சனி, 7 ஜனவரி, 2017

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளா...?-1



- இரா.கண்ணிமை -

மார்கழி மாதம் பிறந்துவிட்டாலே... வீட்டு வாசலில் கோலம்போட்டு - சாணத்தில் பூசணிப் பூவை வைத்து - பிற வேலைகளைத் தொடங்குவது பெண்களின் வாடிக்கை... சாமத்தில் கருடகம்பம் ஏந்தி சங்கூதி  - பசனைப் பாடி - செல்லும் ஒரு கூட்டம். இப்படி மார்கழிக்கு என்ன சிறப்பு? கண்ணன் அதாவது மகாவிஷ்ணு பள்ளி கொண்டு விட்டானாம். அவனை எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாடி - திருப்பாவை, திருவெம்பாவை ஓதி - கிருஷ்ணபரமாத்மாவை தொழுவதுதான் - மார்கழித் திங்களின் மகிமையாம்!
மீளா நித்திரை கொண்ட மகாவிஷ்ணு - கண்ண பிரான் - கிருஷ்ணனின் அவதாரம் தான் என்ன?
பூமிதேவியானவள் சத்திரியர் முதலானவர்களைத் தாங்கி சலித்து விஷ்ணுவை நோக்கி முறையிட, விஷ்ணு துவாரகாபுரியில் - கிருஷ்ண அவதாரத்தில் பிறந்து சத்திரியர், அசுரர் முதலானோர்களை கொலை செய்து அழகான பெண்களை தன்வசப்படுத்திக் கொண்டு காமுகனாய் - மோகப்பிரியனாய் கூடி லீலைகள் செய்து - போகித்து சுகித்து அவர்கள் வயிற் றிலுதித்த பிள்ளைகளுடனும் - மற்றவர்களுடனும் பிரபாச கேத்திரை என்னும் இடத்தைச் சேர்ந்து மதுவெறியால் நிறைந்து, ஒருவரையொருவர் அறியாமல் போர்புரிந்து அவர்களில் நான்கு, அய்ந்து பேர் தவிர மற்ற அனைவரையும் கொன்று தம்குருவான இராயன்கோஸ் என்பவனின் மனைவி இராதை என்பவளைக் களவாய் கொண்டுபோய் அவளுடன் காட்டில் கூடிப்புணர்ந்தும், பிருந்தாவனத்தில் - பல இடைச்சியரை வசப்படுத்தி ஆலிங்கனம் செய்தான். வடமதுரையில் இராசனாகயிருந்து அங்கிருந்து பதினாறாயிரம் பெண்களை திருடி இடைவிடாது சுரதலீலை புரிந்தும் தன் மாமன் கஞ்சனைக் கொல்லப் போகையில் ஆடையின்றி நிர்வாணமாயிருந்ததால் - ஒரு வண்ணானை வஸ்திரம் கேட்டு கொடாததால் அவனைக் கொன்று அவனின் ஆடையை உரிந்து உடுத்திக் கொண்டு - இராச அவையில் நுழைந்து - தன் மாமனான கஞ்சன் முதலானோரையும் கொன்று தன் பிள்ளைகளோடு மது அருந்தி திரிந்ததும் வேடிக்கை.
இப்படி மதுபோதையால் வெறித்தும், தரு மரைக் கொண்டு பொய் சொல்லு வித்தும் - பலப்பல தீயச்செயல்களைச் செய்தும் கடைசியில் ஆலமரத்தில் படுத்திருக்கையில் - வேடனொருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்து மடியச் செய்தான். உடலை பறவைகளும், நரிகளும் பிடுங்கித்தின்றன.
விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் நடத்திய அசிங் கங்களையும் - கோபிகா பெண்களுடன் செய்த லீலைகளையும் - அவர்களுடன் கூடிப் புணர்ந்த கொடுமைகளையும் - மனித மனத்தைக் கெடுத்து கறையானவற்றை இங்கே எழுத கை கூசும். மனமும் கூசும்! அவற்றை நீக்கி சிலவற்றைக் காணலாம். (பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் - கோபியரைப் புணர்ந்த அத்தியாயம் 22ஆம் பாடலைப் பார்க்கவும்)
பாடல்:
பொங்கினர் காவு தோறும்
புதுமணற் குன்று தோறும்
பங்கயச் செங்கண் மாயன்
பானிலாப் பயன்கொண் டோங்கு
கங்கையந் திரைவா யுற்ற
கனியிள வண்ணம் போலும்
கொங்கைவீழ் கோதை மாதர்
குழாத்தொடு மாடி னானே!
பொருள்: கங்கைநீரின் அலைவாயில் பொருத்திய இள அன்னத்தைப் போலிருக்கின்ற பெண்களுடன், கிருஷ்ணனானவன் சோலைகள், மணற் குன்றுகள் தோறும் போய் சரச லீலை காட்டி கொங்கையைத் தழுவி விளையாடினான் - என்பதாம்.
- புராணம் சங்க சூரனைக் கொன்ற பாடல் 15
மேய தோகையினமென மயிலான
சாயலார் முலைதழீஇ விளையாடிப் பின்
மாயவன் வைகறையில் வண்டுளர் தண்டார்
ஆயர்பாடியில் லடைந்தனன் மன்னோ!
பொருள்: மயிலின் சாயலொத்த கோபிகா பெண் களுடைய ஸ்தனங்களை - கிருஷ்ணன் தழுவி விளையாடிக் கொண்டிருந்து, காலையில் இடையர் ஊரான ஆயற்பாடியில் சேர்ந்தான் - என்பதாம்.
இவன்தான் பள்ளிகொண்ட பரந்தாமனா? கிருஷ்ண பகவானுக்குரிய அரும் தொழிலா? இது காமிகளுக்கேற்றதா? சுவாமிகளுக்கேற்றதா? காமிக்கும் - சுவாமிக்கும் உள்ள வேறுபாடு என்ன? நீங்களே தீர்ப்பிடுங்கள்.
- பாகவதம் உத்தவரைக் கோகுலத்தில் விடுத்த அத்தியாயம் 39 ஆம் பாட்டு.
வெள்ளி வெண்முல்லையம்
மெல்லினர் துன்றுவிரைக் கோதைக்
கள்ள விழோதியரிற்றோரும்
வெண்ணெய் கவர்ந்துண் டோன்
அள்ளிலை வேல்விழியாரமுதம் யுரையஞ்சாயல்
ஒள்ளிழை பச்சிள வேய்புரை தோணல முண்டானே!
பொருள்: கோபிகா பெண்களுடைய வீடுகளெல் லாம் வெண்ணெய் திருடிச் சாப்பிட்ட கிருஷ்ணன் வேலையொத்த கண்களையும், அழகான சாயலையும் - பிரகாசமான பூஷணங்களையும், இளமூங்கிலுக்கு நிகரான அகண்ட தோள்களையுடைய கூனி என்னும் பெண்ணோடு புணர்ச்சி செய்தான் - என்பதாம்.
விஷ்ணுவின் திருட்டைக் குறித்து - பாகவதம் - சகடமுரைத்த அத்தியாயம் 17ஆம் பாடலைப் பார்க்க.
பாடல்:
கட்டமைந்த சிறு கன்று விடுக்கும்
தொட்டு வெண்ணெயோடும் தோய்தாயி ருண்ணும்
கெட்டுறி முதலி நின்று கைநீட்டும்
எட்டு கின்றிலா தவையுடைக்குங் கல்லெறிந்தே!
பொருள்: யசோதையே கேள்! உன் மகன் சிறு கன்றுகளை கட்டுத்தறியிலிருந்து அவிழ்த்து விடுகிறான். வெண்ணெயுந், தோய்ந்த தயிரையும் திருடித் தின்கிறான். உயரமான உறியிலிருப்பதைக் கைநீட்டி எடுக்கிறான். சிதறிய வெண்ணெய் இடைச்சிகளின் மீது படிகிறது. அதை நக்கித் தின்றான்  - என்பதாம்.
பாகவதம் மருதிடை கவிழ்ந்த அத்தியாயம் 5, 8 ஆம் பாடலில் - கிருஷ்ணன் தயிர்ப்பானையை உடைத்து வெண்ணெயைத் திருடித் தின்றதால் - அவனைப் பிடித்து உரலோடு பிணைத்து கட்டிவிட்டதைக் காணலாம்.
- பாரதம், சபாபருவம், இராச சூயயாகச் சுருக்கம் 149ஆம் பாடல்:
இருவிழி சிவந்து நுதல்பெயர்
வரும்பவிருந்த மன்னவர் முகநோக்கி
அறிவையை வதைத்து பிறர்மனை
விழைவித்தத்தனுக் கிளையவளை விரும்பிப்
பெருமை மாறுதலைக் கொன்ற
பாதகனைப் பெரியவனென்றுன்னுதற்தகவோ
தெறிகிலரெவரு முனிவருமன்றன்
சித்தினுக்குளலெனத் தெழித்தான்!
பொருள்: சிசுபாலன் அவையிலிருந்த மன்னர் களைப் பார்த்து ஓ, அரசர்களே! தன் பெண்ணைக் கொன்று மற்றோர் மனைவியர் மேல் ஆசைகொண்டு தந்தைக்கிளையாளாம் அத்தையை இச்சித்து - மாமனை கொலை செய்த பாவியைப் பெரியனென்று நினைப்பது என்ன புத்தியோ? - என்பதாம்.
பொதிகையில் வாழ்ந்த போக முனிவர் கிருஷ்ணன் அவதார வரலாற்றை விவரிக்கும் பாடலொன்று போகர் ஏழாயிரம் - 4ஆம் காண்டம் பக்கம் 564.
பாடல் 524
மயங்கினார் கோடன கோடிப் பெண்கள்
மண்டலத்தில் கிருஷ்ணாவ தார னூக்கு
தயங்கியே கற்பிழந்து தேகந் தன்னை
திகழுடனே தத்தமக்காய் செய்து கொண்டார்
பயங்கமுடன் யிதிகாசங்கள் புராணங்கள்
பல, பலவாம் கிருஷ்ணனது காதை தன்னை
புயங்கமுடன் புலவரெல்லாம் புகழ்ந்து பாடி
பூதலத்தில் கதையுமுன் டாக்கி னாரே!
போகமுனிவர் - தமது பாடலொன்றில் விஷ்ணு துவாரகையில் பிறந்து - எண்ணற்ற பெண்களை மயக்கிக் கெடுத்தும் - பதினாறாயிரம் பெண்களையும் சீர்கெடச்செய்து - சிதைத்தவன். சாஸ்திரங்களில் பொய்யாகப் புனையப்பட்டவன். இவனோ தெய்வம்?
கெருட புராணத்தில் சொல்லியுள்ளபடி வேடப் பெண்ணை - விஷ்ணு சேர்ந்ததால் தன் மனைவி லட்சுமி கோபப்பட்டு காவலரிடம் சொல்லி வெளியேற்றி விட்டாள். பிறகு அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டானாம். இப்படி நீள்கிறது கிருஷ்ணனின் கதை.
மார்கழியில் பஜகோவிந்தம் பாடி பக்தி முற்றி பித்தத்திற்கடிகோலும் கண்ணதாசர்களே! கிருஷ்ண பக்தர்களே! பாடுங்கள்... பாடுங்கள் திருப்பாவை... திருவெம்பாவைதனை...! எத்தனை பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடினாலும் - படுத்துக்கிடக்கும் - பரந்தாமன் எழமாட்டான். அப்பமொடு அவல் பொரியை அள்ளி கொடுத்துக்கொண்டே இருங்கள். பள்ளி கொண்ட பெருமாள் எழுவானா? பார்க்கலாம்!
கண்ணன் காமுகனை காமப் பெருமகனை
பெண்ணைக் கெடுத்தவனை பேயாய் அலைந்த வனை
எண்ணிலா கோபியரை ஏறிட்டுப் பார்த்தவனை
இன்னே வந்து நீ எழுப்பாயோ றெம்பாவாய்!
(தொடரும்)
-விடுதலை,7.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக