திங்கள், 10 அக்டோபர், 2016

சரஸ்வதி பூசை செய்வோரே... சரஸ்வதி... யார்?...

இரா.கண்ணிமை சரஸ்வதி - பிர்மாவின் மனைவி - சரஸ்வதியின் மறு பெயர்கள்: இசைமடந்தை - கலைமகள் - காயத்திரி - சாவித்திரி - நாமகள் - பாரதி - வாணி என்பவை. பிர்மாவின் மனைவி - சரஸ்வதி, பிர்மாவின் ஆயுதம் - பாசம், கொடி - மறை (வேதம்), வாகனம் - அன்னப் பறவை, ஆயுஷியம் ஒரு கற்பம், ஆசனம் - தாமரை மலர். பிர்மா அய்ந்து தலைகளுடன் பிறந்த காரணத்தால் பஞ்சமுகப் பிர்மாவென்று அழைக்கப்பட்டாராம். பிற்காலங் களில் கீழ் விவரிக்கும் காரணத்தால், தன் ஒரு தலையற்றுப் போகவே, சதுர்முகப்பிர்மாவென்று அழைக்கக் காரணமாயிற்றாம். பிர்மாவின் சொரூபத்தை நாலுமுகமும், நான்கு கையுமுடைய உருவாய்ச் செய்து வைப்பது வழக்கம். பிர்மாவின் உருவத்தின் ஒரு கையில் சக்கரத்தையும், மறுகையில் அக்கினியையும், மற்ற இருகைகளில் வேதத் தையும் பிடித்திருக்கக் காணலாம். அய்ந்து தலையுடன் பிறந்த பிர்மாவின் ஒரு தலையற்றுப் போனதை விளக்க பல கதைகள் உண்டு. தேவர்கள் எல்லோரும் கூடிசிவனுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடத்துகையில் பிர்மா மண வறை மண்டபத்தில் அமர்ந்திருந்த சிவன் மனைவியான பார்வதியின் கால் பெருவிரலை திரைச்சந்திரன் வழியாய்க் கண்டு மோகித்தார் - இச்சித்தார் என்றும், அந்த காம வேட்கையால் பிர்மாவின் விந்து பூமியில் நழுவி விழவே - பிர்மா அதை நீளமாய்த் தேய்க்கவே அதிலிருந்து கோப்புச் சந்தன பார்ப்பனர்கள் பிறந்தார்கள் என்றும் - பிறகு அதையெல்லாம் குழப்பித் தேய்க்கவே மல்லக்க சட்டிகள் பிறந்தார்களென்றும், நாம தாரி பிராமணர்கள், விபூதி பிராமணர்கள் பிறந்தார்களென்றும் - பிராமணர்களுடைய சந்தடிக்கேட்ட சிவன் பிர்மா ஒருவன் தானே இருந்தான். இத்தனை பிராமணர்களும் கூடிக் கொண்டு வேதம் ஓதுகிறார்களே - எப்படி என்று சிந்திக்க பிர்மா தன் மனைவி பார்வதியை மோகித்து இச்சித்த காரணம் தான் என்பது தன் அறிவுக்கெட்ட, சிவன் மிகுந்த கோபத்துடன் வந்து பிர்மாவின் அய்ந்து தலையில் ஒன்றைக் கிள்ளி விட்டதாய் தெரிகிறது. மற்றொரு கதையில் சிவனுக்கும் பிர்மாவுக்கும் அய்ந்து தலைகள் இருப்பதால், தன் மனைவி பார்வதிக்குத் தன் கணவன் யார் என்று குறிப்பு அறிய முடியாமல் வெட்கிப் போனதால் - சிவனுக்குக் கோபம் வந்து பிர்மாவின் தலையில் ஒன்றை கிள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னொரு கதையில் பிர்மா காயத்திரி - சாவித்திரி - சரஸ்வதி ஆகிய பெண்களோடு கூடியிருந்ததுமல்லாமல், தன் மகளாகிய ஊர்வசியை இச்சித்து - மோகித்து அவளைத் துரத்த - தன் தந்தை பிர்மா நம்மைக் கூடிப்புணர வருகிறாரே என வெட்கி - இருவரும் மான் உருவெடுத்து காட்டில் கூடிப் புணர்ந்தார்களாம். இந்தக் காமச்செயலை - கொடுமையை கண்ட சிவன் பிர்மாவின் தலையில் ஒன்றை கிள்ளிவிட்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வகையில் பார்த்தாலும் இக்கதை பிர்மா தன் தலையில் ஒன்றையிழந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா? இதை விளக்கும் ஒரு விருத்தம்: பேரின்ப மாலை அய்ங்கரன் தலையிழக்க அரிவனந்தன்னிற் போக சங்கரன் பிச்சையேற்க சதுர்முகன் எழுதினானோ அங்கவனெழுதினால் மற்றவன் தலையற்றுப் போக இங்கெவன் எழுதினான்சொல் இதுவெல்லாம் மய்யந்தானே! பொருள்: எல்லார் தலையிலும் விதி எழுதியவர் பிர்மாவானால், இந்த பிர்மாவின் தலை அற்றுப் போக விதி எழுதியவன் யார்? என்பதே; ஆழ்ந்து சிந்தியுங்கள். பிர்மா வைகுண்டத்திற்குச் சென்று மேற்கூறிய காரணங்கொண்டு சந்திக்கவே விஷ்ணுவும், பிர்மாவும் கோபங்கொண்டு, பிர்மா விஷ்ணுவை நோக்கி உன்னை என்னினும் பெரியவனாக்கி நான் உனது உந்தியில் பிறந்தவனென்று எப்படிச் சொன்னாய்? சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? நான் அனைத்தையும் உருவாக்காவிட்டால் நீ அவற்றை அனுபவிப்பது எப்படி? நீ செருக்கை அடக்காவிட்டால் அழித்துவிடுவேன். உன்னை அசுரர்கள் வந்து சூழ்ந்து கொள்ளுமுன் - ஓடி திருப்பாற் கடலில் ஒளிந்து கொள் என்றார். எனவே இருவருக்கும் கடும்போர் மூண்டு அனைத்தையும் அழித்தார்கள். பூமியை சுமக்கும் ஆதிசேடன் தாங்க முடியாமல் தன் தலையை நெளிக்க தேவர்கள் பயந்து தேவேந்திரனோடு சென்று சிவனிடம் ஆதரவு கேட்டார் களாம். (அருணகிரி புராணம், திருமணச் சருக்கம் 14 முதல் 40 முடிய பார்க்கவும்) தேவர்களும், தேவேந்திரனும் போட்ட சத்தம் கேட்ட சிவன் அனைத்து உலகத்தையும் உருக்கத்தக்க அக்கினி மலையாய் நிற்க - இருவரும் போரை நிறுத்தி இம் மலையின் அடிமுடியைக் காண்பவனே பெரியவன் எனத் தீர்மானித்து - பிர்மா அன்னப் பறவையாயும், விஷ்ணு பன்றியாகவும் மாறி சிவனின் அடிமுடியைக் காணச் சென்றார்களாம். பன்றி உருவில் சிவன் பாதத்தைக் காணப்போன விஷ்ணு, காண முடியாமல் திரும்பி விட்டாராம். அன்னப்பறவை உருவில் சிவன் தலையை காண நீண்ட தூரம் பறந்து சென்ற பிர்மா, இனி பறந்து போய் பார்க்க முடியாதென்பதை உணர்ந்து, சிவன் முடியிருந்து நழுவி விழுந்து வந்து கொண்டேயிருந்த கேதகி என்னும் தாழம்பூவைப் பார்த்து அது வந்து கொண்டிருக்கும் வரலாற்றை கேட்க - தாழம்பூ பிர்மாவிடம் நான் பல நாள்களாய் வந்து கொண்டேயிருக்கிறேன் - நீ சிவன் முடியை பார்க்கும் ஆசையை விட்டுவிடு என்று சொன்னதாம். அவ்வாறாயின் நான் சிவன் முடியை நேரில் கண்டதாக விஷ்ணுவிடம் சொல்லிவிடு எனக்கூற அப்படியே தாழம் பூவும் சொல்ல - அப்பொழுதே அக்கினிமலை வெடித்து சிவன் அதி லிருந்து புறப்பட்டு - பொய்யைச் சொன்ன பிர்மாவையும் - தாழம்பூவையும் சபித்து விஷ்ணுமேல் மகிழ்ந்ததாகவும், இந்த அக்கினி மலையே திருவண்ணாமலையாக ஆனது என்றும், அருணாசல புராணம் திருமலைச் சருக்கம் 40ஆம் பாடல் முதல் 70 ஆம் பாடல் வரை சொல்லப் பட்டிருக்கிறது. இவற்றில் பிர்மா பொய்யைக் காட்டும் பாடல் 63 முதல் 68 வரை பார்க்கவும். விருத்தம் "சீதரா லுருகுமவ்வழி தனன் புகண் டீசனும் பலவா மினிது நல்கினான் வாசமாமலர் வரவுனுக்கு மண்ணின் மேற் பூசையுங் கோவிலும் போகவென் றனனன்!" பொருள்: ஆசையால் உருகித் துதி தோத்திரம் செய்து தொழுத விஷ்ணுவுக்கு, சிவன் பலவரங்கள் அளித்தும், பிர்மாவை யும், தாழம்பூவையும் பார்த்து உனக்குக் கோயிலும், பூசையுமில்லாமல் போகக்கடவதென்றும் சாபமிடவாயிற் றென்பதாம். இதே கதையைப் பற்றி சிவபுராணம் வித்தியேசுவரசம் ஹிதா - 7ஆம் அத்தியாத்தில் எழுதியிருப்பதை பார்க் கவும். அது பின்வருமாறு: பிர்மாவுக்கு தாழம்பூ பொய்சாட்சி சொன்னதைக் கேட்ட சிவன், தன் புருவ மத்தியிலிருந்து வைரவனை உருவாக்கி பிர்மாவின் தலையில் ஒன்றை அறுத்தெரியச் செய்து, பிர்மாவை நோக்கி "அடே பிர்மா! நீ பெருமையை விரும்பும் பொய்யர்களுக்குத் தலைவனானாய். இதனால் உனக்கு உலகத்தில் உபசாரம், ஆலயம், உற்சவம் முதலியன இல்லாமல் போகட்டும்!" - என்று சாபம் பெற நேரிட்டதாம். பின்னும் சிவன் தாழம்பூவைப் பார்த்து, "அடே பொய்யனே! இதைவிட்டு எங்கேனும் போய்விடு. நான் இனிமேல் உன்னை விரும்பேன். என் பூசைக்கு நீ உதவமாட்டாய்" - என்று சிவன் சாபம் இட்டதாய் சொல்லப் பட்டிருக்கிறது. சிவன் தன்மேல் கோபமுற்றிருப்பதாகக் கண்ட பிர்மா இனிப்பிழைப்பது இயலாதென்று உணர்ந்து அடியற்ற பனைமரம் போல் - சிவன் பாதங்களில் விழுந்ததாய் சொல்லப்பட்டிருக்கிறது. பின் சிவன் மனதிளகி பிர்மாவை நோக்கி, இனி பிராமணருக்கு பூலோகத்தில் செய்யும் பூசை உனக்கு நலமாய் இருக்கக்கடவது. இனி எல்லாவற்றையும் செய்வதென்று நினைக்கும்போது - சிவன் லிங்கமாய்த் தோன்றி கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் நிற்போம். சிகரத்தில் சோதி காட்டு வோம் - என்பதை அருணாசல புராணத்தில் இருப்பதைப் பார்க்கலாம். அக்கினிமலை சிவலிங்கமாய் மாறியது உண்மையா னால் அருணாசலத்து உண்ணாமுலை என்னும் பெண் வந்தது எப்படி? என்பதை அறிய வேண்டியது அவசியம். பிர்மா விஷ்ணுவுடன் போர் புரிந்தான் என்றால், வடக்கேயிருந்த வைகுண்டம் தெற்கே, திருவண்ணா மலைக்கு வந்தது எப்படி? ஒரு வேளை ஒருவரை ஒருவர் வீசி எறியும் போது, வேகத்தில் உருண்டு வந்து திரு வண்ணாமலையில் விழுந்திருப்பார்களோ? பிர்மாவைப் பற்றி கந்தபுராணத்தில் உள்ளது பின்வருமாறு:- கந்த புராணம் - மார்கண்ட படலம் 12 ஆம் பாட்டு கூன் முகத்திங்கணெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந் தான் முதலிறவியாகத் தன்கையாற் சமைக்கத் தக்க மான்முகனோக்கி முன்னோர் மலரயன் மையலாகி நான்முக மானானென்ப நாம்முணராத தன்றே. பொருள்: பிர்மா, தானே படைத்த தன் மகளாகிய திலோர்தமை யின் மேல் மோகங்கொண்டு துரத்தவே தன் தந்தை பிர்மாவின் இச்சைக்கு சம்மதியாது திலோர்தமை ஓட - பிர்மா அவளைத் துரத்தினான். திலோர்தமை பெண் கிளியாய் மாற - பிர்மா ஆண் கிளியாய் மாறி காமலீலை புரிந்ததால் - ஒரு தலையிழந்தான். (தொடரும்) கண்ணிமை

நேற்றையத் தொடர்ச்சி...

இவ்வகையில் மோக வேட்டையில் ஈடுபட்டோர் பற்றி விளக்கும் பாடல் இதோ:
பஞ்சாட்சர பசு பாச விளக்கம் - 17ஆம் பாடல்
காமத்தாலிந்திரன் கலக்க மெய்தினான்
காமத்தாலி ராவணன் கருத் தழிந்தனன்
காமத்தாற் கோசிகன் கவலையுற்றனன்
காமத்தாலிறந்தவர் கணக்கில்லார்களே!
அருணாசல புராணம் - பாகவந்தீர்ந்த சருக்கம் - 12ஆம் பாடல்
வகுத்தனன் திலோர்தமை யென்னும் வஞ்சியை
உகுத்தனன் வலியை நன்மதியை யோட்டினன்
மிகுத்ததோர் விஞ்சையிற் புலியின் வேட்டுவன்
அகத்துடலழித்துட லளிப்ப தென்னவே.

13ஆம் பாடல்

மன்மதன் கணையினான் மயங்கி வாடுமென்
தன்மையை யறிந்துநான் றனக்குத் தாதையென்
றென்மனம் பொருந்திலா தென துகையுறாள்
மும்பினி னொளிக்க நான் முகமுந் தேடினேன்!

14ஆம் பாடல்

கன்னி மானாய் சென்றாள்
கலையதாய் தொடர்ந்தேன் பேட்டு,
வன்னியாய் பறந்தாள் சேவல்
வடிவமாய் தொடர்ந்தேன் மங்கை
பின்னையோர் பதியுங் காணாள்
பிறகலா மருணை நாதன்
தன்னை தூரக் கண்டாள்
சாணமென் றுரைத்துச் சார்ந்தாள்!

12, 13, 14 ஆம் பாடல்களில் பிர்மா தன் வாழ்வில் முறை கேடாய் நடந்து கொண்டதை விளக்குகிறது.
பிர்மா - திலோர்தமையை உண்டாக்கி அவரை மோகித்ததால் - தன்புத்தியை இழந்ததாயும் சொல்லப் பட்டுள்ளது.
தேவர்களின் திருட்டுத்தனத்தை விளக்கும் ஞானியார் பாடல் ஒன்றை பாருங்கள்.
தான்பெற்ற பெண்மேல் விகாரத்தினைக் 
கொண்டு தளர்வுற்றனன்,
மான் பெற்ற கான் மத்தகங் காண்கிலாமற் 
பொய்யுரை சொற்றனன்,
கான்பெற்ற முனிவன் கரைத்திட்ட சாபத் திறனியற்றவன்
தேன்பெற்ற மலர் நான்முகத் தானையும் 
தெய்வமென லாகுமோ?
பொருள்:
பிர்மா தன் மகளை (திலோர்தமையை) இச்சித்து சேர்ந் ததுமன்றி - சிவன் முடியைத் தேடி காண முடியாது போயும் - கண்டதாக பொய்ச்சொல்லியதற்காக சிவன் சாபமிட்டான். அத்தகு முனி சாபத்தால் கல்லாய்போனான். இவனை யெல்லாம் தேவன் எனலாமோ? என்பதாம்.
பிர்மாவின் தகாதச் செயல்களைப்பற்றி ஞானச்சித்தக் கோவையில் காணும் பாடல்:
சிவவாக்கியர்
மண்டுவங்கள் போலநீர் மனத்து மாசறுக்கிலீர்
குண்டுவங்கள் போல நீர் குளத்திலே முழுகுவீர்
பண்டுமுங்கள் நான்முகம் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருந்து மும்முளே கலந்துணர்ந்து காணுமே!
பேரின்ப மாலை
அன்ன வாகனமுமாகி யரனடி முடி காணாமற்
தன்னிவே யயர்ந்து பொய்யைச் சாற்றியே தலை வெட்டுண்டு
கன்னல் வில்வேலால் நொந்து, கலைதனைப் 
புணர்ந்தேன் தன்னை
யுன்னியே கடவுளென்றா லுலகுளோர் நகைத்திடாரோ?

பொருள்:

அன்ன உருவில் பறந்து சிவன்முடி காணாமலும், பெண்கள் பலரை கற்பழித்தும், பொய் சொல்லி தண்டனை பெற்றும் - பல இழிவான குணங்களையுடைய பிர்மாவை கடவுள் என்று சொன்னால் உலகோர் நகைக்க மாட் டார்களா? என்பதாம்.

இதுவரை விளக்கிக் காட்டிய கதைகள், பிர்மாவின் தெய்வ நிலைகளைக் கரைப்படுத்தும் வகையில் பொருத்த மற்ற - அசிங்கமான காமலீலைகள் நிறைந்ததாய் காணப் படுகிறதே!
அனைத்து படைப்புகளுக்கும் கர்த்தாவென்னும் பிர்மா - சிவன் கிள்ளி எரிந்த தலை ஒன்றை கிள்ள விடாது காப்பாற்றவோ அல்லது மற்றொரு தலையை தனக்கு உருவாக்கிக் கொள்ளவோ முடியாத வல்லமையற்ற நிலை பிர்மாவின் தெய்வ நிலையை முற்றும் மறுக்கச் செய்கிறதே! பிர்மா தான் இழந்து போன் தன் தலையை பெற்றுக்கொள்ள தவம் செய்கிறார் என்றால் - எந்த தேவன் இவனுக்குமேல் பெரிய தேவன்? என்பது நம் அறிவுக்கு தெளிவு பெற வேண்டியதாகும். அனைத்துக்கும் விதியை எழுதுவது பிர்மாதான் என்றால் - தன் தலை அறுபடாமலிருக்க விதி எழுதாமைக்கு காரணம் என்ன? இதனால் தலை எழுத்து அவன் எழுதியது என்பதெல்லாம் வடிகட்டிய பொய்தானே! புளுகுதானே!

பிர்மா, தன் மகள் ஊர்வசி, திலோர்தமை மேல் மோகித்து - இச்சித்து இருவரும் மானாகவும், கிளியாகவும் உருமாறி முறைகேடாய் நடத்திய காமக்களியாட்டங்களை - தேவர்கள் காணும் லட்சணம் ஆகுமா? பிருகு முனி, அத்திரிமுனி இவர்களின் மனைவிகளை - பிர்மா இச்சித்து செய்த காமச் செயலால் - பெற்ற சாபத்தை - அமல்படுத்த முடியாமல் போனது. பிர்மா அனைத்துக்கும் கர்த்தா என்பதை உறுதிபடுத்துவது யார்?

மனிதர் வாழ்க்கையில் காண அரிதான காமசேட்டைகள் - தேவர்களில் உண்டென்றால் - தேவர் தேவர்களைப் போற்றுவோர் - நம்புகிறார்களா? இவர்களை கடவுள் என்று?
தேவர்கள் - ஒருவர் மனைவியை மற்றொருவர் திருடுவதும் - முனிவர்கள் வரத்துக்காய் கையேந்தி நிற் கையில் அவர்களை வஞ்சித்து - அவர்களின் மனைவி மார்களை கெடுப்பதும் - எத்தனை பெரிய மோசடி வேலை என்பதை எண்ணிப்பாருங்கள்.

மும்மூர்த்திகள் என்போர் தங்கள் குல பெண்கள், பிள்ளைகள் மற்றும் பல பெண்களுடன் கூடி காமிகளாய்த் திரிந்தார்கள் என்னும் கதைகள் - தேவர்கள் என்போர் மனிதரிலும், மிருகங்களிலும் காணக்கிடையாத காமசேட் டைகளைப் புரிந்து இவர்கள் காமிகள் அல்லாது சாமிகள் அல்லவென்று புரிந்து கொள்ளலாம்.
“மனிதனை நினை கடவுளை மற!” - என்றார் தந்தை பெரியார். இதோ அதே கருத்தை வலியுறுத்தும் பாட லொன்றை பாருங்கள்.

அகஸ்தியர் ஞானம் - 30 - பாடல் 72

போக ஒரு தடையுண்டோ அந்த நாட்டிற்
போவதற்குப் பொய்கைதனில் முழுக வேண்டாம்.
சாகமுண்டு தலைகீழாய் நிற்க வேண்டாம்
சத்தலிங்க மலரெடுத்து சாந்த வேண்டாம்
தாகமுடன் தீ வளர்த்துக் குதிக்க வேண்டாம்
தாரணியிற் பலபேயைத் தொழவும் வேண்டாம்
ஏகனென்று பிர்மாவை நாட வேண்டாம்
இந்த நூல் பார்த்தறிவீ ரின் பாய்த் தானே!

பொருள்:

பேரின்ப முக்திசேர, ஒரு தடையுமில்லை. ஆனால் முக்திசேர புண்ணிய குளங்களென்று தேடிப்போய் முழுகாதே. கந்த மூலங்கள் என்னும் காய், கனி, இலை, கிழங்குகள் தின்று தலை கீழாய் தொங்கி நின்று யோகப்பியாசம் செய்யாதே - பல பேய்களைத் தொழுது நிற்காதே! கடவுளென்று பிர்மாவை தொழாதே, என் அறிவு மொழிகளை இன்பமாய் பார்த்து அறிந்து கொள் என்பதாம்.

சரஸ்வதியின் கணவன் பிர்மாவின் கதையைப் பார்த்தீர்களா? சரஸ்வதியின் அருளால்தான் அனைவரும் கல்வியறிவாளர் ஆகிறார்கள் என்றும் - அனைத்து மொழிகளுக்கும் தானே ஆதிக்கமுடையவள் என்றும் சரஸ்வதியை வணங்குகிறார்கள். நம்புகிறார்கள்.

சரஸ்வதியின் குடும்ப வரலாற்றைச் சொல்லிவிட்டோம். கலை மகளை கடவுளாய் நம்பி சரஸ்வதி பூஜை - செய்வோரே இந்தக் கதையை அறிந்த பிறகும் உங்கள் முடிவு என்ன? சொல்லுங்கள்!

(முற்றும்)

விடுதலை,6,7.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக