சனி, 29 அக்டோபர், 2016

புரட்டாசி சனிக்கிழமை என்னும் மூடநம்பிக்கை




புரட்டாசி சனிக்கிழமை


புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
புரட்டாசி  சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப் பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக்கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடை கடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேக வியாதிக்காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டையிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக்கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

சிவராத்திரி

இனி அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானிய வகைகளையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க் கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்கு களும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்த பண்டிகைகளையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும், கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.
இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வாழவேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப்பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால் அரசனுக்குப் பயப்பட மாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத்திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது.
எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களையெல்லாம் பாலும், நெய்யும், தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக்கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20-10-1929
-விடுதலை,2.10.16

இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டதா?


உலகைப் படைத்தவர் இறைவன் என்பது உண்மையானால் கடவுள் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன்?
- எஸ்.முத்துராமன், வேலூர்

கடவுளின் பெயர்கள் வழிபாட்டு முறைகள் மற்றும் சில கொள்கைகள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும், எல்லா மதங்களும் கூறும் உண்மை இவ்வுலகைப் படைத்தும், நம்மைக் காப்பதும் கடவுள்தான் என்பது. கடவுள் மறுப்பு என்பது மற்ற மதங்களைப் பொறுத்தவரை தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லா மதங்களுக்கும் முன்னோடியாக இந்து மதம் இருப்பதால் சற்று சுதந்திரம் அதிகமாக உள்ளதாக இருக்கிறது.

அதிலும் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் இந்து மதக் கடவுளை மட்டும் ‘இல்லை என்றும், இன்னும் வேறு விதமாகக் கேலி செய்வதுமாகிய அவலம்‘ அதிகமாக உள்ளது. தாங்கள் கேட்பதுபோல் யாரும் சுதந்திரம் கொடுக்கவில்லை. ஆனால், தட்டிக் கேட்கவும் ஆளில்லை. அரசியலமைப்புச் சட்டமும் நம் மதத்திற்கு எள்ளளவும் ஆதரவாக இல்லை.
(தினமலர்)

‘தினமலர்’ கூறுவது உண்மைதானா? இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ளதுதானா? ஒரு கேள்வி கேட்டாலே ‘தினமலர்’ ஏட்டின் பதில் என்கிற வண்டி குடை சாய்ந்து குப்புற விழுந்து விடும்.

மக்களைப் பிறப்பின் அடிப்படையிலேயே பிரித்து நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், அந்தச் சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்றும், அந்த ஏழில், ஒன்று விபசாரி மகன் என்றும், இந்து மதத்தின் மிக முக்கிய சாத்திர நூலான மனுதர்ம சாஸ்திரமே (அத்தியாயம் 8, சுலோகம் 415) கூறுகிறதே - இதைவிட கேவலம் சொந்த மதக்காரனையே சோரம் போனவன் என்று சொல்லும் போக்கிரித்தனம் - சக மனிதனை மனிதனாக மதிக்காத சகிப்புத் தன்மை இன்மையை வேறு எந்த மதத்திலாவது பார்க்க முடியுமா?
சூத்திரர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; வேதங்களை காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; படித்து மனதில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி வைத்துள்ள மதம் இந்து மதம் மட்டும்தானே! இப்படி கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் உலகத்திலேயே இந்து மதம் ஒன்றுதானே!

வாதில் தோல்வி அடைந்தனர் என்று சொல்லி, சமணர் களையும், பவுத்தர்களையும் கழுவேற்றிக் கொன்ற இந்து மதம் சகிப்பு மனப்பான்மை கொண்டதுதானா? இப்பொழுதும்கூட ஆண்டுதோறும் அதற்காக இந்துக் கோவில்களில் விழா எடுக் கின்றனர் என்றால், என்ன பொருள்? இன்றுவரை அந்த மதம் சகிப்புத் தன்மையற்ற போக்கினையே கொண்டுள்ளது என்பது  விளங்கிடவில்லையா?

இந்தியாவின் கலாச்சாரத்தின் சின்னம் என்று சொல்லி, இந்திய நாட்டுப் பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுதெல்லாம் அந்நாட்டு ஆட்சித் தலைவர்களுக்கு மறக்காமல் கொடுக்கும் ஒரு நூல் உண்டு என்றால், அது கீதைதான். அந்தக் கீதை என்ன சொல்லுகிறது?
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லுகிறதே! (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32). இதுதான் இந்து மதம் சகிப்புத் தன்மையின் சொரூபம் என்பதற்கான நற்சான்று பத்திரமா?

இந்து மதத்தின் இதிகாசங்கள் என்று சொல்லப்படுகிறதே இராமாயணமும், மகாபாரதமும், அவற்றின் யோக்கியதைதான் என்ன? சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக சம்புகனை வாளால் வெட்டிக் கொன்ற கொலையாளிதானே மகாவிஷ்ணுவின் முக்கிய அவதாரமான இராமன். அந்த இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள்தானே - இன்றைக்கு இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர்.

பாரதிய ஜனதா முன்னிறுத்தும் இந்துக் கடவுள்கள் என்று சொல்லப் போனால், ராமனும், கிருஷ்ணனும்தானே! இவர்களின் கடவுள் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால், இவர்களின் இந்து மதம் எந்த இரகத்தைச் சேர்ந்தது என்பது வெட்ட வெளிச்சமாகிவிடவில்லையா?
இப்பொழுதுகூட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற ஜாதி ஒழிப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் யார்? இந்து மதத்துக்குள்ளேயே சமத்துவ சமநிலை இல்லையே! சூத்திரன் கோவில் கருவறைக்குள் உள்ள சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும்; தோஷம் பட்டுவிடும் - அதனைச் சுத்திகரிக்க வேண்டும் என்பது சகிப்பு மனப்பான்மையின் அடையாளமா?

இவ்வளவுக்கும் அர்ச்சகருக்கு உரிய பயிற்சியை முறையாகப் பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக்கவேண்டும் என்று சொல்லுகிறபொழுது அதனை ஏற்றுக்கொள்ள இயலாத மதம் எப்படி சகிப்புத் தன்மை உடைய மதமாக முடியும்?

இந்து மதத்தில் லோகக் குருக்களாக இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று எழுதி வைத்திருப்பவர்  மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆயிற்றே!

நியாயமாக இப்படிச் சொன்னதற்காக, அந்த ஆசாமியை உயி ரோடு இருந்தபோதே கைது செய்து பிணையில் வெளிவர முடியாத குற்றப் பிரிவின்கீழ் வழக்குத் தொடுத்து சிறைச்சாலையில் அல்லவா தள்ளி இருக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல; அவர் எத்தகைய மனிதாபிமானி தெரியுமா?

“ஆயுர் வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. ‘‘நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யாதே’’ என்று. ‘இதென்ன கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!’ என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்.’’ (‘‘தெய்வத்தின் குரல்’’, மூன்றாவது பாகம், பக்கம் 148).
இவ்வளவுக்குப் பின்பும் நாஸ்திகத்துக்கு இந்து மதத்தில் இடம் உண்டு என்று இன்னொரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு மனிதனுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்பது வெறுப்பின் எல்லையின் உச்சமல்லவா?
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொண்டால் விஞ்ஞானிகளான டார்வின், கலிலியோவுக்கு தண்டனை கொடுத்தது தவறு - அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று போப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாரே - அந்தப் பெருந்தன்மை இந்து மதத்தின் சங்க ராச்சாரியார்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!


-விடுதலை,1.10.16

சனி, 22 அக்டோபர், 2016

தீபாவளி” பற்றித் தமிழறிஞர்கள் கருத்து

தீபாவளிப் பண்டிகை - தமிழர்க்கு எவ்வகையிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்பனை கள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும், தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களாகிய நாமும் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டிலே பேசியும், ஏட்டிலே எழுதியும் அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும், நாம் எதிர்பார்த்தவாறு மக்கள் இன்னும் திருந்தி தெளிந்த அறிவு பெற்றார்கள் இல்லை. தீபாவளி மோகம் மக்களை இன்னமும் வாட்டி வதைத்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் நமது பகுத்தறிவு - நாத்திக இயக்கத் திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணம் கொண்ட தமிழக ஏழு பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்துரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத் தமிழறிஞர்களின் கருத்துரைகள் “தீபாவளி தமிழர் விழா அன்று என்பதையும், தீபாவளிக்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லை என்பதையும், தீபாவளி வடநாட்டுப் பண்டிகை என்பதையும், தீபாவளி சமண சமயப் பண்டிகை என்பதையும் நன்கு தெளிவுபடுத்துகின்றன”. தீபாவளி கொண்டாடி மகிழும் பக்த அன்பர்களாம் தமிழ்ப் பெருமக்கள் மதி நலமும், மான உணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அத்தமிழ் அறிஞர் களின் கருத்துகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.
1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படு கிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடின மாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
(ஆசிரியர்: தமிழறிஞர் கா. சுப்பிரமணியன் (பிள்ளை), நூல்: “தமிழர் சமயம்“ பக்கம்: 62.)
2. வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்தி லிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்தத் திருநாள் அன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியன்று புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: “மதுரை நாயக்கர் வரலாறு” பக்கம்: 433-434)
-விடுதலை,20.10.16
“தீபாவளி” பற்றித் தமிழறிஞர்கள் கருத்து (2)
3. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!
வடநாட்டில் அக் காலத்திலிருந்த தமிழ் மேன்மக் கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வட நாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திரு நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையா யிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக்கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகா சுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவலி நரகாசுரன் கதைக்குச்சிறிதும் இசைவது அன்று.
(ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்“ பக்கம்: 200-201)
4. அகராதிக் குறிப்பில்...
இரண்யாட்சதன்: இவன் கதா பாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒரு முறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணு மூர்த்தி சுவேத வராக (பன்றி)ருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மத வாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக் கொண்ட விஷ்ணு விற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப் பெயர் அடைந்த தேவர்.
(சுரா பாணம் என்பது ஒரு வகை மது; அதை உண்டதால் அவர் சுரர் ஆனார்) (705).
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந் தும் ஆரியப் பார்ப் பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
(ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ. சிங்காரவேலு முதலியார், நூல்: அபிதான சிந்தாமணி)
5. சமண சமயப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்த போது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற் பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆன படியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண் டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்த படியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக்கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை : தீபாவலி) மகாவீரர் விடி யற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவலி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்த மற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகா சுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவலி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதை தான் நரகாசுரன் கதை.
(ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர்
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: “சமணமும் தமிழும்“ பக்கம்: 79-80)
-விடுதலை,21.10.16
6. அறிவுக்குப் பொருத்தமற்ற கதை

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவலியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன் றும் தீபாவலியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

(ஆசிரியர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்“ பக்கம் 33-34).

7. அசுரர் கொலைக்கு விழாவா?

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்கவேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.
(ஆசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார், நூல்: “வாரியார் விரிவுரை விருந்து” பக்கம்: 95)
-விடுதலை,22.10.16

புதன், 19 அக்டோபர், 2016

அறிஞர் அண்ணா பார்வையில் தீபாவளி!

தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை :

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! – மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.

இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர். இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!

திங்கள், 17 அக்டோபர், 2016

விநாயகனா..? வினை - தீர்த்தவனா?

- இரா.கண்ணிமை

விநாயகன் யார்? விநாயகன் சிவனின் மூத்தமகன். விநாயக உருவம் யானைத் தலையும், பெறுத்த வயிறும், ஒரு தும்பிக்கையும், நான்கு கைகளுடையதாய் கல், மரம், சுண்ணாம்பு, களிமண், சாணி மற்றும் பஞ்சலோகங்களிலும் செய்து வைத்து சிவ மதத்தார் தொழுவதைக் காணலாம்.

விநாயகனின் மறு பெயர்கள்

விநாயகனின் மறு பெயர்கள் அங்குச பாசமேந்தி - அம்பிகை தனயன் - அரிமருகன் - ஆகுவாகனன் - இறை மகன் - ஈசன்  மைந்தன் - ஏகதந்தன் - ஏரம்பன் - அய்ங்கரன் - ஒற்றைக் கொம்பன் - கங்கை பெற்றோன் - கணபதி - கயமுகன் - கிரிமுகன் - கவுரிசேயன் - காமன் மைத்துனன் - நால்வாயன் - பாசாங்குசன் - முன்னோன் - மூத்தோன் - விக்கினேசுவரன் என்பனவாம்.

விநாயகன் ஒரு முறை கெஜமுகா அசுரனை அழிக்க நினைத்த போது அசுரன் எலி அவதாரமெடுத்து விநாயகனை எதிர்க்கவே - விநாயகன் அந்த எலியின் மேலேறி அதைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டானாம்.

விநாயகனை பார்வதி என்னும் துர்க்கை பெற்றபோது சனியீஸ்வரனும், தேவர்களும் பிள்ளையாரைப் பார்க்க வந்தார்களாம். சனியீஸ்வரனின் தோஷம் தாக்கியதால் - இவன் தலை சாம்பலாய்ப் போய்விட்டதாம். பிர்மா வடபுறம் நோக்கி நிற்கும் மிருகத்தின் தலையை அறுத்துப் பொருத்த சனிக்குக் கட்டளையிட - சனி யானை முகத்தோன் என்றழைக்கப்பட்டானாம். தன் தாயின் கண்பட்டு இப்படி ஆனதாலும், தன் தம்பி மகன் வெட்டிப்போட்டதாயும், தக்கன் யாகத்தை அழிக்க இவன் வீரபுத்திரனை அனுப்பியபோது யானைகளின் புணர்ச்சியைக் கண்டு தாங்களும் யானை உருவாகி அவ்வாறே புணர்ந்து சிறிய யானை முகத்தையுடைய விநாயகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.

பாடல்

பாவமிகப் பண்ணி மற்றேவுலனேயவன் புதல்வன்
தேவனோ வச்சிவனானான், சிந்துரமாயப் பார்வதி
கைம் மாவுருவாகிப் புணர வந்துதித் தானைந்து கர
மேவுங்கரி முகனாயத் தேவனெனால் விற்பனமோ?”
சிவன் - உனக்கு எந்த பெண் வேண்டுமென்று விநாயகனை கேட்க - விநாயகன் தன் தாயைப்போல் ஒத்த ஒரு பெண் வேண்டுமென்று சொன்னானாம். பெண்கள் நடமாடும் குளக்கரையிலும், வழிகளிலும் நின்று அம்மாதிரிப் பெண்ணைக் கொள்ளச் சொன்னதாய் கதை.
பேரின்ப மாணியின் விருத்தம் -
சத்திவயிற் றுதித்த சிவன் தன்னை யீன்ற
தாயாரைத் தாரமெனப் புணர்ந்த தாலே
பித்தனென்று வுலகோர் சொல் வசையைக் கேட்டுப்
பித்தராச ராந்தவ ரலாகா தென்று
அத்திமுகன் நாயின் மேலாசை யுற்று
அவுடனைப்போய் வணங்குவரு மவதி மட்டும்
நித்தநெடுந் தெருக்கள் தண்ணீர் துறைமுச்சந்தி
நேர்வழியிற் காத்திருப்ப நிலத்துள் ளோரே?
விநாயகனுக்குத் திருமணமே இல்லை. ஆண்டில் ஒரு முறை களிமண்ணால் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடி சிலையை கிணற்றில் போட்டு விடுகிறார்கள்.
போக முனிவர் விநாயகர் வரலாறை கூறுகிறார் - பாருங்கள்

போகர் ஏழாயிரம் 4ஆம் காண்டம்
பாடல்  507

அதிதமாங் கணபதியு மென்ற நாமம்
அவுதனில் மனிதரல்லால் வேறொன் றல்ல
துதிதமுள்ள கடவுளா யிருப்பா ரானால்
தொல்லுலகில் உயிரோடே யிருக்கா ரோதான்
பதிதமுள்ள பாடல்களில் சுவாமி யென்றும்
பாடினார் வெகுகோடி மாந்த ரப்பா
நிதிதமுள்ள கணபதியின் தேகந் தானும்
நிலையாத அநித்திய மென்ன வாச்சே!
பாடல்  508
என்னவே கணபதியு நீனி லத்தில்
எழிலான தேகத்தை மறந்து போனார்
பன்னவே பாரினிலே தேவ னானால்
பாழான தேகமது மண்ணுக் காமோ
துன்னதுவே காயமது நிலைப்ப தற்கு
தொல்லுலகில் கோடான கோடி கற்பம்
முன்னவே காயாதி கற்பு முண்டு
மூவுலகில் கற்றூணாய் இருந்தாற் காணே.

போக முனிவர் 500ஆம் பாடல் - திரேதாயுகத்தில் விநாயகன்  தும்பிக்கையுடன் மனித உருவில் பிறந்தவர் என்றும், 505 இல் குடிமக்களனைவரும் இவனை தேவனாக்கினார்கள் என்றும், 508ஆம், 509ஆம் பாடல்களில் - இவன் நீண்ட காலம் உயிர்வாழ்ந்த மனிதனேயன்றி தேவன் அல்லவென்றும் திட்டமாய்த் தெளிவு படுத்திக் காட்டுகிறது.

எப்படியும் இவன் தன் தாயைப் போல ஒரு பெண்சாதி வேண்டுமென்று ஆசைப்பட்டதிலிருந்து இவன் மனிதன் தான். தேவன் இல்லை என்பது விளங்குகிறது - என்று போக முனிவரே கூறுகிறார். மேலும் விநாயகனைப் பற்றி அறிய, கந்த புராணம் - கயமுகனுற் பத்தி படலம் 146ஆம் 147ஆம், 148ஆம் பாடல்களையும் பிள்ளையார் கதை அகவலையும் பார்க்கலாம்.
பார்த்தீர்களா - கணபதி தாசர்களே! - இந்தக் கதைகளை யெல்லாம் நாம் சொந்தமாகக் கதைக்கவில்லை. உங்களின் சொந்த புராணத்திலிருந்தே சொல்லியுள்ளோம்.

வீரசத்தி விநாயகன் - வரசித்தி விநாயகன் - இப்படி எத்தனையோ விநாயகர்கள் - நாட்டிலே முளைத்துள்ளன. விநாயகன் யார்? அவனது வரலாறு பழைய கதைதானே? - என்கிறீர்களா? ஆம்! அதையே தான் மீண்டும் ஒரு முறை விளக்கமாக கூறுகிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.

பார்வதி தேவியின் கழுத்து அழுக்கில் உருட்டி உண்டாக்கப் பட்டு குளியலறைக் காவலுக்கு நிறுத்தி வைக்கப் பட்டு - தேவியின் குளியல் நேரம் - சிவன் குளியலறைக்குள் புக - அழுக்குப் பிள்ளை தடுக்க - சினம் கொண்ட சிவன் அந்தப் பிள்ளை கழுத்தை வெட்டி அறைக்குள் நுழைந்தான். விவரம் தெரிந்த பார்வதி அழுது புலம்ப - தேவியின் விருப்பத்திற்கிணங்க உயிர் கொடுக்க நினைத்துப் பார்க்க - வெட்டப்பட்ட முண்டமிருக்க - தலை மட்டும் காணாமற்போக - சிவன் காட்டுக்கு ஓடி யானையின் தலையை வெட்டி வந்து முண்டத்தில் ஒட்ட வைத்து உயிர்கொடுத்தான். அந்தப் பிள்ளைதான் விநாயகன் - என சொல்கிறதே ஒரு புராணம்.

கைலாயத்தில் உள்ள வனத்தில் சிவனும் பார்வதியும் உலாவச் சென்றதாகவும் - அங்கே யானைகள் இரண்டு, குட்டி போடும் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும், அதைக் கண்ட தேவி பார்வதி, சிவனை ஒரு விதமாகப் பார்க்கவும் - அவனும் புரிந்து கொண்டு நோக்கமறிந்து யானைகள் ஈடுபட்ட வேலையில் ஈடுபட்டு போட்டார்களாமே ஒரு குட்டி! இப்படியும் புராணம் செப்புகிறது.

தலை மட்டும் யானையாகவும் உடல் மனித உருவிலும் எப்படி? ஒரு வேளை தேவி பெண் உருவிலும், சிவன் ஆண் யானையாகவும் மாறி போட்ட குட்டியா? அன்றி சிவன் மனித உருவிலும், தேவி பெண் யானையாகவும் மாறி கலந்து போட்ட குட்டியா? இதில் எந்த விநாயகன் உங்களின் விநாயகன்? அவனது பிறப்பு பற்றி நீட்டுவதற்கு விரும்பாமல் இத்துடன் நிறுத்துகிறோம்.

விநாயகனென்ன - அவனது அப்பன் சிவன் - தம்பி கோவணத்துடன் - கையில் தண்டு பிடித்துள்ள அப்பன் - மாமன் விஷ்ணு - பிர்மா - பத்தினிமார்கள் - 33 கோடி தேவர்கள் - 48 ஆயிரம் ரிஷிகள் - கின்னரர் - கிம்புருடர் - அஷ்ட திக்குப் பாலர்கள் - நாயன்மார்கள் - ஆழ்வார்கள் - சங்கராச்சாரியார் - ஜீயர்கள் - பண்டாரங்கள் - சாயிபாபாக்கள் - இத்தனையின் அடிப்பொடிகள் அத்தனையையும் பல முறைகளிலும் சந்தித்து வெற்றி நடைபோட்டு வீர உலா வந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.
விநாயக சதுர்த்தியை விவரம் புரியாமல் கொண்டாடிக் கொண்டிருப்போரே! ஆத்திரப் படாமல் - நிதான புத்தியுடன் பதில் சொல்லுங்கள். விநாயகனா? வினை தீர்ப்பவனா?


-விடுதலை,4.9.16

கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்! பிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்



இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவை களுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங் குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதிக செல் வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதி யைப்பற்றி சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத் தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதி யின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண், பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றி ருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பி னதாகவும், அவன் போய்ப்பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப்படு கின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

5. இன்னும் பல வழிகள் சொல்லப்படு கின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளை யாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல வித மாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதா யிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா?
நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டு தானே தீரும் (இவை களைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற் பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர் என்று சொல்லுவதும் மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்க வும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டி ருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல் பல லட்சக் கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களை யெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம் மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங் களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகா மணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை யில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல் லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியா தென்றே சொல்லுவோம் இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

- ‘குடிஅரசு’ - கட்டுரை - 26.08.1928
--விடுதலை,4.9.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அழுக்குருண்டை பிள்ளை-யார்? அறிஞர்கள் கருத்து!



விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும், தமிழின அறிவு நெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைகட்கு ஒத்து வராது என்பதையும் நாம் ஆண்டாண்டு காலமாக விளக்கி வருகிறோம். எனினும், நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில் பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம், அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளைத் தமிழக மக்கள் பார்வைக்குப் படைக்கிறோம்.

இந்த வழிபாடு இடைக்கால ஏற்பாடே!

அறிஞர்கள் சிலர், சங்க இலக்கியத் தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் - இடைக்காலத்தில் வந்த வழிபாடுதான் விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்ம வர்மனின் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்டர், இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலை யைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இஃது உண்மைதான்.

ஞானசம்பந்தர்
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்
கருள் செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே  என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஞானவிநாயகர் என்னும் கட்டுரையில் பக்கம் 20)

பண்டைய நூல்களில் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டையத் தமிழ் நூல்களில் இவ்விநாயக வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமை அம்மை பெண் யானையின் வடிவு கொள்ள சிவ பிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத் தொண்டர், பரஞ்சோதி என்ற பெயரோடு வடபுலத்தில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று, அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபியில் இருந்து கொணர்ந்ததால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகின்றான் என்ற கட்டுரையில் பக்கம் 17) மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8.9.1978.)

விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண் டியது அவசியம். பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதை தெளிவாக உணரமுடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி, பெண்ணில்லாமல் ஆணுக்குப் பிறந்த வர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டை ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது  அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகனென்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத் துவாரத்தில உள்ள   யானைத் தலை ராட்சசி மாலினி யைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்தவில்லை. பிரம்ம வை வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால், தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய், தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம்.

ஆனால், கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்னும் ராட்சசி வயிற்றுள் புகுந்து குழந் தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சசன் தலையை வெட்டி, தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக்குழந்தைக்கு தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது: சிவனும், பார்வதியும் யானையைப் போல் சம் போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

(பொதுவுடைமை இயக்க அறிஞர்
ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய
பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.
என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)
-விடுதலை,3.9.16

சிவன் கண்டத்தில் உதித்தவனாம் விநாயகன்!



உடுமலை சித்தன் என்கிற
பி.வி. ராமசாமி


இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி - முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் கைக்கொள்ள வேண்டியது.

பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங் கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பல காரங்களும் மற்றும் கொழுக்கட்டை, சுண்டல், வடை, பொறி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது.

இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமகனுக்குப் பிரச் சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.

கொழுக்கட்டை ஏன்?

விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பினராம். அது முதல் விநாயகருக்கு கொழுக்கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.
யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?
இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இத னைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத்துக்கும், கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?

தோப்புக்கரணம்

பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டுத் தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்தவனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலை யில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகாசுரனை அழித்தாராம்.

இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலை யில் குட்டிக் கொண்டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர் களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும், தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம்.

இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர் களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அசுரன், இந்திராதிகளை அவமானப்படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டால், தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?

இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகாசுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென்றால், விநாயகரையும், அசுரனையும் ஒன்றாகக் கருதுகின்றனரா?
இந்தப் பிள்ளையார் தன்னைக் கும்பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக்குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரி யர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!

சதுர்த்தி என்றால்...?

சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திருமணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.
சதுர்த்தி அறை - திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமகனும், மணமகளும் கூடும் அறை.

அருள்பெற குறுக்கு வழி

கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.

(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண் களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும். செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)

திடீர்ப் பிள்ளையார்

கணபதி பற்றிய விஷயம் ஆரிய மத வேதங் களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.

பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக்கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?

இவ்விதம் முதலில் விக்கினம் செய்பவராகக் கற் பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமியாகவும், அறிவிற்கும் படிப்புக்கும் ஆதிகர்த்தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப்பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?

பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார்களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனை பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத்தினர் - இந்துக்களில் சைவர் கள் என்பவர்களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங்களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?

தோன்றிய காலம்

கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவ கப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.
முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்), சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?), பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திராமல் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?), தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.

பெரும்குடும்பி பிரம்மச்சாரி

கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.
கணபதி அறிவையும், பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களிலும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!

இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான் காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக்கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரிகளுக்கும் கொழுத்த வருவாய் கிடைக்கிறது - கண்கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில், கடலில் காசைக் கரைக்கின்றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற்றில் போட்டுக் கரைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக்கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.
பிறந்த கதைகள்! சிரிப்பானி!

ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் - பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின் றும் கசமுகர் தோன்றினார்.
(அபிதான சிந்தாமணி)

(கண்ணால் பார்த்தாலும் கற்றுச் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகாசிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித்தவர் பிள்ளையார்.
(அபிதான சிந்தாமணி
-விடுதலை,2.9.16

யானைத் தலையுடன் பிறந்த வினாயகனாம்!

வினாயகன், கணபதி, கணநாதன், கணேசன், விக்னேஷ்வரன், கணன், பிள்ளையார் என்று பல பெயரால் வணங்கப்படும் வினாயகனின் பிறப்புக் கதைகள் ஒரே வகையாக இல்லாமல் ஒவ்வொரு புராணத்திலும் வெவ்வேறு வகையாக உள்ளது.

காணபத்யம் என்கின்ற வினாயகனை முழு முதல் கடவுளாக (பரப்பிரம்மம்) வழிபடும் பிரிவினரின் வினாயகர் புராணம் என்கிற உப புராணத்தில் மட்டுமே வினாயகனை உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வினாயகன்தான் முதலில் தோன்றிய கடவுள் என்றும்; சக்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா போன்றோரையும் படைத்து அண்ட சராசரங்களையும் படைத்ததாக கூறுகிறது.  ஆனால், வினாயகன் பிறக்கும் போதே தலையில்லாமல் முண்டமாக பிறந்ததாகவும், பார்வதியும், பரம சிவனும் யானைகள் வடிவாக மாறி புணர்ந்ததின் விளைவாக யானைத் தலையுடன் பிறந்ததாகவும், பார்வதி குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்கைத் திரட்டி வடிவமும் உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தபோது, சிவனால் தலை அறுக்கப்பட்டு பிறகு யானைத்தலை பொருத்தப் பட்டதாகவும் இன்னும் பற்பல வகையாக வினாயகன் பிறப்பை பற்றி புராணங்கள் கூறுகின்றன.

சிவமஹா புராணத்தில் (முதல் பாகம்,ஞான சம்ஹிதை 31. கணபாலன் அவதரித்த கதை) வினாயகனின் பிறப்பு பற்றி இப்படி கூறுகிறது;
ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹூந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்ரதம் ஸுவாக்ருதிம்
சிவனின் கணங்களே பார்வதிக்கும் பாதுகாவலாக இருப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையின்மை தோழியின் மூலமாக பார்வதிக்கு ஏற்பட்டது. இதனால் பார்வதி குளிக்கும் போது தண்ணீர்விட்டு உடலில் உள்ள அழுக்கை திரட்டி யானைத் தலையுடன் பொம்மை செய்து அதற்கு உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தாள். யானைத் தலையுடன் காவலுக்கு வைக்கப்பட்டவனே வினாயகனாம். ஏன் மனிதத்  தலைபோல் வைத்தால் என்ன உடல் அழுக்கா குறைந்துவிடும்?

“பவிஷ்ய புராணம்“ என்கிற பாரசீக (பார்சி) மத ஆதரவு புராணத்தில் வினாய கனின் பிறப்பு வேறுவகையாக உள்ளது. பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இடையூறு இல்லாமல் நிம் மதியாக வாழ்ந்து வந்ததால், கடவுளை நினைப்பதைவிட்டுவிட்டார்களாம். ஆகையினால் அவர்களுக்குப்பாடம் புகட்டவேண்டி, பிரம்மா விக்னத்தை உண்டாக்குவதற்கு என்றே விக்னேஷ் வரன் என்கிற வினாயகனை படைத்தாராம். அதாவது தொல்லை கொடுப் பதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவன் தான் வினாயகனாம்.

ஒவ்வொரு புராணத்திலும் வினாயகன் பிறப்பைப் பற்றி வெவ்வேறு வகையாக கூறுவதால் புராணங்கள் அனைத்தும் அவரவர் இச்சைக்கேற்ப எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கொசுரு செய்தி ஒன்று, வைணவ(பெருமாள்) கோயில்களின் வாயிலில் தும்பிக்கை ஆழ்வார் (கடவுளல்ல) என்கிற பெயரில் சிறுமைபடுத்தப்பட்டு வினாயகன் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பிறந்தான் என்று அறுதியிட்டு கூறமுடியாத வினாயகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒருகேடா!.

- செ.ர.பார்த்தசாரதி
-விடுதலை,01.09.2016
-விடுதலை,01.09.2016,பக்கம்-2

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...


இரா.கண்ணிமை
விஷ்ணு (கிருஷ்ணன்) மும்மூர்த்தி களில் ஒருவரான தேவன் விஷ்ணு வென்றால் - இரட்சிக்கிறவன் என்பது பொருளாம். புராணங்களில், விஷ்ணுவை மகாதேவன் என்று சொல்லப்படவில்லை. விஷ்ணுவுக்கு பல பெயர்களும் - அவதாரங்களும் உண்டாம்.
விஷ்ணுவின் மறுபெயர்கள்:
அச்சுதன் - சரவணச் செல்வன் - அரி அரிந்தமன் - உவணதேவன் - கடல்வண் ணன் - கமலக்கண்ணன் - கரியன் - கருட கேதனன் - கேசவன் - கொண்டல் வண் ணன் - சக்கரபாணி - சக்ராயுதன் - சக்கிரி - சங்கமேந்தி - சனர்த்தனன் - சம்பு - சலச லோசனன் - சாரங்கபாணி - சிறீதரன் - சவுரி - திருநாதன் - துளாய்மவுலி - நாராயணன் - நெடியோன் - பிச்சை - பஞ்சாயுதன் - பதுமநாதன் - பிரமன்றாதை - பிள்ளை கேள்வன் - பீதாம்பரன் - பூமிகொழுநன் - பெம்மான் - பெருமான் - மாதவன் - மாயன் - மால் - முகுந்தன் - முண்டகாசனைக் கேள்வன் - வலவன் - வனமாலி - விண்டு வேலைற்றுயின் றோன், என்பனவாம்
தச அவதாரப் பெயர்கள்
மச்சன் - கூர்மன் - வராகன் - நரசிங்கன் - வாமணன் - இந்திரவாசன், உலகளந்தோன், கிரிவிக்கிரன், பரசுராமன் - இராகவன், இராமன், நாகுத்தன் - பலபத்திரராமன், குண்டலன் அலகை முலையுண்டோன் - கண்ணன் - கிருஷ்ணன், கோவிந்தன், தாமோதரன், தேவகி மைந்தன், நந்தநந்த னன், பஞ்சவர்தூதன் - புத்தன், மதுசூதனன், முராரி, கோபாலன், கோபிநாதன் பலராமன் என்பதும் விஷ்ணுவின் பெயர்களே.
விஷ்ணு - சுய உருவை, நாலுகையு டையதாய் கறுப்பு நிறத்திற் செய்து, மஞ்சள் நிற ஆடையை அணிவித்து வணங்கு வார்கள். விஷ்ணு பக்தர்களில் சிறீ வைண வர், ராமாஞ்சி மதத்தார், எம்பெருமாள் மதத்தார், சாத்தாதிகள், எனப்பல வகுப்பாய் பிரித்து, மந்திரங்கள் சடங்குகளுடன் விஷ்ணுவை தெய்வமென்றும், சிறீமன் நாராயணனென்றும் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிர்மாவுக்கு ஆயுள் கணித்திருப்பது போல், விஷ்ணுவுக்கும் ஆயுள் கணிக்கப் பட்டிருக்கிறது, விஷ்ணுவுக்கு ஆயுள் பதிநான்கு கோடியே நாற்பது லட்சம் (14,40,00,000) ஆண்டுகள். விஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.
விஷ்ணுவுக்கு மனைவி - வைப்பாட்டி யாரும் உண்டு. மனைவியின் பெயர் லட்சுமி. இவள் பிர்மாவின் உடன்பிறந்த சகோதரி. ருக்மணி, ராதை வைப்பாட்டிகள். இவையன்றி இளம் பெண்களைக் கற்பழித் துக் கறைப்படுத்தி, சீர்கெடச் செய்த காம சேட்டைகள் நிறைந்த கதைகள் ஏராளம் உண்டு. இத்தனையும் சேர்ந்ததயையே கிருஷ்ணலீலை என்கிறார்கள்.
கல்வியறிவும், நாகரீகமும்,  நாட்டு முன்னேற்றமும் பெற்றுள்ள இக்காலத்தில் புராணச் செயல்கள் உச்சம் பெற்றிருந்த காலங்களில் நடத்திய கிருஷ்ணலீலையைப் போல நடந்தேறச் சமயம் பெற்றால் இளம் பெண்களைப பெற்ற பெற்றோரின் கண் ணும் மனமும் இக்காதல் காட்சிகளைக் கண்டு சகிக்குமா? கொழுந்துவிட்டுத் தாவிப் படர்ந்து பற்றி எரியும் நெருப்பு முன் விழுந்த மெழுகு போல் பொங்கி உரு காதோ? இப்படி காமச்செயல் புரிவோரை இன்று எவரேனும் கண்டால் மனங்கனிய கடவுளென்று வணங்க மனம் இடம் தருமா? இக்காமக்கோட்டிக் காட்சி நாடகக் கதையை கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் கூடுகின்ற கூட்டம் அங்கங்கே எண்ணற்ற பல ஆயிரம் என்பது பொருந்துமல்லவா? இப்படி கண்ணன் காதல் கதையை உணர்ந்து அறியாதிருப்பது எத்தனை பரிதாபமென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒருமுறை கிருஷ்ணன் நடத்திய காதற் செயலால் பார்வதியிட்ட சாபம் பலித்துப் பாம்பாய்ப்போன கதையும், தனக்கு மனை வியிருந்தும் திருப்தியின்றி ஒரு காட்டு வேடுவப்பெண்ணை இச்சித்து மோகித்துக் கூடிப் புணர்ந்ததை தன் மனைவி லட்சுமி கேள்விப் பட்டு கிருஷ்ணனை வாசல் வழியாய்  நுழைய விடாதபடி - வாயில் காவலருக்குக் கட்டளையிட கிருஷ்ணன் வேறுவழியாய் உட்புகுந்து வந்ததாயும் கதையுண்டு.
விஷ்    ணு, கிருஷ்ணவதாரத்தில் நடத் திய காமச்சேட்டைகளும், ரிஷிபத்தினி களில் உண்டாக்கிய கற்பழிவும், நட்டமும் கணக்கற்றதாய்த் தெரிகிறது. இதன் உண் மையினை அய்ந்தாம் .. பாரதத்தில் மிகத் தெளிவாய் அறியலாம். அவற்றில் சிசு பாலன் அரசக் கூட்டத்தில் கிருஷ்ணவதார மெடுத்த விஷ்ணுவின் தீயச் செயல்களில், செவிசாய்த்து கேட்டு சகிக்க முடியாத - வெட்கத்துக்குரிய பெருங்குற்றங்களை அறவே தள்ளிவிட்டு அதில் கண்டபடியே கீழே விளக்கிக் காட்டியுள்ள சிலவற்றைப் பாருங்கள்.
பாரதம், சபாபர்வம் 27ஆம் பக்கம்: “சூதுவாது அக்கிரமம், கொலை, களவு, கள், காமம் முதலியவை நிறைந்த பாண்டமாகிய இந்தக் கரியக் கிருஷ்ணனை ஆக்கிரம கண்ணியனாக்கி, பூசைகொடுவென்று வியாசர் சொல்லுவது தகுதியா?”
“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...
“ஆச்சியர், வெண்ணையைத் திருடித் திருடித் தின்கிறபோது, கண்டுபிடித்து, அசோதையிடத்து வந்து முறையிட அசோதை யிவனைப் பார்த்து என்னடா கிருஷ்ணா வெண்ணையைத் திருடித் தின்பது தகுதியா எனக்கேட்க - தன் கையிலிருந்த வெண்ணையை நக்கி கொண்டே நான் அறியேன் என்று பொய்மை கூறினான். (பாரதம் - சபாபர்வம் 28ஆம் பக்கம் பார்க்கவும்)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)
“தாயோடு பிறந்த அம்மானாகிய நஞ்சனை கிஞ்சித்தேனும் இரக்கமில்லாமல் கொன்று போட்டான்”.
“தன் தந்தையோடு பிறந்தவளை அத் தையென்று மதிக்காமல், அவளைக் கட்டிப் புணர்ந்தான்.
“இந்தக் கிருஷ்ணனுக்கு, ஏழு மனைவி கள் இருக்கிறார்கள். அவர்களிருக்க, பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை மனைவி களாக வைத்திருக்கிறான்” என்று சிசுபாலன் சொன்னான். அப்படிவெட்கத்திற்குரிய பற்பல குற்றங்களை விவரித்தபின் கிருஷ் ணனை நோக்கி நானாவித தண்டனைகளில், அவன் மீளவும் சொன்னதாவது. “அடா கொலையாளி, ஸ்திரிகளை கொலை செய்வது மகாபாதகமென்று பேதைகளுக் குத் தெரிந்திருக்க நீ அஃது உணராமல், உனக்குப் பாலூட்டும் தாயாகிய ஒரு ஸ்திரியை கொலை செய்தாயே!...”
“அடா பாவி உன் செயல்களில் ஒன்றாவது நன்னெறிக்கேதுவாக இருக் கின்றதா? நான் எவ்வளவு எடுத்துரைத்தேன். நல்ல யோக்கியதையுடையவனாய் இருப் பாயாகில் விடை கொடாதிருப்பாயோ. நீ தான் விடை கொடாமலிருந்தாலும் சபை யார் மவுனமாக இருப்பார்களோ? நான் கூறுவது உண்மையாய் இருப்பதினால், நீயும் சித்திரப் பதுமைபோல சற்றும் அசைவின்றி இருக்கின்றனையே என்றான்.
அவதரித்த விஷ்ணுவாகிய கிருஷ்ண னோவெனில்  சினந்து, சிசுபாலனைக் கொன்று போட்டானே ஒழிய, அதெல்லாம் பொய்யென்று மறுக்க, அவனாற் கூடாமற் போயிற்று. (பாரதம் - சபாபர்வம் 36 ஆம், 38ஆம் பக்கம்) அல்லாமலும் தன் குருவின் மனைவியை களவாய்க் கொண்டு போய், கானகத்தில் கூடியிருந்ததாகக் கதையுண்டு. இதல்லாமல், தன் தாயையும், சகோதரியை யும் மோகித்து பற்பலச் செயல்களைச் செய்ததாயும் தெரிகிறது.
கடைசியாய் கிருஷ்ணன் ஓர் ஆல மரத்திலேறி படுத்திருக்கையில், வேடன் ஒருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்ய - அம்பு பட்டு செத்து. உடல் கழுகு களால் கொத்தப்பட்டதாகவும், நரிகளால் பிடுங்கப் பட்டதாயும் கதையுண்டு.
பார்த்தீர்களா? - இத்துணைச் செய்தி களையும் நாம் கற்பனையாகக் கூறவில்லை. அவர்கள் எழுதி வைத்த புராணத்திலி ருந்தே கிருஷ்ணபரமாத்வாவின் வண்ட வாளங்கள் தெரிகின்றன. இதைப் பார்த்த பிறகும் படித்த பிறகும் கிருஷ்ண ஜெயந் தியைக் கொண்டாடப் போகிறீர்களா?
-விடுதலை,24.8.16

"ஆயிரம் வண்டி அழுக்கு உங்கள் முதுகில்!"-மின்சாரம்


இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற ஒன்றைத் தூக்கிப் பிடித்து நாட்டில் தார்மிக ஒழுக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி நாட்டையே தலைகீழாகப் புரட்டிப் போடுவதுபோல தொலைக்காட்சி வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் சண்ட பிரசண்டம் செய்கிறார்கள் - தேவையில்லாமல் திராவிடர் கழகத் தலைவரையும், திமுக தலைவரையும் சீண்டுகிறார்கள்.
இந்து ஆன்மிகக் கண்காட்சியை உங்கள் எல்லைக்குள் நடத்துங்கள் - அதோடு தொடர்புப்படுத்தி விவேகானந்தர் ரதம் என்ற பெயரால் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் பொழுதுதான் பிரச்சினையே வெடிக்கிறது.
இதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் விமர்சித்தார். அவர் எழுப்பிய கேள்விக்கு விடையளிக்க வக்கு இல்லாமல் பந்தை அடிக்க முடியாத ஆட்டக்காரன் எதிர் அணி வீரரின் காலை அடிக்கும் கெட்ட விளையாட்டை (Foul Game)
ஆடிக் காட்டுகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை கேள்வியாக்கி விடை அளிப்பது சரியாக இருக்கும்.
(1) கேள்வி: இந்து மதம் வெறும் மதமல்ல - அது ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்று சொல்லுகிறாரே, அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே. எஸ். வர்மாவை சாட்சிக்கு அழைக்கிறாரே?
விடை: அதே ஜே.எஸ். வர்மா தானளித்த தீர்ப்புத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியதை வசதியாக மறந்து விடலாமா? அல்லது மறைக்க முயற்சிக் கலாமா?
Hindutva Proponents Misusing Verdict: Varma  என்ற தலைப்பில் 'தி இந்து' ஏடு வெளியிட்டதே (6.2.2003 , பக்கம் - 3).
பாபர் மசூதி பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களின் உணர்வு கலந்த பிரச்சினை என்று கூறும் இதே வகையறாக்கள்தான் தங்கள் இந்து மதத்தை ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கரையேற்றலாம் என்பது எத்தகைய பரிதாபம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பெருமாள் முருகன் நாவல் பற்றி தினத்தந்தி தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'அது குறித்து நீதிபதி சொன்னது சரியல்ல - தர்மமல்ல' என்று சொன்னதும் இதே குரு மூர்த்திதான்.
தனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் அது சரி, பாதகமாக தீர்ப்பு வந்தால் தர்மமல்ல என்பது தர்ப்பைப்புல் நியாயம் போலும்!
முரளிமனோகர் ஜோஷி தேர்தலை எதிர்த்து நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள் மகாராட்டிர மாநிலத்தில் தானே தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் ராம்கப்சே - இந்து மதவாதத்தை முன் வைத்துப் பிரச்சாரம் செய்ததால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி. அகர்வால் தீர்ப்பை வசதியாக மறைப்பானேன்?
(2) கேள்வி: இந்து மதம் இந்து மதம் என்கிறார்களே அது குறித்து திட்டவட்டமான முறையில் வரையறுத்துக் கூற முடியாமல் திணறுவது ஏன்?
விடை: யார் யார் எல்லாம் - கிறித்தவர்கள் இல்லையோ, முஸ்லிம்கள் இல்லையோ, யூதர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்து மதம் என்று சொல்லுவது அறிவுப் பூர்வமானது தானா?
மேசை என்னவென்றால், எது நாற்காலி அல்லவோ, எது ஜன்னல் அல்லவோ, எது காலணி அல்லவோ. அது தான் மேசை என்று சொன்னால் வயிறு குலுங்கச் சிரிக்க மாட்டார்களா?
முசுலிமிடமோ, கிறித்தவரிடமோ, இப்படி ஒரு கேள் வியைக் கேட்டால் பளிச்சென்று பட்டுத்தெறித்தது போல பதில் சொல்லுவார்களே!
எங்கள் மதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எங்கள் மத நூல் என்ன? என்பதை விளக்கிக் கூறுவார்களே! அப்படிக் கூற முடியாததற்கு வெட்கப்பட வேண்டுமே தவிர - எது குறையோ அதையே நிறையானதாக நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுவது அவாளுக்கே உள்ளே குயுக்தி.
இன்னும் சொல்லப் போனால் இவர்கள் கூறும் இந்து மதம் என்ற பெயரே இவர்கள் வைத்துக் கொண்டதல்ல. இவர்கள் அன்றாடம் வெறுத்துப் பேசும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் வைத்த பெயர்தான் இந்து மதம் என்பது.  இதனை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரே ஒத்துக் கொண்டுள்ளாரே!
வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம் என்று எழுதியுள்ளாரே!
(தெய்வத்தின் குரல், பாகம் - 1, பக்கம் - 267).
அப்பன் பெயர் தெரியாதவன் என்று ஒருவனைச் சொன்னால் அது அவமானகரமானதாகக் கருதப்படும் நாட்டில் இப்படியொரு மதம்!
நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்துமதம் பற்றிச் சொன்னதாகச் சொல்லி துள்ளிக் குதிக்கிறார்களே - நாமும் நீதிபதி ராஜமன்னார் இந்து மதம் குறித்துக் கணித்ததை எடுத்துக் காட்ட முடியுமே!
இந்து மதம் பற்றி நீதிபதி ராஜமன்னார்
"இந்து மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச் சொல்லினுடைய தெளிவில்லாத - கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம் பற்றிய உணர்வோடுதான் இருக்கிறேன்" என ஒளிவு - மறைவு இல்லாமல் வெளிப்படுத்தித் தீர வேண்டியிருந்தது.
("When I Speak of Hindu religion I am actually conscious of the vague connotation of that word" Michael vs Venkateswaran Case; MLJ 239/1952-1).
தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக நீதிபதி ராஜமன்னார் அவர்கள் 'இந்தியப் பண்பாட்டு மரபு' என்னும் நூலிலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
"மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்து கொள்ளும் பொருளின்படி இந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று. அல்லது இந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒரு போதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது."
("Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it never used by the Hindus as the name of their religion" The Cultural Heritage of  India; Haridass Battacharia; ILR 1953 (Madras) - 106).
இதில் என்ன கொடுமை என்றால் கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்களும்கூட இந்து தானாம். அந்த வகையில் பெரியார், வீரமணி கலைஞர் எல்லாம் இந்துக்கள் தானாம். இப்படிச் சொல்லுவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? இந்து என்று சொல்லாதே -  இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொல்லுகிற தந்தை பெரியார். அவர்தம் இயக்கத்தவர்களும் இந்துக்கள் என்றால்  இந்துமதம் என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று தானே சொல்ல வேண்டும்; இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமானால் இது அறிவு நாணயமற்ற தன்மை இல்லாமல் வேறு என்னவாம்?
சரி, வாதத்துக்காகவே ஒப்புக் கொள்வோம் - நாத்திகம் பேசுகின்ற கருப்புச் சட்டைக்காரர்களும் இந்து மதக்காரர்கள் என்றால் நாங்கள் இந்து மதத்தைப்பற்றி எடுத்து வைக்கும் விவாதங்களையும், எழுப்பிடும் வினாக்கணைகளையும், குற்றச்சாட்டுகளையும் அங்கீகரிக்க வேண்டியதுதானே! அப்பொழுது ஏன் ஆத்திரப்பட வேண்டும்?
நாத்திகர்களும் இந்து மதக்காரர்கள் என்றால், நாத்தி கனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சங்கராச்சாரியார் கூறுவது (தெய்வத்தின் குரல், மூன்றாம் பாகம், பக்கம் - 734) எந்த அடிப்படையில்? இதில் மனிதநேயம் இல்லை என்பதால் இந்து மதத்தில் மனிதநேயம் என்ற பண்புக்கு இடமே கிடையாது என்பதை இந்து ஆன்மிகக் கண்காட்சி யினர் மரியாதையாக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?
(3) கேள்வி: இந்துமதம் என்பது ஒரு கட்டமைப்புக்குள் அடங்கக் கூடியதா?
விடை: ஆயிரம் ஆயிரம் பிளவுகள் - சச்சரவுகள் குவிந்து கிடப்பதற்குப் பெயர்தான் இந்துமதம் -  சைவ,  வைணவப் பிரிவுகள் வைணவத்திலும் வடகலை, தென்கலை சண்டைகள் சாதாரணமானதுதானா?
காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற சண்டை லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று இந்து மதத்தின் முடைநாற்றம் கப்பலேறியதே! இந்த வழக்கு முடிவதற்குள் எத்தனையோ யானைகள் செத்ததுதான் பரிதாபம்!
மதம் பிடிக்காமல் ஓடிய யானை
1918-1919ல் யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென் கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்களுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதிமன்றங் களை கடந்து, பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட் டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே சிறீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள். பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள்.
மூன்று மாதங்கள் நடந்த இந்த அல்லோகலத்தில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாம். மறுநாள் பத்திரிகைக்கைகளில் சிறீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது.
(நாத்திகர்களும், ஆலய நிர்வாகமும் (இணையத்திலிருந்து)
கட்டுரையாளர்: 'தீபம்' ந. பார்த்தசாரதி)
சிறீரங்கத்தில் பெருமாள் கோயில் மொட்டைக் கோபுரம் 226 அடி உயரத்தில் கட்டுவதற்கு காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிதி உதவி செய்தார். இதன் அடிப்படையில் சிவன் கோயில் கட்டுபவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்களா என்று அகோபிலமடத்து ஜீயர் அழகிய சிங்கரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன?
"நான் சிவன் கோயில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா சிறீமத் நாராயணன் தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம் என்றாரே!
('கல்கி' 11.4.1982)
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோயில் இருக்கிறது. ஆண்டுதோறும் அய்ப்பசி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் கோயில் உற்சவம் நடைபெறும். மணவாள மா முனிகள் வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயிலைச் சுற்றி வருவது வழக்கம். அப்படி வரும்போது என்ன செய்கிறார்கள்? தேவநாதசாமி கோயில் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாளும் போட்டு விடுகின்றனர்.
மணவாளசாமியும், அதனோடு வரும் பக்தர்களும் தேவநாத சாமியைப் பார்த்து விடக் கூடாதாம். பார்த்தால் தீட்டுப்பட்டு விடுமாம். இந்த ஊர்வலம் முடிந்ததும் ஊர்வலம் வந்த  பாதையில் சாணியைத் தெளித்து தீட்டும் கழிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரிடமும், இந்து அறநிலையத்துறையிடமும் மனு கொடுத்தும் அதே நிலைதான்.  இந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே பேதாபேதம் தீண்டாமை இருக்கிறதே இதற்கு என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
இந்து மதத்தில் மனிதர்களுக்குள்தான் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்றால் கடவுள்களுக்குள்கூட பூணூல் போட்ட ஜாதி, பூணூல் போடாத ஜாதி இருக்கிறதே! கொலைக் குற்றத்தில் 61 நாட்கள் சிறையில் கம்பி எண்ணிய காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலை யானுக்கு மூன்றரைக்கிலோ தங்கத்தில் பூணூல் சாத்தினாரே!  (மாலைமலர் - 16.3.2002).
திருப்பெருங்குன்றம் கடவுளுக்கும் ரூ.15 லட்சத்தில் பூணூல் போட்டவர், இதே ஜெயேந்திரர்தான்! ('தினமணி',  பக்கம் - 2, 27.2.2014)
கடவுளையே தங்கள் ஜாதிக்குள் அடைத்துக் கொண்ட வர்கள்,  சொல்லுகிறார்கள் "இந்துமதம் தான் எல்லா மக் களையும் சமமாக நோக்குகின்றதாம்!" - இப்படி சொல்லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
(4) கேள்வி: ஹிந்து மதம் எல்லா மதங்களையும் ஏற்கின்ற வாழ்க்கை முறை. அதை நாம் வெறுமனே மதம் என்பதற்குள் சுருக்கி விடக் கூடாது என்று திருவாளர் குருமூர்த்தி கூறியுள்ளதுபற்றி?
விடை: இது உண்மையா? இந்த நாடே இந்து நாடு தான்; மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை என்கிற மமதையில் மிதக்கும் மதம் பிடித்தவர்களாயிற்றே இவர்கள்.
பிஜேபியை ஆட்டிப் படைக்கும் ஆர்.எஸ்.எஸ். குழு மத்தின் கொள்கைக் கோட்பாடு என்ன - ஆர்.எஸ்.எஸின் ஆலோசகராக இருக்கும் திருவாளர் குருமூர்த்தி அய்யருக்குத் தெரியாத இரகசியமா!
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
யூதர்களும், பார்சிகளும் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மதக்காரர்களும் இந்துக்கள்.
- ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பாகவத்
"பூர்விகத்தில் நாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை  முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' - 16.10.2000).
இப்படிச் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்சன்.
"இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும்; எதையும் கேட்காமல் எந்த சலுகைகளையும் பெறாமல் எதற்கும் தன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்"
- எம்.எஸ்.கோல்வாக்கர் (நூல்: வரையறுக்கப்பட்ட தேசியம்)
இதுதான் பிற மதத்தை நேசிக்கும் யோக்கியதையா?
இங்கு இருக்கிற முசுலிம்களோ, கிறித்தவர்களோ வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லர். இந்து மதத் தின் கொடூரமான தீண்டாமை காரணமாகத்தானே வெளி யேறி னார்கள். இதனை நாங்கள் சொல்லுவது இருக்கட்டும். இந்து முன்னணியின் நிறுவனர் திருவாளர் இராம. கோபாலன் வாயால் கேட்டால்தான் பொருத்தமானதாகவும் இருக்கும்.
1.2.1982 அன்று திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பில் இந்து விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அதன் தலைவர் ராமகோபாலன் என்ன கூறினார்?
"நம்முடைய கடந்தகால செயல்களின்மூலம் இப்பொழுது நடைபெறும் மதமாற்றங்களுக்கு வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டி விட்டோம்" ("தினமலர்" 2.2.1982, பக்கம் - 6) என்று பேசி இருக்கிறாரே -குருமூர்த்தி என்ன கூறுகிறார்?
ஜாதியை  மட்டுமல்ல; தீண்டாமையைக் கூடக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு அழுபவர்கள்தான் இந்து மதத்தில் குரு பீடங்களான சங்கராச்சாரியார்கள்.
தீண்டாமை க்ஷேமகரமானது என்ற சொன்னவர் காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி ("ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங்கள்).
பாலக்காட்டில் இந்த சங்கராச்சாரியாரை சந்திக்க காந்தியார் சென்றார். காந்தியாரை மாட்டுக் கொட்டகையில் வைத்துப் பேசினார் சங்கராச்சாரியார்.  காந்தியார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தீண்டாமையின்மீதுதான் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லையே! (ஆதாரம்: "தமிழ்நாட்டில் காந்தியார்"  பக்கம் -  575-576)
தீண்டத்தகாதவரான அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றியதால்தான் அதில் 540 குறைபாடுகள் உள்ளன என்று  இன்னொரு லோகக் குருவான (இந்து மதத்தில் பல லோகக் குருக்கள் உண்டு - ஆனாலும் ஒருவரை இன்னொருவர் ஒத்துக் கொள்ள மாட்டார்)
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவகிருத்தா சொல்ல வில்லையா? (இந்தியன் எக்ஸ்பிரஸ்  - 23.6.1988).
இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்று பத்து லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மார்க்கம் தழுவினாரே அண்ணல் அம்பேத்கர் இதை விட இந்து மதத்துக்கு வேறு ஒரு மொத்தும் அவமானமும் வேண்டுமோ?
வருண தருமம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல - குணம், தொழில் அடிப்படையில் தான் என்று சிலர் இப்பொழுது சமாளிக்கப் பார்க்கிறார்களே, அவர்களின் மூக்கை உடைக்கும் வகையில் காஞ்சி சந்திரசேகேந்திர சரஸ்வதியும், பூரி சங்கராச்சாரியாரும் என்ன கூறினர்?
ஆனந்த விகடன் சார்பில் மணியன் பேட்டி கண்டார்: பூரிசங்கராச்சாரியாரை.
மணியன்: குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) மக்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தானே கீதா கிரியன் கூறுகிறார்?
பூரி சங்கராச்சாரியார்: இக்காலத்து குண  கர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் - என்று கூறியபிறகு "சேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமைகள்" கதறி என்ன பலன்? இந்து மதத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி நடமாட முடியாது என்கிற கோழைத்தனத்துக்கு விரட்டப்பட்டுள்ளது இந்துத்துவா கும்பல்.
(5) கேள்வி: ஜாதியை ஒழிக்க முடியாது என்றும், சுய ஜாதி அபிமானம் நல்லது - பயனுள்ளது என்றும் குருமூர்த்தி கூறியுள்ளதுபற்றி...
விடை: இது அவர்களின் குருநாதர் கோல்வாக்கரின் கோட்பாடுதான்! ஜாதி என்பது இல்லையாயின் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாதே! இந்த ஜாதியை வைத்துக் கொண்டு எந்தத் "தைரியத்தில்" இந்து மதம் எல்லோரையும் சமமாகப் பாவிக்கிறது என்று சொல்லுகிறார்கள்?
பிர்மா என்ற ஆண் கடவுளின் முகத்திலும், தோளிலும் இடுப்பிலும், காலிலும் மனிதன் பிறந்தான் என்ற வேதக் கூற்றை, மனுதர்மக் கூற்றை ஓர் ஓவியனை விட்டுப் படம் வரையச் செய்தால் அந்தப் பிர்மாவின்  உருவம் எவ்வளவு ஆபாசமாக இருக்கும்! ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் இந்தக் கூட்டம் அசூயைபடவே படாது - ஆபாசத்துக்காகவென்றே கிருஷ்ண பரமாத்மா என்ற ஒரு கடவுளையே இந்த மனுஷாத் மாக்கள் உருவாக்கி வைத்து சுவைத்துக் கொண்டு திரிகிறார்களே!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடுகள்பற்றி விமர்சிக்கும் பாடங்களை அகற்றிட அவருடைய இந்துத்துவாவாதிகள் எவ்வளவோ முயன்றும் ஜம்பம் பலிக்கவில்லையே. உங்கள் இந்து மதம் கப்பலேறியல்லவா சந்தி சிரிக்கிறது.
(6) கேள்வி: மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை மக்களிடத்தில் போதிப்பதே இந்து ஆன்மிகக் கண்காட்சியின் நோக்கமாமே?
விடை: அப்படியா? மாதா என்ற பெண் குலத்தைப் பற்றி இந்து மதத்தின் மதிப்பீடு என்ன என்பது உலகம் சிரித்த கதையாயிற்றே!
அப்படியானால் முதலில் இந்து ஆன்மிகக் கண்காட்சிக் காரர்கள் முதலில் ஒரு "திருப்பணியை"ச் செய்யக் கடமைப் பட்டுள்ளார்கள்.
கீதையையும், மனுதர்மத்தையும், வேதங்களையும் இதிகாசங்களையும் தீ வைத்துக் கொளுத்தி, அந்தச் சாம்பலின்மீது மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற கோட்பாட்டுச் சித்திரத்தைச் செதுக்கட்டுமே பார்க்கலாம்.
"பெண்களும் வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனி யிலிருந்து பிறந்தவர்கள்" என்று பகவான் கிருஷ்ணன் கீதையிலே பகர்ந்துள்ளானே! (அத்தியாயம் 9,  சுலோகம் - 32) என்ன தேதி குறிக்கத் தயார்தானா?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(மனுதர்மம் அத்தியாயம்  9, சுலோகம் - 17)
இந்த மனுதர்மத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அலங்கரித்து எடுத்துச் செல்லும் குருமூர்த்தி வகையறாக்கள் இந்நூலை அவர்களின் "அக்னிப் பகவானுக்கு"க் குளிப்பாட்டி யல்லவா மாதா, பிதா, குரு தெய்வத்தைப் பற்றி உதட்டை அசைக்க வேண்டும்.
மாதா (பெண்பற்றி) ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ன சொல்கிறார்?
மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறை வேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்; வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி  செய்ய வேண்டும்.  கணவனுக்கு இன்பம் தர வேண்டும், இது பெண்ணின் கடமை, இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகி விட்டால், அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. விலக்கிவிட வேண்டும்; கணவனின் தேவைகளை நிறை வேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விட வேண்டும்.
(Aajtak ஹிந்தி நேரலை 1.7.2014)
குருமூர்த்தி வைத்தியரே! முதலில் உங்கள் முதுகைப் பாருங்கள். ஆயிரம் வண்டி அழுக்கு குவிந்து கிடக்கிறது.   நோய் இருக்கிறது அதைக் குணப்படுத்தி  'மாதா'வைப்பற்றி பேசுங்கள்.
(7) கேள்வி: செத்துப் போன கட்சியின் தலைவர் வீரமணி என்று கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்தி கூறியுள்ளாரே!
விடை: செத்துப் போன கட்சி என்று தெரிந்திருந்தால் குருமூர்த்திகள் இப்படியெல்லாம் குமுற மாட்டார்கள், அவரின்
செயல்பாட்டுத் தீ எதிரிகளை அன்றாடம் அணுஅணுவாகப் பொசுக்கிக் கொண்டு இருக்கிறதே! அய்யப்பன் கோயிலுக்கு கருப்புச் சட்டை அணிந்து  இலட்சக் கணக்கானவர்கள் செல்லுகிறார்கள் என்று அதற்குக் காரணம் சொல்லுகிறார்.
நோய் அதிகம் பரவுவதால் மருத்துவம் தோற்றுவிட்டது என்று கூறும் "அறிவாளிகளின்" வரிசையிலே நிற்க வேண்டியவர்கள் இவர்கள்.
பன்றிகளுக்கு நல்ல வேட்டைக்காடாக இருக்கும் சபரிமலை அய்யப்பனின் பம்பை நதியில் குருமூர்த்திகள் மூக்கு முட்ட நன்னா ஸ்நானம் பண்ணட்டும். மூடத்தனம் எளிதில் பரவும்.  பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு வெறும் அறிவு மட்டுமல்ல, துணிவும் வேண்டுமே.
கோயிலுக்குப் போய் தட்சணை கொடுத்து செருப்படி படுகின்றவர்கள் உண்டு. எச்சில் இலையில் உருண்டு புரள்பவர்கள் உண்டு. இவையெல்லாம் எங்களின் வெற்றிப் பதாகைகள் என்று குருமூர்த்திகள் கருதுகிறார்களா?
அப்படியானால் அது அவர்களின் பிரத்தியோக உரிமை!
"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயிலுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது." (1976 மே - காஞ்சிபுரம் அகில இந்து மாநாட்டில் ஜெயேந்திர சரஸ்வதி).
***
பத்து, பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகின்றது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன.  இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டன" (தினமணி 7.9.1976).
இவற்றைச் சொன்னதும் குருமூர்த்திகளுக்குக் குருநாதராக இருக்கும் - அவர் கொலை குற்றத்திற்கு ஆளானபோது ஊண் உறக்கமின்றி அலை பாய்ந்த குருமூர்த்திகளின் குருநாதரான ஜெயேந்திர சரஸ்வதிதான்.
பக்தி வளர்ந்தது அதோடு ஒழுக்கக் கேடும் வளர்ந்துள்ளது என்கிறார் சங்கராச்சாரியார். திராவிடர் கழகத் தலைவரை மட்டந் தட்டுவதாகக் கருதி இந்த ஒழுக்கக் கேடுகளுக்கு வக்காலத்து வாங்குகிறார் குருமூர்த்தி.
கோயிலுக்குச் செல்லுவதுபற்றி குருமூர்த்தியின் ஆப்த நண்பர் 'சோ'வின் 'துக்ளக்' என்ன சொல்லுகிறது? 'பக்தியாவது ஒண்ணாவது கோயிலுக்கு வருபவன் சாமி தரிசனத்துக்கா வர்றான். 'சைட்' அடிக்கன்ன வர்றான். பொம்மனாட்டி மட்டும் என்ன யோக்கியம்? அவளும் புடவை, நகை நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி, அம்பாளைத் தரிசிக்கிறார்?
('துக்ளக்' 1.6.1981 பக்கம் 32)
இதுதான் பக்தி வளரும் யோக்கியதையா? இதில்தான் வீரமணி தோற்று விட்டார் என்கிறாரா குருமூர்த்தி?
கடவுள் மறுப்பும் மட்டுமல்ல திராவிடர் கழகப் பணி - அதனை குருமூர்த்திகள் மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டிலே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியாரும், திராவிடர்கழகச் சிந்தனைகளும் நிறைந்திருக்கின்றனவே! அது சமூகநீதி வடிவத்திலும், பெண்ணுரிமைத் தன்மையிலும், இனவுணர்வின் அடிப்படையிலும் நீக்கமற நிறைந்துள்ளதா இல்லையா?
இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி தமிழ்நாட்டில்தானே. மத்தியிலே மண்டல் குழு பரிந்துரைப்படி இடஒதுக்கீட்டை நிலை பெறச் செய்தது யார்?
இவ்வாண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் நிலை என்ன? மூன்று சதவீதம்கூட பார்ப்பனர்கள் பெற முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் நிமிர்ந்திருப்பதன் பின்னணியில் கழகத் தத்துவம், வெற்றி இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிஜேபியைத் தவிர தந்தை பெரியார் படத்தைப் போட்டுதான் விளம்பரங்கள் என்பது எதைக் காட்டுகிறது?
பிஜேபி,. அதிமுக இரண்டு கட்சிகள்தானே பார்ப்பனர் களை வேட்பாளர்களாக நிறுத்தின. தமிழ்நாடு சட்டப் பேரவையின் 234 இடங்களில் இரண்டே இரண்டு இடங்கள் தான் பார்ப்பனர்களுக்கு என்பது எதைக் காட்டுகிறது?  தந்தைபெரியார், திராவிடர் கழகம் என்ற உணர்வு பேரலை  கட்சிகளைக் கடந்து பேரரணாக வலு கொண்டு நிற்பதை மறுத்தால் எங்களுக்கு நல்லதுதான் - உங்களுக்கு சோதனை தான் .
இந்துமதம் என்பது ஒரு தத்துவம், ஒரு நெறி என்பது அசல் பொய் மூட்டை! இந்துமதம் என்பது பல முரண்பாடுக் கலவைகளின் உள்ளடக்கம். உண்மை என்னவென்றால் தந்தை பெரியாரியல் என்பதுதான் இங்கு ஒரு வாழ்க்கை நெறி - பகுத்தறிவுப் பாதை  - மனிதநேய அணுகுமுறை - தொண்டறம், சமத்துவம் என்பது அதன் நடை!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த நெறியாளர்கள் நிறைந்துள்ளனர். பெரியார் - அம்பேத்கர் பேரவை தமிழ்நாட்டைக் கடந்து அய்.அய்.டி.களிலும், பல்கலைக் கழகங்களிலும் பரவி வருவதை மறக்க வேண்டாம்!
ஆட்சியில் அமர்வோரும் இது பெரியார் மண் என்ற நினைப்பும் - ஏன் அச்சமும் கொண்டு ஒழுகித்தான் தீர வேண்டும். இயக்கம் செத்து விட்டது என்பதற்கு இவைதான் அடையாளமா?
இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று ஒரு முதலமைச்சர் சட்டசபையில் சொன்னது பெரியாருக்கன்றி வேறு யாருக்கு?
குருமூர்த்திகளே, உங்கள் நிலை என்ன? 234 இடங்களிலும் நின்று 'டெபாசிட் காலியானதுதானே மிச்சம்!'
1971இல் சேலத்தில் ராமனை செருப்பாலடித்தார்கள் தி.க.வினர் என்று பிரச்சாரம் செய்தீர்களே - அதன் விளைவு என்ன? 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக 184 இடங்களில் அல்லவா பெரு வெற்றிப் பெற்று இந்துத்துவா கும்பலின் மூக்கை வெட்டியது -  அவை எல்லாம் மறந்தே போய் விட்டதா!
அந்தத் தேர்தலின் முடிவைக் கண்டு குருமூர்த்தி வகையறாக்களின் அரசியல் சாணக்கியர் தலைவர் ராஜகோபாலாச்சாரியார் கையெழுத்திட்டு 'கல்கி'யில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா?
"தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும் "அணுக்கிரகமும்" பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.
"தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங்களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்விகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்துவிட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்."
(கல்கி 4.4.1971)
உங்கள் குல குருநாதரே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகு யாருக்கு வெற்றி? யாருக்குச் சாவு? என்பதற்கு ஆராய்ச்சியா தேவை? கணக்குப் போட்டுப் பாருங்கள் புரியும்.
பிரபல வரி ஏய்ப்புக் கார்ப்பரேட் சாமியார்தானே உங்கள் இந்து ஆன்மிகக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினர். உங்கள் யோக்கியதை வெளுத்துப் போய் விட்டதே! வீண் பேச்சும் சாடலும் வேண்டாம் - வண்டி வண்டியாக எதிர் முனையி லிருந்து வரும் - எச்சரிக்கை!

இந்து என்றால் யார்?
இதோ ஆதாரங்கள்!
In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)
பாரசீகத்திலிருந்து வந்த அரபு, மற்றும் பார்ஸி மக்கள் தங்கள் பகுதியான மத்திய ஆசியாவில் இருந்து இந்திய தீபகற்பத்திற்குள் நுழைந்த  மக்களை (ஆரியர்களை) அடிமைகள், நாடோடிகள் என்று குறிக்கும் சொல்லாக ஹிந்த் என்றவார்த்தையைப் பயன்படுத்தினர். அவர்களது மதநூல்களிலும் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். (லாலா லஜ்பத் ராய் எழுதிய தயானந்த் சரஸ்வதி அவரது பணிகள் என்ற நூலின் முன்னுரையில் எழுதியது).
Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as “chore [thief], dakoo [dacoit], raahzan [waylayer], and ghulam [slave].” In another dictionary,
இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி டிக்ஸ்னரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964-ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது.  அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன்(வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்),
கொள்ளைக்காரன்(இருவர் அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும் போது பிடிபட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அடிமைச்சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத்துள்ளனர்.
வெள்ளைக்காரன் இந்து என்று இப்படி சரியாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறான் - அதனை காஞ்சி சங்கராச்சாரியாரும் ஏற்றுக் கொண்டு விட்டாரே!
-விடுதலை,2.8.16