வெள்ளி, 27 ஜனவரி, 2017

பூசணிக்காய் மகத்துவம்




புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978
-விடுதலை,30.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக