வியாழன், 25 ஏப்ரல், 2019

புதன் கிரகம்

புதன்



நமது புதன் கிரகம் எவ்வாறு உருவாகியது என்பதை அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகின்றது. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
இந்தக் கதை தேவி பாகவத புராணத்தில் முதல் ஸ்கந்தத்தில் 11வது அத்தியாயத்தில் "புதனுற்பத்தி" எனும் இடத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான புராண கதைகளில் கூறப்பட்டுள்ள பாத்திரங்களைத்தான் கடவுள் என்றுநம்பி மக்கள் இன்னமும் முட்டாள்களாக இருந்துகொண்டுள்ளார்கள். அவர்களுக்காகவே அவர்கள் புராணம் எப்படிப்பட்டது என்பது தெரியப்படுத்தப்படுகின்றது.
வாருங்கள் ஆரிய புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதியினுடைய மனைவி தாரை என்பவள் சந்திரனுடைய (நமது துணைக்கோள்தான்) வீட்டிற்கு சென்றாள். அவன் இவளது அழகைக்கண்டு காமமுற்றான். இவளும் அவனது முக அழகைக்கண்டு தன் அறிவிழந்தாள். இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் அதிக மோகங்கொண்டு கிரீடித்து கொண்டிருந்தனர்.
தேவகுரு, சந்திரனிடம் சென்ற தனது மனைவி தாரை நெடுநாளாகியும் வராமையால் மிகவும் கவலையுற்று தனது மாணாக்கன் ஒருவனை சந்திரன் வீட்டிற்கு சென்று தாரையை அழைத்துவருமாறு கூறினார். அவன் சந்திரன் வீட்டிற்கு சென்று அம்மணி உம்மை உம்முடைய கணவராகிய எனது ஆசிரியர் அழைத்துவரும்படி கூறினார். வாருங்கள் என்றான். அவள் அச்சொல்லை ஏதும் கேளாதவள்போல் சும்மாவிருக்க, அக்குறிப்புணர்ந்து திரும்பிவந்த மாணாக்கன் குருவிடம்சென்று சுவாமி! அந்தம்மாள் வருவதாக தெரியவில்லை என்றான். அதைக்கேட்டவுடன் வேறு சில சீடர்களை ஒருவர்பின் ஒருவராக அனுப்பியும் அவள் வராமலேயிருக்கக்கண்டு இவள் சந்திரன் வசமுற்றிருக்கிறாள், இனி நாமே செல்வோமென்று அதிக கோபம்கொண்டு சந்திரனிடம் சென்று, ஓ சந்திரா! என்ன காரியம் செய்தாய்? என் மனைவியை இதுவரை என்னிடம் அனுப்பாத காரணம் என்ன? நான் உனக்கு குருவல்லவா? குருபத்தினியாகிய அவள் உனக்கு தாயல்லவா? உன்னைப்பார்த்தால் அவளை உனக்கு தாயாக எண்ணியிருப்பதாக தெரியவில்லை; ஆகையால் அவளால் நீ அனுபவிக்கப்பட்டாயா? உன்னால் அவள் அனுபவிக்கப்பட்டாளா? ஏ மூடா பிரம்மகத்தி செய்தவனும் (பிராமணனை கொன்றால் வரும் தோசம்) பொன் திருடினவனும் மதுபானம் செய்தவனும் குருமனைவியை புணர்ந்தவனுமாகிய இந்நால்வரும் கொடும் பாவிகள் என்றும், இவர்களை நேசிக்கிறவன் ஐந்தாவது பெரும்பாவி என்றும் தரும நூல்களில் கூறப்பட்டுள்ளதல்லவா? இந்த தாரை உன்னால் அனுபவிக்கப் பட்டிருப்பாளாயின் நீ பஞ்ச மா பாதகர்களில் ஒருவனாயிற்றே? இனி நீ தேவர்களிடம் செல்வதற்கு யோக்கியனில்லை. இப்போதாயினும் எனது மனைவியை விட்டுவிடு; நான் அழைத்துப் போகிறேன். இல்லையாகில் குருவினால் ஏற்படும் பழியை சிவபெருமானாலும் நீக்கமுடியாது என்கிறார்.
இதைக்கேட்ட சந்திரன் கூறுகின்றான். தேவகுருவே! மனைவியை பிரிந்திருக்கும் காரணத்தினால் உமக்கு அளவு கடந்த கோபம் வருகின்றது. கோபமுடைய அந்தணரை பூசிக்கக்கூடாது என்றும், கோபமில்லாத அந்தணரை விதிப்படி பூசிக்கவேண்டும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறதே. அதை நீர் அறியாமல் போனதென்ன? இனி நீர் அதிகமாக பேசவேண்டாம். உமது மனைவி உம்மிடம்வர இஷ்டமிருந்தால் இத்தனை சீடர்களும் நீரும் இங்கு வரவேண்டுமா? இதைத் தெரிந்துகொள்ளும் அறிவே உமக்கில்லையா? அவளுக்கு எப்போது இஷ்டமோ அப்போது உம்மிடம் வந்து சேருவாள். சிலவேளை வராமலும் இவ்விடத்திலேயே தங்கி இருந்தாலும் இருப்பாள். ஏனெனில் பெரும்பாலும் அவளுக்கு இங்கேயே சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. அதற்கு இடையூறு செய்து நீர் கொடுக்கப்போகின்ற சுகம் என்ன? இதனை அறியாது இருக்கின்றீரே. இப்போது நான் சொல்லும் புத்தியைக் கேட்டு போவீரானால் அவள் சில காலஞ்சென்று தானாய் வந்து சேருவாள். அவள் என்னுடன் இருப்பதால் அவளுக்கு வரும் தோசமென்ன? நீர் முன்னொரு காலத்தில் இவ்விசயத்தைப்பற்றி "விபச்சாரம் செய்கின்ற பெண்ணும் வேதவிதிப்படி வாழாத அந்தணனும் தூற்றப்படமாட்டார்கள்" என்று ஒரு தர்ம சாஸ்திரம் ஏற்படுத்தி இருக்கின்றீரே. அது உமக்கில்லையோ? ஊருக்குதானா சொன்னது? நன்றாக இருக்கின்றது. இவ்வாறு சந்திரன் கூறியதும் மிக வருத்தம் அடைந்து திரும்பி தனது வீட்டிற்கு வந்தார்.
சில காலம் சென்றபின் மீண்டும் சந்திரனின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த காவலாளி அவரை உள்ளே போகவிடாமல் தடுக்க, மிக கோபம்கொண்டு சந்திரனிக்கு தெரியப்படுத்த கூறினார். காவலாளி சந்திரனுக்கு தெரியப்படுத்தியும் சந்திரன் இவரை சந்திக்க வராததை கண்டு கோபமுற்று இவனுக்கு பலமான தண்டனை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, அவன் வாசல்படியில் நின்று பெரும் கூச்சலிட்டு, அடே பாவி, தெருவில் நான் நின்றுகொண்டிருக்க நீ வீட்டில் என் மனைவியோடு தூங்கிக்கொண்டிருக்கின்றாயே, அவளை சீக்கிரம் விட்டுவிடு, இல்லையானால் கடுமையான சாபத்தினால் உன்னை சாம்பல் ஆக்கிவிடுவேன். இது உண்மை. வீணாய் கெடாதே என்றார்.
குரு வசனத்தைக்கேட்ட சந்திரன் கோபாவேசம்கொண்டு வெளியே வந்து நீரென்ன அதிக வார்த்தைகளை பேசுகின்றீரே? நீரென்ன மன்மதனோ? அழகற்ற உமக்கு அழகான தாரை எப்படி தகுதியாவாள்? உமக்கேற்றபடி அழகற்ற ஒரு பெண்ணை சுவாதீனப்படுத்திக்கொண்டு இனி சுகமாயிரும். பிச்சை எடுத்து உண்ணும் வீட்டில் இவள் கால் வைக்கவும் கூடுமா? பெண்களுக்கு தமக்கு சமமான அழகுடைய புருஷனிடத்திலேயே அன்புண்டாகுமென்று சொல்லப்பட்டிருக்கின்ற காமசாஸ்திரத்தை நீர் அறிந்தபோதிலும், நீர் ஏன் சாஸ்திரத்திற்கு முரணாக செய்கின்றீர்? வந்த வழியைப் பார்த்து செல்லும். என் அன்புக்கன்பான தாரையை விடமாட்டேன். நீர் இப்போது காமவெறிஏறி கொடுக்கும் சாபம் என்னை ஒன்றும் செய்யாது. உமது மனைவியை தரமாட்டேன். உம்மாலானதை பார்த்துக்கொள்ளும் என்றான்.
இதன்பிறகு தேவகுரு தேவர்களின் அரசன் இந்திரனிடம் முறையிட சென்றார்.
இவர் வரவைக்கண்ட இந்திரன் அவருக்குரிய மரியாதைகளை செய்து, உங்களுக்கு என்ன துக்கம் உண்டாகிற்று என்று வினவுகின்றான். அவரும் நடந்தவற்றை கூறி எனக்கு நீதான் ஏதாவது செய்யவேண்டும் என்கிறார். அதற்கு இந்திரன்; நீர் வருத்தப்படவேண்டாம். இப்பவே சந்திரனிடம் தூதுவனை அனுப்புகின்றேன். நான் செல்லாது தூதுவன் சென்றால் காமாந்தகனான சந்திரன் தாரையை அனுப்பமாட்டான். இருந்தாலும் அனுப்புகின்றேன். அவன் அனுப்பாவிட்டால் படைகளோடு சென்று போரிட்டாவது உங்கள் காரியத்தை நிறைவேற்றுகிறேன் என்று சமாதானம் கூறி ஒரு தூதுவனை அனுப்புகின்றான்.
தூதுவன் சந்திரனிடம் சென்று கூறுகின்றான்; நீ எல்லா நீதிகளையும் அறிந்தவன். நீ அறியாத தர்மம் ஒன்றில்லை. உனது தந்தையோ அத்திரிமகரிஷி. அவர் பெயரை சொன்னாலே உலகமெல்லாம் ஆச்சரியமடையும். அவரின் புகழுக்கு கெடுதிவரும்படி இவ்வாறு நடக்கலாமா? பசு பறவைகள்கூட தமது இணையை காப்பாற்றிக்கொள்ள சோம்பலின்றி ஜாக்கிரதையாக இருக்கின்றன. எல்லா அறிவோடும்கூடிய மனிதர் தமது மனைவியை பிறருக்கு கொடுத்துவிட்டு தனியே உறங்குவார்களா? இப்போது உன் மனைவியை பிறர் அனுபவிக்க நீ மனம் ஒப்புவாயா? தன்னைப்போல் பிறரையும் பார்ப்பதுதானே நீதி? உன் மனைவியை காக்க நீ எப்படி முயலுகின்றாயோ அப்படியே பிறரும் இருப்பார் என்று நீ ஏன் உணரவில்லை? உனக்கு தஷனால் கொடுக்கப்பட்ட மனைவியர் இருபத்து ஒருவர் இருக்க குருவின் மனைவியை ஏன் ஆசைப்பட்டாய்? மேனகை முதலிய தாசிகள் பலர் இருக்கின்றார்களே, அவர்களை இஸ்டப்படி அனுபவிக்கலாகாதா? நீ செய்வது அநீதி என்று நான் சொல்லவேண்டுமா?
வீணாய் கெடாதே. தாரையை அனுப்பிவிடு. இல்லாவிட்டால் யுத்தம் மூழும் என்றான்.
இதைக்கேட்ட சந்திரன் கோபம்கொண்டு இந்திரனிடம் கூறச்சொல்லி கூறுகின்றான்; ஓ இந்திரா! உலகத்தில் அநேகர் பிறருக்கு உபதேசம் செய்வதில் மட்டும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அதுபோல் தாங்கள் நடப்பதில்லை. பிறர் குற்றம்கூற புகுந்தவர் அதற்குமுன் தங்கள் குற்றங்களை ஆலோசிக்கவேண்டியது அவசியம். எனக்கு அறிவுரை கூறவந்தவன் யோக்கியமானவனாக இருந்தால் பரவாயில்லை, உனக்கு எப்போதும் பிறர் தாரத்தை கவர சந்துபார்ப்பதுதான் வேலை. உன் செய்தி இப்படியிருக்க, உன் குருவாகிய பிரகஸ்பதி காமசாஸ்திரம் ஏன் செய்யவேண்டும்? அந்த சாத்திரப்படி பார்க்கும்போது நான் விரோதம் செய்ததாக ஏற்படமாட்டாது. அவருக்கு மாணாக்கராக இருக்கும் நான் அவர் சொல்லிய சாத்திரப்படி நடப்பதுதானே தருமம்? அவர் கூறிய சாஸ்திரத்தில் பெண் ஒரு புருஷனிடத்தில் அன்பு வைப்பாளாயின் அவளை ரமிக்கலாம் எனவும், வன்மையாளருக்கு எல்லா பெண்களும் சுவாதீனம் எனவும், மென்மையாளருக்கு தமக்குரிய ஒரு பெண்ணும் சுவாதீனம் இல்லை எனவும், தன் மனைவி பிறர் மனைவி என்கின்ற வேற்றுமை அறிவற்றவர்களுக்கு உண்டாகும் வீண் பிரம்மை எனவும் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நியாயப்படி தாரை என்மீது வைத்திருக்கின்ற அன்பிற்கு அழவேயில்லை. அதில் ஒரு அணுவேனும் குருவில் வைத்தவளன்று. அவ்வாறு என்னிடம் அன்பு வைத்திருக்கும் தாரையை அவர்கூறிய நீதிப்படி விட காரணம் இல்லை. இவ்வாறு சந்திரன் கூறியதை தூதுவன் இந்திரனிடம் சென்று கூறுகின்றான்.
இதைக்கேட்ட இந்திரன் அவன் படைகளுடன் யுத்தத்திற்கு தயாராகின்றான். இதைப்பார்த்த அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரி (சுக்கிரன்) சந்திரனுக்கு ஆதரவாக யுத்தத்திற்கு வருகின்றார்.  இதை அறிந்த தேவகுரு சிவனை வேண்ட, சிவனும் இந்திரனுக்கு துணையானார்.
தேவ அசுர யுத்தம் பல நாட்களாக நடக்கின்றது.
இதைப்பார்த்த பிரம்மா குருவின் மனைவிக்காக இவ்வாறு யாராவது யுத்தம் செய்வார்களா என்று பார்த்து, நான் சென்று சமாதானம் செய்துவிட்டுவருவோம் என்று யுத்தகளம் செல்கின்றார்.
போர்க்களத்தில் சந்திரனைப்பார்த்து; ஓ சந்திரா! உன்னை மதி என்று வித்துவான்கள் கூறுகின்றார்களே, இனி உன்னை மதிப்பார்களா? மதிகெட்டவனே குருபத்தினியை கொடுத்துவிடு. இல்லாவிட்டால் விஷ்ணு மூர்த்தியைக்கொண்டு உன்னை நாசம் செய்துவிடுவேன் என்றுகூறி, அவன் அருகில் இருக்கும் சுக்கிரனைப்பார்த்து; உனக்கும் என்ன அறிவுகெட்டுப் போய்விட்டது? இனியாவது சண்டையை நிறுத்து என்று கூறினார். இதனால் சுக்கிரன் சந்திரனைப்பார்த்து; இனி நான் யுத்தத்திற்கு உதவ மாட்டேன். தாரையை அனுப்பிவிடு. என் தந்தை மிகவும் கோபிக்கிறார் என்றான். அசுர குரு கூறியதைக்கேட்டு சந்திரன் மிக வருத்தத்தோடு கற்பமாக இருந்த தாரையை தேவகுருவிடம் அனுப்புகின்றான்.
தாரை கற்பிணியானதால் சில நாட்களில் அழகான புத்திரனை பெறுகின்றாள். தேவ குருவும் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று சந்தோசப்பட்டு ஜாதகாதி கர்மங்களை செய்தார். இச் செய்தியைக்கேட்ட சந்திரன் ஒரு தூதுவனை அனுப்பி; சந்திரன் வீரியத்திற்கு பிறந்தவனை உன் மகனாக எண்ணிக் கூத்தாடுகின்றாயே. அவன் உனக்கு பிறந்தவனா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கச்சொன்னான். தூதுவனும் அவ்வாறே கேட்க; அவன் என்னைப்போலவே இருக்கின்றதால் என் மகன்தான் என்பதில் சந்தேகமென்ன? இவனைப்பற்றி சந்திரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று தூதனிடம் சொல்லியனுப்ப, முன்புபோல் சந்திரனுக்கும் தேவகுருவிற்கும் கலகம் ஏற்பட்டு தேவர்களும் அசுரர்களும் போர் புரிய, பிரம்மன் வந்து சமாதானம் செய்து சண்டையை நிறுத்தி, இதனுடைய உண்மையை அறிய தாரையிடம் சென்று; ஓ தாரையே! இப்போது பிறந்திருக்கும் உன் புத்திரன் சந்திரனுக்கு உண்டானவனா? உனது நாயகருக்கு உண்டானவனா? என்று கேட்க, தாரை நாணமுற்று, சந்திரனுக்கே என்றுகூற, பிரம்மன் தெளிவடைந்தான். அந்த பிள்ளைக்கு சந்திரன் ஜாதகாதி கர்மங்களைச் செய்து புதன் என்று பெயரிட்டான். இவர்தான் நமது புதன் கிரகம்.
இந்த கதையை ஏன் கூறினேன் என்றால்; கதையில் எது சரி எது பிழை என்று பார்ப்பதற்காக அல்ல. இவ்வாறான புராண கதாபாத்திரங்கள்தான் இன்று கடவுள்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான புராண இதிகாச வேதங்களை புறம்தள்ளினால் இந்த கதாபாத்திரங்களின் பெயர்களே யாருக்கும் தெரியவந்திருக்காது. அவர்களை கடவுள்கள் என்றும் முட்டாள்தனமாக நம்பி ஏமாந்திருக்கவும் மாட்டார்கள். இவை கடவுள்கள் அல்ல வெறும் கற்பனை கதை காதாபாத்திரங்கள் என்று உணர்த்துவதற்காகவே.
-Venu Gopaala Shanger முகநூல் பக்கம்
25.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக