புதன், 12 செப்டம்பர், 2018

ஒரு விநாயகனுக்கு எத்தனை எத்தனை கதைகள்

பழைமைவாதக் கருத்துகளை நவீன அறிவியல் வளர்ச்சியால ஏற்பட்ட கருவிகளைக்கொண்டே அறிவி யலுக்கு புறம்பானவற்றை பரப்பிவருவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டுபிடித்தபோது மின்சாரம் இல்லை. ஆனால், கோயில்களில், தேரோட்டங்கள், வீதி உலாக்களில், உற்சவங்களில், விழாக்களில் மின்சார விளக் குகள், ஒலி பெருக்கிகள், அலங்கார விளக்குகள், தோர ணங்கள்,  இல்லையென்றால், விழாக்களாகவே கருதமுடியாத அளவிற்கு அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி வரு கிறார்கள். கோயில் கருவறைக்குள் மின்விளக்கு எப்போது வந்தது? வண்ண வண்ண பூச்சுகள் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்தது எப்படி?

இல்லாத இந்து மதத்தில்தான் விழாக்களும் உள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் விதவிதமான கற்பனைக்கதைகள், அதன் தொடர் சங்கிலியாக மக்களின் மூளையையும், பொருளையும் பாழடிக்கும்

கடவுளர்க்கு பிறப்பு, இறப்பு உண்டா?

கிருஷ்ணனுக்கு ஜெயந்தியாம், அதுவே கோகுலாஷ்ட மியாம். ராமனுக்கு நவமியாம். விநாயகனுக்கு சதுர்த்தியாம். பிறப்போ, இறப்போ இல்லாத கடவுள்களுக்கு பிறந்த நாள் விழாக்கள் ஏன்? பண்டிகைகள் ஏன்?

கடவுளைக் கற்பித்து, அதன் அற்புதங்களை சொல்வ தற்காக கற்பனை கதைகள், புராணங்கள் வைத்து, அவற்றைக் காட்டி கோயில்கள், பண்டிகைகள் என்று பக்தியின்பெயரால் திட்டமிட்டு பரப்பும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

விநாயகனின் பிறப்புக்கே கதைகள் பல உள்ளன. புத்தகங்களில் அடுத்தடுத்த பதிப்புகளில் பின் இணைப்பு களாக, கூடுதல் தகவல்களை இணைப்பதை ப்போல், ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த சிவன் கோயில், மாரியம்மன் கோயில் என எந்த கோயிலாக இருந்தாலும், அந்த கோயிலின் முன்பகுதியில் சிறிய அளவில் இடம் ஒதுக்கி பிற்பாடு திணிக்கப்பட்ட கடவுளாகவே விநாயகன் சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

விக்கினம் தீர்ப்பவன், வினை தீர்ப்பான் விநாயகன் என்று கூறுகிறார்கள். மேலும், விநாயகனை வணங்காத வர்களுக்கு விக்கினத்தை உருவாக்கிவிடுவான் என்றும் பாமர பக்தர்களை அச்சுறுத்தி பக்தியை வளர்க்கின்றனர். வினை தீர்ப்பான் விநாயகன் என்றால், வினையை ஏற்படுத்தியவன் யார்? என்று சிந்திக்க வேண்டாமா?

விநாயகனுக்கோ பார்வதியின் வயிற்றிலிருந்து பிறப்பு கிடையாது என்று ஒரு கதை கூறுகிறது. விநாயகன் பிறப்பு என்று சொல்லப்படுவதில் பார்வதியின் கணவன் சிவனுக்கு  தொடர்பேதும் கிடையாது-. ஏனென்றால், குளிக்க சென்ற கடவுள் பார்வதி, தன்னுடைய உடலிலிருந்து திரட்டப்பட்ட அழுக்கைக்கொண்டு ஓர் ஆண் சிறுவனின் (நேரடியாக சிறுவன்!) உருவம் செய்து, காவலாக வைத்தாளாம்.

(சர்வசக்தியுடைய பெண் கடவுளுக்கே பாதுகாப்பு கிடையாதா?) மனைவியைத் தேடினானாம் சிவன். (நம்பிட வேண்டும் சர்வசக்திகொண்டவன்) பின்னர் பார்வதி குளிக்கு மிடம் சென்றானாம். பார்வதியின் அழுக்குருண்டை யால் உருவம் பெற்ற சிறுவன் தடுத்தானாம். தன் மனைவியைக் காண்பதற்கு தடையா என்று ஆவேசமடைந் தான் சிவன் (கடவுள்!) விளைவு சிறுவன் தலை கிள்ளி எறியப் பட்டது. சிவனைக் கண்ட பார்வதி, காவலுக்கு வைத்திருந் தேனே என்றாளாம். தலையை கிள்ளி எறிந்து விட்டதாக சிவன் கூற, தான் உருவாக்கிய மகனாயிற்றே என்று பார்வதி அழுதாளாம். (சிவனுக்கே தொடர்பில்லாமல் பிள்ளை?)

மதவெறிக்கான கருவியாக்கப்பட்ட

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்

விநாயகர் சதுர்த்தி என்பது பண்டிகையாக மக்களிடையே திணிக்கப்பட்ட பிறகு, ஏரி, குளம், நீர்நிலைகளிலிருந்தும் பெறப்பட்ட களிமண்ணைக் கொண்டு, கைகளால் செய்யப் பட்டும், அச்சுகள் உருவாக்கப்பட்டு அச்சுப் பிள்ளையாரா கவும் ஓரடிக்கும் உள்பட்ட உயரத்திலே செய்யப்பட்டு, வீட்டளவில் வழிபாடு செய்வதும், பின்னர் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலோ, வீட்டிலுள்ள கிணற்றினுள்ளோ தூக்கிப் போட்டுவிட்டு, அவரவர் வேலைகளை பார்த்து வந்தார்கள். இந்து மதத்தில் புராணக்கதைகளால் ஏற்படுத்தப்பட்டு, மக்களிடையே பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட எத்தனையோ பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக மட்டுமே இருந்துவந்தது. ஆனால், பல அடி உயரங்களில் விநாயகன் சிலை அமைப்பதும், அதை ஊர்வலமாக எடுத்துச்செல்வதும், அந்த விநாயகன் ஊர்வலத்தின்போது மதச் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செய்து வருகிறார்கள்.

இந்து மதத்துக்கு வீழ்ச்சி ஏற்படும்போது, குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு வீழ்ச்சி ஏற்படும்போதெல்லாம் இந்த பிள்ளையாரையும், அதேபோல், ராமனையும் ஒரு மதவெறிக்கான கருவியாக  ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

இந்துத்துவாத் திணிப்புக்கான கருவியாக மராட்டிய மாநிலத்தில் திலகர் முதற்கொண்டு, மராட்டிய பார்ப்பனர் களால் பரப்பப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விநாயகன் வழிபாடு பெரிய அளவில் இல்லாத பகுதிகளிலும் வடநாட்டு மார்வாரிகளின் பணத்தைக் கொண்டு வாரியிறைத்து கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், வீதிகள்தோறும் விநாயகன் சிலைகள் அமைப்பதும், விநாயகன் வழிபாடு, கணேஷ் பூஜை என்று பரப்புவதை செய்து வருகிறார்கள். மதக்கலவரத்துக்கான வித்தாக விநாயகன் வழிபாட்டை தூக்கிப்பிடிக்கின்றனர்.

விநாயகனின் எண்ணற்ற மனைவியர்

மணமான நிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப் பட்டுள்ளது. தென் இந்தியாவில் விநாயகன் மணமாகாத பிரம்மச்சாரி கடவுளாம். (கடவுளுக்கு ஏன் திருமணம்?) தாயைப்போலவே மனைவி வேண்டும் என்று அரச மரத்தடியில் பெண்தேடி வருகிறான் என்றும், அதனாலேயே பெண் கிடைக்காத பிரம்மச்சாரி கடவுள் என்றும் கூறப்படுவதுமான கதைகள் பல உண்டு.

இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு  மூர்த்தியின் குமாரியாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தனர் என்று அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, புத்தி, சித்தி மற்றும் ரித்தி ஆகியோரை விநாயகன் மணந்துகொண்டான் என்றும், இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதியின் கணவனே விநாயகன் என்றும் கூறப்படுகிறதாம். விநாயகனை பற்றியும், அவன் மணமான நிலை பற்றியும் பல்வேறு வட்டார வேறுபாடுகளுடன் பலவிதமான குழப்பங்கள் நிலவுகிறதாம்.

சிவபுராணத்திலும் விநாயகனின் திருமணம் கூறப்பட் டுள்ளதாம். விநாயகனும், அவன் தம்பி கந்தனும் பிரஜாபதி யின் புதல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டார்களாம்.

பெண்ணுக்கான இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதரிகளை தனக்கே மணம் முடித்து வைக்க தன் பெற்றோர் பரமசிவன் பார்வதியிடம் கோரிக்கை விடுத்தானாம்.  விநாயகனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கதைகள் கதைகளாக மட்டும் இருந்தால், மனிதனின் கற்பனை வளம் என்று விட்டுவிடலாம். ஆனால், கதைகளின் அடிப்படையில் கடவுளர்கள், கடவுளர்களின் அற்புதங்கள், அவற்றை அடிப்படையாக் கொண்டு பண்டிகைகள் என்று மக்களின் அறிவையும், பொருளையும் பாழ்படுத்துவதை பகுத்தறிவுள்ள எவரும் ஏற்பார்களா?

பயத்தின் அடிப்படையில் உழைக்கும் பாமர மக்களை சுரண்டும் பார்ப்பன ஆதிக்கவாதிகள் வஞ்சிப்பதற்காக உருவாக்கப்பட்டவையே புராணங்கள், பண்டிகைகள்.

கடவுள், பக்தி என்றால் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று எந்த கேள்வியையும் கேட்டுவிடக்கூடாது. நம்ப வேண்டும், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆய்ந்து பார்க்கும் பகுத்தறிவுக்கு வேலையே கிடையாது. இப்படி சொல்வதுதான் மதம். மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, பக்தி எல்லாம் மோசடியே.

அபிதான சிந்தாமணி

அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளதாவது:

விநாயகசதுர்த்தி விரதம்: - விநாயகர் விரதம் என்பது  விநாயகமூர்த்தியையெண்ணி ஆவணி மாசம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் அநுட்டிப்பது.  இதை அநுட்டித்தோர் உமை, புருசுண்டி, அவ்வை முதலியோர்.  இது சிந்துரனைக் கொல்லக் கசாநநர்  அவதரித்த காலம்.

விநாயகபுராணம்- உபபுராணங்களில் ஒன்று.  இதனைப் பார்க்கவபுராணம் என்பர்.  இதைத் தமிழில்திருவாவடுதுறைக் கச்சியப்பசுவாமிகள் மொழிபெயர்த்தனர். இது விநாயகர் செய்த திருவிளையாடல்களைக் கூறும்.

விநாயகமூர்த்தங்களாவன- (14) சுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணிகர், லம்போதரர், விகடர், விக்கினராசர், கணாதிபர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜாநநர், வக்கிர துண்டர், சூர்ப்பகர்ணர், ஏரம்பர், ஸ்கந்தபூர்வர்.

விநாயகர்-1. தன்னை வணங்கினர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதார்க்கு  விக்கி னத்தைத் தருபவரும்  தனக்குமேல் நாயகரிலாதவருமாத லால் இப்பெயர் வந்தது.

(1) இவர் சிவமூர்த்த பேதம். இவர்க்கு யானைமுகம் வந்த வரலற்றினைக் கஜமுகரைக் காண்க.

(2) இவர் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முனிவரிடம் இருந்த கரகநீரைக் காகவுருக் கொண்டு கவிழ்த்து அவன் சீகாழியில் வைத்த நந்தவனத்தைச் செழிப்பித்தனர். இதனால் அகத்தியர் கோபங்கொண்டு குட்டவர அவர்கைக்குத் தப்பித் தரிசனம் தந்தவர்.

(3) பார்வதி பிராட்டியார் திருவயிற்றிருந்து சிந்துரனால் தலைநீங்கி மயேச்சுரன் தலையைப்பூண்டு  சிந்துரனைத் திலகமாய் அணிந்தவர்.

(4) பராசுவமுனிவர் ஆச்சிரமத்தில் வளர்ந்து விக்னராசர் எனப் பெயர் அடைந்தவர்.

(5) இவர்க்குச் சிந்தாமணி விநாயகர் எனவும் வக்கிரதுண்ட விநாயகர் எனவும், கலாதரர் எனவும், கணேசர் எனவும், பாலசந்திரர் என்றும், கபிலவிநாயகர் எனவும், சுமுகர் எனவும், கசாநநர் எனவும், தூமகேது எனவும், மகோற்கடர் எனவும், உடுண்டிவி நாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர்.

(6) இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு  மூர்த்தியின் குமாரியாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தனர்.

(7) இவரது திருவிளையாடல்களைத் தனித்தனி காண்க.  இவர் சிருட்டி முதலிய பஞ்சகிருத்தியமுஞ் செய்து நாயகமாய் நிற்றலில் இவரே பரமென்பர் காணாதிபத்ய மதத்தவர். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதப்படக் கூறும். அந்தந்தச் சிறப்புப் பெயர்களிற் காண்க.

(8) இவரைப் பிரமன், விஷ்ணு, தக்கன், முற்கலன்,  வீமன், இந்திரன், ருத்ரன், உமை, கர்த்தமன், நளன், சந்திராங்கதன், சண்முகர், மன்மதன், ஆதிசேடன், புருசுண்டி, அங்கராசன், சந்திரன், கிப்பிரப்பிரசாதன், கிருதவீரியன், சூரசேநன், பரசுராமன், இராவணன், அகத்தியன், காசிபன் முதலியவர் பூசித்து இட்ட சித்தியடைந்தனர் என்ப.

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார்.

இவ்வாறு அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

சிந்திக்க வேண்டாமா?

கற்பனைக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே விநாயகன் குறித்து புராணப்புரட்டுகள் மக்களிடையே திணிக்கப்பட்டுள்ளது.

விநாயகன் பிறப்பு உள்பட புராணங்களில் கூறப்பட்ட அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்ததாதவற்றை பகுத்தறிந்து ஆராய்பவர்கள் சிறிதும் ஏற்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு தொடர்பேதும் இல்லாத வடநாட்டின் இறக்குமதியான விநாயகனுக்கு பண்டிகை என்பதன் பெயரால் கொண்டாடி, அறிவை இழக்கலாமா?

1953ஆம் ஆண்டிலேயே பிள்ளையார் சிலை உடைத்து பகுத்தறிவு வெளிச்சத்தை அளித்தவர் தந்தை பெரியார். கணினி யுகம் என்று கூறப்படுகின்ற அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்தில் அறிவியலுக்கும், அறிவுக்கும் பொருத்தமற்ற கட்டுக்கதைகளை புறந்தள்ள வேண்டாமா? சிந்திப்பீர்.

-  விடுதலை நாளேடு, 6.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக