(சித்தாக்காடு கே.ராமையா)
22.9.1929 குடிஅரசிலிருந்து...
22.9.1929 குடிஅரசிலிருந்து...
சிவ மதஸ்தர் சிவனையும், விஷ்ணு மதஸ்தர் விஷ்ணு வையும், ஸ்மார்த்தர்கள் பிரம்மாவையும் வழிபடுவதின் மூலம் ஏற்படும் சமயக்குறிச் சண்டைகள் நீதிமன்றம் வரை நிகழ்ந்தாலும், மேற்படி மூன்று கடவுளின் பெயரால் கொள் ளை கொண்டு வரும் ஒரு சாரார், தங்கள் சுயநலத்திற்கு ஆதரவாகவும், சண்டையிட்டுக் கொள்ளுகிறவர்களுக்குச் சாந்தியாகவும் இம்மூன்று பெயரைக்கொண்ட கடவுள்களும் ஒருவரே என்று தத்துவார்த்தம் புரித்துகொண்டு மக்களை பாழ்படுத்தி வருகிறார்கள்.
என்ன தத்துவார்த்ததும் புரிந்தாலும் திரிமூர்த்தி என்ற பெயர் பாமர மக்களை ஏமாற்ற படித்த கூட்டத்தார் தங்கள் தங்கள் மனோபாவப்படியும், கொள்கைப் படியும் எழுதி விளம்பரப் படுத்திக்கொண்ட புரட்டு என்பதை அடியில் வரும் விவரங்கள் ருசிப்பிக்கும்.
வராக புராணத்தில் ஆண் திரிமூர்த்திகளிலிருந்து ஒரு சக்தியுண்டாகி மூன்று பகுதிப்பட்டு லட்சுமி, சரஸ்வதி, காளியென்ற பெண் திரிமூர்த்திகளுண்டானார்கள் என்று வரையப்பட்டிருக்கிறது. இப்புராணத்திற்கு நேர்முரணாய் மார்க்கண்ட புராணத்தில் மேற்படி அம்மன் திரிமூர்த்தி களிலிருந்து சாமி திரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு,
சிவனுற்பத்தியானதாக எழுதப்பட்டிருக்கிறது. லிங்க புராணத் தில் சிவனுடைய இடது பக்கத்திலிருந்து விஷ்ணுவும், லட்சுமியும், வலது பக்கத்திலிருந்து பிரம்மாவும், சரஸ்வதியும் தோன்றினார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே லிங்க புராணத்தில் பிரிதோரிடத்தில் சிருஷ்டிப்பு கிரியை நடத்த சக்தியில்லாமல் பிரம்மா அழுத கண்ணீரிலிருந்து சிவனுற் பத்தியாகி அவ்விருவர்களுமாக கிருஷ்டிப்பு கிரியை நடத்தினார்களென்றும் புகல்கின்றது. மச்சபுராணத்தில் பிரம்மாவிலிருந்தே சிவனுற்பத்தியானதாக அறியக் கிடக் கின்றது.
எல்லா வற்றையும் பொய்மைப்படுத்தகூடிய வகை யில், நாரத புராணத்தில், நாராயணனுடைய வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் விஷ்ணுவும், நடுவில் சிவனும் தோன்றினதாக புகல்கின்றது. நாராயணன் என்ற பெயரே பிரம்மாவுக்கு எற்பட்ட காரணப் பெயர் என்பதாக மனுஸ் மிருதி அ. 1. 10ல் புகல்கின்றது. பிரம்மா ஜலத்தில் அசைவாடிக் கொண்டிருந்ததால், (நாரம் - ஜலம், அயனம் - அசைவாடிக் கொண்டிருந்ததால்) நாராயணமென்ற பெயர் உண்டாயிற்றாம்! விஷ்ணுவுக்கும் நாராயணன் என்ற பெயரிருப்பதாக பல புத்தகங்கள் வெளியிடுகின்றன.
மேலே லிங்க புராணீகர் சொல்லியபடி சிவனுடைய இடது பக்கத்தில் தோன்றிய லட்சுமியும், மகாபாரதத்தில் அமுதம் கடையும் தருணத்தில் அமுதம் பிறப்பதற்கு முன் தோன்றிய சங்க நிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, அகலிகை, இந்திராணி, அறுபதினாயிரம் ரம்பாஸ்திரீகள், காமதேனு, கற்பகவிருட்சம், அயிராவதம்,
வெள்ளைக் குதிரை முதலானவர்களோடு தோன்றிய லட்சுமியும் ஒன்றா? வேறா? என்பதை ஆஸ்திகர்கள் தான் சொல்ல வேண்டும். அண்ணாமலை புராணத்தில், சிவனிடத்தில் குடிலை என்னும் சக்தி தோன்றி அதில் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், முதலிய பஞ்சகிருத்தியங்களுக்குரியவர்கள் தோன்றினார் களாம்! அப்படியானால் சிவனும், ருத்திரனும் தனித்தனி தெய்வங்களாகிறதே! விஷ்ணுவை தக்கனுடைய தாயென்றும்,
மகளென்றும் சொல்லப்படுகிற அதிதியின் குமாரரிலொரு வராக சில புத்தகங்கள் வெளியிடுகின்றன. விஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து (தொப்பிளில் தோன்றிய தாமரைக் கொடியிலிருத்து) பிரம்மா தோன்றினதாக மகாபாரதம் புகல்கின்றது. பிரம்மாவை சிருஷ்டிகர்த்தாலென்று சொல் வதற்கு முரணாக, பூர்வீக இருக்கு, அதர்வன வேதங்களில் சிருஷ்டி கர்த்தாவுக்கு விஸ் வகர்மா, இரண்யகர்ப, பிரஜாபதி என்ற பெயர்களிடப் பட்டிக்கிறதே தவிர பிரம்மா என்கிற வார்த்தையே வேதங்களிலும், பிராமாணங்களிலும் காணப்பட வில்லை.
மேலும் இருக்கு வேதத்தின் நர்ககுந்த வியாக்கி யானத்தில் அக்கினி, இந்திரன், சூரியன் என்ற மூவரை தேவர்களாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தேவர்களுள் முக்கிஸ்தர் ஜாப்தாவில் விஷ்ணுவின் பெயரைக் காணோம். நாலு வேதத்திலும் பயங்கரமான ஊளை சப்தமிடுகிற ருத்திர னுடைய பெயர் வருகிறதேயொழிய சிவன் என்ற வார்தையே கிடையாது. பரமசிவனுக்கு விநாயகர் சிரேஷ்ட புத்திரர் என்பது உலகமறிந்த ரகசியமாய் இருக்கிறது.
பிள்ளையார் புராணத்தில் விக்கிர துண்ட விநாயகருக்கு இராசதம், தாமதம், சாத்வீதம் என்ற முக்குணங்களிருப்பதாகவும், இராட்சத குணத்தில் பிரம்மாவும், தாமதகுணத்தில் விஷ்ணுவும், சாத்வீக குணத்தில் சிவனும் தோன்றினதாக அறியக்கிடக் கின்றது. மற்றொரு புராணத்தில் ஆதி சக்தியிலிருந்து திரிமூர்த்திகளும் தோன்றினார்கள்யென்றும், அப்பால் இந்த ஆதிசக்தி இம் மூவர்களையும் புருஷர்களாக வைத்துக் கொண்டாளென்றும் தெரியவருகிறது.
இத்திரிமூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணு 10 அவதார மெடுத்ததாக புகலும் பல புத்தகங்களுக்கு முரணாக, பாகவத புராணத்தில் 21 என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவனுக்கு 5 தலை இருக்கும்போது 10 கண்கள் இருக்கவேண்டியதை மறந்து முக்கண்ணன் என்று சொல்வதெப்படியோ! இராமாயணக் கதையில் சிவனை விஷ்ணுவுக்கு அடுத்த ஸ்தானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சில இடத்தில் விஷ்ணு தான் பெரியவரென்றும், சில இடத்தில் சிவன்தான் பெரிவன்ரென்றும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிக்கு சிவனே மூலகர்த்தா என்று புகலும்,
லிங்க புராணம்-அண்ணாமலை புராணம் போன்ற சிவபுராணங்களுக்கு புறம்பாய் மகாபாரதம் ஆதிபர்வம் பிரபஞ்ச சிருஷ்டி சருக்கத்தில் பிரம்மாவே சகலத்தையும் சிருஷ்டித்ததாக புகலப்பட்டிருக்கிறது. மானிடர் களைப்போல் திரிமூர்த்தி களாகிய தெய்வங்களுக்கும், நட்சத்திரன்கள் சொல்லப் பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு ரோகிணியும், விஷ்ணுவுக்கு திருவோணமும், சிவனுக்கு திருவாதிரையும் சென்ம நட்சத்திரமாமே!
சிவனுக்கு பிரமஹத்தி சனியன் பிடித்து 12 வருஷம் சுடலை சுற்றி திரிந்து பலவித கோரணிகளும் செய்தாராமே! திரிமூர்த்திகளும் சேர்ந்து செய்த துர்கிர்த்தியத்தால் அங சூயையின் சாபமடைந்து சிறிய பாலகர்களாய் அவளண் டையில் அநேக காலம் தங்களுடைய சிருஷ்டி திதி, சங்காரமென்னும் தொழிலை இழந்து விட்டு இருந்ததும், கண்டகி தாசியால் இம்மூர்த்திகள் இரண்ய கர்ப்பம் சாளக்கிராமம் சிவனாகமென்ற கல்லுகளாக சபிக்கப்பட்டது,
நாகவல்லியாலும் கல்லாக சபிக்கப்பட்டதும், அரிகரன் பிறந்தது போன்ற பல ஆபாசக் கதைகள், புராணங்களில் காணப்படுகின்றன. அக்கதைகளில் அடங்கி இருக்கும் வார்த்தைகளை, இக்காலத்திய ஒரு இழிதகைமை யுடையவன்கூட வாயில் வைத்துப் போசவே மாட்டான். தமிழ்நாட்டு சகோதரர்களே! மேலே எழுதப்பட்டிருப்பவை எல்லாம் தெய்வீகத் தன்மை பொருந்திய புராண இதிகாசங் களிலிருப்பவைகளே தவிர எங்களால் எழுதப்பட்டதல்ல.
இத்தியாதி காரணங்களால் திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணீகர்களுடைய புரட்டுகளுக்குக் கீழ் சிருஷ்டிக்கப் பட்டதென்பது தெற்றென விளங்கவில்லையா? திரிமூர்த்திகள் என்ற பெயருடன் ஊர் தவறாது கோயில்களிலும், வீடுகளிலும், உலவிக்கொண்டு, தமிழர்களுடைய இரத்தத்தை உறிஞ்சி அடிமைக்கு ஆளாகிவிட்டதென்பதற்குக் கோயில் கட்டிய அரசர்கள் அரசுரிமை இழந்ததும்,
திரிமூர்த்திகளுக்கு புறம்பாய் உள்ள அன்னிய மதங்கள் வலுவடைந்து வருவதும், வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் தினம் தினம் ஆயிரக் கணக்கான மக்கள் அன்னியநாடு சென்று வெள்ளைத் தோட்டத்தில் சாவதும், திரிமூர்த்திகள் அவதரித்திருக்கும் இந்நாட்டில் 100க்கு 75 பேர்கள் பிச்சை எடுப்பதுமே போதிய சான்றாகும். திரிமூர்த்திகள் என்ற பெயரையே ஜனசமூகம் அறியும்படி சுயநலங்கொண்ட ஒரு சாரார் எழுதிய புரட்டு புராணங்கள்,
நாட்டில் மலிந்து கிடப்பதின் உட்கருத்தை கல்வி நாகரீகமடைந்த இக்காலத்தியவர்கள் கூட வெளியிடாமல், பாமரமக்கள் திரிமூர்த்திகளின் பெயரால் அறியாமை காரண மாக செலவுசெய்யும் லட்சக்கணக்கான பொருளையும், பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு கெட்டுப்போன பண் டைய ராஜாக்களின் அறியாமை காரணமாக எழுதி வைக்கப் பட்ட சர்வமான்யங்களையும், தன்நலத்துக்கு உபயோகப் படுத்தக் கருதி மனதறிந்த வஞ்சகம் செய்து வருகிறார்கள்.
கஷ்டப்படும் இளைத்த கூட்டத்தாரை, வலுத்த பணக்கார, படித்த கூட்டத்தார் அழுத்துவதற்கு இத்திரிமூர்த்திகள் என்ற புரட்டு புராணங்களையும் கருவியாக உபயோகப்படுத்தி வரும் சூழ்ச்சியை நன்கறிந்த ஈரோடு ராமசாமிப் பெரியார் குடி அரசின் மூலம் தனக்குத்தானே நாயகனாக இருக்க வேண்டுமென்றும் புராணக்கட்டுக்கும், கோயில் கட்டுக்கும் தலை வணங்காமல் தன் மதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டு மென்று ஜனசமூகத்திற் கெடுத்துரைக்கிறார். அதற்காகவே சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்திருக்கிறர்.
திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணப்புரட்டு என்ப தையும் பார்ப்பனர்கள் பிழைக்கச்செய்த சூழ்ச்சி என்பதையும், அறிந்து கொள்வதற்கு மேலே எழுதப்பட்டிருப்பவைகளைக் கூர்ந்து கவனித்து சுயமரியாதை இயக்கத்திற்குத் தக்க பேராதரவு கொடுத்து பிறநாடுகளை போல் ஆக வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
-விடுதலை,11.3.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக