ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அழுக்குருண்டை பிள்ளை-யார்? அறிஞர்கள் கருத்து!



விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும், தமிழின அறிவு நெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைகட்கு ஒத்து வராது என்பதையும் நாம் ஆண்டாண்டு காலமாக விளக்கி வருகிறோம். எனினும், நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில் பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம், அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளைத் தமிழக மக்கள் பார்வைக்குப் படைக்கிறோம்.

இந்த வழிபாடு இடைக்கால ஏற்பாடே!

அறிஞர்கள் சிலர், சங்க இலக்கியத் தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் - இடைக்காலத்தில் வந்த வழிபாடுதான் விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்ம வர்மனின் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்டர், இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலை யைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இஃது உண்மைதான்.

ஞானசம்பந்தர்
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்
கருள் செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே  என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஞானவிநாயகர் என்னும் கட்டுரையில் பக்கம் 20)

பண்டைய நூல்களில் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டையத் தமிழ் நூல்களில் இவ்விநாயக வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமை அம்மை பெண் யானையின் வடிவு கொள்ள சிவ பிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத் தொண்டர், பரஞ்சோதி என்ற பெயரோடு வடபுலத்தில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று, அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபியில் இருந்து கொணர்ந்ததால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகின்றான் என்ற கட்டுரையில் பக்கம் 17) மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8.9.1978.)

விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண் டியது அவசியம். பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதை தெளிவாக உணரமுடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி, பெண்ணில்லாமல் ஆணுக்குப் பிறந்த வர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டை ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது  அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகனென்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத் துவாரத்தில உள்ள   யானைத் தலை ராட்சசி மாலினி யைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்தவில்லை. பிரம்ம வை வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால், தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய், தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம்.

ஆனால், கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்னும் ராட்சசி வயிற்றுள் புகுந்து குழந் தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சசன் தலையை வெட்டி, தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக்குழந்தைக்கு தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது: சிவனும், பார்வதியும் யானையைப் போல் சம் போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

(பொதுவுடைமை இயக்க அறிஞர்
ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய
பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.
என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)
-விடுதலை,3.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக