வியாழன், 15 பிப்ரவரி, 2018

மடமைகளைப் பரப்பவே சிவராத்திரி



மகா பிரளயம் ஏற்பட்டதால் உலகமே மூழ்கிப் போனது. திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டான். அதன்பொருட்டு சற்றே கர்வமும் கொண்டான். மீண்டும் பூலோகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய நினைத்த திருமால், தன் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைத் தோற்றுவித்தான்.  படைக்கும் திறனை பிரம்மாவுக்கு அளித்துவிட்டு பரமதிருப்தியுடன் பாற்கடலுக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்தான். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைத்து உலகத்தை நிரப் பினான். பின்னர், மூவுலகங்களையும் சுற்றிப்பார்த்து தன் படைப்பின் வினோதங்களைக் கண்டு மகிழ்ச் சியடைந்தான்.

இத்தனை உயிர் வர்க்கங்களைப் படைத்த தன்னை விட, இந்த உலகத்தில் வேறு யாரும் சிறந்த வரில்லை என்று ஆணவம் ஏற்பட்டது.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும்

ஏற்பட்ட மோதல்

நானே முழுமுதற் கடவுள் என்று மார்தட்டிக் கொண்டான் பிரம்மா. இதனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை ஏற்பட்டது. பிரம்மனே ! வீண் அகங்காரம் பிடித்து அலையாதே. உலகங்களில் உயிர்களைத் தோற்றுவித்தது நீதான். அதில் சந் தேகமில்லை. ஆனால், கடலையும் கடல் சூழ்ந்த பூமியையும், திசைகளையும் மலைகளையும், இன்னும் பல உலகங்களையும் மேலான உயிர்களையும் படைத்தவன் நான்தான். ஏன், பிரம்மனாகிய உன்னை உருவாக்கியவனும் நான்தான். உயிர்களைப் படைக்கும் சக்தியை உனக்குத் தந்தவனும் நான்தான். எனவே, என்னுடன் மோதாதே. உன்னிலும் பெரியவன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்' என்றான் விஷ்ணு. மோதலால் இந்த. வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. இந்திரன் முதலான தேவர்களும், வசிஷ்டர் முதலான ரிஷிகளும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்து தோற்றுப்போனார்கள்.

வாக்குவாதம் முற்றி, பிரம்மனும் விஷ்ணுவும் யுத்தம் செய்யவே தொடங்கிவிட்டார்கள். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அஸ்திரங்களைச் செலுத்திக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

இருவருக்கும் இடையே ஒரு பெரியஅக்னிப் பிழம்புவானளாவத்தோன்றியது.அந்தஅக்னிப் பிழம்பில் பிரம்மா, விஷ்ணு இருவரின் அஸ்திரங் களும், பாணங்களும் கலந்து மறைந்தன.

ஆதியும் அந்தமும் தெரியாத அந்த ஜோதிப் பிழம்பைக் கண்டு விஷ்ணுவும், பிரம்மனும் கலக்க மடைந்தார்கள். அப்போது அந்த அக்னிப் பிழம்பின் நடுவிலிருந்து ஓர் அசரீரி குரல் கேட்டது.

‘உங்களில் யார் இந்த ஜோதியின் அடியையோ முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர். அவரே பரப்பிரம்மம்' என்று கூறியது.

திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு அக்னிப் பிழம்பின் அடியைக் காணப் புறப்பட்டதுபோல், பிரம்மன் அன்னப் பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப்பறந்தான்.

இருவரும் போய்க்கொண்டே இருந்தபோதிலும்,  அடியையும், முடியையும் இருவராலும் காண முடிய வில்லை. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பாதாளத்திலிருந்து பூலோகத்துக்குத் திரும்பிவிட்டான்.

அன்னப்பறவையாக மாறிப் பறந்து கொண்டிருந்த பிரம்மனும் சோர்ந்து போனான்.

அப்போது தாழம்பூ மடல் ஒன்று மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அது ஜோதி வடி வாகிய சிவனின் சிரசிலிருந்துதான் கீழே வந்து கொண்டிருந்தது.

பிரம்மன் அந்தத் தாழம்பூவிடம், ஜோதியின் முடியைத்தான் கண்டுவிட்டதாகத் தன்னுடன் வந்து பொய்சாட்சி கூறுமாறு கேட்டுக்கொண்டு திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தான்.

விஷ்ணுவிடம், அக்னிப் பிழம்பின் முடியைத் தரிசித்து விட்டதாக பிரம்மன் பொய்யுரைத்தான்.

அக்னிப் பிழம்பிலிருந்து சிவன் தோன்றி விஷ் ணுவுக்கு சக்ராயுத வரம் அளித்து, பொய்யுரைத்த பிரம்மனுக்கு என தனியே வழிபடும் கோயில் பூலோகத்தில் இருக்காது என்றும்,  தாழம்பூ பூஜைகளில் பயன்படுத்த கூடாது என்றும் சாபமிட்டானாம்.

பிரம்மா, விஷ்ணு இருவருமே இந்த ஜோதி சொரூபம் தங்களுக்கும் மேலான சக்தியே என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டார்களாம்.

‘அனைத்துக்கும் மேலான பரம்பொருளே! தங்களின் பெருமையையும் சக்தியையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். கருணையுடன் தாங்கள் எங்களுக்குத் தரிசனம் தந்து அருள்பாலிக்க வேண்டும் பெருமானே' என்று அடிபணிந்தனராம்.

ஜோதியின் சுடர் ஒளிக்குள்ளிருந்து சூலமும் உடுக் கையும் ஏந்தியவனாக, புலியாடை அணிந்தவனாக, சந்திரனை ஆபரணமாகக் கொண்டு, சிரசில் கங்கை யைத் தாங்கியவனாக அருள்பாலிக்கும் வடிவுடன் சிவன் அவர்களுக்குக் காட்சி கொடுத்தானாம்.

திருமாலே! நான்முகனே! உங்களுக்குள் எதற்காக இந்த வீண் சச்சரவு? தேவையற்ற அகந்தையை மனத்தில்வளர்த்துக்கொண்டுமற்றவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினால், கலக்கமும் குழப்பமுமே மிஞ்சும். நிர்மலமான மனத்துடன் தத்தம் கடமையைச் சரிவரச் செய்பவர் எல்லோருமே பெரியவர்கள்தான்' என்று அறிவுரை கூறி ஆசீர்வதித் தானாம்.

அத்துடன் சிவதத்துவத்தையும் திருமாலுக்கு உபதேசித்தானாம். திருமால் அதை பிரம்மனுக்கு உபதேசித்தானாம். இந்தவிதமாக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஒளி வடிவாக, சிவன் விசுவரூப தரிசனம் தந்த காலம் மாசி மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியும் கூடிய இரவுக் காலம். அதாவது, அதுதான் மகா சிவராத்திரி காலம் என்று புராணக்கதை அளந்துள்ளனர்.

திருமாலும், பிரம்மனும் பூமியை மய்யமாகக் கொண்டே அடிமுடியைத் தேடினார்களாம்.  அறி வியல் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அறிவுக்கு பொருத்தமில்லாத புரட்டுகளை, மக்க ளின் அறிவைப் பாழ்படுத்தும் வகையில் அளந்த கதையாகத்தான் புராணக் கதைகள் உள்ளன.

அறிவுக்கு பொருத்தமில்லாதது

அண்டவெளியில்கோள்கள் யாவும் சூரியனை மய்யமாகக்கொண்டு சுற்றி வருகின்றன. அப்படி இருக்கையில், பூமியைமட்டுமே மய்யப் புள்ளியாகக் கொண்டு அடிமுடி தேடிய கதை அறிவுக்கு பொருத்தமில்லாததுதானே.

புவியில் உள்ள அனைத்துவித கனிமங்கள் குறித்தும் செயற்கைக்கோள் பதிவுகள் படம்பிடித்து காட்டுகின்றன.

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், இன்னமும் அடி, முடி காண முடியாதவன் என்று கூறிக்கொண்டு, அதற்கு கற்பனைக் கதை களைக் கூறிக்கொண்டு, அதற்காக வழிபாடுகள் என்று காலத்தையும், பொருளையும், சிந்தனையையும் பாழாக்கலாமா?
- விடுதலை நாளேடு, 13.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக