செவ்வாய், 9 அக்டோபர், 2018

நவராத்திரி

***கைவல்யம்***


நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராயணம், சூரிய நமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும்படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

ஒன்பதாம் நாளில்...


நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகிய வர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன் றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம்.

இலாபமிருப்பதால் பரப்பும் பார்ப்பனர்கள்


இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப் படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர் களிடையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசை யன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

மகிஷாசூரன்


முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்ப தாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக்கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக் கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வது போல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேதபாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆரா தனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தி யாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம் மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிக ளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசை யில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

அலர்மேலு மங்கையாக லட்சுமியின் விரதம்


முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட் டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.

சரஸ்வதியின் தவம்


பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற் காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறை வாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற்பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந் ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப் பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித் ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இது போன்ற பல கதைகளும் உண்டு.

படித்தவர்களுக்கு புத்தி இருக்கிறதா?


கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக்கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்றுதான் கேட்கிறோம்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 9.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக