செவ்வாய், 29 நவம்பர், 2016

கடவுள்கள் கற்பனையே!

கேள்வி: ஆறுமுகமும் பன்னிரு கைகளும் கொண்ட முருகனுக்குக் கால்கள் மட்டும் இரண்டு இருப்பானேன்?

பதில்: கடவுளுக்கு வடிவம் இல்லை. நமது கற்பனை கருக்கேற்ப நாம்தான் அவருக்குப் பல வடிவங்களைக் கொடுத்திருக்கிறோம்.

இது, ஆர்.எஸ்.எஸ். வார ஏடான 'விஜயபாரதத்தின்' (2.12.2016) பதிலாகும்.

உருவமற்றவன் கடவுள், கண்டவன் விண்டதில்லை, விண்டவன் கண்டதில்லை என்று சொல்லும் இந்து மத ஆசாமிகளே, பக்தர்களே, நீங்கள் சொல்லுவது உண்மையானால் கோயில்கள் ஏன்? அங்குப் பல்வேறு உருவங்களை வடித்து வைத்து ஆறு கால பூஜை, தேரோட்டம், திருக்கல்யாணம் என்ற கூத்துகள் ஏன்? கடவுளுக்கு சமையல் அறை ஏன்? பள்ளியறை ஏன்? என்று திராவிடர் கழகத்துக்காரர்கள் கேட்கும் பொழுது, பதில் சொல்ல சரக்கு இல்லாமல் சேற்றைவாரி இறைத்த வகையறாக்களே, காலந் தாழ்ந்தாவது நாம் சொல்லும் கருத்தை, கூற்றை ஒப்புக் கொண்டே தீர வேண்டிய நிலையைப் பார்த்தீர்களா?

பன்னிரெண்டு கைகளும், ஆறு முகமும் கொண்ட முருகனுக்கு இரண்டு கால்கள் ஏன் என்று கேட்பது நியாயந்தான் - அது ஒரு கற்பனைதான் என்று ஒப்புக் கொண்டு விட்டார்களா, இல்லையா?

கோயில்களில் அடித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுள் சிலைகள் கற்பனை என்றால், ஒவ்வொரு கோயிலுக்கும் எழுதி வைக்கப்பட்ட தல புராணங்களும் பொய்தான் என்று ஆகிடவில்¬லா?

பதினெட்டுப் புராணங்களும், பொய்கள்தான், குப்பைக் கூளங்கள் தான்என்று ஆகி விட்டதா இல்லையா?

ஆக்கல் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்பதெல்லாம் சுத்த வெத்து வேட்டு என்று ஆகி விட்டதா இல்லையா?

சிவனின் மனைவி பார்வதி, விஷ்ணுவின் மனைவி லட்சுமி, பிரம்மாவின் மகளும், மனைவியுமான சரசுவதி என்பதெல்லாம் புரூடா என்பது புலனாகி விட்டதா இல்லையா?

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி என்ப தெல்லாம் இட்டுக் கட்டப்பட்ட கை சரக்கு என்ற குட்டு உடைபட்டு விட்டதா இல்லையா?

கடவுள் அவதாரமான ராமன், கிருஷ்ணன் என்பதெல்லாமே  இல்லாதவைதான் என்பதை ஏற்றக் கொண்டு விட்டார்களா இல்லையா? ராமன் கோயில் பிரச்சினையை ஏன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்? சேது சமுத்திரத் திட்டத்தில் ராமன் பாலத்தை இடிக்கலாமா என்று சத்தம் கொடுப்பதெல்லாம் கண்டிப்பாக அயோக்கியத்தனம்தான் என்பதைக் காலந் தாழ்ந்தாவது பக்தர்கள் உணர வேண்டாமா?

இராமாயணம், கீதை, மகாபாரதம் என்கிற பொய் மூட்டைகளைக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியாரும், அவர்கள் இயக்கத்தவர்களும் கூறிய பொழுது கொந்தளித்தது எல்லாம் நடிப்புதான் என்பதைக் காலம் தாழ்ந்தாவது ஒப்புக் கொள்வார்களா? இவற்றை எல்லாம் நம்பி பொருளையும், பொழுதையும், கருத்தையும் விரயமாக்கி விட்டோமே, பெரியார் சொன்னவற்றைக் கேட்க மறுத்தோமே, மோசம் போய் விட்டோமே என்று காலந் தாழ்ந்தாவது நம் மக்கள் சிந்திக்க வேண்டாமா? என்பது தான் நமது அறிவார்ந்த கேள்வியாகும்.

மாதந் தவறினாலும் பண்டிகை தவறாது என்கிற முறையில் தீபாவளி, கார்த்திகை என்று கண்ட கண்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதும், விரதம் இருப்பதும், படையல் போடுவதும், கோயில் கோயிலாக குடும்பத்தோடு  சென்று வருவதும், கோயில் உண்டியலில் பணத்தைக் கொட்டுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், காசை கரியாக்கும் கயமைச் செயலே என்பதை, 'விடுதலை' எழுதும் பொழுது, ஒப்புக்கொள்ளாதவர்கள் 'விஜயபாரதம்' எழுதும்போது ஏற்றுக் கொண்டு தானே தீர வேண்டும்.

திருப்பதியில் கொட்டிய பணம் எல்லாம் பாழ் - அது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு சிலை - அதற்குச் சக்தியும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது என்று உறுதியாக நினைத்து கடந்த காலத்தில் ஏமாந்து போனதற்காக வெட்கப்பட்டு, இனிமேல் இத்தகு முட்டாள்தனத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வார்களா?

ஏதோ ஒரு நேரத்தில் புத்தியில்லாமல் தவறு செய்து விட்டோம் - இப்பொழுதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டு இது புத்தி கொள் முதல் என்று கவனத்தில் கொண்டு, கோயில் குளம் என்று சுற்றுவதை முற்றிலுமாக ஒழிக்கும் நல்ல புத்தி வருமா நாட்டோருக்கு என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவார்ந்த கேள்வி!

கோயில்களைக் கட்டிய நமது அரசர்கள் முட்டாள்கள்; அந்தக் கோயிலுக்குள் கருவறை என்று சொல்லி ஆணி அடித்து அங்கே உட்கார்ந்து கொண்டு புரோகிதக் கொள்ளையடித்த  சுரண்டல்காரர்கள் அயோக்கியர்கள்; இவற்றை எல்லாம் நம்பி ஏமாந்த நாமோ மகா மகா மூடர்கள் என்பதை நம் மக்கள் உணர்ந்து கொண்டு திருந்துவார்களேயானால், அது மிகவும் வரவேற்கத்தக்கதே!

ஒரு கட்டத்தில் உண்மை என்று நம்பி இருக்கலாம், ஏமாந்தும் போயிருக்கலாம், அது தவறு என்று தெரிந்து கொண்ட பிறகு, மாற்றம் அடைவதுதானே புத்திசாலித் தனம். மனிதன் என்றால் பகுத்தறிவுவாதி என்பதற்கும்  அதுதானே அடையாளம்.

இந்தக் கற்பனைக் குட்டிச் சுவரை கட்டிக் கொண்டு எத்தனைக் காலம் அழுது இருப்போம் - நமது முட்டாள்தனத்தை மூலதனமாகக் கொண்டு பார்ப்பன சுரண்டல் கூட்டம் எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும்; அதனைவிட இந்தக் குழவிக் கல் கடவுள்களை வைத்து தானே நம்மைத் தீண்டத்தகாதவர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்தினார்கள்.

இவற்றை எல்லாம் கொஞ்சம் அசை போட்டுப் பார்த்து ஏமாந்தது போதும், விழித்துக் கொண்டோம் என்று வீறு கொண்டு எழுவீர் தோழர்களே, தமிழினப் பெரு மக்களே!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' இந்த வகையில் தொடர்ந்து எழுத வேண்டும், 'வரவேற்கிறோம்'.

----------------------’விடுதலை’ தலையங்கம் 29-11-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக