மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்சுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?
லட்சுமியான ஸ்ரீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட்ட தால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண் களையெல்லாம்கூட கைவைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப்பாட்டுக்கே லாட்டரி போடும் படியாக ஏன் செய்யக் கூடாது?
விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடு கிறேன்.
லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?
லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.
விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?
லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம்தானா உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்று வதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர் களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.
விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர் களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.
லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்.
- குடிஅரசு - கற்பனை உரையாடல் - 16.03.1930
தந்தை பெரியார் பொன்மொழிகள்
ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தி யோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற் காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.
சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு
திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர் கட்கும் 05.05.1930 திங்கட்கிழமை மாலை5 மணிக்கு திரு. ஈ. வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுய மரியாதை மகாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.
திருமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - திருமண அழைப்பிதழ் - 04.05.1930
-விடுதலை,5.7.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக