02.12.1928- குடிஅரசிலிருந்து...
சீர்த்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங் களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனெ னில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந் திருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களாயிருக் கிறார்கள்.
கடவுள், மதம், பக்தி, வேதம் முதலியதுகள் மாத்திரம் அல் லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்பந்தமான சடங்குகள், நோன்பு, விரதம், வேண்டுதல் தீர்த்தம், மூர்த்தி ஸ்தலம்: காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்து கொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகள் ஆகியவைகளின் பாற்பட்டதேயாகும்.
இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்முடைய அறிவு ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவைகளை யெல்லாம் அடியோடு கெடுத்து விடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும், அறிவும் இல்லாமல் செய்து விடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றையும் விட, இயற் கையிலேயே எல்லா வளமும் சவுகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட மிகவும் மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடைய முடியாத அடிமைத்தன்மையிலும் அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணமே இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்தனமாக அடிமையாயிருப்பதுதான்.
நமது நாட்டைவிட மிகவும் பின்னணியிலிருந்து மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருப் பதற்குக் காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத் தறிவுக்கு மதிப்பும் கொடுத்து ஆராய்ச்சித் துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.
நாம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றாயறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம்; தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும் ஸ்மிருதியும் புராணமும் வந்து தடைக் கல்லாய் நிறுத்தி விடுகின்றது. இவைகளையெல்லாம்கூட ஒருவிதத்தில் சமாளித்து விடலாம். ஆனாலும் பெரியவர்கள் நடந்த வழி என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடையாய் விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாட்சண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன். இந்த மூடநம்பிக்கை குருட்டுப் பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம், அய்ந்து லட்சம், பத்து லட்சம், இருபது லட்சம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வருஷத்தில் பத்து லட்சம், இருபது லட்சம், அய்ம்பது லட்சம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேகமிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக் கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங்களும், சமயாச் சாரியார்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மியங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பதுகளும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.
உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்துக் கொள் ளுங்கள். அவர் களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளினிடத் திலாவது, புண்ணியஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவை களிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையாகிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப்போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக் காலமும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத் தனத்தைப் பாருங்கள்.
(துலா ஸ்நானத்திற்குப் போகவில்லையா? வைகுண்ட ஏகாத சிக்குப் போகவில்லையா? ஆடி அமாவாசைக்குத் தனுஷ் கோடிக்குப் போக வில்லையா? பிரயாசைக்குச் சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா? கார்த்திகை தீபத்திற்குத் திருவண் ணாமலைக்குப் போகவில்லையா? கும்பமேளாவுக்கு அரித்து வாரத்திற்குப் போகவில்லையா? மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா? ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில் லையா? என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகைகளில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படிச் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோட்சமடைவதற்காகவா? நமக்குப் புண்ணியம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.
திராவிடர் என்போர் யார்? திராவிடர் என்றால் பிறவியிலேயே பிறக்கும் போதே ஏற்படும் இனப் பெயர்தான். திராவிடர் என்பது ஜாதியல்ல; பிறவி ஆகும். --
-தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக