சனி, 29 அக்டோபர், 2016

இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டதா?


உலகைப் படைத்தவர் இறைவன் என்பது உண்மையானால் கடவுள் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன்?
- எஸ்.முத்துராமன், வேலூர்

கடவுளின் பெயர்கள் வழிபாட்டு முறைகள் மற்றும் சில கொள்கைகள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும், எல்லா மதங்களும் கூறும் உண்மை இவ்வுலகைப் படைத்தும், நம்மைக் காப்பதும் கடவுள்தான் என்பது. கடவுள் மறுப்பு என்பது மற்ற மதங்களைப் பொறுத்தவரை தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லா மதங்களுக்கும் முன்னோடியாக இந்து மதம் இருப்பதால் சற்று சுதந்திரம் அதிகமாக உள்ளதாக இருக்கிறது.

அதிலும் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் இந்து மதக் கடவுளை மட்டும் ‘இல்லை என்றும், இன்னும் வேறு விதமாகக் கேலி செய்வதுமாகிய அவலம்‘ அதிகமாக உள்ளது. தாங்கள் கேட்பதுபோல் யாரும் சுதந்திரம் கொடுக்கவில்லை. ஆனால், தட்டிக் கேட்கவும் ஆளில்லை. அரசியலமைப்புச் சட்டமும் நம் மதத்திற்கு எள்ளளவும் ஆதரவாக இல்லை.
(தினமலர்)

‘தினமலர்’ கூறுவது உண்மைதானா? இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ளதுதானா? ஒரு கேள்வி கேட்டாலே ‘தினமலர்’ ஏட்டின் பதில் என்கிற வண்டி குடை சாய்ந்து குப்புற விழுந்து விடும்.

மக்களைப் பிறப்பின் அடிப்படையிலேயே பிரித்து நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், அந்தச் சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்றும், அந்த ஏழில், ஒன்று விபசாரி மகன் என்றும், இந்து மதத்தின் மிக முக்கிய சாத்திர நூலான மனுதர்ம சாஸ்திரமே (அத்தியாயம் 8, சுலோகம் 415) கூறுகிறதே - இதைவிட கேவலம் சொந்த மதக்காரனையே சோரம் போனவன் என்று சொல்லும் போக்கிரித்தனம் - சக மனிதனை மனிதனாக மதிக்காத சகிப்புத் தன்மை இன்மையை வேறு எந்த மதத்திலாவது பார்க்க முடியுமா?
சூத்திரர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; வேதங்களை காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; படித்து மனதில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி வைத்துள்ள மதம் இந்து மதம் மட்டும்தானே! இப்படி கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் உலகத்திலேயே இந்து மதம் ஒன்றுதானே!

வாதில் தோல்வி அடைந்தனர் என்று சொல்லி, சமணர் களையும், பவுத்தர்களையும் கழுவேற்றிக் கொன்ற இந்து மதம் சகிப்பு மனப்பான்மை கொண்டதுதானா? இப்பொழுதும்கூட ஆண்டுதோறும் அதற்காக இந்துக் கோவில்களில் விழா எடுக் கின்றனர் என்றால், என்ன பொருள்? இன்றுவரை அந்த மதம் சகிப்புத் தன்மையற்ற போக்கினையே கொண்டுள்ளது என்பது  விளங்கிடவில்லையா?

இந்தியாவின் கலாச்சாரத்தின் சின்னம் என்று சொல்லி, இந்திய நாட்டுப் பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுதெல்லாம் அந்நாட்டு ஆட்சித் தலைவர்களுக்கு மறக்காமல் கொடுக்கும் ஒரு நூல் உண்டு என்றால், அது கீதைதான். அந்தக் கீதை என்ன சொல்லுகிறது?
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லுகிறதே! (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32). இதுதான் இந்து மதம் சகிப்புத் தன்மையின் சொரூபம் என்பதற்கான நற்சான்று பத்திரமா?

இந்து மதத்தின் இதிகாசங்கள் என்று சொல்லப்படுகிறதே இராமாயணமும், மகாபாரதமும், அவற்றின் யோக்கியதைதான் என்ன? சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக சம்புகனை வாளால் வெட்டிக் கொன்ற கொலையாளிதானே மகாவிஷ்ணுவின் முக்கிய அவதாரமான இராமன். அந்த இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள்தானே - இன்றைக்கு இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர்.

பாரதிய ஜனதா முன்னிறுத்தும் இந்துக் கடவுள்கள் என்று சொல்லப் போனால், ராமனும், கிருஷ்ணனும்தானே! இவர்களின் கடவுள் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால், இவர்களின் இந்து மதம் எந்த இரகத்தைச் சேர்ந்தது என்பது வெட்ட வெளிச்சமாகிவிடவில்லையா?
இப்பொழுதுகூட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற ஜாதி ஒழிப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் யார்? இந்து மதத்துக்குள்ளேயே சமத்துவ சமநிலை இல்லையே! சூத்திரன் கோவில் கருவறைக்குள் உள்ள சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும்; தோஷம் பட்டுவிடும் - அதனைச் சுத்திகரிக்க வேண்டும் என்பது சகிப்பு மனப்பான்மையின் அடையாளமா?

இவ்வளவுக்கும் அர்ச்சகருக்கு உரிய பயிற்சியை முறையாகப் பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக்கவேண்டும் என்று சொல்லுகிறபொழுது அதனை ஏற்றுக்கொள்ள இயலாத மதம் எப்படி சகிப்புத் தன்மை உடைய மதமாக முடியும்?

இந்து மதத்தில் லோகக் குருக்களாக இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று எழுதி வைத்திருப்பவர்  மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆயிற்றே!

நியாயமாக இப்படிச் சொன்னதற்காக, அந்த ஆசாமியை உயி ரோடு இருந்தபோதே கைது செய்து பிணையில் வெளிவர முடியாத குற்றப் பிரிவின்கீழ் வழக்குத் தொடுத்து சிறைச்சாலையில் அல்லவா தள்ளி இருக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல; அவர் எத்தகைய மனிதாபிமானி தெரியுமா?

“ஆயுர் வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. ‘‘நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யாதே’’ என்று. ‘இதென்ன கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!’ என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்.’’ (‘‘தெய்வத்தின் குரல்’’, மூன்றாவது பாகம், பக்கம் 148).
இவ்வளவுக்குப் பின்பும் நாஸ்திகத்துக்கு இந்து மதத்தில் இடம் உண்டு என்று இன்னொரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு மனிதனுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்பது வெறுப்பின் எல்லையின் உச்சமல்லவா?
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொண்டால் விஞ்ஞானிகளான டார்வின், கலிலியோவுக்கு தண்டனை கொடுத்தது தவறு - அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று போப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாரே - அந்தப் பெருந்தன்மை இந்து மதத்தின் சங்க ராச்சாரியார்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!


-விடுதலை,1.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக