செவ்வாய், 17 மே, 2016

வைதீகப் பிராமணர்களே விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள்!


யாகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பிராமணர்கள். அதனா லேயே சமீபத்தில் காஞ்சீபுரத்தில் பசுபதியாகம் 3000 ரூபாய் செலவில் செய்யப்பட்டதைக் கேட்டு சகிக்க முடியாத ஆனந்தம் அடைந்தேன்.
யாகத்தில் கொல்லப்பட்ட அதுவும், சித்திரவதையோடு நசுக்கிப் பிசைந்து கொல்லப்பட்ட 8 ஆடுகளும் சுகமாக மோட்சலோகத்தில்  வாழ்ந்திருக்கும், ஆடுகள் செய்த புண்ணி யமே புண்ணியம்! பிராமணர்களின் கருணையே கருணை! இதற்காக பொருளுதவி செய்தவர்களின் ஈகையே ஈகை! நிற்க, பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதென்ன வென்றால் இக்காலத்தில் நமது நாட்டில் விதவைகள் அதிகமாய் விட்டார்கள்.
அவர்களுக்கு மறு விவாகம் செய்ய வேண்டும் என்று சுயமரியாதைச் சங்கத்தார் சொன்னாலும், வைதீகப் பிராமணர்கள் வேதத்திற்கு விரோதம் என்று தடுக்கிறார்கள். விதவைகள் இப்போது உலகத்தில் ஏராளமாக இருப்பதால் அவர்களின் நலத்தின் பொருட்டு கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தில் விதித்துள்ளபடி பவுண்டரீக யாகத்தைச் செய்து வைப்பார்களானால், விதவைகள் எவ்வளவோ சந்தோஷ மடைவார்கள்.
புண்ணியமும் உண்டு. சாஸ்திரத்திற்கும் சம்மதம். ஆகையால் காருண்ய புருஷர்களாகிய பிராமணோத் தமர்களே! பூதேவர்கள் என்னும் புண்ணியவான்களே! இந்த பவுண்டரீக யாகத்தைச் செய்து உலகம் ஷேமம் அடையும்படிச் செய்யுங்கள்.
இங்கு யாகத்தையும் வேகத்தையும் ஒப்புக்கொள்ளும் விதவைகளை மாத்திரம் குறிப்பிட்டது ஏனென்றால், பார்ப்பனரல்லாதார்களுக்கு யாகத்தில் நம்பிக்கை கிடையாது. இதுவரையில் பார்ப்பனரல்லாதவர்களில் ஒருவராவது யாகத்தைச் செய்ததில்லை. வேதங்களை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட வேதத்தில் சொல்லப்பட்ட இந்த யாகங்களை ஒப்புக் கொள்வதில்லை. ஆகையால் யாகம் என்னும் மகா புண்ணிய காரியம் மனிதர்களில் உயர்ந்தவர்களாகிய பிராமணர்களுக்குத் தான் உரியது. ஆகவே பவுண்டரீக யாகமும் உரியதாகும்.
இதுபற்றித்தான் அதை நம்பும் விதவைகளின் ஷேமத்தைக் கோரி இந்த யாகத்தைச் செய்யும்படி வைதீக பிராமணர்களை வணக்க மாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சமயம் இக்காலத்தில் பவுண்டரீக யாகம் ஒப்புக்கொள்ள முடியா தென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யவாவது ஒப்புக் கொள்ள வேண்டும். ஃ
இதன் மூலம் நான் கேட்டதென்னவென்றால் விதவை களுக்கு மறுமணம் செய்யலாம் என்பதையாகிலும் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது பவுண்டரீக யாகத்தையாகிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்காக நடத்தி வைக்க வேண்டும் என்பதேயாகும். இரண்டில் ஏதாவாதொன்றை செய்யுங்கள்.
(குடிஅரசு - 1929)
-விடுதலை,22.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக