செவ்வாய், 2 ஜனவரி, 2018

கொண்டாட வேண்டுமா கோகுலாஷ்டமி!


இம்மாதம் 14ஆம் நாள் ‘கோகுலாஷ்டமி’ என்று நாள்காட்டிகள் கூறுகின்றன. கோகுலாஷ்டமி என்றால் என்ன? அதுதான் கோபியர்களையெல்லாம் கூடிக்கூடிக் கூத்தடித்த கிருஷ்ணனின் பிறந்த நாளாம்! இந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? அவன் என்ன மனித சமூகத்துக்கு ஆற்றொனா அரிய பணிகளை ஆற்றியவனா? அறிவுக் கூர்மையை போதித்தவனா? என்றால் இல்லை, இல்லை. அவன் கதைகள் அத்தனையும் பிறப்பு முதல் வளர்ப்பு வரை ஆபாசக் களஞ்சியமே!

பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களே அவன் எப்படிப் பிறந்தான் என்பது குறித்து புராணங்கள் கூறும் கதையை அறிவார்களா?

தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி விஷ்ணுவிடம் போய் உலகத்தில் அதர்மம் அதிகமாகிவிட்டது. தர்மம் அழிந்து வருகிறது. இதைத் தடுக்க வலிமையான ஒருவன் வேண்டும் என்று கேட்டார்கள். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிர்களைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அதில் ஒரு மயிர் கருமை வண்ணமாகவும் ஒரு மயிர் வெண்மையாகவும் இருந்ததாம். கருமயிர் கண்ணனாகவும், வெண்மயிர் அவன் அண்ணனாகவும் உருவெடுத்ததாம். 
அவனைக்  கேசவன் என்றே அழைப்பார்கள். (கேசம் என்றால் மயிர்) ஆம், பக்தர்களே! மயிரிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினால், அதை ஏற்று அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவசியமென்ன? அதனால் பலன்தான் என்ன? மயிரிலிருந்து மனிதன் எப்படித் தோன்ற முடியும்? என்று சிந்திப்பதுதானே அறிவுடையார் செயலாக இருக்க வேண்டும்.
அவனுடைய வளர்ப்பும், வளர்ந்தபின் அவன் செய்த சேட்டைகளையும் புராணங்கள் கூறுவதைப் படித்தால் அவனை ஒரு கடவுள் என்றோ அல்லாது கொண்டாடப்பட வேண்டியவனாகவோ கொள்ள முடியுமா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்களேன்.

பிரம்மவர்த்த புராணத்தில் அவன் இராதாவுடன் கூடி வாழ்ந்த முறைகெட்ட வாழ்க்கை பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளதே. இராதா முன்னமே ஒருவனுக்கு மணமுடிக்கப்பட்டு அவனுடன் வாழ்ந்தவள். ஆக அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து தன் காமக்கிழத்தியாக்கி ஆபாசம் வளர்த்தவன் ஆண்டவனா? அவளின்றி ருக்மணி என்பவளும் அவனுக்கு மனைவி. இருவரும் போதாமல் குப்ஜா என்ற பெண்ணுடனும் கூடிக் குலாவுவானாம். இவர்கள் மட்டுமன்றி கோபியாஸ்திரிகள் 16,000 பேர். அவர்கள் அத்தனை பேருடன் அவன் அடித்த கொட்டங்கள்தான் உங்கள் புண்ணிய புராணங்களின் ஏடுகளில் புழுத்துக் கிடக்கின்றனவே.

அவனுடைய மொத்த மனைவிகள் 16,108 என்றும், அவன் பெற்ற குழந்தைகள் 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) என்றும் புளுகு மூட்டைப் புராணங்கள் புகல்கின்றனவே.

‘தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன், தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை’ என்ற பாடல் வரியே அவனுடைய குரங்குச் சேட்டைகளுக்கு சாட்சியமன்றோ!

கோபியர்கள் 16,000 பேர் குளிக்கும்போது அவர்களின் சேலைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டதுமன்றி அவர்கள் நிர்வாணமாக தங்கள் கைகளை மேலே தூக்கி தன்னை வணங்கினால்தான் துணிகளைக் கொடுப்பேன் என்றானாமே! ஆமாம், கைகளை மேலே தூக்கி நின்றால்தானே முழு நிர்வாணமும் அவன் கண்களுக்கு களிப்புக் காட்சியாகி காமம் மீதூறும். இவன்தான் கடவுளா? இவனுக்கு விழாவா? பண்டங்களும் பட்சணங்களும் படையலா?

அய்யய்யோ! போதும் போதும் உங்கள் கிருஷ்ணன் பெருமை! அவனையா நாம் கொண்டாட வேண்டும் என்று எண்ணி சுயமரியாதையோடு  என்றுதான் சிந்திக்கப் போகிறீர்கள்? இப்படிக் கேட்போரை வைவதை விட்டு விவரமாகச் சிந்தியுங்களேன்.      


                                                                                                         -முரசு


- உண்மை இதழ்,16-31.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக