தந்தை பெரியார்
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக் கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறி களையும், அயோக்கியர்களையும் மெனக் கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ , சூதாடா வோ கையில் பணமும் கொடுத்து இவ்வளவு போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவும் அறிவு இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.
புரட்டாசி சனிக்கிழமை வந்தால் தங்களுக்குப் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், செம்புக்கும் நாமத்தைப் போட்டுக்கொண்டும் துளசி, அரளிப் பூவையும் அந்தச் செம்புக்கு சுத்திக் கொண்டும் 'வெங்கிடாஜலபதி கோவிந்தா' என்றும் , 'நாராயணா கோவிந்தா' என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக்கொண்டு போவதில் ஏதாவது பலன் உண்டா என்றுதான் கேட்கிறேன்.
மற்றும், திருப்பதிக்குப் போகின்றேன் என்றுசொல்லிக்கொண்டு தலை மயிரும், தாடிமயிரும் வளர்த்து, வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக்கொள்வதும், பெண்பிள்ளைகள் சுற்றத்தாரை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியில் போட்டுப் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படி யிலோ இலாபத்தில் பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும் ஆன பண மூட்டையைக் கட்டிக்கொண்டு, கடைவா யிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், 'கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயி லுக்குக் கொடுத்துத் திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும் ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும், அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தை உண்டியலில் காணிக் கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடி யில் இடிபடுவதும் பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம் பேறிகளுக்கும், மேக வியாதிக்காரர்களுக் கும், வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர் களிலும் செய்த மாமணி மாலைகளையும் வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையில் இருந்து இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து "மகேஸ்வர பூஜை" நடத்துவதும், பிராமண சமாராதனை செய்வதும் தவிர , மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்க்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட் கின்றேன்.
திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாக அதாவது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய் ததாகவாது நம்மில் யாராவது பார்த் திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம் மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகிறது என்பதை எந்தப் பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா? என்றுதான் கேட்கிறேன்.
- விடுதலை நாளேடு 29 .9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக