ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பசுவை புனிதமாக(?) மதித்த வரலாறு இல்லை!


பசு உணவுக்கே பயன்பட்டது!

(ஆதாரபூர்வ அலசல்)                                                          - சரவணா இராசேந்திரன்
மனிதன் பசுவை முதல் முதலாகப் பார்த்த போது அதை இன்றையப் பசுவாகப் பார்க்கவில்லை, மிகவும் கொடூர குணம் கொண்ட ஆவ்ரோச்ஸ் (aurochs) என்ற காட்டுவிலங்கினமாகத் தான் பார்த்தான், ஒரு ஆவ்ரோச்ஸ் விலங்கு சுமார் 500 கிலோவிற்கும் மேலாக பெரிய உருவமும், கடுமையாகத் தாக்கும் மனப்பான்மையும் கொண்டது, அதன் கொம்புகள் இன்றைய காளை மாடுகளின் நீண்ட கொம்புகளை விட இரண்டு மடங்கு அளவு இருந்தன.
பொதுவாக அமைதியுடன் குழுவாக சேர்ந்து புற்களை மேயும் பழக்கமுடைய இந்த ஆவ்ரோச்ஸ் எதிரிகள் யாரும் வந்தால் மட்டும், எதிர் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் குணம் கொண்டவை, சுமார் 4000 ஆண்டுகளாக ஆவ்ரோச்ஸ் விலங்கை அடித்துத் தின்று அதன் பலனை நன்கு அனுபவித்து விட்டான், அதனால் மனிதன் தற்போது அதனை தனது கட்டுக்குள் எப்படிக் கொண்டுவருவது என்று ஓய்வு நேரங்களில் சிந்திக்கத் தொடங்கினான். அறுபது பெண் ஆவ்ரோச்ஸ்க்கு ஒரு ஆண் ஆவ்ரோச்ஸ் என்ற விகிதத்தில் இருக்கும். மேலும் பெண் ஆவ்ரோச்ஸ் இருக்கும் இடத்தை விட்டு ஆண் ஆவ்ரோச்ஸ்கள் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை, ஆகவே அவர்களுக்கு காளைகள் பற்றிக் கவலையில்லை. கொழுத்து திரியும் பெண் ஆவ்ரோச்ஸ்தான் அவர்களுக்கு முக்கியம், ஆகவே கூட்டமாக வரும் ஆவ்ரோச்ஸ்களை 100 ஏக்கர் அதற்குமேல் பரப்புகொண்ட பிரதேசத்திற்குள் வளைத்துப் போட்டான், அந்தப் பகுதிக்குள்ளே அதற்குத் தேவையான தண்ணீர், உணவு தொடர்ந்து கிடைக்குமாறு உறுதி செய்துகொண்டான். அதே போல் அவை திரும்பிச் செல்லாதவாறு சுற்றிலும் வேலி அமைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான், இப்போது வளையத்திற்குள் மாட்டிக்கொண்ட ஆவ்ரோச்ஸ்கள் தொடக்கத்தில் வேலிகளைக் கடக்க முயற்சி செய்தன. ஆனால் ஆவ்ரோச்ஸ்கள் ஒன்றைப் புரிந்துகொண்டன, தங்களுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது, அதைவிட முக்கியம் புல்வெளிகளில் வாழும் கடுமையான வேட்டை மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், கழுதைப்புலி போன்ற விலங்குகளிடம்  இருந்து தங்களுக்கும், முக்கியமாக தங்களது குட்டிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

தற்போது அத்தனைக் கன்றுகளும் பாதுகாப்பாக தாய் ஆவ்ரோச்ஸ்சுடனே இருப்பதால் ஆவ்ரோச்ஸ்களின் மரபணுவில் முதல் மாற்றம் ஏற்படத் துவங்கியது. இந்த மாற்றம் 400 ஆண்டுகால இடைவெளியில் நடந்தது, அதாவது பெரிய எல்லைக்குள் மனிதர்கள் அடக்கிவைத்த 400 ஆண்டுகள் கழித்து வட்டத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற எச்சரிக்கையும் தனக்காக மனிதர்கள் உணவுடன் பாதுகாப்பும் தருவார்கள் என்ற உணர்வும் ஏற்படத் துவங்கியது, இது காலப்போக்கில் தனது கொடூர குணத்தை மாற்றி தற்போது நாம் பார்க்கும் பசுவாக (Cattle) மாறத் தொடங்கியது. மனிதன் புற்களின் மூலம் சிறிய குடிசைகளைக் கட்டி மாடுகளுடனே வாழத் துவங்கினான். சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளில் இந்த புதிய மாற்றம் மனித குலத்தை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல  ஆங்காங்கே பெரிய நிலப் பரப்புகளை வளைத்து அதற்குள் பசுக்களை வளர்க்கத் துவங்கினான்.
இந்த காலகட்டத்தில் சிறிய பனியுகம் (Ice Age) தோன்றியது அட்லாண்டிக் பெருங்கடல் உறையத் துவங்கியதால் மத்தியத்தரைகடல் பகுதியில் பல்வேறு நிலப்பரப்புகள் வெளியே தெரியத் துவங்கின. முக்கியமாக ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அய்ரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய நிலப்பாதையை திறந்துவிட்டது. அதே போல் கிழக்கே செங்கடலின் பெரும்பகுதி நீர் வற்றியதால் ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய பாதை உருவாகியது, நிலக்குழுக்களின் மக்கள் தொகைப் பெருக்கம், அதிக அளவு கால்நடை போன்றவற்றை வைத்துக்கொண்ட அன்றைய மனிதர்கள் பெரிய குழுவாக இடம் பெயர்ந்தனர். புதிய நிலப்பரப்பு குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லாததால் மனித இடப்பெயர்வின்போது உணவுத் தேவைக்காக பசுவை நம்பி மட்டுமே இருந்தான்.
பனியுகம் முடிவதற்குள் அய்ரோப்பா, ஆசியக் கண்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு செய்திருந்தனர், அய்ரோப்பாவில் இடம் பெயர்ந்த மக்களால் அங்குள்ள குரங்கின மனிதர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அய்ரோப்பாவில் ஏற்கனவே வாழ்ந்த மக்களை மிகவும் எளிதாக அடக்கிவிட்டனர். முக்கியமாக அந்த அய்ரோப்பிய குரங்கின மக்களின் ஆண்களை மட்டும் கொன்று விட்டு பெண்களை விட்டுவைத்தனர். குரங்கினப் பெண்களுக்கும் அய்ரோப்பிய மக்களுக்கும், ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டு புதிய இனம் உருவானது.  பனியுகம் முடிந்த பிறகு, மீண்டும் ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அட்லாண்டிக் மற்றும் மத்தியத் தரைகடல் நீரால் நிரம்பியது. செங்கடல் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டது.
நியண்டர்தால் மனிதன்
அய்ரோப்பாவில் வாழ்ந்த மக்கள் நியண்டர்தால் மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெபியன்ஸ்களை விட உருவத்தில் பெரியவர்கள், பலசாலிகள். ஆனால் அவர்கள் தங்களது அறிவைப் பயன்படுத்தும் திறனில்லாதவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் வேட்டையாடி வாழும் பழக்கமுடையவர்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஹோமோசெபியன்ஸ்களால் மிகவும் எளிதில் அழிந்துபோனார்கள். நியண்டர்தால் பெண்களை ஹோமோசெபியன்ஸ்கள் பிடித்துவந்து தங்களது இனவிருத்திக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதே போல் தான் ஆசியக்கண்டங்களில் ஹோமோசெபியன்ஸ்கள் பரவத் துவங்கினர். ஆனால் அப்படி பரவியவர்களால் கிழக்கு நோக்கிச் செல்லமுடியவில்லை, அதனால் மங்கோலியா, மற்றும் இந்தியப் பெருங்கடல், மற்றும் இந்தியத் தீபகற்ப மக்கள் தனித்துவம் பெற்றுவிளங்கினர்.
பசுமாட்டுக் கறியே சிறந்தது ஏன்? பசுவின் உணவை சிறிது உற்று நோக்குங்கள். படர் வகை புற்களை விட நாணல்வகைப் புற்களையே பசுக்கள் அதிகம் சாப்பிடும், நாணல் வகைப் புற்களில் அப்படி என்ன இருக்கிறது. சாதாரணமாக வீட்டு மாடியில் தண்ணீர் நிரம்பி வழியும் தண்ணீர் தொட்டிகளின் அருகில் இந்தவகைப் புற்கள் காணப்படும். இந்தப் புற்களைச் சாதாரணமாகப் பார்த்தால் அதன் நீளமான இலைகளில் அனைத்துப் பக்கங்களிலும் மெல்லிய ரோமங்கள் இருப்பதைக் காணலாம், இதை நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் ஆயிரக்கணக்கான கண்ணாடி இழைகளை உடைத்து வைத்து ஒட்டிவைத்தது போன்று இருக்கும், ஆம் இவை அனைத்தும் புற்களே தங்கள் இலைகளின் மீது உருவாக்கிக் கொண்ட சிலிகா ரோமங்கள், புற்கள் ஏன் சிலிகா ரோமங்களை உருவாக்கவேண்டும்? காரணம் இவ்வகைப்புற்கள் புல்வெளிகளில் ஒன்றன் மீது ஒன்றாக கோடிக்கணக்கில் போட்டிபோட்டுக் கொண்டு வளர்பவை. அப்படி வளரும் போது கிடைக்கும் சிறிய சூரிய ஒளியைக் கூட சேமித்து வைத்துக் கொள்ளவேண்டிய நிலை. மேலும் இலைகளை உண்ணும் பூச்சிகளின் தாக்குதல் அபாயமும் உள்ளதால் இயற்கையாகவே தங்களுக்குத் தேவையான சிலிக்காவை மண்ணில் இருந்து பிரித்து உரோமங்களில் சேமித்து வைக்கிறது.  பசுக்கள் ஏன் இந்தவகைப் புற்களை உண்ணவேண்டும்? பசு மாத்திரம் அல்ல, மான்களும் இந்தவகைப் புற்களை அதிகம் உண்கின்றன, இதற்குக் காரணம் விரைவான இனப்பெருக்கம் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தேவையான ஆற்றல் போன்றவை சிலிகா வகைப் புற்களால் கிடைக்கிறது. பசுமாட்டின் உடலில் இந்த சிலிகா தாதுஉப்புக்கள் அதன் சதைப் பகுதியில் அதிகமாக சேமிக்கப் படுகிறது.  பசுமாட்டை மனிதன் சாப்பிடும் போது முதலில் அவனது நரம்புகளுக்கு இடையேயான தொடர்புகள் வலுப்பெறுகிறது, இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. பசுவைச் சாப்பிட ஆரம்பித்தது முதல் 40,000 ஆண்டுகால இடைவெளியில் மனிதனின் மூளை 3000 மடங்கு செயல்திறன் அதிகரித்துள்ளது. பசுவை மனிதன் சாப்பிடாமல் இருந்திருந்தால் இன்றும் கொரில்லாக்-களைப் போலவும், சிம்பன்சிகளைப் போலவும் மனிதர்களும் காடுகளில் கிடைத்ததைத் தின்று குகைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.
பசுக்களை எந்த மதமும் முக்கியப் படுத்தியதில்லை,
முன்பு கூறியது போலவே காளைகளின் எண்ணிக்கை பசுக்களின் எண்ணிக்கைக்கு  குறைவானது, ஆகவே காளைகளை அன்றைய மனிதர்கள் மிகவும் கவனமாக பராமரித்து வந்தனர். உலகின் அனைத்து நதிக்கரை நாகரீகத்திலும் பசுவைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் காளைகளை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளனர்.
சுமேரியர்கள் காளைகளின் கண்களை சூரியனுக்கு ஒப்பான சக்தியுள்ள ஒன்றாகக் கருதினர்.
எகிப்தியர்கள் காளைகளை தங்களது மன்னர்களின் நேரடித் தூதுவர்களாகக் கருதினர். சிந்துசமவெளி நாகரீகத்திலும் காளையின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு குறிப்புகள் உள்ளன.
கிரேக்கக் கதைகளில் காளைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து நாகரீக மக்களும் காளைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே, அது காளை இனப்பெருக்கத்திற்கும் முக்கியமானதாக கருதப்பட்டது.
பசுவின் பால் தயிர் மோர் வெண்ணை, நெய் போன்றவைகள் ஆரம்பகால மனிதனுக்கு தேவையற்ற ஒன்றாகவே இருந்துள்ளன, முக்கியமாக மனித குழுக்களின் இடப்பெயர்வின் போது பசுக்களின் பாலை பயன்படுத்தக் கற்றுக்கொண்டான், இருப்பினும் அது குழுக்களாக வாழ்ந்த மனிதர்களின் முக்கிய உணவாகக் கருதப்படவில்லை, அக்காலகட்ட மனிதனுக்குத் தேவையானது பசுவின் சதைப்பகுதியே அன்றி பால், தயிர், வெண்ணை, நெய் அல்ல.
எனவே, தொடக்க காலம் முதலே பசுமாடு உணவாகப் பயன்படுவதற்கும் காளை மாட்டினைப் பெற்றுத் தருவதற்குமான தேவையாகத்தான் பார்த்தானே தவிர புனிதமாக(?) அவன் கருதுவதற்கு இதில் ஒரு வெங்காயமும் இல்லை. தரவுகள்:

“Brain Boost” November 23, 2013 (television documentary) History Channel
Grass leaf silicification
Grass\botany\ encyclopedia
www.pnas.org/content/80/3/790.full.pdf
An African Trilogy (Peter Matthiessen)
The State of the World’s Animal Genetic Resources for Food and Agriculture
By Barbara Rischkowsky, Dafydd Pilling
The Genetics of Cattle, 2nd Edition - Page 467
-உண்மை இதழ்,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக