வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருவிளையாடலா...? தெருவிளையாடலா...?

இரா.கண்ணிமை

 

உலகையே உண்டாக்கியவன் - பாருக்கே படியளந்தவன் என்று பக்தர் குழாம் கூறுகின்ற சிவபெருமானின் விளையாட்டிற்குப் பெயர்தான் திருவிளையாடலாம்... அந்தப் புராணத்தில் - ஆமாம் அது எந்தப் புராணத்தை விரிக்கின்றதோ தெரியவில்லை! அவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் விளக்கப்பட்டு - மக்களின் உள்ளத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. “அடேயப்பா! இத்தகு வன்மையா சிவனுக்கு?” - என்று பக்தர்களின் பக்தி - முத்தி பித்தத்திற்கு வழிகோலியிருக்கிறது.

படிக்கப் படிக்க பக்திரசம் சொட்டும் - இல்லை பித்துரசம் கொட்டும் சிவனின் தெரு விளை யாடல்களில் - இருபத்தாறாவது விளையாடல் இதோ!

குலோத்துங்கன் என்பான் அரசோச்சிய நாளில் - அவந்தி எனும் ஊரில் ஒரு சவுண்டிப் பார்ப்பனன் இருந்தான். அந்த ஆரியக் கிறுக்கனுக்கு அழகான மனைவி! அனைத்திலும் கெட்டிக்காரி. ஆமாம் அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! இவர்கட்கு ஒரு பிள்ளை இருந்தான். இளைஞனான அவன் பருவத்தின் துடிப்பும், தனிமையின் தவிப்பும் மேலிடவே தாயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்தான்.

பல நாள் தாயும் - சேயும் கள்ளக் காதல் நடத்தி வந்ததை - ஒரு நாள் தன் தந்தை பார்த்ததைக் கண்டு விட்டான். காதலுக்குத் தடையாக வந்த தந்தையை தந்திரத்தால் கொன்றுவிட்டான் - மகன். ஊரார் அறிந்து விட்டால் மானம் - வானமேறுமே என்று தன் காதலியாம் தாயுடன் வெளியூருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி - எடுத்துச் சென்ற பொருள்களையும் - பார்ப்பனத்தியையும் கைப்பற்றிக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டி விட்டார்கள்.

பைத்தியம் பிடித்தவனாய் அந்தப் பார்ப்பன இளைஞன் - ஊர்தோறும், தெருதோறும், நாய் போல அலைந்துத் திரிந்தான். இறுதியில் மதுரையை அடைந்தான். அங்கு திருவிளையாடல்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயிலின் கோபுரத்தின் கீழே சிவனும் - பார்வதியும், வேடன் - வேட்டுவத்தி உருவம் கொண்டு சூதாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் ஒரு திருவிளையாடலே!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற பண் பாட்டிற்குப் புறம்பான - பார்ப்பனத் தாயை புணர்ந்து - தந்தையையும் கொன்று - மனு(அ)தர்மத்தின் வழியிலே சென்ற பார்ப்பன இளைஞன்பால் பரமசிவன் பரிதாபப்பட்டு - பாசத்தோடு அன்புரைகள் கூறி அரவணைத்துத் தேற்றினானாம். அந்த மொழிப்படி அவன் அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மூன்று மாதம் குளித்து சிவனின் அருள்பெற்று - அடியானாகி மோட்சத்தை அடைந்தானாம்.

இப்பொழுது கூட மதுரைக்குச் செல்லுபவர்கள் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவவழிபாடு செய்யத் தவறுவதில்லை. எவ்வளவு பெரிய சாதனை பார்த்தீர்களா!

இந்த பொய்யுரையால் மக்கள் தெளிவது என்ன என்று நோக்கும்போது - எத்தகு தீச்செயல் செய்தாலும் - பாவ மன்னிப்புச் சீட்டு பெறுவதுபோல் - குளத்தில் மூழ்கி எழுந்து “சிவ - சிவ” என்று தலையில் குட்டிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்பதுதானே! என்னே தெருவிளையாடலின் மகிமை!

பிட்டுக்கு மண் சுமந்தவன் - லட்டுக்கு வாய்த் திறந்தவன் - என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் சிவனின் திருவிளையாடல்தான். மக்களுக்கு மெய் யறிவையூட்டும் புராணம் போலும்? தலைமுடியிலே ஒரு பெண்ணையும் - கையிலே ஒரு பெண்ணையும், மெய்யிலே ஒரு பெண்ணையும் வைத்திருந்த பெண் பித்தனை எப்படி ஆண்டவன் - ஒழுக்கசீலன் என்று வாய் திறந்து கூறுகிறார்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள்?

திருவிளையாட்டில் திளைக்கும் சிவனடியார்களே! - மோட்சத்தை அடைய குறுக்குவழி சிவனாரை ஒரு பாவமன்னிப்புச் சீட்டு - கொடுக்கச் சொன்னால் போகிறது. தலையெழுத்து கிழியவில்லையே என்று ஏன் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

கொள்ளையும், கொலையும், கொடுமையும் செய் யும் அயோக்கியர்களுக்கு ஊக்கமும் உற்சாகத்தை யும் ஊட்டுவதுதான் ஆண்டவனின் திருவிளையாடல்  போலும்! இவற்றை திருவிளையாடல் என்பதா? தெரு விளையாடல் என்பதா?

எனவே கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றும் - அதை பரப்பியவனை முறைகேடன் என்றும் - வணங்குகிறவனை காட்டுவிலங்காண்டி என்றும் கூறுவதைவிட வேறென்ன கூற முடியும்!
--விடுதலை நாளேடு, 8.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக