திங்கள், 29 அக்டோபர், 2018

கொள்கைக்கும், உரிமைக்கும் வேறுபாடு தெரியாத 'விஜயபாரதம்!'



கேள்வி: சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை கி.வீரமணி வரவேற்றுள்ளாரே?

பதில்: நேற்றுவரை அய்யப்ப வழிபாட்டை கிண்டலும், கேலியும் செய்தவர்கள், சாமியே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இவர்கள். இதுபற்றியெல்லாம் கருத்துச் சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

'விஜயபாரதம்', 26.10.2018, பக்கம் 35

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அதேநேரத்தில், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும்பொழுது அவர்களின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுவது மனித உரிமை.

கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறு பாட்டைத் தெரிந்துகொள்ளும் யோக்கியதை ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரத'த்துக்கு இல்லை என்பது விளங்கி விட்டது.

விஜயபாரதம்' சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையற்ற மக்களுக்கு மட்டுமே தான் திராவிடர் கழகம் வாதாட வேண்டுமா? பகுத்தறிவும், இனநலனும் கழகத்தின் இருவிழிகள் என்பதை அறியாமலோ அல்லது அறிந்திருந்தும் பாசாங்கு செய்யும் தன்மையிலோ விஜய பாரதங்கள்' எப்படி செயல்பட்டாலும் பார்ப்பனீயத்தின் முகமூடியைக் கிழித்தெறிவார் திராவிடர் கழகத் தலைவர்.

இவர்களின் திசை திருப்பும் திரிநூல் வேலை எல்லாம் இங்கு எடுபடாது. ஜாதியே கூடாது என்பவர்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா என்பார்கள் - இட ஒதுக்கீடு என்று வருகிறபோது இந்தப் பார்ப்பன பூணூல் கும்பலுக்கு ஜாதி ஒழிப்பைப்பற்றி அக்கறை பிய்த்துக் கொண்டு எகிறிக் குதிக்கும்!'

ஜாதி சட்ட ரீதியாக ஒழிக்கப்படட்டும்; பார்ப்பனர்களும், பூணூலை அறுத்து எறியட்டும்; சங்கர மடத்தில் இந்து மதத்தைச் சார்ந்த எவரும் சங்கராச்சாரியாராக வரலாம் என்ற அறிவிப்பு குறைந்தபட்சம் வரட்டும்.

இவற்றையெல்லாம் செய்ய முன்வராத வரை, ஜாதி இருக்கும்வரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்னும் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

அதேபோல, கடவுள், கோவில் வழிபாடுகள் இருக்கும்வரை அவை தொடர்பான உரிமைக் குரலும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும்தான் தாழ்த்தப்பட்டவர்களும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற ஆலயப் பிரவேச போராட்டங்களை நடத்தியது, வெற்றியும் பெற்றது என்பதையும் விஜயபாரதங்களுக்கு' நினைவூட்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் கோவிலில் அவமதிக்கப்பட்டாரே - அப்பொழுது குரல் கொடுத்தது விடுதலை'யா - விஜயபாரதமா?'

எங்கெங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின் றனவோ அங்கெங்கெல்லாம் திராவிடர் கழகத்தின் உரிமைச் சங்கநாதம் வெடித்தே கிளம்பும்!

விஜயபாரத'ங்கள் விளங்கிக் கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 26.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக