புதன், 15 மே, 2024

ஹயக்கிரீவன் கதை தெரியுமா?

விடுதலை ஞாயிறு மலர்
Published April 27, 2024

பாற்கடலைக் கடைந்து எடுத்த இறப்பில்லாத நிலையைக் கொடுக்கும் அமிர்தத்தை அசுரன் ஒருவர் மாறுவேடம் பூண்டு தேவர்களின் வரிசையில் நின்று குடித்துவிட்டார். இதனால் அவரும் சாகாவரம் பெற்றுவிட்டார்.
அவரை வதம் செய்த நிலையில் அவர் இரண்டு பாகமாகி ராகு, கேது வாக வானில் சுற்றி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது சூரியனையும் நிலவையும் விழுங்குவதால் தான் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகிறது என்று கதை விட்டார்கள்.
அந்த ராகு, கேதுவிற்கு பல்லாயிரம் பிள்ளைகள் பிறந்து அவர்கள் பல கோடிகளாக மாறிவிட்டார்களாம். அவர்கள் தொடர்ந்து தேவர்களுக்கு தொல்லை கொடுத்ததால் அவர்களோடு விஷ்ணு ஒரு லட்சம் ஆண்டு தொடர்ந்து போர் புரிந்தாராம்.
இந்த நிலையில் போர் புரிந்து கொண்டு இருக்கும் போது, வில்லை எடுத்து அம்பை அதில் வைத்து எய்ய முற்படும் போது தூக்கம் வந்து விட்டதால், அப்படியே தூங்கிவிட்டாராம். எத்தனை ஆண்டுகள் தூங்கினார் என்றால் 17 லட்சம் ஆண்டுகள் தூங்கிவிட்டாராம்.

மீண்டும் அசுரர்கள் தொல்லை அதிகரிக்கவே 17 லட்சம் ஆண்டுகளாக அயர்ந்து தூங்கும் விஷ்ணுவை எழுப்ப தேவர்கள் பயந்தனர். இந்த நிலையில் “அவர் கையில் உள்ள வில் நழுவினால் அவர் எழுந்துவிடுவார்” என்று நாரதர் கூற இந்திரனும் கரையானாக மாறி அந்த வில்லை அரித்துவிட்டாராம். இதில் நாணில் ஏற்றிய அம்பு திடீரென விடுபட்டு வில்லை வைத்திருந்த விஷ்ணுவின் தலையை அண்ட சராசரத்திற்கு அப்பால் வீசிவிட்டதாம்,
இதை அறிந்த லட்சுமி தேவர்களையும் பூதகனங்களையும் விஷ்ணுவின் தலையை தேடிக்கொண்டுவர வேண்டிக்கொண்டாராம், அவர்களும் பல கோடி ஆண்டுகளாக தேடி தலை கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து லட்சுமியிடம் கூறினார்களாம்.

இதற்கு முன்பு ஒரு பிளாஸ் பேக்:
லட்சுமியும் அவரது சகோதரனான அஸ்வனுடன் குதிரை உருவம் கொண்டு கள்ள உறவு கொண்டிருப்பதை விஷ்ணு தட்டிக்கேட்டார். ஆனால் லட்சுமி அதை கண்டுகொள்ளாமல் இருக்கவே, விஷ்ணு லட்சுமியின் சகோதரன் அஸ்வனின் தலையைக் கொய்துவிட்டார்.
ஆனால் குதிரை உருவில் தலைவெட்டப்பட்டு கிடந்த தனது சகோதரனின் தலையை லட்சுமி எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார்.
அசுரர்களில் தலைவராகிய சுக்கிராச்சாரியார் லட்சுமிக்கு தலையை ஒட்டவைக்கும் மந்திரத்தைக் ஏதோ ஒரு காலத்தில் கூறினாராம். அந்த மந்திரம் நினைவிற்கு வர அதை கூறி தான் பத்திரப்படுத்தி வைத்த தனது சகோதரனாக இருக்கும் குதிரைத் தலையை விஷ்ணுவின் உடலோடு இணைத்துவிட்டாராம்.
உடனே லட்சுமியும் அவரையே கணவராக ஏற்றுக்கொண்டாராம்.

இதுதான் ஹயக்கிரீவன் கதை…
இதில் யாருமே ஒருவர் எப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் போரிடமுடியும் என்றோ?, 17 லட்சம் ஆண்டுகள் எப்படி தூங்கினார் என்றோ? ஒரு அம்பு எப்படி தலையை பிரபஞ்சத்தையும் தாண்டி கொண்டு சென்றது என்றோ? அசுரர்களின் தலைவரான சுக்ரீவர் எப்படி லட்சுமிக்கு தலையை ஒட்டவைக்கும் மந்திரத்தைத் கற்றுகொடுத்தார் என்றோ யாருமே கேள்வி கேட்கவில்லை?
இப்படி கேட்டிருந்தால் இந்த ஹயக்கிரீவ கதை கடவுளாகி புனிதமாகி இன்று பள்ளிப்பிள்ளைகளை விட்டு கல்வியில் தெய்வம் என்று பள்ளி துவங்கும் போது பூஜை செய்யமால் இருந்திருப்பார்கள்.
சான்று: “ஸ்ரீ லலிதாஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம்” – அதிகாரம்: 1, ஸ்லோகம்: 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக