"திருக்குடந்தையிற் பிறந்து வளர்ந்த வடமனாகிய பிராமணன் ஒருவன் ஸ்ரீரங்கத்திற் பெருமாள் கோயிற் சுயம்பாகியாகிப் பரிசார கஞ் செய்துகொண்டிருக்கையில், திருவானைக்காவிலுள்ள சம்புகேசுவரர் கோயில் தாசி ஒருத்தி, மோகனாங்கி என்னும் பெயருடையவள், அதிக அழகும் ஆடல் பாடல்களில் திறமும் உடை யவளாயிருந்ததனால், இவன் அவளுடைய மோகவலையிற் சிக்கித் தனக்கு அவள் இணங்கும் பொருட்டுப் பெருமாள் பிரசாத முதலானவைகளும் அவளுக்குக் கொண்டு போய்க் கொடுத்து, அவ ளோடு சம்பந்தப்பட்டிருந்தான்.
அப்படி இருக்குமளவில், மார்கழி மாதத்திற் சம்புகேசுவரர் சந்நிதியில் மேற்படி தாசிக்குத் திருவெம்பாவை பாடும் முறை வந்தபொழுது, "உங்கையிற் பிள்ளை" என்னும் பாடலைப் பாடு கையில், அதில், "எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க" என்ற தொடரை அவள் வாயினாற்சொல்லித் தலை குனிந்து கொண்டதைப் பார்த்து, அவளுடனே கூடவிருந்த மற்ற தாசிகளெல்லாம் புன்சிரிப்புச் சிரித்துத் தங்களுக்குள்ளே, "இவள் சிவன்கோயில் தாசியாயிருந்தும் பெருமாள் கோயில் சுயம்பாகி யுடனே சம்பந்தப் படுகிறாளே, இஃதென்னை? 'படிக்கிறது திருவாசகம்; இடிக்கிறது சிவன் கோயில்' என்பதாக, வாயினாற் பேசுகிறதொன்று, நடக்கிற தொன்றா யிருக்கிறதே" என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள்.
அஃது அவளுக்கு மார்பில் தைத்து முதுகில் உருவினது போல் வருத்தத்தை விளைத்ததனால், அன்றிரவு அவ்வைணவன் வருந் தருணத்தில் தெருக்கதவைச் சார்த்தி, "உள்ளே வர வேண்டா" என்று தடுக்க, அவன் வாயிலுக்கு வெளியே நின்றபடி, "என்ன நிமித்தத்தால் இன்றைக்கு என்னைத் தடை செய்கிறாய்?" என, மோகனாங்கி, "நீர் விட்டுணு அடியார்; நான் சிவனடியாள். ஆகையால், உம் சம்பந்தம் எனக்குத் தகாது" என, அவன், 'அந்தாமரை யன்னமே! நின்னை யான் அகன்று ஆற்றுவனோ!' என்றபடி, "உன்னை நான் ஒரு பொழுதாயினும் விட்டுப் பிரிந்து சகிப்பேனோ! சகிக்க மாட்டேன்! ஆதலால், உன் தலைவாயிலிலேயே நான்று கொண்டு என் பிராணனை விட்டு விடுகிறேன்," என்றான். அவள், "இஃதேது, பழி வந்து சம்பவிக்கிறதாயிருக்கிறதே!" என்று நினைத்து, "நல்லது! நான் வேண்டுமென்பது உமக்கு அவசி யமாயிருந்தால் நீர், சிவதீட்சை பண்ணிக்கொண்டு சைவனானால் உம் விருப்பப்படி நடக்கிறேன்" என்று சொல்ல, அவன் காமப்பேய் கொண்டவனாகையால், 'பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்?' என்ற வித மாய், அவள் உறவைக் கைவிட மாட்டாமல், "நீ சொன்னவண்ணம், சைவ சமயத்தை அனுசரிக்கிறேன்" என்று ஸ்ரீரங்கத்தை விட்டுச் சம்புகேசுவரத்திற்கு வந்து சிவதீட்சை பண்ணிக் கொண்டு அகிலாண்டவல்லி கோயிற் பரிசார கனாகி, தனக்கு அவ் விடத்தில் கிடைக்கும் வரும்படிகளில் அவளுக்குச் சிறிது கொடுத்து, மிகுந்ததைத் தன் சீவனத்திற்கு வைத்து அனுபவித்துக் கொண்டு வந்தான்."
(நூல்: "விநோத ரச
மஞ்சரி " பக்கம் 230-231 - தமிழறிஞர் வீராசாமி செட்டியார்)
ஒரு வைணவப் பார்ப்பனப் புலவனான காளமேகம் ஒரு தாசியின் மீதான விரகதாப வெறிக்காக மதம் மாறினான் என்பது வரலாறு; வைணவ ஆண்டாளுக்காக தை தை என்று குதித்தாடும் அன்பர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களோ?
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 16.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக