#சத்தியவதி
இந்த கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் ஆதிவம்சாவதரணப் பர்வத்தில் கூறப்படுகிறது. மகாபாரதத்தை நம்புபவர்கள் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஒரு நாள் மன்னன் உபரிசரன் தனது தேரில் வானத்தில் பறந்து சென்றுகொண்டிருக்கும்போது,
அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கி அணைக்கப்பட்டிருந்தது.
மலையின் தவறான முயற்சியைக் கண்ட உபரிசரன், தனது காலால் அந்த கோலாஹல மலையை ஓங்கி உதைத்தான். மன்னன் உதைத்ததனால் கோலாஹல மலையின் அணைப்பிலிருந்து ஆறு வெளியே வந்தது. ஆனாலும் அந்த மலை, அந்த நதியிடம் இரட்டையரான ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தது.
கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த உபரிசரனுக்கு நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த ஆறு அவனுக்கே கொடுத்தது.
உபரிசரன் அந்த ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான். மகள் கிரிகையை உபரிசரன் மணந்துகொண்டான்.
மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, உடலுறவுக்கான தனது நிலையை உபரிசரனிடம் தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், உபரிசரனிடம் வந்து, தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள்.
மன்னனும் பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி, லட்சுமிபோன்ற அழகுடைய கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.
வேட்டைக்கு சென்ற மன்னனுக்கு கிரிகையின் நினைப்பால் காமம் தலைக்கேறி இன்புற்றபோது அவன் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியம் வீணாகக் கூடாது என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். அதை மூடி கட்டினான்.
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் கண்டான். பருந்திடம் சென்று, இனிமையானவனே, இந்த எனது விந்தை எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது என்றான்.
பருந்து, மன்னனிடம் அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது. அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது. இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த விந்து யமுனையின் நீரில் விழுந்தது.
அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு #பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள். உபரிசரனின் விந்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அந்த மீன் அதை விழுங்கிவிட்டது.
சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த மீன் விந்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன. அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதை மீனவர்கள் உபரிசரனிடம் கூறினார்கள்.
ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான். பெண் குழந்தையை எடுக்க மறுத்துவிட்டான். அந்த குழந்தையை மீனவர்களே வளர்த்தார்கள். அந்த குழந்தைதான் சத்தியவதி.
இந்த சத்தியவதிதான் நதியை படகில் கடக்கும்போது பராச முனிவனால்
"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்" என்றுகூறி
ஏமாற்றப்பட்டு அதன்பலனாக வேதவியாசனை பெற்றெடுத்த தாய். இதையும் அந்த மகாபாரதமே கூறுகிறது.
இந்த மகாபாரதம்தான் கிருஸ்ணன் என்ற பாத்திரத்தையும் கூறுகிறது. மேலே உள்ள கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டவர்கள், கிருஸ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
- வேணுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு (25.2.18)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக