங்குவதாகக் குறிப்பிட்டே தொடங்கினார். ஆண்டாள் குறித்து உயர்வானவற்றைப் பதிவு செய்த அவரது கட்டுரையில் அமெரிக்க ஆய்வையும் சுட்டிக்காட்டியது தவறு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் தனது நோக்கமே தவிர, அந்தப் பதிவின் மூலம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்தப் பதிவு பலருடைய உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.

‘தினமணி’ நாளிதழைப் பொறுத்தவரை தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர தூக்கிப் பிடிக்கும் நாளிதழ். இந்தக் கருத்து “தினமணி’யில் வந்திருக்க வேண்டாம் என்கிற பலருடைய ஆதங்கம் புரிகிறது. தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆண்டாளை தமிழ் தெய்வமாக, பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்குரிய அன்னையாக ‘தினமணி’யும் கருதுகிறது.

கவிஞர் வைரமுத்து இது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துவிட்டாலும்கூட, ‘தினமணி’யின் மூலம் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது என்பதால் வாசகர்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதிலோ, மன்னிப்புக் கோருவதிலோ எங்களுக்கு சற்றும் தயக்கம் இல்லை. ‘தினமணி’ வருந்துகிறது!

– ஆசிரியர்

“ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல, அரிய கெளரவம்”.

Published by Vijithaa on 2018-01-12

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து தனது உரையில் ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பா.ஜ.கவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர் ஆண்டாள் என்ற பாத்திரம் “திருவரங்கத்திலேயே வாழ்ந்து  மடிந்த ஒரு தேவதாசி” என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.

இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்துமத ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கருத்தை பிரபல நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என குறிப்பிட்டுள்ளார்.

 

“பண்டைய இந்து மதம் சார்ந்த நாகரிகங்களில் தேவதாசி என்பவள் கடவுளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். ஆணுக்கு அடங்கி அடிபணிய தேவையில்லாத மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவள். பண்டைய கிரேக்கத்திலும் ‘vestal virgins ” உண்டு.

ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல அரிய கெளரவம்.

கோவிலுக்கு மட்டுமே தொண்டாற்றிய பல கலைஞர்கள் காலப்போக்கில் நலிந்துவிட்டார்கள். தேவதாசி குலம் தெருவுக்கு வந்துவிட்டது.

எனினும் தேவர் அடியாள் என்றால் விபச்சாரி என்ற கருத்து வேரூன்றியது 1950க்களுக்கு அப்பால்தான். தேவர் அடியார் என்றால் கெட்ட வார்த்தை என்று பேசுபவருக்கு இந்து சமய சமூக வரலாறு சரியாக தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இதை சொன்னால் உடனே எனக்கும் தேவதாசி, விபச்சாரி போன்ற பட்டங்கள் சூட்டுவார்கள். நீ உத்தமியா? என்று ஏசுவார்கள். என் ஜாதியை அலசுவார்கள்.

ஏன்? என்றால், இங்கு பெண் பேசுவதே பெருங்குற்றம். உண்மையை ஆராய்ந்து சொல்வது ஊர்மேய்வதற்கு ஒப்பு. மெய்ப்பொருள் காண்பது ஒழுக்க குறைவு. தமிழை நேசிப்பதும் கலையை விரும்புவதும் களவாணித்தனம். சினிமாக்காரி மதத்தையோ தமிழையோ பற்றி வாயை திறப்பது தேசத்துரோகம்.

21ஆம் நூற்றாண்டில் இன்னும் நம்மை இறுக்கி பிடித்திருக்கும் பெண்ணடிமை, ஜாதி தளைகளை ஒரு குழந்தை அனாயாசமாக வென்றதே அன்று !! அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல, வைரகவிஞர்களுக்கும் தாயார்தான். ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி.


வைரமுத்து,ஆண்டாள்


 andal

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.

ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.

இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும்  டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்

நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே. (ஜெயமோகன்)

http://www.jeyamohan.in/105607#.WnJNB66nGM8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக