செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ஓர் ஆன்மீகவாதியின் கடிதம்

06.03.2017) வரை எனது ஆன்மீக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணைங்கி மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள அய்ந்து சிவன் கோயில்களுக்கு சென்று வருகின்ற ஓர் வாய்ப்பு அமைந்து.வடநாட்டுக் கோயில்களின் வரலாறு, வழிபாட்டு முறைகளை, அறிந்து கொள்ளும் நோக்குடன் சென்ற எனக்கு ஓர் வியப்பான செய்தி, உண்மை விளைங்கியது.

நான் சென்ற எல்லாக் கோயில்களிலும் ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் கருவறைக்குள் நுழைந்து சிவலிங்கத்தை தொட்டு வணங்குகிறார்கள், அபிசேகம் செய்கிறார்கள். அருகில் அர்ச்சகர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு உதவி மட்டுமே செய்கிறார். தீபாராதனை, திருநீறு, குங்குமம் எதுவும் கொடுப்பதில்லை சிறு சர்க்கரை கட்டி மட்டுமே தருகிறார்கள் காணிக்கைதட்டு இல்லை. கடவுளின் பாதத்தில் காணிக்கையை வைத்து விடுகிறார்கள்.

ஆனால் தெற்கில் நம்மை கருவறைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை தீபாராதனை செய்து விளக்கொளியில் முகத்தை மட்டும் காட்டி காணிக்கையை கைபடாமல் தட்டில் வாங்கி கொள்கிறார்கள்.

ஏன் இந்த வேறுபாடு என ஆய்ந்தால் வட நாடு ஆரிய பூமி, எனவே ஆரியர் அனைவரும் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்ய உரிமை உள்ளது ஆனால் தென்நாடு திராவிடநாடு, திராவிடர்கள் தஸ்யூக்கள் (அடிமைகள்) எனவே அந்தணரைத் தவிர மற்றவர்கள் கருவறைக்குள் நுழையவோ, இறைவனைத் தொடவோ உரிமையில்லை, தொட்டால் தீட்டாக்கிவிடும் என இன்றுவரை தீண்டாமையை கடைப்பிடிப்பது வியப்பாக உள்ளது.

தந்தை பெரியார், காந்தியார் போன்றவர்கள் நடத்திய ஹரிஜன ஆலய நுழைவுப் போராட்டத்தின் பலனாக, இயற்றப்பட்ட அனைவரும் ஆலய நுழைவுச் சட்டத்தின் படி இன்றைக்கு தலித்துகளும் கோயிலுக்கு வருவதை வடநாட்டில் கண்ணுற்றேன்.

அவர்களும் சிவலிங்கத்தினை தொட்டு வணங்கி, வழிபாடு செய்தார்கள். தோற்றத்தில் அவர்கள் ஆரியர்களாகத் தெரியவில்லை பூணூலும் அணிந்திருக்கவில்லை. ஆகம விதிகள் ஏதும் அறியாத பாமரமக்களாகவே காட்சியளித்தனர். உச்சநீதிமன்றம் இறைவனை வழிபாடுசெய்ய அனைவரும் ஆகம விதிகள் அறிந்து இருந்தால் மட்டுமே அர்சகர்கள் ஆகலாம் என்று வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.

ஆகம விதிகள் அறிந்திருந்தால் மட்டுமே அந்தணர் அல்லாத அனைத்து ஜாதியினரும் அர்சகர்கள் ஆகலாம் என்ற தீர்ப்பு சரியல்ல என்பது எனது கருத்து.

ஆகம விதிகள் ஏதுமறியாத மக்கள் வடநாட்டில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்கிறார்கள். தென் நாட்டிற்கு மட்டும் ஆகமவிதிகள் அறிந்திருக்க வேண்டுமா?

இந்த நடைமுறையில் ஜாதிவேறுபாடு, தீண்டாமை ஒழிந்துள்ளது. குறிப்பிட்ட ஓர் ஜாதியினரின் பரம்பரைத் தொழிலைப்பாதுகாத்துக் கொள்வதற்காக இந்து தர்மம் என்ற பெயரால் செய்யப்பட்டதிட்டமிட்ட சதி.

ஓர் அந்தணர் வேறு எந்தத் தொழிலையும் செய்யலாம்

ஆனால் அவர்கள் தொழிலை மற்றவர்கள் யாவரும் செய்யக் கூடாது என குலத்தொழிலை தக்க வைத்துக் கொள்ளச் செய்யப்பட்ட ஏற்பாடு. இதில் புனிதமோ, ஆன்மீகமோ, வேத ஆகம விதிகளோ கிடையாது.

இந்திய முழுமைக்குமான இந்து தர்மம் சமமானது என்பது போலியானது. வழிபாட்டில் உள்ள இந்த வேறுபாடு தென்நாட்டில் உள்ள மக்களை கேவலப்படுத்துவதற்காக உருவாக்கபட்டுள்ளது.

இன்றைய இந்தியாவில் ஆரியர், திராவிடர் வேறுபாடு இன்றும் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இந்த வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டி அனைத்து ஜாதியரும் அர்சகர்கள் ஆகலாம் என மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த சட்டத்தினை அதன் முழுவடிவில் மீட்க முடியுமா என்பதை கழக சட்ட வல்லுநர் துணை கொண்டு ஆய்வு செய்யும்படி வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம் பல.

இப்படிக்கு
அவிநாசி                                                                                                                                       அன்புடன்
14.3.2017                                                                                                                               அ.க.சிவக்கொழுந்து

 

குறிப்பு: இந்து மதத்தில் கூட வடக்கு தெற்கு பேதம் ஏன்? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...

-விடுதலை ஞா.ம.15.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக