கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரஸ்வாமி கோயிலின் கோபுரமும், அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் கணக்கற்ற உருவங் களும், பொம்மைகளும் சமீப காலத்தில் பார்ப்போர் கண்களைக் கவரும் வண்ணம் பலவித அழகான வர்ணங்களால் தீட்டப்பெற்று வெகு ரம்மியமாய் விளங்குகின்றன. சென்ற 9.6.1929 அன்று மாலையில் யான் அதன் வழியாகப் போக நேர்ந்தது.
அப்படிப் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவ்விடத்தில் சில வாலிபர் கூட்டமாய்க் கூடிநின்று கோபுரத்தைப் பார்த்துச் சிரிப்பதையும், கைதட்டுவதையும், கேலி பண்ணுவதையும்.அவர்களில் இரண் டொருவர் தூ-தூ என்று துப்புவததையும் கவனித்த யான் இதற்குக் காரணம் யாதென அறிவான் வேண்டி கோபுரத்தைப் பார்த்தேன்.
உடனே என் மனதில் எழுந்த வெறுப்பும், வெட்கமும் இவ்வள வென்பதை எழுதவோ, சொல்லவோ முடியாது. சுருங்கக் கூறுமிடத்து அநேக பொம்மைகளை நிர்வாணமாகச் செய்து வைத்திருப்பதோடு ஆண்களும், பெண்களும் கலவி செய்வது போலும், அதிலும் இயற்கைக்கு மாறாகவும், மிலேச்சத்தனமாகவும் பலவித ஆபாச முறையில் ஆங்காங்கு உருவங்கள் செய்யப்பட்டு பிரத்தியட்சமான வர்ணங்களும் தீட்டப் பெற்றிருக்கின்றன.
யான் அவ்வழியே சென்று கொண்டிருந்த சுமார் 55 வயதுடைய ஒர் பார்ப்பன கனவானைப் பார்த்து ஐயா! இது என்ன அநியாயம்? இப்படியும் உண்டா? கடவுள் பக்தியையும் சன்மார்க்கத்தையும் வாலிபருக்குள் விருத்தி செய்யும்படியான உருவங்கள் இவைதானா? ஆலயத்தின் பிரதான கோபுரத்தில் பலரும் கவனிக்கக் கூடிய இடத்தில் இவை இருக்கலாமா? எனக் கேட்க அப்பெரியார் ஏதோ எல்லாம் அந்தக் காலத்தில் பெரியவாள் ஒரு நல்ல காரியத்தை உத்தேசித்துத் தான் செய்து வைத்திருப்பார்கள்.
அதன் அந்தரங்கங்கள் தெரியாமல் இவர்கள் கேலி பண்ணுகிறார்கள். அப்படிச் செய்யப்படாது' என்று பதில் கூறிச் சென்றார், இதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வாலிபரிருவர் எமது சம்பாஷணையையும் அதற்குக் காரணமாயுள்ள உருவங்களையும் கவனித்து விட்டு இதனால்தான் மகம்மதியரும், கிறிஸ்தவர்களும் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள்.
முற்காலத்திலிருந்த பெரியவாள் என்ன உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு செய்திருந் தாலும், அது அவர்களுடைய மிலேச்சத்தனத்தையும், காட்டு மிராண்டித்தனத்தையும், இழிசெய்கைகளையும் காட்டுகிற தெனக்கூறி தூ-தூ-தூ என்று துப்பிக்கொண்டும் வெட்கம்! வெட்கம்! என்று கூறிக்கொண்டும் போய்விட்டனர்.
இதிலிருந்து முற்காலத்திய மேதாவிகளின் செய்கைகள், ஆசார அனுஷ் டானங்கள் நடத்தைகள் இவற்றை வாலிபர் மிலேச்சத்தனமாகவும், காட்டுமிராண்டித் தனமாகவுமே கருதுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை நிற்க, மேற்படி சின்னங்கள் எந்த முறையில் தற்கால வாலிபரின் மனத்தை பக்தியிலீடு பெறச் செய்யுமென்பதைவிளக்குவார்களா? கள்ளுக்கடை,
சாராயக்கடை இவற்றின் முகப்பில் சிலர் சேர்ந்து குடிப்பது போலவும், கூத்தாடுவது போலவும், போதை மிகுதியால் ஒருவரையொருவர் கட்டித் தழுவுவது போலவும் சித்திரம் எழுதி வைத்திருப்பதைக் காணலம்.
கோபுரத்தில் எழுதப்பட்டபடியே தான் கோயிலுக்குள்ளும் நடக்கும் என்பதாக நினைப்பதா? அன்றி அக்கோயிலுக் குள்ளிருக்கும் கடவுளின் விருப்பமும் செய்கையும் அதுவென்று கொள்வதா? பழுத்த வேதாந்திகளே பதில் சொல்லுங்கள்.
மனிதராகச் செய்து வைக்கப்பட்டதென்றால் தன்னிருப்பிடத்தின் முகப்பில் இவ்வித அவலட்சணமான உருவங்களைச் செய்து வைக்கச் சம்மதித்திருந்த அக்கடவுளின் மிலேச்சத் தனத்தையும் குணாதிசயங்களையும் என்னென்று சொல்வது, மேலும் சாமியைக் கும்பிடப் போகும் பக்தகோடிகள் தங்களை தொடர்ந்து வரும் 10, 14 வயதுடைய விவரமறியாக சிறுவர் சிறுமியர் மேற்படி சின்னங்களைப் பார்த்து விவரம் கேட்பின்,
என்ன பதில் கூறி அவர்களைத் திருப்தி செய்விப்பர்? எதாவது சொல்லி மழுப்பிவிட்டாலும் விஷயத்தை அறிய இயற்கை ஆவல் கொண்டுள்ள அச்சிறுவர்கள் வேறு யாரிடமாவது கேட்டுக் தெரிந்துகொண்ட பின் அவர்களுடைய மனம் எப்படித் திரும்புமோ யாரறிவர்?
ஆனல் பக்தியிலீடுபடும் என்பது மட்டும் முக்காலும்,சந்தேகமே! முற்றிப்பழுத்த வேதாந்திகளே! கனிந்து வழிந்த வைதீகக் கோஷ்டிகளே! கடவுளைப் பிரத்தியட்சமாய் கண்டதுபோல் நடித்து ஆசார அநுட்டானங்கள் சிறிதும் மாறாது நடப்பது போல் வெளிக்குக் காட்டிக் கொள்ளும் பக்த கோடிகளே!
உங்கள் அபிப்பிராயம் யாது? இவ்வித ஆபாச நடத்தையோடு கூடிய சின்னங்கள் கோபுரத்தின் முகப்பில் இருக்கவேண்டியது அவசியந்தானா? அவற்றைச் செய்து வைக்காவிட்டால் உள்ளிருக்கும் கடவுள் கோபித்துக் கொள்ளுமா? அல்லது செத்துப் போய்விடுமா? தவறி உலகத்தில் சக்தியும் சன்மார்க்கமும் குறைந்துவிடுமா? என்பதற்கு ஆத்திகக் கூலிகள் பதிலிறுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.
(குடிஅரசு 1929)
-விடுதலை,25.9.15
-விடுதலை,25.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக