மின்சாரம்
தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (4.11.2015) ‘சாதிச் சூழலில் காவிரிப் படுகை’ எனும் தலைப்பில் எம். மணிகண்டன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியுள் ளது. அதன் ஒரு பகுதி இதோ:
நிமிடக் கட்டுரை:
சாதிச் சுழலில் காவிரிப் படுகை!
ஆத்துல ஒழுங்கா தண்ணி வராட்டியும் ஒரு குரூப் கையில காசு பொழங்கத்தான் செய்யுது மாப்ள. தெக்கலங்கமே திக்குமுக் காடுதுடா, ஒரு நெல்லு மணி விழுந்தாக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மொய்க் குறானுவ. சில தினங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து அழைத்த என்னுடைய நண்பன் செல்வம் தீபாவளிக் கூட்டம் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.
தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் சிலர், நகரின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட் டியைப் பார்த்து, ஏதாவது கலை நிகழ்ச்சி நடக்கிறதா? என்று அவனிடம் கேட்டார் களாம். நகர் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால், அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் அவர்களால் வாசிக்க முடிந்திருந்தால் வெள்ளைக்காரர் களின் முகம் வெளிறியிருக்கும்!
ஆமாம், அத்தனை சுவரொட்டிகளிலும் சாதி வாடை. தஞ்சையில் ஒரு சுவர்கூட சுவரொட்டியின் கபளீகரத்திலிருந்து தப்ப வில்லை. எங்கும் எதிலும் சுவரொட்டிகள். இலக்கியம், கட்டிடவியல், சமயம் வளர்த்த பூமியில் சாதிய துதிகளைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளைப் பார்க்கும் யாருக்கும் தஞ்சாவூர் சாதிச் சண்டை மைதானமாகி விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஜீரணிக்க முடியாத மாற்றம் இது!
ஓர் ஊர் இப்படிக்கூட உருமாறுமா என்று ஆயாசமாக இருக்கிறது. ராஜ ராஜனைச் சொந்தம் கொண்டாடி மட்டுமே 5 சாதிகளின் ஆட்கள், சுவரொட்டிக் களே பரங்களை நடத்தியிருந்தனர். இதனுடன் மருதுபாண்டியர்கள், முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் சுவரொட்டிகளும் சேர்ந்துகொண்டன.
அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். பாசமுன்னா உயிரக் கொடுப்போம், பகைன்னா உயிர எடுப்போம்... இன்னும் இத்யாதி இத்யாதி. தமிழ்த் திரைப்படங் களில் பஞ்ச் டயலாக் எழுதுபவர்களை மிஞ்சிவிட்டார்கள், இந்தச் சுவரொட்டிச் சிந்தனையாளர்கள்!
இவ்வாறு கூறுகிறது தமிழ் ‘இந்து’
ராஜராஜனோ அவனது முன்னோர், பின்னோர் எனப்படும் சோழ வேந்தர்களோ நாட்டுக்குச் செய்த நல்ல காரியங்கள் என்னென்னவாம்?
அவன் எங்கள் மூதாதை, எங்கள் உறவினர் எங்கள் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் தோழர்களின் சிந்தனைக்கு வைக்கப்பட வேண்டிய தகவல்கள் ஏராளம் உண்டு.
பார்ப்பனர்களைக் கட்டியழுது அவர் களின் குண்டிக் கொழுக்கக் கொட்டிக் கொடுத்தவன் அல்லாமல் அவனைப் பராக்குப் பாட என்னதான் இருக்கிறது?
இன்றைக்குச் சொந்தம் கொண்டாடு கிறார்களே - அந்த ஜாதிக்காரர்கள் உள் ளிட்ட தமிழர்களின் கல்விக் கண்களைத் திறந்தானா? கல்விக் கூடங்களை கட்டிக் கொடுத்தானா?
மானியங்களை யாருக்கு அள்ளிக் கொடுத்தான்? இறையிலி மங்கலங்கள் என்ற பெயரால் நிலபுலன்கள் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டன?
மங்கலம் மங்கலம் என்று முடிகின்ற பெயர் உள்ள கிராமங்கள் அத்தனையும் பார்ப்பனர்களுக்குத் தானங்களாகத் தாரை வார்க்கபட்டவை என்ற வரலாற்றினை அவர்கள் அறிவார்களா?
அப்படி வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு (இறையிலிமங்கலங்கள்) அளிக்கப்பட்டதுபற்றி யோசித்துப் பார்த்த துண்டா?
மூன்று வேதங்களை படித்திருந்தால் திரிவேதி என்றும், நான்கு வேதங்களைக் கற்றிருந்தால் சதுர்வேதி என்றும் பட்டங் களைக் கொடுத்துப் பார்ப்பனர்களுக்கு நிலங்களை வாரி வழங்கியது பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
அருண்மொழி தேவன் என்ற அருந்தமிழ்ப் பெயரை ராஜராஜன் என்று சமஸ்கிருதத்தில் தன் பெயரை மாற்றிக் கொண்டவனைப் பெருமைக்குரிய எங்கள் ஜாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வது எந்த வகையில் சரியானது?
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது; அதன் விளைவுதான் நாராயணசாமியாக இருந்தவர் தன் பெயரை நெடுஞ்செழியன் என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.
இராமையன் என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், கோதண்டபாணி தில்லை வில்லாளன் ஆனதும் - தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஊட்டிய தன்மான உணர்ச்சி, தமிழ் உணர்ச்சியாலும் தானே! கோயிலைக் கட்டி அங்குப் பார்ப்பனர்களை அர்ச்சகர் களாகத் திணித்தது யார்? வழிபாட்டு மொழி யான தமிழை வெளியில் தள்ளி சமஸ் கிருதத்தைக் குடியேற வைத்தவன் யார்?
ஏதோ பொத்தாம் பொதுவில் ராஜராஜ சோழனையோ, சோழர் குல ராஜ மார்த் தாண்டர்களையோ குறை பாடித் தீர்க்க வில்லை.
எதைச் சொன்னாலும் எதை எழுதி னாலும் ஆதாரத்துடன் நிலை நாட்டு என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவனின் மாணவர்களாகிய நாங்கள் அதே வழியைப் பின்பற்றக் கூடியவர்களே - இதோ சில எடுத்துக்காட்டுகள்: ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் அருமைத் தோழர்களுக்கு ஓரிரண்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ஈசான பண்டிதர், சர்வ சிவ பண்டிதர், பவன விசாரன் ஆகியோர் ராஜக் குருக்களாக வந்திருந்தனர்.
இவர்களால்தான் பெண்களைக் கோயில் களில் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறை கொண்டு வரப்பட்டது.
நான்மறை தெரிந்த பார்ப்பனரை ஆதரித்தவன் முதலாம் ராஜ ராஜசோழன். மனு நெறி நின்று அசுவமேதயாகஞ் செய்தவன் முதலாம் ராஜாதி ராஜன்; மனுவாதி பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன் மனுவினை வளர்த் தவன் கோபரகேசரி என்று குறிக்கப்பட்ட வன் அதிவீரராஜேந்திர சோழன்; மனு நெறி நின்று அஸ்வமேத யாகம் செய்தவன் என்று குறிப்பிடப்பட்டவன் முதலாம் ராஜாதி ராஜன்.
மன்னுயிர் தழைக்க மனுவாதி விளங்க என்று குறிக்கப்பட்டான் - இரண்டாம் குலோத்துங்க சோழன்; மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன், நான் மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவன் மூன்றாம் குலோத் துங்கன் என்று சோழ வேந்தர்கள்பற்றி கல்வெட்டுகள், செப்பேடுகள் கூறுகின்றன.
அவற்றில் எல்லாம் மனு நீதியோடு இணைந்த சோழ வேந்தர்கள் பாராட்டப்படுகின்றனர் என்றால் இந்தக் கேவலத்தைத் தமிழ் மொழியில் சொன்னால் தமிழுக்குக் கூட கேவலமாகும். இந்த நிலையில் இந்த சோழர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டும் மனிதர்களை(?) என்னென்று சொல்லுவது!
மதுராந்தகச் சோழன் குறித்து கரந்தைச் செப்பேடு பகர்வது என்ன? “கோயிலுக்குத் தானம் பிராமணர்களுக்குச் சலுகைகள் அளித்தல் முதலான நடைமுறைகள் தடை யில்லாமல் நடை பெற்றன;
சமூக உற்பத்தி அனைத்தும் கோயிலுக்கும் பிராமணர் களுக்கும், அரசர்களுக்கும் வரியாகவும், நிலமாகவும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. எனினும் கோயிலிலிருந்து உழைப்பைத் தவிர, வேறு எவ்விதச் சலுகைகளையும் பெறாமல் அடிமைகளாக தள்ளியே வைக்கப்பட்டிருந்தனர்.
அடிமைகள், கட்டாய உடலுழைப்பு, கோயிலுக்கான இலவச உடலுழைப்பு என்ற முறைகளில் மனித உழைப்பு சுரண்டப் பட்டது. இதனால் பெரிய ஏரிகளையும், குளங்களையும் வாய்க்கால்களையும் பிர மாண்ட கோயில்களையும், ஆடம்பரமான கோட்டைகளையும் சோழ அரசனால் உருவாக்க முடிந்தது. ஊதியமில்லாமல் உணவு மட்டும் அளித்து இலவச உழைப்பின் மூலம் இவை செய்து முடிக்கப்பட்டன.
(இலவச உணவுகூட ஏன் தெரியுமா? அவர்கள் உழைக்க வேண்டுமே - அந்த சுயநலத்துக்காகதான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்)
சோழர் காலத்தில் குடி மக்களின் மீது நானூறுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன.
.....
ஜாதிகள் வலங்கை, இடங்கை என்று பிரிந்தது சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தான்; ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகள் இதனை விவரிக்கின்றன. இவ்விரு பிரிவின ரிடையே கலகங்கள் நடந்திருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்திலும் கூட இக்கலவரங்கள் நீடித்துள்ளன. சென்னை நகர வீதிகளில் ரத்த வெள்ளம் ஓடியது என்று பிரபல வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்.
இராசேந்திர சோழன் 57 ஊர்களை 1084 வைணவப் பார்ப்பனர்களுக்கு அவரது அமைச்சராக விளங்கிய சிறீ சகநாதனோ பரமவைணவன் வேண்டுகோளுக்கிணங்க தானமாகக் கொடுத்தான் என்று கரந்தைச் செப்பேடு பகர்கிறது.
***
முதலாம் குலோத்துங்கனுடைய ஆட்சி யின் இறுதிக் காலத்தில் அனுலோம வகுப்பைச் சேர்ந்த அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்கள் பார்ப்பனரைப் போல் பூணூல் அணிந்து அக்கினிஹோத்திரம் ஔ பாசனம் ஆகியவற்றைச் செய்வதற்கு உரிமை வழங்குமாறு சோழப் பேரரசனை வேண்டினர்.
பேரரசனின் ஆணையின்படி இராசாசிரய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த சாத்திரங்களில் வல்லுநர்களான பார்ப்பனர்கள் ஒரு கூட்டம் நடத்தி, அவ் வகுப்பினர் பிரதிலோமரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கட்ட டங்கள், தேர், ஆடம்பர வண்டி முதலி யவை கட்டுவது, கோபுரங்கள் மண்டபங் களின் பணி செய்விப்பது, உருவச் சிலைகள் ஆக்குவது,
யாகத்திற்கு வேண்டிய செயல் களைச் செய்யலாம் என்றும், அவர்களுக் குச் சாத்திரப்படி பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை மாத்திரம் உண்டு என்றும், ஆனால் உபநயனம் செய்யுங்கால் மந்திரங்களன்றிச் செய்தல் வேண்டும் என்றும் அக்னி ஹோத்திரம் ஔபாசனம் முதலியவற்றைச் செய்தல் கூடாது என்றும் முடிவு கூறினர். (பேராசிரியர் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் - பக்கம் 147-148) பூணூல் அணியலாமாம்;
ஆனால் மந்திரங்களைச் சொல்லக் கூடாதாம்; காரணம் சூத்திரன் மந்திரங்களை படிக்கக் கூடாது - கேட்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமே, இதுதானே அவாளின் மனுதர்மம்.
.....
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சிதம்பரத் தின் கிழக்கெல்லையில் உள்ள கொற்றவன் குடி எனும் ஊரில் வாழ்ந்தவரான உமாபதி சிவாசாரியார் என்பவர் தில்லை மூவாயிர வரில் ஒருவர்.
அவர் எட்டு சித்தாந்த நூல் களை இயற்றினார். ஆதலின் தில்லை தீட்சதர்கள் அவரைக் குலத்தினின்றும் விலக்கி ஒதுக்கி வைத்தனர்.
அன்று தொடங்கி இன்று வரை தில்லை தீட்சதப் பார்ப்பனர்களின் திமிர் அடங்க வில்லையே! அந்தத் திமிர்க்கான விதையைப் போட்டவர்களே ‘சூத்திர சோழர்கள் தானே!’
.....
படிப்புப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே!
சோழர்கள் காலத்தில் வேதப் படிப்பு படித்தவர்கள் தனியாக சிறப்புக்குரியவராக மதிக்கப்பட்டனர். வேதம் கற்பிக்கும் கல்விச் சாலைகளுக்கு நில தானங்கள் பல அரசர்களால் கொடுக்கப்பட்டன.
சோழ மண்டலத்தில் ஐம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் ‘திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கும் பிரம்மதேயமாக வழங்கினான் என்ற செய்தி வேதங்கள் மீதும் சாத்திரங்கள் மீதும் சோழர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இதுபோல், வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு அவ்வரசன் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கங்க நாடு, குலூத நாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கி அந்நாடுகளில் நிலைபெற்று வாழு மாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது.
பல ஆயிரக்கணக்கான வேதம் வல்ல வடமொழிப் பிராமணர்கள் சோழப் பெரு வேந்தர்களால் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்கள், சதுர் வேதி மங்கலங்கள் பல்கிப் பெருகின. பிரம் மதேயமாக மட்டுமில்லாமல் பிற காரணங் களுக்காகவும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. அவை வருமாறு:
வேதம் வல்ல பிராமணர்களுக்கு - பட்டவிருத்தி.
மகாபாரதக் கதையைப் படித்துரைப்ப வர்க்கு - பாரத விருத்தி.
- அர்ச்சனை செய்பவர்களுக்கு - அர்ச்சனா போகம்.
- வேதம் படிக்கும் அபூர்விகள் போன்ற றோருக்கு உணவளிக்கும் அறச்சாலை களுக்கு - சாலா போகம்.
இது மட்டுமல்லாமல் பாஷ்ய விருத்தி, சைவாச்சாரியக் காணி என பல பெயர்களில் இறையிலி நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.
சோழர் காலத்தில் வேதக் கல்வி வளர்ப் பதற்காக வடமொழிக் கல்வி நிலையங் களும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் செயல்பட்ட வேதக் கல்வி நிலையங்களும் அங்கு படிக்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களும் வருமாறு:
காமப்புல்லூர் என்ற இடத்தில் வேதப் பயிற்சிப் பள்ளி ஒன்று இயங்கியது. இவ்வேதப் பள்ளிக்கு பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது.
ஆனியூர் என்ற இடத்தில் வேதம் மற்றும் வடமொழி இலக்கியம் கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டது. இங்கு வேதம். பாணி னியின் இலக்கணமாகிய அஷ்டத்தியாயி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது. பட்ட விருத்தியாக நிலம் பெற்ற பட்டர் வேதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாணினிவியாகரணம், அலங்காரம், மீமாம் சத்தில் 20 அதிகாரங்கள் சொல்லிக் கொடுக் கும் திறமைப் பெற்றவராக இருத்தல் வேண் டும் என்பன போன்ற விதிகள் உருவாக் கப்பட்டிருந்தன.
வேதப் பயிற்சிப் பள்ளிகள் நடை பெற்றது பற்றிய கல்வெட்டுகளின் செய்தி களில் அங்கு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றியும் ஆசிரியர்களின் எண்ணிக்கைப் பற்றியும் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள திரிபு வனையில் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. இங்கு 270 மாணவரும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். பாரதம், இராமாயணம், மனுதர்ம சாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரியரும் மாணவரும் கவலையின்றி வாழ வசதிகள் செய்து தரப்பட்டன.
திருவாவடுதுறை, பெருவேலூர் ஆகிய இடங்களில் பிராமண மாணவர்கள் படிக் கும் வடமொழிப் பள்ளிகள் செயல்பட்டன.
திருவொற்றியூர்க் கோவிலில் வட மொழி இலக்கணம் கற்பிக்க வியாகரண தான - வியாக்யாந மண்டபம் ஒன்று இருந்தது. இது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டது. பாணினி இலக்கணத்தைக் கற்பிக்கும் சிறந்த இடமாக இக்கல்லூரி விளங்கியது. இங்கு பதினான்கு நாள்களில் பதினான்கு பாராயணங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் வேதமும், சித்தாந்த நெறிகளும் கற்கும் இடமாகவும் இக்கல்லூரி விளங்கியது.
வேதக் கல்வி கற்பிக்கும் அதே வேளையில் வேதம் ஒப்புவித்தல் போட்டி களும் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் அளிக் கப்பட்டன. மேலும் பாரதம் ஓதுபவர் களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டது பற்றியும் வேத பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருட்களைப் பற்றியும் சில கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.
கி.பி. 1170ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் சைமினிய சாமவேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்முறையில் ஓதுப வருக்குத்தான் ஒரு பரிசு வழங்க வேண்டு மென்று ஒருவர் கோயிலுக்கு கொடை யளித்துள்ள செய்தியை அறிய முடிகின்றது.
செங்கல்பட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் திருமுக்கூடல் என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் விரிவான கல்வெட்டு உள்ளது. இதில் இடம் பெறும் செய்தியின் மூலம் இக்கோயிலில் ஒரு கடிகை இயங்கியதை அறிய முடிகிறது. இதனை நிறுவியவன் வீரராசேந்திரச் சோழனாவான்.
இங்கு ரிக், யஜுர் ஆகிய இரண்டு வேதங்களும் இலக்கணமும் கற்பிக்கப்பட்டன. இங்கு மூன்று ஆசிரி யர்கள் பணியாற்றினர். ஒவ்வொரு வேதத் தையும் படிப்பதற்கு 10 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது.
இலக்கணம் கற்க 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப் பட்டனர். இக்கல்லூரியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும், தலைமுழுக்கு, மற்றும் விளக்கு களுக்கு எண்ணெயும் அளிக்கப்பட்டது.
மேலும் ஊரிலுள்ள மக்களுள் கல்வி பயில முடியாதவர்கள் கேள்வியறிவு பெறும் வண்ணம் சில நூல்கள் கோயிலில் இருந்த வியாக்கியான மண்டபத்தில் படித்து விளக் கப்பட்டன. கல்வி பயிலும் மாணவர்களுக் கும், ஊரிலுள்ளோர்க்கும் மருத்துவம் செய்வதற்கென்று ஓர் ஆதுலர் சாலையும் (மருத்துவமனை) இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூரம் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று அமைந் துள்ளது. இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் மகாபாரதம் படிக்க கொடையளித்தது குறித்து கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செந்தலை என்னும் ஊரிலுள்ள சுந்தரேசுவரர் கோவி லில் மகாபாரதம் படிப்பதற்காக கொடை வழங்கப் பெற்றுள்ள செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
(தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி. இளங்கோ பக்கம் 104-107)
பார்ப்பனர் ஆதிக்கம்
“சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களின் கருவ றைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான். சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின.
ஆனால் அக் கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந் திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு.
எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவை யாவும், எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்தும் வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர்.
வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக் கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத் தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக்கூறும் மெய்க் கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும் புராணங் களும் எழுந்தன.
(கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் மக்களும், பண்பாடும் பக்கம் - 300)
ஓ, ஜாதி அபிமானிகளே ராஜராஜன் - சோழ அரசர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டி சுவரொட்டி ஒட்டும் சொந்தங் களே- இப்பொழுது சொல்லுங்கள்! எங்கள் உறவு, எங்கள் ஜாதி என்று பெருமையோடு அவர்களைச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?
கோயில்களுக்குள் தமிழர்களை உள்ளே விடாது. பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக நியமித்த ராஜராஜ சோழனின் சிலையைப் பார்த்தீர்களா? மத்திய அரசின் தொல் பொருள்துறை அதனை அனுமதிக்க வில்லையே! ராஜராஜ சோழன் தமிழர்களை வெளியே நிறுத்தியதால் ராஜராஜனின் சிலையும் வெளியில் நிற்கிறதோ!
-விடுதலை,7.11.15