ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்ல முன்வருகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்



கேள்வி: மு.க.ஸ்டாலின் குறைபாடுகள் எவ்வளவோ மாறிவிட்ட நிலையில், அவரை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?
பதில்: தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும்கூட, இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கை களிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறி விட்ட தமிழகத்துக்கு உகந்த, சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்தி எதிர்ப்பு? மேலும், அண்ணா வாலேயே கைவிடப்பட்ட திராவிட நாடு உள்பட, தி.மு.க.வின் பல கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டன என்றும் தெரியும். பிறகு, இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதையெல்லாம் பார்க்கும்போது, மாறுவதா, வேண்டாமா? என்று ஸ்டாலின் குழம்பு கிறார் என்று தோன்றுகிறது. 1963 இல் அண்ணா, தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையைக் கைவிடத் தைரியமாக முடிவு எடுத்தது போல், தி.மு.க.வுக்கு புது வடிவம் கொடுக்க ஸ்டாலின் முன்வர வேண்டும். அண்ணா அன்று அந்த முடிவை எடுக்கவில்லை என்றால், இன்று தி.மு.க.வே இருந்திருக்காது. அதுபோல் தைரியமாக ஸ்டாலின் செய்தால், அவர் மாறுகிறார் என்று ஏற்கலாம். அப்படிப்பட்ட மாற்றம் தி.மு.க.வுக்கு நல்லது, தமிழ் நாட்டுக்கு அவசியம்.

- ‘துக்ளக்’, 5.7.2017, பக்கம் 12, 13

நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்பார்களே அந்த விடயம் இந்த நரிக் கூட்டத்துக்குக் கைவந்த கலை!

கேள்வியே வஞ்சப் புகழ்ச்சி இலக்கணத்தைச் சார்ந்தது. மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எவ்வளவோ மாறிவிட்ட நிலையில்.... என்ற பீடிகையே... உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் நோக்கம் கொண்டதே... அவர் எப்படி இருந்தார்? அவர் எவற்றில் மாறினார்? என்று திறந்து சொல்லவில்லை. பூடகமாக ஒரு கேள் வியை எழுப்புவதும், அதற்குத் திருவாளர் குருமூர்த்தி அய்யர் பாஷ்யம் எழுதத் தலைப்பட்டிருப்பதும்தான் வேடிக்கை...

(1) தி.மு.க.வின் சிந்தனையிலும், திசை யிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும்கூட இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று குருமூர்த்தி அய்யர்வாள் எழுதுகிறார்.

தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் தளபதி மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டுவர வேண்டுமாம்.

தி.மு.க.வின் சிந்தனையிலிருந்து எந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமாம்? அதன் திசையிலிருந்து வேறு எந்தத் திசைக்குச் செல்லவேண்டுமாம்?

தி.மு.க.வின் சிந்தனை என்பது தவறானது போலவும், அதன் திசை குற்றமுடையது போலவும்,  அந்த நிலையிலிருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், இதன் பொருள் என்ன?

தி.மு.க.வின் சிந்தனை குற்றமுடையது என்பது ஒன்று - தி.மு.க.வின் சிந்தனையில் மாற்றம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தனக்கிருக்கிறது என்று சொல் லுவதன்மூலம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் குள்ளநரித்தனம் இதில் இருக்கிறதா - இல்லையா?

திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கை களிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறி விட்ட தமிழகத்துக்கு உகந்த, சமுதாய அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை என்ற தன் ஆதங்கத் தையும் ‘துக்ளக்’ குறிப்பிடுகிறது.
தி.மு.க.வின் சமுதாய சிந்தனை மாறவேண்டுமாம். மாற்றம் வரவேற்கப்பட வேண்டியதுதான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது அறிவியலே! ஆனால், அந்த மாற்றம் எந்த அடிப்படையில்? அது ஏமாற்றமாக இருக்கக் கூடாதே!

திராவிட இயக்கத்தின் சமுதாய சிந்தனை என்பது பிறப்பின் அடிப் படையிலான உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி - பிராமண - சூத்திர வருணாசிரமத் தன்மை முற்றிலும் மண்ணும், மண்ணடி வேரோடும் வீழ்த்தப்படவேண்டும் என்பதுதான்.

இந்த வருணாசிரமத்தை இன்றளவும் கட்டிக் காக்கின்ற ஒரு கூட்டம் - இருக் கிறவரை - அதற்கான சங்கர மடங்கள் இருக்கும்வரை - அதற்கான பூணூல் அடையாளங்கள் தொடரும் வரை - ஆண்டுக்கொருமுறை அது புதுப்பிக் கப்படும் தன்மை தொடர்கிறவரை - நான் பிராமணன்தான் என்று அகங்காரமாகப் பேசும் வரை - திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்றரைக் கிலோவில் தங்கத்தினால் ஆன பூணூலை சங்கராச்சாரியார்கள் அணிவிக்கும்வரை - கடவுளையே தன் ஜாதி அமைப்புக்குள் கொண்டு வந்து அடைகாக்கும் வரை -

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் மனித உரிமையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப் பனர்கள் செல்லும்வரை - பூசை வேளை யில் பெரியவாள் நீஷப் பாஷையான தமிழில் பேசமாட்டார் என்ற மனப்பான்மை யும், நடைமுறையும் தொடரும்வரை - கோவிலுக்குள் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக் கூடாது - சமஸ்கிருதம்தான் இருக்கவேண்டும் - அதுதான் தெய்வப் பாஷை - தமிழில் வழிபாடு நடத்தினால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. (‘துக்ளக்’, 18.11.1998) என்கிற பார்ப்பனீய ஆதிக்க இறுமாப்பு கட்டிக் காப்பாற்றப்படும் வரை - சங்கர மடத்தில் ஒரு சங்கராச் சாரியாராக தாழ்த்தப்பட்டவரும் வர முடியும் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும் வரை (பார்ப்பனரான காகா கலேல்கரின் கருத்து) -  பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் - காலில் பிறந்தவன் சூத்திரன் என்று கூறும் மனுதர்ம சாஸ்திரத்தின் மனித விரோத சாக்கடையைத் தூக்கிப் பிடிக்கும் வரை (இப்பொழுதுகூட ‘துக்ளக்’   மனுதர்மத்தின் ‘வீரப்பிரதாபங்களை’ அள்ளி விட்டுக் கொண்டுதானே இருக்கிறது) -

பெண்களும், வைசியர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதை இருக்கும் வரை  (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) - கீதையைத் தேசிய நூலாக்கவேண்டும் என்கிற குரல் ஒலிக்கும்வரை - முற்போக்கான பொரு ளாதார திட்டங்களைப் புராணக் குப்பைகளைக் கொண்டு வந்து போட்டு குறுக்குச்சால் ஓட்டும் முடவாதம் தொடர்கிறவரை (எடுத்துக்காட்டு: ராமன் பாலம் (ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்டவர் மானமிகு கலைஞர்) - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற சரத்து சேர்க்கப்படும்வரை (வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பது - நிஜத்தை விட்டு நிழலோடு சண்டை போடுவதுதான் - 17 ஆம் பிரிவு அதனைத் தான் கூறுகிறது) - ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்னும் நிலை நிலைநிறுத்தப் படும்வரை - திராவிட இயக்கத்தின் சிந்த னையில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை குருமூர்த்தி வகையறாக் கள் நெஞ்சில் நிலை நிறுத்தட்டும்!
நியூஸ் 7 தொலைக்காட்சியில் பார்ப்பனர் தொடர்பான பிரச்சினையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்தை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பார்க்கட்டும் பார்ப்பனர்கள்.

“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்த சூழலிலும் திராவிட இயக் கத்தின் முழு மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், யாரையும் எதிர்கொள்வேன் - திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும், எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப் பாடு” என்று தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறுதியிட்டு உறுதியாகப் பிரகடனப்படுத்தியதற்குப் பிறகும் குருமூர்த்திகள் பூணூலையும், வாலையும் சுருட்டிக் கொள்ளட்டும்!

அண்ணா “திராவிட நாடு” கோரிக் கையைக் கை விட்டது பற்றி பெருமையாக எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி. திராவிட நாடு கோரிக்கையைக் கை விட்டாலும்  அதற்கான காரணங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என்று அண்ணா அவர்கள் சொன்னதை குருமூர்த்திகள் வசதியாக  “பவானி ஜமக்காளம் போட்டு” மறைப்பானேன்?

50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறிவிட்ட தமிழகத்துக்கு உகந்த சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை என்று மெத்த வருத்தப்பட்டு கண்ணீர் உகுக்கிறார் உஞ்சி விருத்திக் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

ஆன்மிகமா? தமிழ்நாடு மாறி விட்டதா? ஆன்மிக மடத் தலைவரே கொலை வழக் கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணினார். சங்கராச்சாரியார்முதல் தேவநாதன் வகையறாக்கள் (காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோவில் குருக்கள்) சாமியார்களின் லீலைகள், சங்கதிகள் எல்லாம் சந்தி சிரிக்கின்றன.

குஜராத் பட்தாஸ் சுவாமி நாராயணண் கோவிலை ஒட்டிய குருக்களின் வீடே விபச்சார விடுதியான கதை பட விளக்கங் களுடன் பத்தி பத்தியாக பக்தியின் வண்ட வாளம் தண்டவாளத்தில் ஏறிடவில்லையா?

அய்யப்பன் கோவில் மேல் சாந்தி (அர்ச்சகர்)யின் கோவில் அறையில் சாராய பாட்டில்கள் - குவிந்து கிடக்கவில்லையா?
கோவிலுக்குப் போவது ஃபேஷனாகி விட்டது - பக்தர்களிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று சொன் னவர் அவாளின் பெரியவாள் ஜெயேந்திர சரசுவதி என்பதை அறிவாரா?

(1976, மே காஞ்சி அகில இந்திய இந்து மாநாட்டில்)

இவற்றைத் தொகுத்தாலே அது ஒரு தனிப் புராணம் ஆகிவிடும் - இந்த இலட்சணத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக ஆன்மிகம் வளர்ந்து விட்டதாக அய்யர்வாளுக்குக் கித்தாப்பு ஒரு கேடா? இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக் கொண்டவர் யார்? அவாளின் ராஜதந்திரி ராஜாஜிதானே!

தி.மு.க.வின் கொள்கைகளை நினை வூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அங்கலாய்க்கிறார் அய்யர்வாள்.

இப்பொழுது புரிகிறதா அவாளின் ஆத்திரத்துக்கும், காழ்ப்புக்கும் காரணம் என்னவென்று?

தி.மு.க.வின் வரலாற்றை திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக் கரசு அவர்கள் பல தொகுதிகளை எழுதியதும், அதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டதும் அவர்களின் அஸ்தியில் ஜூரத்தை உண் டாக்கி விட்டது என்பது விளங்கவில் லையா? என்னதான் சாமர்த்தியமாகப் பேசினாலும், எழுதினாலும், கோணிப் பைக்குள் இருக்கும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே! 

தி.மு.க.வின் வரலாறு வெளியில் பரவினால், இளைஞர்கள் தெரிந்து கொண்டால், அது மனுதர்மக் கூட்டத்தின் அஸ்திவாரத்தைக் கலைத்துவிடுமே என்ற அச்சம்தான் அவர்களை உலுக்குகிறது என்பது அம்பலமாகி விட்டதே! ‘அருந்தொண்டாற்றிய அந்தணர் எனும் நூலை அவர்கள் எழுதலாம்’ - அதனை சங்கராச்சாரியார் வெளியிடலாமோ!

இப்பொழுது எதற்கு இந்தி எதிர்ப்பு என்று இன்னொரு கேள்வி!

இப்போது ஏன் இந்தித் திணிப்பு - சமஸ்கிருதத் திணிப்பு என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொன்னால், இப்போது ஏன் இந்தி எதிர்ப்பு என்பதற்கான காரணத்தை வெகு எளிதாகவே சொல்லிவிட முடியுமே!

ஜாதி ஒழிப்பைக் கைவிட வேண்டும் -

பெண்ணடிமை எதிர்ப்புக்கு முழுக்குப் போட வேண்டும் -

இந்திக்கு ‘ஜே’ போடவேண்டும் -

சமூகநீதிக்கு நிரந்தர விடுமுறை கொடுக்கவேண்டும் -

மூடநம்பிக்கைகளை சுவீகரித்துக் கொள்ளவேண்டும் -

புராணங்களை எதிர்க்கக் கூடாது -

கோவில்களைக் கொண்டாட வேண்டும் -

தமிழ்,  தமிழ் உணர்ச்சி - தமிழன், திராவிடன் 

என்றெல்லாம் பேசக்கூடாது, எழுதக் கூடாது -

பார்ப்பனர் குறித்தோ, 

பார்ப்பனீயம் குறித்தோ பகரக் கூடாது -

மாநில உரிமை பேசக்கூடாது -

பாரத மாதாக்கி ‘ஜே’ போடவேண்டும் -

மதச் சார்பின்மைபற்றி வாய்த் திறக்கக் கூடாது -

மாறாக ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று ஏக வசனம் பேசவேண்டும் -

தீண்டாமை க்ஷேமகரமானது என்னும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறி ஜெபம் செய்யவேண்டும் -

நெற்றியைச் சுத்தமாக வைத்துக் கொள் ளக்கூடாது - மதக்குறியைத் தீட்ட வேண்டும்!

திராவிட இயக்கம் எதிர்க்கும் இவற் றையெல்லாம் கைவிட்டு, முழுக்குப் போட்டு விட்டால் தி.மு.க. செயல் தலை வரின் சிந்தனை மாற்றம் பெற்றது என்று குருமூர்த்தி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்கள் - அக்மார்க் முத்திரை குத்துவார்கள் அப்படித் தானே! ஏடுகளில் அட்டைப் படம் போட்டு வாழ்த்துவார்கள்.

எப்படி இருக்கிறது?  புகழ்வது போல இகழ்வது என்கிற இடக்கர் அடக்கல் இதற்குள் பதுங்கி இருக்கிறது என்று உண்மைத் திராவிட இயக்கத் தொண் டர்கள் அறியவே செய்வார்கள். தி.மு.க. செயல் தலைவருக்கும் இவர்கள் எழுது வதன் அந்தரங்கம் என்ன என்பது நிச்சய மாகவே புரியும்.

ராஜாஜி விரித்த வலையையே அறுத் தெறிந்து உண்மைத் திராவிட முகத்தைக் காட்டிய அறிஞர் அண்ணா வின் தம்பிக்கு எல்லா வியூகங்களும் கண்டிப்பாகப் புரியவே செய்யும்! 

“ஆரிய மாயை” எனும் ஆய்வு நூலையே - வழிகாட்டும் சட்ட நூலாக தந்து சென்றுள்ளாரே  அறிஞர் அண்ணா!

ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்

‘பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’

கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?

பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டிய லில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. 

- கிருபானந்தவாரியார்,  (ஆனந்தவிகடன் 22.12.1991).

‘துக்ளக்’ பார்வையில்...

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா? 

புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது? 

புரோகிதர் விடை: பக்தியாவது ஒண் ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத் துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல் லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா! 

- ‘துக்ளக்’ 1-6-1981 இதழ் பக்கம் 32  

பக்தி தனிச் சொத்து  ஒழுக்கம் பொதுச் சொத்து

(தந்தை பெரியார் 24.11.1964 சென்னைப் பச்சையப்பன் கல்லூரி விழாவில்)

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லையென்றும் சிலர் கூறுகின்றனர். அது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது.

(இப்படி சொல்லி இருப்பவர் (மறைந்த) 

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி ‘கல்கி’ 8.4.1958
-விடுதலை ஞா.ம.,8.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக