சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!
அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.
மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!
மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!
திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?
பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?
பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!
இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?
இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.
வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!
- கி.வீரமணி,
ஆசிரியர், ‘உண்மை’
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அய்யப்பன் பிரம்மச்சாரியா?
கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!
அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.
மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.
கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.
மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.
பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.
வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.
இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.
- உண்மை இதழ், 1-15.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக