சனி, 29 அக்டோபர், 2016

புரட்டாசி சனிக்கிழமை என்னும் மூடநம்பிக்கை




புரட்டாசி சனிக்கிழமை


புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
புரட்டாசி  சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப் பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக்கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடை கடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேக வியாதிக்காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டையிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக்கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

சிவராத்திரி

இனி அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானிய வகைகளையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க் கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்கு களும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்த பண்டிகைகளையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும், கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.
இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வாழவேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப்பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால் அரசனுக்குப் பயப்பட மாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத்திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது.
எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களையெல்லாம் பாலும், நெய்யும், தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக்கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20-10-1929
-விடுதலை,2.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக