தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், "மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.
ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்" என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதி விரை வாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், "வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது" என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின. இதனால்தானே "பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது" என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.
ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?
('இந்துமத பண்டிகைகள்' நூலிலிருந்து)
ஆயுதபூசை பற்றி அண்ணா
எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயு தங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம். சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண் டாடாதவர்கள்!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!
நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!
சரஸ்வதி பூசை இல்லை!
ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும் மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்தது தான்.
நீ, கொண்டாடுகிறாய் -
சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சுயந்திரத் தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!
அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!
ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளை, பயனுள்ள பொருளைக் கண்டு பிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.
உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
எல்லாம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!
சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது!
தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!
ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!
தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!
இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள் களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.
அவர்கள், சரஸ்வதி பூசை - ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என் பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?
பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த
சரஸ்வதி பூசை ஆயுத பூசை -
நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.
யோசித்துப் பார் அடுத்த ஆண்டுக்குள்ளாவது!
- 'திராவிடநாடு' 26.10.1947
விடுதலை நாளேடு, 17.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக