வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி?

அக்னிஹோத்ரம்

ராமானுஜ தாத்தாச்சாரியார்



ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்க முடியுமா?... அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.

அப்படி ஒரு தடவை சந்தித்தபோது.... 'முதலில் நாம் நம்மை சுத்தப்படுத்திக்கணும் இல்லியா?.... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும். அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்ய வேண்டும்.... ஏதாவது சொல்லுங்களேன்....' என்றார் மகா பெரியவர்.

நான் சொன்னேன்.

'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே.ஜெகந்நாதாச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட பிராமணன், தார்மீக ஹிந்துனு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்' என நான் சொன்னேன்.

பதிலுக்கு மகா பெரியவர்....

'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரி.... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமைய மறந்துட்டா இல்லையா?.... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு.... ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.  மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்.... நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்?' என்றார்.

இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது. குளித்தலை அண்ணா அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள். அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய அவர்களோடு நானும் புறப்பட்டேன்.

"பிராமணர்களை திருத்தினால், நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்...." என நம்பிய மகா பெரியவர், இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.

அது என்ன பலனை கொடுத்தது?.

***

மகாபெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப் பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது.

"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல் லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா.... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஸ்மீபீவீநீ ஷிஜீவீக்ஷீவீt) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார். இல்லையா?...." என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.  எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க.... எதற்கு ஆவஹந்தி ஹோமம்?..... அப்படியென்றால் என்ன?...

ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக் காகத்தான் அதாவது கோரிக்கைகளை (பீமீனீணீஸீபீs) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆவஹந்தி ஹோமம்.... ப்ரம்ம தேஜஸ்-க்காக நடத்தப்படுகிறது.  புனித கலசத்தை நிறுவி.... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து..... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம்.

அஃதாவது... அன்னத்தை கொடுத்து. வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ்'ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் பிராமணியத்தின் பலத்தை என குறிப்பிடப்படும். ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.

இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடித்ததும்..... வேதத்தைபற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.  அப்போது.... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன்கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.

இந்த 'வசதி'கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம்.... எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக.... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும். ....  ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமைய்யர் பெரும் பொறுப்பு வகித்தார்.

இப்படியாக.... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.

தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும், ஆவஹந்தி ஹோமமும் பண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலி ருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது?

இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான். செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.

அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி.... அகமதாபாத், டெல்லி , கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வடஇந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.  அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம்.

இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.... நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே.நீலமேகம்.

கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும் போது.

"ஸ்வாமி.... பார்த்தீரா..... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்" என்பார்.

கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லி விட்டுத்தான் நான் நகர்வேன். இந்நிலையில் பிராமணர் களை மட்டுமன்றி.... தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.

இது மகாபெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். "தாத்தாச்சாரீ..... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.

அதுக்கு அடுத்ததா.... அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.... நாம் பூஜா தத்வத்தையும்.... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.... என்ன சொல்றீர்?....." என்றார்.

"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.... இந்த அவேர்னஸ்' (ணீஷ்ணீக்ஷீமீஸீமீss) பிராமணாளுக்கும் வரணும்.... மத்தவாளுக்கும் வரணும்...." என்றேன்.

எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு.... உதித்தது ஆகம சிற்ப சதஸ்.

***

அதென்ன ஆஹம சிற்ப சதஸ்?

'ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.

விக்ரகங்களை.... தெய்வ சிற்பங்களை எப்படி யெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்ரங்களை சொல்லிக்கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.

சிற்பம்?.... இன்றும் நாம் கோயில்களுக்கு செல் கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச்சிறப்பு. நீங்கள் வடஇந்திய கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப் போல நுட்பமும், அழகும் ஒருசேர வாய்த் திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டிவைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறுசிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.

இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டதுதான் ஆஹம சிற்ப சதஸ்.  இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.

ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?

கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம், பூஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிராகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.  கோபுரத்தின் அழகு, பிராகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்ப க்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.

"இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல.... நான் உங்களிடமும் சொல்கிறேன்.  ஆதி காலத்தில்.... அதா வது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும் வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவ மைத்தது போல..... அவருக்கு நாம் சிற்பங்களை சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வவகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்க வேண்டும்." என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச்சார்யார்களையும் அழைத்து வந்து அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.

இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.  சனாதன தர்மசபையில் ஆரம்பித்து.... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒருநாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே.... நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா.... பிராமணா ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகி யிருக்கோ? இல்லியே.... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவா ரெண்டு பேரையும் சேர்த்து! வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...." என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனை களைத் தந்தேன்.  நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?.... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே! ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?."

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

(தொடரும்)

- இந்துமதம் எங்கே போகிறது?

குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.

- விடுதலை நாளேடு, 12.1.18


 

- அக்னிஹோத்ரம்

ராமானுஜ தாத்தாச்சாரியார்

நேற்றையத் தொடர்ச்சி...

"இதப்பாரும்.... எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை - திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா..... நாம எடுத்துண்டதும் தமிழ், சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"  என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்கு புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தபோதும்.... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.  அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

"ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?" -என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என் னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.

"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்." என்றேன்.  அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு.....?

***

"நீங்களும் மகாபெரியவரும் ஏன் சமஸ்கிருதத் திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சு போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும்  குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?"

- மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள் சத்திரத்தில் இருந்த சிலர். அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்கு சொல்வதற்கு முன்... மகாபெரியவர் 'திருப்பாவை-திரு வெம்பாவை' என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்டவழியில் சொல்கிறேன்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்கு பொருள் (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்).

தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.  தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாக வும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல்பொழுது விஸ்தாரமாகும்.

இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடி காலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிறுசிறு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு கடவுள் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.

இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.

இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... 'நமது கோரிக் கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ. அவரை முதலில் எழுப்ப வேண்டுமே....' என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.

'கடவுளை மனிதவழியில் அணுகுவது' என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக - நாயகி பாவம்' வரை வளர்ந்தது இந்த பண்பாடு.

தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு ஆதலால் 'பாவை நோன்பு' ஆயிற்று.

தன்னிகரில்லாத தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களாலேயே உருவாக்கப்பட்ட விரதவிழாதான் பாவை நோன்பு,

இத்தகைய தூயதமிழ் கலாச்சாரத்தைத்தான் சைவத் தின் மாணிக்க வாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும், பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள்.  இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத் துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக் கியத்தை 'பாவைமாநாடு' என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகாபெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்தியிருக்கும்.

இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடைமருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான' பதில் அவர்களுக்கு புரியவில்லை.

அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது...

கும்பகோண மடம்.... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும்.  அந்த வகையில்.... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்.... நாட்டுக் கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்தநேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்.' என்றேன்.  'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.  போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி.... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை.... பாத்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச   வே ண் டி  வ ரு ம் , நோக்குதான் தெரியுமே.... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும், பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ.... அதனால நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்சிடுங்கோ." என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். 'நான் சொன்னது தானப்பா.... சுவாமிகள் மௌனத்தில இருக்கார், நாளைக்கு வாயேன்....' என்றேன்.

'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்' - என தாய்மொழியாம் 'தமிழில்' மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

***

செட்டி நாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகா பெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள். போயிருக்கிறார்கள்...

இது ஒருபக்கம் இருக்க, பாவை மாநாடு சீரும்   சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.

"சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை (சிஷீனீனீஷீஸீ நிஷீபீ) கண்டு பிடிக்கணும் தாத்தாச்சாரீ... - என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகா பெரியவர் பிராமண-பிராமணர் அல்லா தவர், சைவ-வைணவ துவேஷங்களை தீர்த்து வைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அரசியல் கட்சி மாநாடு  அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தை கூட்டியது.

மார்கழி மாதம் முழுதும்... தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை- திருவெம்பாவை உபன் யாஸங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களை தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.

பின்.... விசேஷ மேடை தயார் செய்து அதில் ஆண் டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை  - திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.

எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக் கொள்வோம். கிடைக்காத படங்களை பயன் படுத்துவோம்.

கோவில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது.... நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக் கொண்டு வரமுடியும்?.... ஆண்டாளையும், மாணிக்க வாசகரையும் கையைப் பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?.... - என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம்.

பாவை மாநாடு - வெற்றிகரமாக.... விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்.... இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார். மகா பெரியவரின் ஆசிர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு.... அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரம்மாண்டம் பெற்றது. இதனால் மகா பெரியவருக்கு அரசியல் முக்யத்துவமும் ஏற்பட்டு விட்டது.

பாவை மாநாடா?.... நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே... - என பிராமணர்கள், பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள்.

நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ?.... தமிழ்நாடு முழுதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக் களிலும் மார்கழி மாதம் முழுதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக....

மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம். இந்தப்பக்கம் ஆண்டாள்.... பக்கத்தில் மாணிக்கவாசகர் வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர். 'ஸ்வாமி.... என்ன இப்படி பண்ணிட்டேள்?'.... என மொட்டையாக ஆரம்பித்தார்.

'எதை எப்படி பண்ணிட்டேன். விவரமா சொல் லுங்கோ...'. -என நான் பதில் உரைத்தேன். 'தெரிஞ்சுண்டே கேக்கறிளே?...' மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

"தீட்சிதரே. என்ன சொல்றீர்?.... நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?....."

- மறுபடியும் உரைத்தேன். தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக்கிடக்கையை உடைத்தார்.

"பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே.... ஆண்டாள் யாரு?. மாணிக்கவாசகர் யாரு?.... ஆண்டாள் பிராட்டி பக்கத்துல ஆதி சைவர் மாணிக்க வாசகர் இருக்கலாமா?.... இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா?.... அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?....."

- மன்னார்குடி வாழ் சில கண்களின் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.

"இதுக்குதான் இவ்ளோ நேரம் இழுத்தேளா?.... இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ.... சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல.... இப்ப இது அரசாங்கம் நடத்துறா..... அவாள்ட்ட போய் கேளும்....." என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன். தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.

மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால். இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு....

சைவ- வைணவ, பிராமணர்- பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும்... சூத்திரர்கள் பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையை கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.

ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.  ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?....

"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே..."என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால். பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப் படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத் திருக் கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால்கூட.... அனுஷ் டானங்கள் கறைபட்டு விடும். அதனால்..... அந்த விக்ர கங்களில் இருந்து பகவான் 'பட்'டென ஓடிப் போய் விடுவார்.

அதனால்.... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்.... விக்ரகம் வெறுங் கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே அவர்களை கோயி லுக்குள் விடாதே..... என்கிறது ஆஹமம்.

ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்?.

அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்க்ஷணம் அதாவது கும்பாபிஷேகம் அதாவது குடமுழுக்கு.... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம். ஆகம உத்தரவு இருந்தாலும் ஆலய நுழைவு போராட்டங்கள் சூடு பிடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ஒருதடவை மகாபெரியவர் என்னை அழைத்தார். சில நிமிடங்களில் அழுதே விட்டார்..... துறவி அழலாமா?.....

துறவி அழலாமா?...  அனைத்தையும் துறந்த சங்கராச்சாரி யாரின் கண்களில் வழிந்த கண்ணீர் என் கண்களையும் உறுத்தியது. என்ன செய்வதென்று தெரி யாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆறுதலும், ஆசியும் சொல்லவேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்.....? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்பு நீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.

பின்.... அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். 'கஷ்டமாயிருக்கு'... என்றபடியே மௌனமானார். அவர் அழுவதற்கு காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.

அது.... ஸ்ரீரங்கத்து சம்பவம்.

ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று... தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

அப்படித்தான், ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும்.... ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.

காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக் கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.

அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண் டிருக்கும்போதே... இந்த ஆலய நுழைவு போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.

நாமெல்லாம் போகலாம். கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடலாம் - என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.

ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து... 'அபிஷ்டூ.... அவாமேல நம் கைபடாம  வெரட்டணும்டா....' என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத் துரைத்தார். கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஓர் முடிவெடுக்கப்பட்டது.

(நிறைவு)

- இந்துமதம் எங்கே போகிறது?

குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.

- விடுதலை நாளேடு, 13.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக