திங்கள், 20 நவம்பர், 2017

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்!-1

இரா.கண்ணிமை

"விளக்கிடந் தீர்த்தம் வெண்ணீறுத் திராட்சம்

புத்திரன் பார்ப்பான் புராணங் கீர்த்தனை

அருச்சனை யட்சரம் அறங்கள்பலவே!"

சைவர்கள் திருக்கோயில்களுக்கு விளக்கேற்றி வைத்தல், சேத்திரங்களை வலம் வருதல், ஆறு குளங்களில் போய் - குளித்தல் - பார்ப்பனர்களைக் காத்தல் - புராணங்களைப் பரப்புதல் போன்ற முப்பத்திரண்டு செயல்களைச் செய்தலாம்!

சிவநெறி மாலை 7ஆம் பாட்டில் விஷ்ணு, பிர்மாவிற்கும் எட்டாத சிவன் ஆலயத்தில் விளக்கேற்றினால் - அனைத்துப் பாவங்களும் நீங்குமாம். கைலாயம் சேர்வார்களாம் என்று எழுதியிருக்கிறது. இதற்கு ஆதாரமாய், காசிகாண்டம், குபேரனுக்கு கண்ட அத்தியாயத்திலுள்ள 32, 34, 36, 42, 43, 47ஆம் பாடல்களின் பொருள் என்னவெனில் சாமிக்கு வைத்திருந்த பிரசாதத்தைத் திருடப் புகுந்தவன் மங்கி எரிந்த திரியை வெளிச்சம் தெரியும்படி தூண்டிவிட்டுத் திருடுகையில், அறியாமல் அங்கே படுத்திருந்தவர் காலை மிதிக்கவே - அவன் எழுந்து திருடனை வெட்டிக் கொன்றான். இறந்த இத்திருடன், கலிங்கராசன் மகனாய் திரும்பப் பிறந்து சிவாலயங்களுக்கு விளக்கேற்றியதால் - சிவன் தோழனாயும் - அஷ்ட திக்கு பாலகரில் ஒருவனாயும் - அழகாபுரிக்கு அரசனாக்கி, குபேரனாய் உயர்ந்தானாம். மூஷகம் (எலி) ஒன்று ஆகாரத்துக்காய் கோவில் மூலையைக் கிளற - ஒரு ரத்தினம் தோன்றி ஒளிவீசவே, கோவிலுக்குப் பெருச்சாளி விளக்கேற்றிற்று என்று - சிவன் அதற்கு சாலோக பதவி தந்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

பாடல் 74

மூஷிகமொன்று கோயில் மூலையினைக்

கிளறும் போது

தேடரு மணியொன் றங்கே

சிதறியோர் விளக்கங்காட்ட

ஆடிய பெருமான் தீபமளித்த

தென்றதற்கு நல்ல

வீடுயர் நெறியுங்காட்டி விரைந்து

சாலோக மீந்தான்!

தன் பசிப்பிணியைத் தீர்க்கும் நோக்கமாய் விளக்கைத் தூண்டி அதன் வெளிச்சத்தில் திருட முனைந்த திருடனுக்கும், உணவைத்தேடி பூமியை கிளறிய பெருச்சாளிக்கும் - தங்கள் எண்ணத்திலும் சிந்தையிலும் என்றும் நினைத்திராத - முக்தி பதவி கிடைத்திருக்கிற வகையை நீங்களே கண்டு கொள்ளுங்கள். இதுவல்லாமல் தாமரை நூல் திரியிட்டு நெல் விளக்கேற்றுவோர்க்கு பிறப்பு, இறப்பில்லா முக்திபதவி கிடைப்பதாய் சொல்லியிருக்கிறது. இது முந்தினதைவிட இலகுவான வழி- முக்திபெற என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள். உடலரி விளக்கம், 54ஆம் பாட்டிலும், சிவபுண்ணியத்தெறிவு 91ஆம் 121ஆம் பாடல்களிலும் காணலாம்.

கலிங்க நாட்டில் ஒரு பிராமணன் (பார்ப்பனன்) வேத விதிமுறைக்கு மாறாய் தன் குல ஒழுக்கங்கள் யாவையும் விட்டு, தீயவனாய் திரிகையில், வறுமையும் சிறுமையும் நிறைந்து திரிந்த ஒரு கைக்கோளன் மனைவியை இவன் கவர்ந்துபோய் காட்டில் வசித்தான். நித்திரையில் இவனைப் புலி பாய்ந்து கொன்றது. யமகணங்கள், இவனைக் கொண்டுபோய் யமன் முன் விட சித்திரபுத்திரன் இவன் கணக்கைப் பார்த்து - இவன் மாபெரும் பாதகனெனத் தீர்த்து - வாயில் ரத்தம் வடிய - நரகத்திலே தள்ளி வதைத்தான். இறந்தபின் - இவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்விக்கொத்திச் சென்று - காசியை சேர அங்கொரு கழுகு இதை எதிர்த்துச் சண்டையிட்டு வாதாட - தன் வாயிலிருந்த காலெலும்பு நழுவி - தவறி கங்கையாற்றில் விழுந்ததால் - சிவன் தனது சிவகணங்களை அனுப்பி அவனை  புஷ்ப விமானத்தில் ஏற்றி நரலோக பதவி முக்தியளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெரிய புராணத்தில் திருநாளைப் போவான் என்னும் புலை மகனும், துன்மதன், துச்சதன் முதலானோர் - சிதம்பர ரகசியத்தால் முக்தி பெற்றதாயும், அருணகிரி புராணத்தில் வச்சிராங்கத பாண்டியன் முக்தி பெற்றதாயும் கமலாலய புராணத்திலும் தெளிவாகக் காணலாம்.

சமற்கிருத சுலோகம்:

தரிசனா பிரததிசி ஜனனாகலோலயே

காசி யாந்துமரணா முக்திஸ் மரணா

அருணாசலம் அதவாபுத்திர சந்நிதே!

சிதம்பரத்தை தரிசிக்க கமலாலயமாகிய திருவாரூரிலே பிறக்க, காசியினிலிறக்க, அருணாசலத்தை மனத்தில் நினைக்க முக்தி கிடைக்கும் என்பதாம். புத்திரன் மூலமாய் முக்தி பெறலாம் என்பது மற்றொரு நம்பிக்கையாம். இவ்வித நம்பிக்கை கொண்ட பலர் பிரசவ காலத்திற்கு முன்பே பெரும் பிரயாசையுடன் திருவாரூரைச் சேர்ந்து தங்கள் பிரசவ நாளின் நிறைவேற்றுதலுக்காக பொறுமையுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் - புத்திர - புத்திரிகளைப் பெற்றால் மோட்சம் சேரலாம் என்பதே அவர்களின் நம்பிக்கையாம்.

அருணகிரி புராணம், அருணை நகரச் சுருக்கம் 11ஆம் பாட்டில் சிறு சிதம்பரமொன்று விராட புருடனென்னும் தளத்தை தரிசிப்போர்க்கு- விஷ்ணுவும் பிர்மாவும் கண்டிராத முக்தி பதவி கிடைக்குமாம்.

12ஆம் பாட்டில் விருத்தாசலத்தில் இறந்தோர் உடல் அழியாது, வீங்காது - பிறவி ஜெனனமிராது - தலை வெடிக்காது,  நாற்றமிராது, பூச்சி புழுயிராது - சிவன் வலச்செவி வழியாய் பேசி காப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சிவ புண்ணியத் தெறிவு 43ஆம் பாடலில் ஆலத்தருகிலுள்ள ஆற்றுநீரே, கங்கை நதித் தீர்த்தமென நம்பி, குளிப்போர் - ஏழு பிறப்பிலும் செய்த பாவங்கள் யாவும் - தீர்ந்த பொருளை திருவிளையாடற் புராணம் மகா பாதகந்தீர்த்த படலம் 1, 10, 12, 40ஆம் பாடலிலிருந்து காணலாம். ஒருவன் காமவிகாரத்தால் மதிகெட்டு தாயைப் புணர்ந்தான். தந்தை வெட்கத்துக்கஞ்சி மறைத்து வைத்தும், மகன் பகிரங்கமாய் நடப்பது கண்டு புத்தி சொல்லி கேளாது, தன் தந்தையை கொல்ல முனைந்தபோது - தாய் குறுக்கிட்டு வந்ததையும் பாராமல், மண்வெட்டியால் வெட்டி தந்தையை கொன்றான். இத்தீர்த்தம் தாயை புணர்ந்து தந்தையை கொன்ற தீயச்செயலையும் தீர்த்து அவனுக்கு முக்தி கொடுத்தான் என்று கூறுகிறது.

அருணகிரி புராணம், அருணை நகர் சுருக்கம் 9ஆம் பாடலின் பொருள் - காசியென்ற தலம் - கைலாயத்திலும் சிறப்புடையது. அங்குள்ள கங்கை நதியின் அலை பரகதிக்குள் வேரோடியிருக்கிறது. இங்கு போய் பிறந்ததால் மனிதர், மிருகம், மரம் - மற்ற உயிர்களுக்கும் சிவன் எழுந்தருளி, செவியின் வழி உபதேசித்து காப்பார். அதனால் அனைத்து உயிர்களும் இறைவனைப்போல் சொரூபத்தையும், சுயரூபத்தையும் அடைந்து வாழ்ந்து கொண்டிருக்குமென்று சொல்லியிருக்கிறது. மரம், மிருகம் சாரூபம் அடைவது எப்படி?

விருத்தாசல புராணம், தீர்த்த சுருக்கம் 3ஆம் பாடலின்பொருள்: மணிமுத்தா நதியென்னும் - வெள்ளாற்றில் வீசும் காற்றுப்பட்ட மனிதர், பறவை, மிருகம் பூச்சி, புழு மரங்கள், கொடிகள், அனைத்தும் தேவலோகம் ஆளும்; அவ்வாற்றில் பட்டால் அன்பு, துணிவு, தவம் ஞானம் உண்டாகுமெனச் சொல்லுகிறது.

தாமிரவருணி மகத்துவத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கினால் அனைத்து பாவங்களும் நாசமாகிவிடுமாம். இதன்காரணமாகவே இதற்கு பாபநாசம் என்னும் பெயர் உண்டாயிற்றாம்.

திருவையாற்றுப் புராணத்தில் ஒரு செய்தி: ஒருவன் தன் தந்தை மனைவியை தனக்கு மனைவியாய் வைத்திருந்ததை - தந்தை கண்டு புத்தி சொல்லியும் கேளாது. தன் தந்தையைக் கொன்றுவிட்டு, அவளை வைத்துக் கொண்டான். தன் தம்பி இச்செயலைக் கண்டித்தான் என்று அவனையும் கொன்றான். இதனால் - அவன் பைத்தியம் பிடித்தவனாய் அலைந்து திரிந்தான். காவிரி ஆற்றின் படித்துறையில் அவன் மயங்கிக் கிடக்கையில் - பெண் ஒருவள் தீட்டுச் சேலையைத் - துறையில் துவைத்துக் கொண்டு இருக்கும்போது - சில திவலைகள் அவன் மேல் பட்டதால் - பைத்தியம் தெளிந்து - காவிரியாற்றில் போய் முழுகவே - சிவன் எழுந்தருளிவந்து அவனுக்கு கைலாய பதவி அளித்தார் என்று எழுதியிருக்கிறது.

பிரமோத்திர காண்டம் விபூதிமா மகிமை 34-42ஆம் பாடல்கள் வரைக்கும் உள்ளபொருள் பின் வருமாறு:

துன்மார்க்கனான சூது, பொய், களவு, நிறைந்த பிராமணன் (பார்ப்பனன்) ஒருவன் பாண்டிய நாட்டில் இடைவிடாது திருடி காலம் கழித்து வந்தான். தன் திருட்டுப்பொருளை வேசிகளுக்குக் கொடுத்து, காமாந்த கனாய்த் திரிகையில் ஒரு நாள் இரவு ஒரு புலைச்சியுடன் கூடிப் புணர்ந்திருந்ததைக் கண்ட அவள் கணவன் - இப்பிராமணனை வெட்டிக் கொன்று வேலிக்கப்பால் எறிந்தான். பசிவேதனையால் - குப்பைச்சாம்பலின்மேல் படுத்துக்கிடந்த நாய் ஒன்று - பிணத்தைக் கண்டு கடித்து இழுத்துத் தின்றது. நாய் ஒட்டியிருந்த சாம்பல் அப்பிணத்தின் மேல் படவே, சிவகணங்கள் அப்பாதகப் பிராமணணை பிடித்து நரகத்திற்கு கொண்டு போக வந்த யமகணங்களைத் துரத்திவிட்டு - அவனை புஷ்ப விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் சிவலோகத்தில் விட்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது.

உபதேச காண்டம், ருத்திராச்ச மான்மியம் 3ஆம் பாடலின் பொருள்: ருத்திராட்சமணியை பக்தியோடு தரிசித்தாலும், பக்தியின்றி தரித்தாலும் - அதையணிந் தோர்க்கு, சிவன் முத்தியளிப்பார் என்பதாம். இது நிறை வேறினதற்கு காட்டாய் உபதேச காண்டம் - ருத்திராட்ச மான்மியம் 118, 119, 125, 126 பாடல்களில் உள்ளது. இதன்பொருள்:-

சிறுவயது முதல் ஒரு நல்ல செயலைச் செய்யாது - பாதகனாய் திரிந்த ஒருவன் இரவில் அடுத்தவன் மனைவியைக் களவாய்க் கொண்டுசெல்கையில் - நகர காவலர் கண்டுபிடித்து - மழுவாயுதத்தால் வெட்டிக் கொலை செய்தார்கள். இவன் இறந்த நான்காம் நாள் - இராச குமாரத்தி ஒருவள் தான் அணிந்திருந்த ருத்ராட்ச வடத்தைக்கழற்றி வைத்துவிட்டு குளித்தாள். காகம் ஒன்று  ருத்ராட்ச மணியில் - கோர்த்திருந்த வெண்மணிகளை சோறு என்று நினைத்து கொத்திப் பறந்து போகையில் - வாயினின்று நழுவி பிணத்தின்மேல் விழுந்தது. அதனால் அவன் பாதகங்கள் தீர்ந்து கைலாயம் சேர்ந்தான் என்பதாம்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 20.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக