வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஹிந்து திருமணங்களில் சப்தபதி - ஏழு அடி எடுத்தல் ஏன்?

 

ஹிந்து திருமணங்களில் சப்தபதி - ஏழு அடி எடுத்தல் ஏன்?
ஆரியர் ஒழுக்கமும் - டாக்டர் அம்பேத்கரின் அரிய விளக்கமும்

பள்ளிக் கூடங்களில் மாணவரிடையே பொது ஒழுக்கம், நல்லொழுக்கம் போதிப்பதற்கு _ மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் மறைமுகமாக ஹிந்துத்வாவைப் புகுத்த _ ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இராமகிருஷ்ணா மிஷன் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்தியக் கல்வித்துறை போட்டிருப்பது அரசியல் சட்டத்தின் கோட்பாடான மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோத மானதாகும்.

இவர்களின் ஒழுக்கம் எப்படிப்பட்டது தெரியுமா?

மேலும், இவர்கள் பள்ளி மாணவர்களிடம் திணிக்க முயலும், ஹிந்து வேதங்கள், புராண, இதிகாசங்கள் என்பவைகள், ஆரியர்களின் ஒழுக்கத்தையும், ஒழுகலாறுகளையும் உள்ளடக்கியதோடு, (ஆரியச்) சுரர்களாகிய அவர்கள், (குடிக்காத) அசுரர்கள் என்ற திராவிடரோடு பண்பாட்டுப் படையெடுப்பை ஒட்டி நிகழ்த்தியப் போர்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளேயாகும்!

அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களை தங்கள் வயப்படுத்தி, தங்களது மநுதர்மம், மற்றும் வேதக் கலாச்சரத்தையே இந்து (லா) சட்டம் ஆக்கி, இன்றுவரை மற்ற மக்கள் மீது திணித்து வருகின்றனர்.

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான புரட்சிகளில் ஒன்று, திருமண முறைகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களது (ஆரிய) ஒழுக்கத்தையொட்டி ஏற்பாடு செய்ததை எதிர்த்து, தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதைத் திருமண முறை அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது!

எடுத்துக்காட்டாக, காலங்காலமாக, இந்து திருமண முறை பெண்ணடிமையை வற்புறுத்தி, ஆணாதிக்கப் பிறவி பேதத்தைப் பூண்போட்டுக் காப்பாற்றி வருவதற்கு தங்கள் சடங்குகள், சம்பிரதாயங்களை, தங்களது மொழி _ சமஸ்கிருதம் மூலம் பரப்பி நிலைபெறச் செய்து, சட்டக் கட்டாயம் ஆக்கிவிட்டனர்.

இதை டாக்டர் அம்பேத்கர், ‘ஹிந்து மதத்தின் புதிர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஆரியர்கள் தங்களைவிடச் சிறந்த சந்ததிகளைப் பெறவேண்டும் என்ற பெரும் ஆசை பிடித்து ஆட்டப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. இதற்காக அவர்கள் தங்கள் மனைவிகளை மற்றவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ரிஷிகளை ஆரியர்கள் உயர்ந்த காளைகளாகக் கருதியதால் அந்தப் பெண்கள் பெரும்பாலும் அவர்களிடம் அனுப்பப் பட்டார்கள். இத்தகைய வழக்கத்தில் சம்பந்தப்பட்ட ரிஷிகளின் எண்ணிக்கை மிகப் பெரியது. உண்மையில் ரிஷிகள் இந்த ஒழுக்கக்கேட்டை ஒரு வாடிக்கையான வியாபாரமாகவே ஆக்கியிருந்தார்கள். மன்னர்களும் கூடத் தங்கள் மனைவிகளைக் கருவுறச் செய்யுமாறு ரிஷிகளைக் கேட்டுக் கொண்டார்கள். இப்போது நாம் தேவர்களைப் பார்ப்போம்.

தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த, பாலியல் ஒழுக்கம் மிகவும் குறைந்த ஒரு சமுதாயமாக இருந்தனர். அவர்கள் ரிஷிகளின் மனைவி களையும் தொல்லை செய்தார்கள். இந்திரன் கௌதம ரிஷியின் மனைவி அகல்யாவைக் கற்பழித்த கதை அனைவரும் அறிந்ததே. ஆரியப் பெண்களிடம் அவர்கள் செய்த ஒழுக்கக் கேடான செயல்கள் சொல்ல முடியாதவை. தேவர்கள் சமுதாயம் ஆரிய சமுதாயத்தின் மீது மிக ஆரம்ப காலத்திலிருந்தே மேலாதிக்கம் நிறுவிக் கொண்டதாகத் தோன்றகிறது. இந்த மேலாதிக்கம் கீழ்த்தரமாகப் போய், ஆரியப் பெண்கள் தேவர்களின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு விபசாரிகளைப் போல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. தனது மனைவியை ஒரு தேவன் வைத்திருந்து அவனால் அவள் கருவுற்றால் ஒரு ஆரியன் அதைப் பற்றிப் பெருமைப்பட்டான். மகாபாரதத்திலும், ஹரி வம்சத்திலும் ஆரியப் பெண்களிடம் இந்திரன், யமன், நசத்யா, அக்கினி, வாயு முதலான தேவர்களுக்குப் பிறந்த மகன்கள் பற்றி மிகப் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய அளவில் தவறான உறவுகள் இருந்து வந்துள்ளன என்பதைக் காண மிக வியப்பாக உள்ளது.

நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர் களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு நிலைப்பட்டன. இது நிலப்பிரபுத்துவ முறையைப் போன்ற உறவாக இருந்தது என்று தோன்றுகிறது.

தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

முதலாவது உரிமை யக்ஞம். இது ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது அளித்த விருந்து. ராட்சசர்கள், தைத்திரியர்கள், தானவர்கள் ஆகியோருக்கெதிரான சண்டைகளில் தேவர்கள் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காக ஆரியர்கள் இந்த விருந்துகளை அளித்தார்கள். இவை தேவர்கள் கறந்து கொண்ட நிலப் பிரபுத்துவக் கப்பங்களே. இவற்றை இவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம், தேவர்கள் என்ற சொல் ஒரு சமுதாயத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளாமல் கடவுள் என்ற கருத்தைத் தரும் சொல்லாகப் பொருள் கொண்டதேயாகும். இது முற்றிலும் தவறானது.

ஆரியர்களிடம் தேவர்கள் பெற்றுக் கொண்ட இரண்டாவது உரிமை ஆரியப் பெண்களைத் தாங்கள் முதலில் அனுபவிக்கும் உரிமையாகும். இது மிக ஆரம்ப காலத்திலேயே முறைப்படுத்தப்பட்டு விட்டது. ருக்வேதம்  X  85, 40இல் இதைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆரியப் பெண்ணின்மேல் முதல் உரிமை சோமாவுக்கும், இரண்டாவதாக கந்தர்வாவுக்கும், மூன்றாவதாக அக்கினிக்கும், கடைசியாக ஆரியனுக்கும் இருப்பதாக அது கூறுகிறது. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் ஒரு தேவனுக்கு அடைமானமாக்கப்படுகிறாள். அவள் பருவமடைந்ததும் அவளை முதலில் அனுபவிக்கும் உரிமை அந்தத் தேவனுக்கே உண்டு. அவளை ஒரு ஆரியனுக்கு மணம் முடிப்பதற்கு முன் அந்தத் தேவனுக்கு உரிய கொடையைக் கொடுத்து அவனது உரிமையைத் தீர்த்து அவளை மீட்கவேண்டும். இந்த முறை இருந்தது என்பதற்கு மிகத் தெளிவான நிரூபணம் ஆஷ்வலாயன கிருஹ்ய சூத்திரத்தில் காணப்படுகிறது. அதன் முதல் அத்தியாயம் 7ஆவது கண்டிகையில் திருமணச் சடங்கு நடைமுறை விவரிக்கப்படுகிறது. இதைக் கவனமாக ஆராய்ந்தால் திருமணத்தில் ஆர்யமன், வருணன், புஷன் ஆகிய மூன்று தேவர்கள் வந்திருப்பதாகக் காண முடிகிறது. மணப்பெண்ணின் மீது தங்களுக்கு உள்ள முதல் உரிமை காரணமாகவே இவர்கள் வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. மணமகன் செய்யும் முதல் செயல் மணப் பெண்ணை ஒரு அம்மிக்கல்லின் அருகே அழைத்து வந்து அதன் மேல் ஏறி நிற்கச் செய்வதாகும். அப்போது அவன் ‘இந்தக் கல்லை மிதி, கல்லைப் போல் உறுதியாயிறு. எதிரிகளை வெல், பகைவர்களைக் காலின் கீழ் மிதித்துவிடு’ என்று சொல்லுகிறான். அவன் தன்னுடைய பகைவர்களாகக் கருதும் மூன்று தேவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அவளை விடுவிப்பதற்காக இதைச் செய்கிறான் என்பதே பொருள். தேவர்கள் கோபமடைந்து மணமகளைக் கைப்பற்றச் செல்கிறார்கள். மணமகளின் சகோதரன் குறுக்கிட்டுத் தாவாவைத் தீர்த்து வைக்க முயலுகிறான். அவன் மணமகளைத் தன் உள்ளங்கைகளைச் சேர்த்துக் குழிவாக வைத்துக் கொள்ளக் கூறுகிறான். அவளுடைய கைகளில் அவன் தானியப் பொரியை நிரப்பி அதன்மேல் நெய்யை ஊற்றி அதை ஒவ்வொரு தேவனுக்கும் மூன்று முறை கொடுக்கச் சொல்லுகிறான். இவ்வாறு கொடுப்பது ‘அவதனம்’ என்று கூறப்படுகிறது. மணப்பெண் அவதனம் கொடுக்கும்போது அவன் சொல்லும் வார்த்தைகள் குறிப்பிடத் தக்கவை. அவன் கூறுகிறான், “இந்தப் பெண் இந்த அவதனத்தை ஆர்யமன் தேவனுக்கு அக்கினியின் மூலம் கொடுக்கிறாள். எனவே, ஆர்யமன் இந்தப் பெண்ணின் மேல் தனது உரிமையைக் கைவிட்டு மணமகன் அவளைப் பெறுவதைத் தடுக்காமலிருக்க வேண்டும்.’’ மற்ற இரண்டு தேவர்களுக்கும் மணமகள் இதேபோலத் தனித்தனியாக அவதனங்கள் கொடுக்கிறாள். அவதனம் கொடுக்கப்பட்டபின் மணமகனும் மணமகளும் தீயைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இது சப்தபதி எனப்படுகிறது. இது முடிந்தபின் திருமணம் முழுமையடைந்து செல்லத்தக்கதாக ஆகிறது. இவையெல்லாம் ஆரியர்கள் தேவர்களுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்பட்டு இருந்ததையும், தேவர்களும் ஆரியர்களும் ஒழுக்கத்தில் தாழ்ந்து போயிருந்ததையும் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இந்துத் திருமணத்தில் சப்தபதிதான் மிக முக்கியமான அம்சம் என்பதையும், அது இல்லாமல் சட்டப்படி திருமணம் இல்லை என்பதையும் வழக்குரைஞர்கள் அறிவார்கள். ஆனால் சப்தபதி ஏன் அப்படி முக்கியமானது என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே. காரணம், தெளிவாகத் தெரிகிறது. மணப்பெண்ணின் மீது முதல் உரிமை கொண்டிருந்த தேவன் அவதனம் கொடுக்கப்பட்டதில் திருப்தியடைந்து அவளை விட்டுவிடத் தயாராயிருக்கிறானா என்பதைச் சோதிக்கும் நடைமுறையே அது. சப்தபதியில் நடந்துசெல்லும் தூரம் வரை மணமகன் மணப்பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்வதை அந்தத் தேவன் அனுமதித்தால், அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டில் திருப்தியடைந்து விட்டான் என்றும், அவனது உரிமை தீர்ந்து போய்விட்டது என்றும், அந்தப் பெண் மற்றொருவனின் மனைவியாவதற்குச் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்றும் கருதப்படுகிறது. சப்தபதிக்கு வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது. ஒவ்வொரு திருமணத்திற்கும் சப்தபதி இன்றியமையாத சடங்காக இருப்பது, தேவர்களிடையேயும் ஆரியர்களிடையேயும் இருந்த இந்த ஒழுக்கக்கேடு எல்லோரிடமும் பரவி யிருந்ததையே காட்டுகிறது.

இத்தகைய ஒழுக்கக் கேட்டு முறையிலிருந்து அறிவையும், பெண்ணினத்தின் சுதந்திரத்தை, சமத்துவத்தை காத்தளித்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவமாக்கி, பிறவி இழிவைத் துடைத் தெறிந்தது திராவிடர் ஆட்சி. அறிஞர்அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஒழுக்கச் சிதைவிலிருந்த நாட்டை, மக்களைக் காப்பாற்றி உயர்த்தியது இந்த இயக்க ஆட்சியில்தான்!

எனவே, ஆரியம் ஒழுக்கக்கேட்டை பரப்பியதோடு, ‘புனிதப்படுத்தியது! அதன் மூலம் பெண்களைக் கேவலப்படுத்தியது. ஆனால், திராவிடமோ, அவர்களின் உரிமை, மானம், சுயமரியாதையைக் காப்பாற்றி, ஒழுக்கத்தையும் பாதுகாத்தது!

ஆரியம்_திராவிடம் இரு இனங்கள் என்பதையும், இரு வேறு தத்துவங்கள் என்பதையும் இப்பொங்கல் என்ற ‘திராவிடர் திருநாளில்’ நினைவில் நிறுத்துவோம்!

இப்படிப் பண்பாட்டுச் சிதைவுகளை நாம் சீர்செய்து, ஆரியப் பண்பாட்டு ஊடுருவலை அகற்றிவரும் நிலையில், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் பண்பாட்டுச் சீரழிவை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் முயற்சியையும் நாம் முறியடித்தாக வேண்டும்!

கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

16-31.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக