சனி, 7 ஜனவரி, 2017

சொர்க்கவாசல் மூடத்தனம்!

 
மார்கழி மாதம் அல்லவா - வைணவர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். உச்சகட்டமாக வைணவக் கோவில்களில் குறிப்பாக சிறீரங்கம் ரங்கநாதன் கோவில் வைகுண்ட ஏகாதசி ஏகப்பட்ட பிரபல்யம். விடியற்காலை சொர்க்கவாசலில் நுழைவார்கள். அடேயப்பா, அவ்வளவு குதூகலம்!
நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அப்படி சொர்க்கவாசல் நுழைந்தவர்கள் - அப்படியே சொர்க்கம் போக வேண்டியதுதானே - பிறகு ஏன் வீட்டுக்குத் திரும்பி வருகிறார்களாம்? இந்த சொர்க்க வாசலின் கதை என்ன தெரியுமா? கேளுங்கள்! கேளுங்கள்!!
“நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே - அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் - ஓடக்காரன் துணையோடு.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ (பார்வானம் - சுடுகாடு, பார் வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ‘முக்தி’யும் அளிக்கப் பட்டதாம்! (‘திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் ஆதாரப்படி).
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறதாம்! சொர்க்கவாசல் மகிமையின் வண்டவாளம் என்ன என்பது இப்போது புரிகிறதா?
இது அறிவுக்குப் பொருந்துகிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதையின்மூலம் என்ன அறியப்படுகிறது? தொழிலாளர்களைக் கொன்று குவித்தது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம் - படுபாதகம் - சூழ்ச்சி?
இதற்கொரு விழா கேடா? வைணவர் - வைகுண்ட ஏகாதசி என்றால் சைவர்கள் சும்மா இருப்பார்களா? சிவராத்திரி என்ற ஒரு கதையை வைப்பார்கள். ஒரு மதத்துக்குள்ளேயே போட்டிக்கடைதானே இவை?
அது சரி, இந்த சிறீ ரங்கநாதனின் சக்தி என்ன தெரியுமா? ‘இந்து’ ஆங்கில ஏடு 1959 இல் வெளியிட்ட செய்தி இதோ:
A serious fire accident occurred on March 22 in the famous Ranganathar temple in Srirangam. At about 9-15 a.m., smoke was seen shooting from the sanctum sanctorum. Immediately on receipt of information, Mr.K.K. Menon, Executive Officer of the Srirangam Devasthanam, rushed in along with several others carrying potfuls of water and sand. Meanwhile, the fire brigade was sent for from Tiruchi. It arrived soon and all efforts were made to put out the fire which took nearly three hours. As the annual Panguni festival is now in progress, the utsavar idols were not in the sanctum sanctorum at the time of the fire disaster. It is stated that the gold vimanum over the sanctum sanctorum has not been affected by the fire.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘திருச்சிக்கு அருகே உள்ள சிறீரங்கநாதர் கோவி லில் 1959 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது, காலை வேளையில் பூசைகள் நடந்துகொண்டு இருந்தபோது கோவில் கருவறையில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது, சில நிமிடங்களில் இந்த புகைமூட்டம் தீப்பிழம்பாக  மாறி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. உடனடியாக கோவில் நிர்வாகி கே.கே.மேனனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் மண் மற்றும் நீரை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருச்சி நகர தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்களும் வந்து தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. பங்குனி மாத திருவிழாவிற்கு கோவில் நிர்வாகம் தயாராகிக்கொண்டு இருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். தீவிபத்தின் போது மூலவர் கருவறையில் இருந்து வெளியேற்றப்பட்ட காரணத்தால் மூலவர் சிலை தீயிலிருந்து தப்பித்துவிட்டது’’ என்பது ‘இந்து’ ஏட்டின் செய்தி.
புரிகிறதா? சிறீரங்க நாதர் வெடித்துச் சிதறாமல் தப்பிய தற்கே காரணம், அதனை அவசர அவசரமாக வெளியேற்றியதுதான்.
பக்தர்களே, பதறாமல் புத்தியோடு சிந்திப்பீர்!
கடவுளையே மனிதன் காப்பாற்றவேண்டியுள்ளது. அப்படி யிருக்க மார்கழி மாத விரதமும், சொர்க்க வாசல் மகிமையும் அசல் முட்டாள்தனம் அல்லவா!


-விடுதலை,7.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக