செவ்வாய், 22 நவம்பர், 2016

அட, அயோக்கிய புரோகிதர்களே! சுவாமி விவேகானந்தர்


மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.
பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.
இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.
வேதங்களை இயற்றிவர்கள்?
வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.
வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.
உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)
முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).
நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)
பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!
குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)
பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.
மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.
கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)
-விடுதலை,5.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக