வியாழன், 4 ஏப்ரல், 2019

மாசி மகம் எந்தெந்த கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது?


இல்லாத இந்து மதத்தில் ஆண்டு முழுவ தும் மதப் பண்டிகைகள், மத விழாக்கள், மத சடங்குகளுக்கு பஞ்சமே கிடையாது.

தமிழ்ப் பெயர்களே இல்லாத ஆண்டை தமிழ் ஆண்டு என்று நம்பவைத்து, சித்திரை முதல் பங்குனி வரை பக்தியின் பெயரால் மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக கடவுள், மதம், பக்தியின் பெயரால் கற்பனையான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு, இல்லாத ஒன்றை இருப்பதுபோல் கூறிக்கொண்டு, எப்படியாவது மக்களை ஏமாளிகளாக ஆக்கிவிட்டு, அம்மக்களிடம் பார்ப்பனர் களின் சுரண்டல் தொடர்ந்து கொண்டிருக் கிறது.

பொருளாதார ரீதியில் சுரண்டல்கள் ஒரு பக்கம் என்றால், தப்பித்தவறியும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்துவிடக்கூடாது என்ப தற்காக, தொடர்ச்சியாக மூடத்தனங்களில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்ற அவல நிலையில் தமிழர்களின் வாழ்வு பாழாக் கப்பட்டு வருகிறது.

மாசி மாத பவுர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாள் மாசி மகம் எனப்படுகிறதாம். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டும் சிறப்புக்குரியது என்றும், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர் களாக புவி ஆள்வார்கள் என்றும், மிகுந்த சக் தியும் திறனும் படைத்தவர்களாக இருப்பார் கள் என்றும் மூடத்தனங்கள் விதைக்கப்பட்டு உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப கோணத்தில் மகாமகம்  நடைபெறுவதைப் போல், வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் அழைக்கப்படுகிறதாம்.

மாசி மக திருநாளில் அனைத்துக் கோயில் களிலும், தீர்த்தவாரி நடைபெறுகிறதாம். இந்நாளில் சிவன் வருணனுக்கு சாப விமோசனம் அளித்தானாம். அதனால் சிவனை வழிபடலாமாம்.

சிவனின் மனைவி பார்வதி இதே நாளில்தான் தட்சனின் மகள் தாட்சாயணி யாக அவதரித்ததாகவும், அதனாலேயே பெண்களுக்குரிய விரதநாளாகவும், சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகவும் இருக்கிறதாம்.

தந்தைக்கே மகன் முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் இதேநாள்தானாம். இதனால் முருகனை வழிபடலாமாம்.

பெருமாள் வராக அவதாரம் (பன்றி) எடுத்து பாதாளத்தில் இருந்த பூமியை மீட்டு  வெளிக்கொணர்ந்த நாளும் இதே நாள் தானாம். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளாம்.

இவ்வாறு இந்தநாள் அனைத்துக் கடவுளர்களையும் வழிபடுவதற்கான நாளாக உள்ளதாம். இந்நாள் தோஷங்களை நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப் படுகிறதாம்.

இந்நாளில் புண்ணிய தலங்களை தரி சிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது அய்தீகம் என்றும், நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும் என்றும் மாசிமகத்தில் விரதங்கள் இருந்து பயன் பெறுவதற்காக பக்தர்களை அழைக்கிறார் களாம். இதுதான் ஆரியர்களின் சூழ்ச்சி வலை. மோட்சம், வைகுந்த பதவிகள், சொர்க் கம் உள்ளிட்டவற்றுடன், வேண்டியது கிட்டும் என்று பேராசையை புகுத்தி, மக்களிடம் மூடத்தனங்களைத் திணித்து, அவர்களின் அறியாமையையே மூலதன மாகக் கொண்டு சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள உழைக்கும் மக்களுக்கு, பார்ப்பனர்களின் நயவஞ்சகத்தை உணர் வதற்கு உரிய வாய்ப்புகள் இன்றி, அறி யாமை இருளில் தள்ளப்பட்டு வருகின் றனர்.

கடவுள், மதம், பழக்க வழக்கம் என்று கூறிவிட்டால், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளுக்கு இடமே கிடை யாதே!. கேள்வியைக் கேட்பதற்கு தயாராகி விட்டான் என்றால், நரகம், மறுபிறப்பு உள்ளிட்டவற்றைக் கூறி பயபக்தியின் பெயரால் அடக்கிவிடுவதும், அதையும் மீறி கேள்வி கேட்டால் நாத்திகன் என்று தூற்றுவதுமாக ஆரியர்கள் அப்பாவி மக்கள்மீது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற வழிபாடுகளை செய்ததன் விளைவு என்ன என்று சிந்தித்துப்பார்த்தால், அதனால் பயனேதும் இல்லை என்பதை உணர்ந்து, தொடர்ந்து வரும் காலங்களில் இயல்பாக விட்டுவிடுவார்கள். ஆனால், அவர்களை சிந்திக்க விடாமல் மூடத்தனங்களை தொடர்ச்சியாக திட்டமிட்டு பரப்பிவரு வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதே ஆரியம். கல்வி பெற்ற தமிழர்களையும் ஆரியம் விட்டுவைக்காமல், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக விடாமல் மூடத்தனங்களைத் திணித்து வருகிறது.

ஆரியப்புரட்டுகளைத் தவிடு பொடி யாக்கியவர்  தந்தைபெரியார்தான். திரா விடர் கழகம்தான்.

கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடைத்தது தந்தை பெரியாரின் தொண் டால்தான் என்பதை உணர்ந்திட்டால் ஆரியத்தின் அடிமைத்தளைகளிலிருந்து விடுபடலாம். ஆரியத்திடம் சிக்கி சீரழிந்து வரும் அப்பாவி மக்கள் உணர்வார்களா? விழிப் பார்களா?

- விடுதலை ஞாயிறு மலர், 9. 3 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக