சனி, 14 நவம்பர், 2015

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு


பெங்களூரு முத்து.செல்வன்
நம் தொல்மரபான குரு  சிஷ்ய ஆசிரம முறையை இழந்துவிட்டோம். அந்த முறை தொடர்ந்திருந்தால் நாட்டில் நாம் எதிர்கொண்டு வரும் வன்முறையும் கடும்போக்கும் (தீவிரவாதம்) இருந்திரா.
பல நாடுகளில் கடும்போக்கு நிலவி வருவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மாந்தனிடமும் நற்பண்புகளை வளர்ப் பதன் மூலம் வன்முறையைத் தவிர்த்திட இயலும். அதனை நிறைவேற்ற பழைய மரபுகளுக்கும் வேதங்களுக்கும் திரும்பிட வேண்டும், நான் வல்லதிகாரியாக இருந்திருந்தால் பகவத் கீதையையும் மகா பாரதத்தையும் முதல் வகுப்பு பாடத் திட்டத்திலேயே சேர்த்திருப்பேன். அப் போதுதான் நல்வாழ்வுக்குரிய வழிமுறை களைக் கற்கவியலும். எனவே இந்தியா தொல் மரபுகள் காலத்திற்குச் செல்ல வேண்டும் - உச்சநீதிமன்ற நீதியரசர் தவே.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வழியில் இயங்கிவரும் பாரதீய ஜனதா கட்சி உட்பட அனைத்து சங் பரிவார அமைப்புகளும் கூறிய, கூறிவரும் கருத்து களை நீதியரசர் எதிரொலித்துள்ளார்.. வேதங்கள் சொல்லும் சனாதன தருமம் கூறுவதென்ன?
பிறப்பால் பிளவுண்டு நால்வர்ணங் களாக வாழும் மாந்தருக்காகவே  - அவர் களுக்கு வாழ்நெறிகளைக் காட்டுவதற் காகவே படைக்கப்பட்டனவே வேதங் களும் (ச்ருதி) அவற்றுக்கான விளக்கங் களும் (ச்ம்ருதிகள்)
அவற்றுக்கு அடிப்படையாகக் கருதப் படுவது  வியாசரின் பிரம்மசூத்திரம். இந்த வியாசர்தான் நான்கு வேதங் களையும் பகுத்து உலகுக்கு அளிப்ப தற்காக, பராசர முனிவனால் வன்புணர்வு செயப்பட்ட மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஸ்ரவணாத்()  யயனார்த்()த
ப்ரத்()திஷேதா()த்() ஸ்ம்ருத்தே ஸ்ச்சு பிரம்மசூத்திரம் (1.3.9.38) இந்தக் குறுமொழிக்கு  உரை எழுதிய ஆதி சங்கரர்,  சூத்திரர்கள் வேதங்களைக் கேட்பதற்கும், படிப்பதற்கும், வேத முறைகளை அறிந்து கொள்வதற்கும் ச்ம்ருதி (ஸ்மிருதி  சமயநெறி)  தடை விதிக்கிறது. இந்தக் காரணத்தாலும், சூத்திரர்கள் வேதங்களைப் படிப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். கீழ்க்கண்ட பகுதி வேதத்தைக் கேட்பதற்குத் தடையைத் தெரிவிக்கிறது.. வேதத்தைக் கேட்பவன் காதுகள் காய்ச்சிய ஈயத்தாலும் அரக்காலும் நிரப்பப்பட வேண்டும்., சூத்திரன் ஓர் இடுகாடு போன்றவன்;  எனவே அவன் அருகில் வேதத்தைப் படிக்கக் கூடாது.  இந்தக் கடைசிப் பகுதி யிலிருந்து வேதத்தைப் படிப்பதற்கான தடை உடன் உருவாகின்றது. ஏனெனில்,  அவன் அருகில் கூட வேதத்தைப் படிக்கக் கூடாதென்றால், அவனால் எப்படி அதைக் கற்றுக் கொள்ள முடியும்? மேலும், சூத்திரர்கள் வேதத் தைப் படிப்பதற்கு வெளிப்படையான தடையும் உண்டு..
அவன் அதை பலுக்கி னால் அவன் நாக்குத் துண்டிக்கப்பட வேண்டும்; அவன் அதைப் பாதுகாத் தால், அவன் உடல் துண்டிக்கப்பட வேண்டும்.. வேதங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்குமான தடை, வேத முறை களில் அறிந்து கொள்வதற்கும் மேற் கொள்வதற்குமான தடையையும் தந்துவிடுகிறது.. இருந்த போதிலும், சூத்திரனுக்கு அறிவைப் புகட்டக் கூடாது, படிப்பிற்கும் ஈகத்திற்கும், பரிசளிப்பிற்கும் இருபிறப்பாளராகிய பிராமணர்க்கு மட்டுமே தகுதி உண்டு என்பன போன்ற வெளிப்படையான தடைகளும் உள.. எது எப்படி இருப் பினும் வேதங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு (சூத்திரருக்கு) எந்தத் தகுதியும் கிடையாது என்பது முற்ற முடிந்த முடிவாகிறது (The Sacred Books of the East, Vol XXXIV, ed.by F.Max Muller, The Vedaanta Sutraas with the commentary by Shankeracharya Translated by George Thibaut, P.229-9; pub.by Motilal Banarasidass, Delhi
தமிழில்: ஆதிசங்கரரின் மக்கள் விரோதத் தத்துவம்,, பேராசிரியர் கே.எஸ். பகவான் கன்னடத்தில் சங்கராச்சார்ய மத்து பிரதுகாமித்தன என்னும் தலைப் பில் எழுதிய நூலின்  தமிழாக்கம் வீ.செ .வேலிறையன், பக்7,8. மகரந்தம் வெளியீடு, கரூர்,1986.
பிரமன் என்பதே இறுதி உண்மை ஆகும்; உலகம் என்பது வெறும் மாயையே; தனி உயிர்நிலைக்கும், அதாவது கடவுளுக்கும் மாந்தனுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை என்பததைத் தன் ஒருமையியல் கோட்பாடாகக் (அத் வைதம்) கொண்ட சங்கரர்  எது எப்படி இருப்பினும் வேதங்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு (சூத்திரருக்கு) எந்தத் தகுதியும் கிடையாது என்பது முற்ற முடிந்த முடிவாகிறது என்று எழுதினார் என்றால் அவருடைய கொள்கை உறுதிப் பாட்டை என்னவென்று சொல்லுவது? இரண்டே வரிகளைக் கொண்ட பிரம்ம சூத்திரத்தில்  சூத்திரர்களுக்கு மறுக்கப் படும் உரிமைகளை இத்துணை வரிகளில் எழுதியுள்ளமை வியப்புக்குரியதே..
ஆதி சங்கரருக்குப் பின்னர் தோன்றிய மத்துவாச்சாரியும் இராமானுசாச்சாரியும் 11 ஆம் நூற்றாண்டில் வீர சைவத்தைப் பரப்புவதற்குக் கடுமையாக உழைத்த சிறீபதிபண்டிதாரத்யரும் பிரம்ம சூத்திரத்திற்கு, சங்கரரைப் பின்பற்றியே உரை எழுதியுள்ளனர். இராமானுசர் எழுதிய விளக்கவுரை  ச்றீபாஷ்யம்; பண்டிதராத்யர் எழுதிய விளக்கவுரை அவருடைய சிறீகரபோசியம் நூலில் உள்ளது. (மேலது பக் 7)
புத்த, சமண மதங்களின் தாக்கங் களில் இருந்து, இந்துமதத்தை மீட் டெடுத்த பெருமை ஆதி சங்கரருக்கே உண்டு என்று பெருமையுடன் கூறுவர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் நிறுவியதாகக் கூறப்படும் மடங்களின் வழி இன்றளவும் இந்துத்துவா பரப்பப்பட்டு வருகின்றது. சங்கர மடங்களின் தலைவர்களைச் சூத்திர களும் போற்றி வணங்கி மகிழ்கின்றனர்;  பல்லக்கிலும் தூக்கி மகிழ்கின்றனர். காஞ்சி மடம் சங்கரரால் நிறுவப் பட்டதன்று. இருப்பினும் அவரால் நிறுவப்பட்டதாகப் பொய்யுரைத்து வருகின்றனர். சூத்திரர்களும் மகா பெரியவாள், பெரியவாள், சின்னவாள் என்று அந்த மடத்தின் தலைவர்களைப் போற்றுகின்றனர்.
காலப்போக்கில் சங்கரரின் மக்கள் விரோதக் கொள்கையை மறந்து விட்டனர்.. ச்ருதி. ச்ம்ருதிகளின் பெயரால் பார்ப்பனர்களின் ஏற்றத்திற்கே வழி வகுக்கப்பட்டிருக்கின்றது. அவற்றுள் மக்களின் நல்வாழ்விற்கான அறநெறிகள் உள்ளதைப் புறக்கணித்துவிட்டு வகுப்பு வாதத்தை முன்வைப்பதாகக் கூறப்படுவ துண்டு.. ஆனால், இந்து மதத்தை மீட்டு ருவாக்கம் செய்திட சங்கரர் மேற் கொண்ட சூழ்ச்சிகள் ஒரு துறவிக்குரிய பண்புநலனாகத் தெரியவில்லை. மதவெறியாகத்தான் தெரிகிறது.
மக்களுக்குக் கல்வியை மறுத்தது மட்டும் சங்கராச்சாரியார் செய்த ஒரே மிகக் கொடிய குற்றமன்று. அவருடைய கொள்கைக்கு மிகப்பெரும் அறை கூவலாய் அமைந்த புத்த மதத்தை அழிப்பதற்காக, விலங்காண்டித்தனமான, வெறுக்கத்தக்க, கொடிய முறைகளைப் பின்பற்றினார். அவர் தம்முடைய கல்வி அறிவாலும் ஏரணத்தாலும் (தருக்கத் தாலும்)  புத்த மதத்தை மறையச் செய்தார் என்று கூறுவது வேடிக்கைக்குரியதே ஆகும். மாறாய், ஆளும் வகுப்பாரின் கூட்டுடன் பவுத்தர்களை அழித்தார்.. தெற்கிலே பல்லவர்களும் மேற்கிலே சாளுக்கியர்களும் பிராமணீயத்திற்கு வலுவூட்டிய பேரரசர்களாக விளங்கினர். (A.H. Lomghurst, The Antiquities of Narajunakonda).  இவர்களுடைய உதவி யின்றி சங்கராச்சாரியார்   இத்தகைய குற்றச் செயலினை மேற்கொண்டிருக்க முடியாது. தம்முடைய நேரடி மேற்பார் வையிலேயே, அவர் பவுத்தர்களையும் பவுத்தர்களுடைய சிலைகளையும் நினைவு அடையாளங்களையும் அழித்தார். நாகார்ச்சுனகொண்டாவில் அகழ் வாராய்ச்சி மேற்கொண்ட A.H. Lomghurst,  தம்முடைய விலை மதிப்பற்ற The Buddhist Antiqyities of Nagarjunakonda   என்ற நூலில் இச் செய்தியைக் குறித் துள்ளார். (மேற்கண்ட நூல்: பக்21,22).
புத்த மதம் வேதங்களின் மேலாண் மையை  ஏற்காததும் திறந்த மனப் பான்மையை ஊக்குவித்ததும்தாம் சங்கராச்சாரியாரே தம் கூட்டத்தாருடன் சென்று புத்த நிலையங்களை அழித்து விட்டதாகக் கூறும் அறிஞர் பேராசிரியர் கே.எஸ்.பகவான், வேத மனம் மிகவும் கொடிய மனம்; பொறுமையைப்,பற்றி, இணக்கத்தைப்பற்றி இதற்குத் தெரியாது. மாறுபட்ட தாங்கிக் கொள்கின்ற  பண்பாடும் இதற்குக் கிடையாது. உறுதியாக, இதற்குப் பண்பட்ட பழக்கம் தெரியாது. தன்னைவிட உயர்ந்ததாக எதைப் பார்க்கின்ற பொழுதும், தற் கொலை செய்து கொள்கின்ற உணர் வையே இது பெறுகிறது. இத்தகு தன்மைகள் பெற்ற மனத்தை, வேத மனம் என அழைக்கலாம் என்று கருத்தறிவித் துள்ளார். (மேலது: பக்.39).
ஆதி சங்கரருடைய  புத்த சமண மத எதிர்ப்புணர்வை தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், வேட்டுவேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டுச் சிந்தை முரட்டமண் குண்டரை
வைதிகத்தின் வழியொழு காதவக் கைதவ
முடைக்கா ரமண் தேரரை எனப் பாடி எதிரொலித்துள்ளார். இந்திரனே! தேவரீர் யாகஞ்செய்பவர்களின் நன் மையின் பொருட்டு யாகஞ் செய்யாத வர்களைக் கொல்லுகின்றவர்களாயும் அவ்வாறெ தங்களைப் புகழ்ந்து பாடுபவர்களின் பகைவர்களைத் துன்புறுத்துவராயுமிருக்கின்றீர் என்று இந்திரனைப் போற்றியுள்ளார்.
- (சுவாமி சிவானந்த சரசுவதியின் மத விசாரணை)

- தொடரும்                                                                    -விடுதலை ஞா.ம.,4.10.14


மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு (2)


பேராசிரியர் பகவான் கூறியுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு நீதியரசர் தவேயின் கூற்றை ஆய வேண்டும். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரருக்கும் மத்வருக்கும் இராமானுசருக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே, எவற்றை முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்க வேண்டுமென்று தவே கூறுகின்றாரோ அந்த மகா பாரதமும், பகவத் கீதையும் தாம் என்பதில் அய்யமில்லை. வேத காலத்திலேயே மறுப்பியக்கங்கள் தோன்றி மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருந்தன. இல்லாதிருந்தால் பிற் காலத்தில் அவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் நமக்குக் கிடைத்திரா. சார்வாகர், லோகாயதர், சாங்கியர், மீமாம்சகர் வேத மறுப்பியக்கத்தைச் சார்ந்தோர்களாக இயங்கியிருக்கின் றனர். அவர்களைப் கண்ணன், பகவத் கீதையில், துஷ்கர்மன் (தீவினையர்), நரதாம (கீழ் மாந்தர், ஹுதஞான, அல் பமேத (அறிவிலிகள்), மூட (முட் டாள்கள், அபத்தவ, நஷ்தான், அசேத, சம்ஷ்யத்ம, நாஷ்தம, டம்பமன், அசுர, ராக்ஷச என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறான்.
வால்மீகி இராமாயணத்தில், யதாஹிசோர்: ஸ்ததாஹிபுத் தஸ்ததா:ஹதம்னாஸ்திகம் த்ரவித்தி:  - அதாவது திருடன் எப்படியோ அப்ப டியே புத்த சமயத்தவன் என்று அறிந்து கொள் என்று உள்ளது. பவுத்தர்களைத் திருடர்களுக்கு ஒப்பானவர்கள் என்று வால்மீகி கூறக் காரணம் என்ன? கடவு ளையும் ஆன்மாவையும் மறுத்ததால் பௌத்தர்களுக்கு இந்தப் பட்டம். அறிவையே தெய்வமாகக் கருதிய சமணர்களுக்கு, சம்ஷ்யதம (எதிலும் அய்யுறுவோர்  சந்தேகப் பிராணிகள்)  என்று பட்டம்.
மாந்த வரலாற்றில் உண்மையான முன்னேற்றதிற்குத் தேவையான விளையுள்ளுக்க்குரிய உழைப்பையும் சமுக உறவுகளியும் பழித்துரைக்கும் வேதங்கள் கூறியவற்றை எதிர்த்து, அறிவுக்கு முதன்மையிடம் கொடுத்து மக்கள் நலன் பேண விரும்பியவர்களை எதிர்கொண்டு முறையான ஞாயமான அமைவுகளைக் கூறவியலாத சனாதன வாதிகள் மேற்கண்டவாறு பழிதூற்றலா யினர் என்பது வரலாற்று உண்மை.
மகாபாரதத்தில் சாந்தி பர்வம் ஒரு பகுதி. குருசேத்திரப் போர்க்களத்தில், தலைக்குக் கீழ் உள்ள பகுதிகள் அனைத் தும் கால்கள் வரையில் முழுவதுமாக அம்புகளால் துளைக்கப்பட்ட உட லோடு விட்டுமன் (பீஷ்மன்) கிடக்கை யிலே, வெற்றி பெற்று ஆட்சியில் அமரக் காத்திருக்கும் தருமனுக்கும் அவனுடைய உடன்பிறப்புகளுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் நல்லாட் சியின் அறங்களைப் புகட்டுவதாக அமைந்த பகுதி. சாவின் விளிம்பில் கிடந்துகொண்டு, கண்ணனுடைய துணையுடன்   பல்லாயிரக் கணக்கான சொலவங்களை அறிவுரைகளாக வழங்குவதாக அமைந்தது. எப்படி ஆட்சி புரிவது, நன்மை  தீமை,, ஒழுக்கங்கள், ஆண்  பெண்களுக்குரிய அறங்கள்,குற்றங்கள், அவற்றுக்குரிய தண்டனைகள், வரிவிதிப்பு, போர்க்கள அறங்கள் எனப் பலவாறு விளக்கப் பட்ட சாந்தி பர்வத்தின் எல்லா அத் தியாயங்களிலும் வேரோடி இருப்பது சனாதன தரும,  நால்வருண அறமாக வும் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப் பனவாகவும் இருப்பதை உணரவியலும்.. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்ப் போம். கட்டுரையாளன் படித்த மொழி பெயர்ப்பு நூலில் (ஸ்ரீ மஹா பாரதம், மணலூர் வீரவல்ல்லி இராமானுஜா சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) உள்ள வாறே மேற்கோள்கள் அளிக்கப் பட்டுள்ளன.
அத்தியாயம் 11 (ராஜதர்மம்  தொடர்ச்சி).: கர்ம மார்க்க்கமே சிறந்தது என்பதை விளக்குகையில் விட்டுமண் இடையிலே ஒரு முனிவனுக்கு ஒரு பறவை நாற்கால் பிராணிகளுள் பசு சிறந்தது. உலோகங்களுள் தங்கம் சிறந்தது. சப்தங்களுள் வேதம் சிறந்தது. இரண்டுகால் பிராணிகளுள் பிரா மணன் சிறந்தவன். பிராமணனுக்கு ஜனனம் முதல் மரணம் வரையில் காலத்துக்குத்தக்கபடி ஜாதகர்மமுதல் ஸ்மசானத்தில் செய்கிற முடிவான கார்யம் வரையிலுள்ளவை எல்லாம் வேதத்தால் விதிக்கப்பட்டன.  என்று கூறியதாக உரைக்கின்றான்.
அத்தியாயம் 14 (ராஜதர்மம்  தொடர்ச்சி).:  எல்லாப் பிராணிகளிடத்தும் ஸ்னே ஹமும் கொடுப்பதும் வேதமோதுவதும் தவமும் பிராமணர்களுக்குத்தான் தர்மமாகும். அரசர்களுக்கு இவை தர்மமாகா.
பிராமனன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன்,, மற்றுமுள்ள எவனும் எந்தச் சமயத்திலும் சாந் தனான பிராம்மணனை ஒரு புல்லாலும் அடிக்கக் கூடாது. பிராம்மணனைப் பெரிய தடியெடுத்து அடிக்க ஓங்கின பாவி முந்நூறு வருஷங்கள் நல்ல நிலையை அடையமாட்டான், அடிப்பவன் ஆயிர்ம் வருஷம் நரகத்தில் வீழ்வான்.  மிரட்டுவதற்காகத் தடியை ஓங்கினாலே தண்டனைக்குரைய வனாகின்றான்.
பசு வதையும் கள்ளுண்ணலும்
அத்தியாயம் 33: ராஜதர்மம் தொடர்ச்சி   விதிவிலக்குகள் சாஸ்திர விதியல்லாமல் பசுக்களைக் கொல்லுவதும் கொல்லச் செய்வதும் கூடாது.  விதிப்படியுள்ள பசுக்களின் வதம் அவைகளுக்குள்ள அனுக்ர ஹமாம். சாஸ்திரத்திற் சொல்லியபடி ஸோமரஸத்தின் ...பெருமையாகிய  உண்மையை அறிந்து ஸோமமென்னும் கொடியை விகரயஞ்செய்வது தோஷ மாகாது
உயிரிழப்பு என்பது உலக இயற்கை என்பதால் போர்க்களத்தில் உயிரிழந்த உற்றவர்களுக்காக வருந்தத் தேவை யில்லை என்பதை விளக்க வந்த கண் ணன் உயிரிழந்த பல பெரியவர்களின் கதைகளைக் கூறுகிறான். அவற்றுள் ஒன்று ப[சுவதைக்குச் சான்று பகர்ந்து நிற்கின்றது.
அத்தியாயம் 28 ராஜதர்மம் தொடர்ச்சி
சங்கிருதி என்னும் மன்னனின் புதல்வனான இரந்தி தேவன் இந்திரனி டமிருந்து பல வரங்களைப் பெற்று நல்லாட்சி புரிந்து வந்தானாம். அவனுடைய நல்லாட்சியினால்  மகிழ்ந்த ஆக்கள் (பசுக்கள்) தாமாகவே தங்கள் வாழ்விடங்களைவிட்டு அவனை அடைந்து, தங்களை நற் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வந்தனவாம் அவன் அவற்றை எதற்குப் பயன்படுத்தினான் தெரியுமா? தம் குடிமக்களின் தேவை களுக்காக அல்லாமல் வேள்விக்காக பயன்படுத்தியுள்ளான்.. மேலே படியுங்கள்:
அவனால் யாகத்தில் உபயோகிக் கப்பட்ட (தாமாகவே வந்த) பசுக்களின் தோற்சுமையிலிருந்து கசியும் ஜலம் சர்மண்வதியென்னும் பெயர் கொண்ட பெரிய நதியாகிப் பிரஸித்தி பெற்றி ருக்கிறது. அந்த அரசன் பெரிய ஸபை யில் பிராமணர்களுக்குஅதிகமான ஸுவர்ணங்களைத் தானஞ் செய்தான். தங்கத்தைப் பெற்ற பிராமனர்கள் எனக்கு இவ்வளவு; உனக்கு எவ்வளவு? என்று கேட்டு மன்னன் அளித்த தங்கதை வாரிக்கொண்டு மன்னனை வாழ்த்தினார்களாம். வாழ்த்த மாட்டார்களா பின்னே? தமிழ்நாட்டு மன்னர்கள் தங்கள் கொடைமடத்தால் பார்ப்பனர்களுக்கு, பிரம்ம தேயம் என்றும் சதுர்வேதி மங்கலங்கள் என்றும் வாரி வழங்கினர் அல்லவா?)
ஸங்க்ருதியின் புத்திரனான ரந்தி தேவன் வீட்டில் ஓர் இராத்திரிக்கு ஆயிரத்து நூற்றிருபது பசுக்கள் உபயோகிக்கப்பட்டன. பார்ப்பனர்கள் நனறாக, போஜனம் செய்து மகிழ்ந்தனர்.
விதிப்படி செய்யப்படும் பசு வதை கொல்லப்பட்ட பசுக்களுக்கு நன்மை யாம். பசுவைக் கொல்லும்போது ஹோதா என்னும் ப்ரோகிதன் சொல்ல வேண்டியது:
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வமத்ரிகா அத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிர்ப்ரூயத்  பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல், அடிப் பதை நிறுத்தாதே. (சுவாமி சிவானந்த சரசுவதியின் மத விசாரணை) சிவானந்த சரசுவதியின் ஞானசூரியனைப் படித்து மேலும் பல விளக்கங்களைப் பெறுவீர்.
இசுலாமியர் ஹலால் சொல்லி உயிரிகளைக் கொல்வது போல்வது இது.
அத்தியாயம் 34  ராஜதர்மம் தொடர்ச்சி  ப்ராயச்சித்தங்கள்  கழுவாய்
அரசனே! எவன் நியமமுள்ள பிராமணர்களுக்குக் கம்போஜ தேசத் திலுண்டான நூறு குதிரைகளைத் தானஞ்செய்தும் அல்லது ஒரு பிரா மணனுக்காவது அவன் வேண்டியதெல் லாம் தானஞ்செய்வதுடன் அத்தா னத்தைத் தான் சொல்லிக் கொள் ளாமலும் இருக்கின்றானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடு கின்றான்.
அத்தியாயம் 37
விட்டுமன், கண்ணன் ஆகியோர் விளக்கியுரைத்த அறிவுரைகளுக்குப் பின்னர்ப் பாண்டவர்கள் அஸ்தினா புரத்திற்கு வருகிறார்களாம். அவர்கள் வரும்பொழுது, அந்த நகரத்துப் பெண்கள் நாணத்துடனும் பொறாமையுடனும் பார்த்துக் கூறியதைக் கேளுங்கள்
ஓ! பாஞ்சாலி! மஹரிஷியை அடைந்து விளங்கும் கவுதமியைப் போல புருஷர் களில் மிகச் சிறந்த இப்பதிகளை யடைந்து விளங்கும் நீயே பாக்கியமுள் ளவள். கல்யாணி! உன் காரியங்கள் பழுதில்லாதவை. உன்னுடைய தவமே தவம் என்றுகொண்டாடினார்கள்.
அய்ந்து பேரைக் கணவர்களாகக் கொண்ட பாஞ்சாலியின் தவமே தவம மாம். அசுதினாபுரப் பெண்களுக்கிருந்த ஏக்கத்தைக் கவனியுங்கள். ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்களும் மகிழ்ந் திருக்கக் கூடும். அவர்களுடைய  பெற் றோரோ கண்வன்களோ ஒப்பவில்லை போலும். இதில் மற்றொரு செய்தியைக் கவனியுங்கள்.. முனிவன் ஒருவனின் மனைவி கவுதமியை ஒப்பபிட்டுப் பேசியதிலிருந்து கவுதமிக்கும் பல கணவன்களோ என எண்ணத் தோன்று கிறது.
- பெங்களூரு
முத்து.செல்வன் 
   -விடுதலை ஞா.ம.,11.10.14

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு (3)


- பெங்களூரு
முத்து.செல்வன்


அத்யாயம் 38:
தருமனைப் பார்த்துக் கண்ணன் எப்போதும் எனக்கு இவ்வுலகில் பிராமணர்கள் பூஜிக்கத்தக்கவர்கள். இவர்கள் விசேஷமாக அனுக்ரஹசக்தி யுள்ளவர்களும் வாக்கில் விஷம முள்ளவர்களுமான பூமியில் சஞ்சரிக் கும் தேவர்களாவார்கள் என்று கூறு கிறான்.
அதாவது இப்புவியில் பார்ப்பனர் களைத் தவிர ஏனையோர் குறுமனத் தார் (விஷமமுள்ளவர்கள்) இதிலிருந்து கண்ணனுக்கு உகந்தவர்கள் பார்ப் பனரே என்பதைக் கண்ணனே தெளி வாக்கிவிட்டான். சூத்திரர்கள் ஜன் மாஷ்டமி. கோகுலாஷ்டமி கொண் டாடிக் கண்ணனை மகிழ்விக்கலாம் என்று எண்ணுவது செல்லாது என்பது தெளிவாகிறது. யாதவகுல ஸ்ரேஷ்ட என்று புகழப்படுபவனுக்கு யாதவர் களும் உகந்தவர்கள் அல்லர் போலும்.
அத்யாயம் 55: ராஜதர்மம் தொடர்ச்சி- விட்டுமனின் அருளுரை
யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்துவரும் பிராமணன் வேதாந்த மறிந்தவனாயினும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும் என்ற் சுக்கிராச்சாரியார் சொல்லியிருந்தாலும்,  ஓ! நரஸ்ரேஷ் டனே! இவ்விதமிருந்தாலும், பிராமணர் களை ரக்ஷிக்கவே வேண்டும். குற்ற வாளிகளும் தோஷத்தால் விலக்கப் பட்டவர்களுமான அவர்களை அரசன் அடிக்காமல் தன் தேசத்தைவிட்டு விலக்க வேண்டும். நரபதியே! பிரம் மஹத்தி, ப்ருணஹத்தி (ஸாங்கமான வேதத்தைக் கற்ற பிராம்மணனைக் கொன்ற பாவம்), குருதாரத்தைச் சேரு தல், அரசனைப் பகைத்தல், இவ்வித குற்றமுள்ள பிராமணர்களையும் அரசன் தேசத்தைவிட்டு விலக்க வேண்டுமே தவிர அவர்களுக்குச் சரீரத் தண்டனை விதிப்பது எப்பொழுதும் நீதியாகாது.
அத்யாயம் 59:  ராஜதர்மம் தொடர்ச்சி  விட்டும  நான்கு ஜாதி தர்மங்களை கூறல்
பிராமண ஜாதியின் தர்மத்தை உனக்குச் சொல்கிறேன். அதில் முதல் ஆஸ்ரமியான வடுவின் (பிரம்மச்சாரி) ஸனாதன தர்மம், அடக்கம். வேதமோது தல், ஓதுவித்தல் இம்மூன்றிலும் முடிவுறும்.
பிராமணன் மற்றதைச் செய்யா விட்டலும், வேதமோதுதல் ஒன்றால் தர்மம் நிறைந்தவனாகின்றான்.. வாங்கிக் கொள்ளுதலும் யாகம் செய்வித்தலும் ஓதுவித்தலுமின்றித் தானம், யாகம், வேதம் இவைகளை முறையே கொடுப்பது செய்வது ஓதுவது இம்மூன்று மட்டும் அரசர்களின் தர்மமாகும். கல்விகளைக் கற்று யாகங்களையும் செய்து யுத்தத்திலும் ஜயம்பெற்று விளங்கும் அரசர்கள் க்ஷத்திரியர்களில் உத்தமர்களாவார்கள்.
சாஸ்வதமான வைஸ்யர்களின் தர்மத்தையும் உனக்குச் சொல்லு கிறேன். தானமும் அத்யயனமும் யாகமும் அசுத்தமின்றிப் பொருள் சேர்ப்பதும், தந்தையானவன் மகனைப் பார்ப்பது போலப் பசுக்களைக் கவனித்தலும் வைசியரின் தர்மமாகும். இவையன்றி வேறு எவ்வித கர்மமும் வைஸ்யனுக்குத் தர்மமாகாது
பார்த்தேன! சூத்திரனுடைய தர்மத் தையும் உனக்குச் சொல்லுகிறேன். பிரம்ம தேவர் மேற்சாதிகளுக்குப் பணி விடை செய்யக்கருதிச் சூத்ரனைப் படைத்தபடியால் மேற்குலத்தோரின் பணிவிடை அவனுக்குத் தர்மமென விதிக்கப்படுகிறது. சூத்ரன் அஸூயை யின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தால் பெரிய ஸுகம் பெறுவான். சூத்ரன் எந்தக் காலத்திலும் எவ்விதத்திலும் பொருளைச் சேர்க்கக் கூடாது. தாழ்ந்த பிறவியான அவன் தனமடைந்தால் மேன்மக்களைத் தன்னுள்ளடக்க முயல்வான்.  மூன்று வருணத்தாரும் சூத்திரனைப் போஷிக்க வேண்டும். ஊழியஞ்செய்யும் சூத்திரனுக் குப் பழைய குடை, விசிறி, பாதுகை விலாமிச்சந்தட்டி, தமக்கு உடுத்தத்தகாத கிழிந்த ஆடைகள் ஆகிய இவைகளை த்விஜாதிகள் அளிக்க வேண்டும். இந்த வஸ்துக்களே தர்மப்படி அவனுடைய தனமாகும்.. த்விஜாதியினர்  அதாவது இரு பிறப்பாளர் தாம் பயன்படுத்தி இனியும் தம்மால் பயன்படுத்த இயலாத பொருள் களைச் சூத்திரனுக்கு அளிக்க வேண்டு மாம். அவர்கள் எந்தவிதத்திலும் பொருள் சேர்க்ககூடாது என்பதால் அவர்கள் தாமாகவே புதியதாக எதனை யும் வாங்கிட இயலாது.; வாங்கவும் கூடாது.
அத்யாயம் 60, 61
பிராமணர்களுக்கு வானப்பிரஸ்தம், ஸந்யாஸம், கார்ஹஸ்த்யம், பிரம்ம சரியம் என்று பிரம்ம தேவரால் சொல் லப்பட்ட நான்கு ஆஸ்ரமஙகள் உண்டு. .. அவைகளை மற்ற மூன்று வர்ணத்தார் களும் அடையத்தக்கவர்களல்லர் க்ஷத்தரியர்களுக்குரிய பிரவிருத்தி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கர்மங் களையும் வைசிய சூத்திரர்களுக் குக்குள்ள கர்மங்களையும் புத்திக் குறைவால்  செய்யும் பிராமணன் இவ்வுலகத்தில் இகழ்ச்சியடைந்து பரலோகத்திலும் நரகத்தை அடைவான்.
**இன்றைய நாளில் சூத்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை பார்ப்பனர்களைக் கொண்டு செய்வித்து அவர்களை நரகத்திற்கு அனுப்பு கிறார்கள். அவர்களும் வரப்போகும் நரகத்தைப் பற்றிக் கவலை கொள் ளாமல் இன்றைக்குக் கிடைக்கும் பணத்திற்காக வைசிய  சூத்திரர்களுக்கு கர்மாக்களைச் செய்கிறார்கள்.
அத்யாயம் 62 விட்டுமனின் அருளுரை தொடர்ச்சி வில்லில் நாணை இழுப்பதும் சத்ருக்களை அடிப்பதும் கிருஷியும் வர்த்தகமும் பசுக்களைக் காப்பதும் பணத்துக்குப் பணிவிடை செய்வது மாகிய இவை யாவும் பிராமணனுக்கு அகார்யமாகும்.
அரசனிடத்தில் ஊழியமும் வர்த்தகத் தால் ஜீவிப்பதும் விவஸாயஞ்செய்து பொருளீட்டுதலும் வஞ்சகமும் வியாபா ரஞ் செய்வதும் பிராம்மணனுக்கு மிகவும் நிந்திக்கப்பட்டன
**இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப்பனர்கள் உடல் உழைப்பில்லாமல் நோகாமல் வேதமோதிக் கொண்டே  மற்றவர் உழைப்பை உறிஞ்சி வயிறு வளர்க்க வேண்டுமென்று  தங்களுக்குத் தாங்களே பிரம்மாவின் பெயரால் விதித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.
தர்மத்தை விரும்பும் உலகங்கள் யாவும் பிராமணனையும் க்ஷத்திரி யனையும் வைசியனையும் அடுத்திருக் கின்றன. ஆகையால், தன் ஜாதிக்குரிய தர்மஙக்ளில் நிலைத்திருக்கும் ஜனங் களை விஷ்ணு பகவான் கைவிட விரும்பார்
**எனவே மக்கள் தங்களை விட்டுணு கைவிடாமல் இருக்க வேண்டுமானால் அவரவர்களின் சாதிகளுக்க்கு வேதங் களால் விதிக்கப்பப்டட அறங்களை மேற்கொண்டு ஒழுக வேண்டும்.
அத்யாயம் 72
இந்த அத்யாயத்தில் நான்கு சாதிகளின் பிறப்பு விளக்கப்படுகிறது. ஏற்கனவே நன்கறியப்பட்ட செய்தி என்பதால் அதில் உள்ள மற்ற செய்தி களைப் பார்ப்போம். பிராமணன் பிறக்கும்போதே எல்லாப் பிராணிகளுக்கும் ஈசனாயும் தர்மெமென்னுங் கோசத்தை ரக்ஷிக்கச் சக்தி பெற்றவனாயும் பிறக்கிறான். இவ்வுலகில் காணப்படும் பொருள னைத்தும் தர்மத்துடன் சேர்ந்த நற் காரியமும் பிராமணனுக்குச் சேர்ந்த தாகும்.. இது பிரம்மதேவரின் கட்டளை. இப்பூமியிலுள்ள பொருள், தான்யம், ஸுவர்ணம், ஸ்த்ரீகள், ரத்தினங்கள், வாகனம், மற்றுமுள்ள சிறந்த மங்கள த்ரவியங்களாகிய பொருள்கள் யாவும் முதலில் பிறந்த காரணத்தாலும் உத்தமப் பிறவியாகையாலும் பிராமண னைச் சேர்ந்தன என்று தர்மமறிந் தோர்கள் அறிவிக்கிறார்கள்  பிரா மணன் எல்ல ஜாதிகளுக்கும் குருவாக வும் முதலில் பிறந்தவனாகவும் உத்த மனாகவும் ஆகிறான். இக்கூற்று வாயு பகவானால் புரூரவஸுக்குக் கூறப்பட்ட தென விட்டுமன் கூறியதாக உள்ளது.
நால்வர்ணம் என்பது பிறப்பினால் வருவதன்று; அவரவர் செயல்களாலும் குணங்களாலுமே தீர்மானிக்கப்படுவ தாகப் பின்னாளில் சில ச்ம்ருதிகள் கூறினாலும்.  அது தவறு என, பிதா மகரான பீஷ்மரே கூறிவிட்டார்.. இன்னும் சூத்திரர்களுக்கு உறைக்க வில்லை. உலகதில் உள்ள மற்ற பொருள் களுடன் பெண்களும் (ஸ்த்ரீகள்) பார்ப்பனர்களுக்கு உரியராம். பெண்கள் பொருள்களுடன் வைத்து மதிப்பிடப் பட்டுள்ளார்கள்.
 -விடுதலை ஞா.ம.,18.10.14

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு (4)


- பெங்களூரு முத்து.செல்வன்
அத்யாயம் 73. கசுபர் கூற்றாக விட்டுமன் கூறிய தர்மம்
க்ஷ த்ரியன் பிராமணனை விரோதிப் பானாகில் அந்த க்ஷத்ரியனின் ராஜ்யம் நாசமடையும். அவ்வித விரோதத்தால் திருடர்கள் பலமடைவார்கள். ஸாதுக் கள் பிராமணர்கள் விரோதிக்கும் க்ஷத்ரியனைக் கெட்ட ஜாதியிலுண் டானவனென்று அறிகிறார்கள். பிராமணனை விலக்கிய இவ்வித க்ஷத்ரியர்களுக்கு வேதமும் ஸந்ததிகளும் வளரமாட்டா. இவர்களுடைய பசுக் களும் நாசமடையும். இப்படி மிரட்டல் தொடர்கின்றது.
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மிரட்டல் வழியைக் கடைப் பிடித்திருக்கிறார்கள் எனபது தெளிவாகின்றது.
அத்யாயம் 78 பிராமணர்கள் ஆபத்துக் காலங் களில் கைக்கொள்ள வேண்டிய விதி விலக்குகளைக் கூறுகிறார்.
க்ஷத்ரியர்களின் தர்மப்படி ஜீவிக்க முடியாமல் மிக்க துன்பத்தால் பிழைப் பில்லாத ஸமயத்தில் பயிர் செய்தல் பசுக்காத்தல் என்னும் வைஸ்யத் தர்மத் தாலும் பிராம்மணன் ஜீவனஞ் செய்யலாம்
அத்யாயம் 62 இல், வில்லில் நாணை இழுப்பதும் சத்ருக்களை அடிப்பதும் கிருஷியும் வர்த்தகமும் பசுக்களைக் காப்பதும் பணத்துக்குப் பணிவிடை செய்வதுமாகிய இவை யாவும் பிராமணனுக்கு அகார்யமாகும் என்றும் அரசனிடத்தில் ஊழியமும் வர்த்தகத் தால் ஜீவிப்பதும் விவஸாயஞ்செய்து பொருளீட்டுதலும் வஞ்சகமும் விய பாசாரஞ் செய்வதும் பிராமணனுக்கு மிகவும் நிந்திக்கப்பட்டன என்றும் கூறிய விட்டுமன் 78ஆவது அத்யா யத்தில் தடுமாறுவதையும் வழுக்கு வதையும் எண்ணிப்பாருங்கள். தங்கள் பிழைப்புக்காக எப்படியும் வளைந்து கொடுக்கலாம் என்பது உணர்த்தப் படுகிறது. இதைப் போன்றே சாந்தி பர்வத்தில் பல இடங்களில் வழுக்கல் களையும் முரண்களையும் காணலாம். மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ
காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன் சிலரைக் காயேனென்னுமோ
வாழ்நான்கு ஜாதிக் குணவுநாட்டிலும்
கீழ்நான்கு ஜாதிக் குணவுநாட்டிலுமோ
திருவும் வறுமையுஞ் செய்தவப்பேறும்
சாவதும்வேறிலை தரணியோர்க்கே
குலமுமொன்றே குடியுமொன்றே
இறப்புமொன்றே பிறப்புமொன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினு மிரப்பவர்க்கிட்டுப்
புலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில் நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணு மல்ல்லதயுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப்படாது
சிறப்புஞ் சீலமு மல்லது பிறப்பு
நலந்த்தருமோ வேதியீரே! என்பது கபிலரின் பாடல்.
பகவத் கீதையின் உண்மையான கருவான உள்ளீட்டை, கீதையின் மறுபக்கம் நூலில் ஆசிரியர் வீரமணி அவர்கள் ஆய்ந்தறிந்த சான்று களுடனும் பல்வேறு அறிஞர்களின் ஆய்வுரைகளுடனும் தெளிவாக்கி யுள்ளார்.
நீதியரசர் தவே வலியுறுத்தும் மகா பாரத தர்மத்தின் உண்மை நிலையை உணர்வோம். தவே புதியதாக ஒன் றையும் கூறிடவில்லை. ஏற்கனவே ஆர். எஸ்.எஸ். மூலவர்கள் காலங்காலமாகக் கூறிவருவதைத்தான் கூறியுள்ளார்.  பாடத் திட்டத்தில் சமற்கிருதத்தைத் திணிப்பதும் வேத  தொன்மக் கருத் துக்களையும் புகுத்தி, சனாதன தர் மத்தை இந்தியாவின் ஒரே பண் பாடாக்கி, சமற்கிருதத்தை நாட்டு மொழியாக்கி, இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ராவாக ஆக்குவதுதான் குறிக் கோள்.
வி.டி.சவார்க்கர் பூவியியத் தேசியத் தைப் புறக்கணித்துவிட்டு, பண்பாட்டு,த் தேசியத்திற்குச் செல்லுவதை பாரீர்:
இந்துக்களாகிய நாம் பொதுவான தந்தை நாட்டவர்கள் என்ற அடிப் படையில் மட்டும் இணைக்கப்பட வில்லை. நமது ரத்த நாளங்களில் பொதுவான ரச்த்தமே ஓடுகிறது. அதுவே நம் இதயத்தைத் துடிக்கச் செய் கிறது. நமது உணர்வுகளை இதயமாக வைத்திருக்கிறது. நம்முடைய பொது வான கலாச்சாரமான இந்துக் கலாச் சாரத்திற்கு நாம் செலுத்தும் மரி யாதையே நம்மை இணைக்கிறது. இந்துக் க;லாச்சாரத்தின் மொழியாக சமச்கிருதமும், இந்திக் கலாச்சாரத்தின் மறுபெயராக சம்ஸ்கிருதியும் உள்ளன. சமஸ்கிருதம் மொழிவடிவில் நமது இந்து உணர்வையும் கலாச்சாரத்தையும் அரணாக இருந்து பாதுகாத்து வரு கிறது. நாமெல்லாம் ஒன்றுபட்டிருக்கி றோம். ஏனெனில், நாமெல்லாம் ஒரே நாட்டவர்; ஒரே இனத்தவர்; ஒரே சமஸ்கிரித கலாச்சாரத்தினர்.
(ஏ.ஜி.நூரணி, சவார்க்கரும் இந்துத்துவமும். பக்78.)
இன்றைக்கு, தவேயும் உயர் கல்வி  மனிதவள மேம்பாட்டு  அமைச்சரும், சங் பரிவாரங்களும் கூறி வருவதை, அதாவது இந்துத்துவத்தை பாடத் திட்டதில் திணிப்பதற்கான முயற்சியை வாச்பேயி அரசு மேற்கொண்டது.  ஆர்.எஸ்.எஸ்.இன் அடிப்படைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திட அவ் அரசின்  மாந்தவள மேம் பாட்டுத் துறை  பண்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோசி முனைந்து நின்றார். அவருடைய நோக்கம் 4 இந்திமயம், தேசியமயம், ஆன்மிக மயம் என்று சொல்லத்தக்க வகையில் கல்வித்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டு,.
  • தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள் வரை, படிப்புக்கான காலத்தில் 10 முதல் 25 விழுக்காடு வரை இந்தியப் பண் பாட்டைக் கற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.
  • மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமற்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
  • சமற்கிருதப் பல்கலைக் கழகங் களை நிறுவிட வேண்டும்.
  • வேதங்களும் உபநிசத்துக்களும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
  • அனைத்து பள்ளிகளிலும் எல்ல வகுப்புகளிலும் நீதி போதனை, ஆன் மிகக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • உயர் கல்வியில் அனைத்துப் படிப்புகளிலும் இந்தியத் தத்துவம் என்னும் பாடம் இடம்பெற வேண்டும்.
  • வீட்டை பேணல் என்பது எல்லாப் பெண்களுக்கும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்பன வாக இருந்தது.
அதற்காகக் கூட்டப்பட்ட கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நாட்டுப் பாடலுடன் சரசுவதி வணக்கம் பாடப் பட்டதற்கு எதிர்ப்பும், ஆர்.எஸ்.எஸ் காரர் மாநாட்டைத் தொடங்கி வைப் பதற்கும் இந்துத்துவப் பாடத் திட் டத்துக்கும் கடும் எதிர்ப்பு  எழுந்தது. எதிர்ப்பைச் சந்திக்க இயலாத நிலையில் இந்துத்துவப் பாடத் திட்டத்தைக் கைவிடுவதாக உறுதி அளித்த பிறகு தான் மநாடு நடந்தது. (இந்துத்துவ கல்விக் கொள்கை தேவையா?, தந்தை பெரியார்.கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, 1998;பக் 59,60) இந்துத்துவப் பாடத்திட்டத்தையும் இந்துத்துவக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வது அறிவைத் தடுப்பது ஆகும்
இந்துத்துவ என்பது மனித நேயத்திற்கு எதிரானது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அறிவு, கல்வி மானம்  இவைகளுக்கு எல்லாம் இந்துத்துவா என்பது விரோத மானதாகும். ஆகவேதான் நாங்கள் சொல்லுகின்றோம்  கைகளிலே இருக்கும் விலங்குகளை மாத்திரம் நாம் உடைத்தால் போதாது..  அரசியலிலே விடுதலை பெற்றால் மட்டும் போதாது. காலிலே உள்ள விலங்குகளை மட்டும் உடைத்தால் போதாது. அதை எல்லாம்விட மிகவும் ஆபத்தானது மூளையிலே போடப்பப்பட்ட விலங் குகள். அவை உடைக்கப்பட வேண்டும். மூளையிலே போடப்பட்ட விலங்குகள் தான் பண்பாட்டுப் படையெடுப் பினாலே போடப்பட்ட விலங்குகள். அதை உடைக்கக்கூடிய சம்மட்டி எதுவென்றால் அது பெரியார் என்ற சம்மட்டி. அந்தச் சம்மட்டியால் தான் அதை உடைக்க முடியும்.. (கி.வீரமணி, மேலது பக்48)
2.11.1998 அன்று திருச்சியில் இந்துதுவாக் கல்விக் கொள்கை  இரா வணன்  இராமன் என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் அன்றே ஒர் எச்சரிக்கையை விடுத்தார். ஆரியச் சூழ்ச்சிகளைப் பற்றி நன்கு உணர்ந்திருந்தமையால் அவர்,  இளைஞர்களே! மாணவ நண்பர்களே! நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது இந்த்துத்துவா முறியடிக் கப்பட்டுவிட்டது என்று நினைக்கா தீர்கள். தற்காலிகமாக அடி வாங்கிய நல்ல பாம்பு பொந்துக்குள்ளே ஓடி ஒளிந்திருக்கின்றது. அது முழுமையாக சாகும்வரை விடக்கூடாது. ஆகவே, நீங்கல் தொடர்ச்சியாகக் கவனத்துடன்  காவலுடன் இருக்க வேண்டும். அத் தோடு விழிப்புடனும் இருக்க வேண் டும். (மேலது; பக் 49) என்று தொலை நோக்கோடு கூறினார்.
கல்வியிலாக்காவில் எப்பொழுது பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறதோ அப் பொழுதுதான் கல்வியிலிருந்து பார்ப் பனீயத்தை ஒழிக்க முடியும். இல்லாத வரையில் இன்னும் பன்னூறாண்டு களுக்குப் பார்ப்பனீயம் ஆதிக்கம் செலுத் தும் என்பதில் அய்யமில்லை தந்தை பெரியார், (விடுதலை 17.05.1945)
மகாபாரதம், பகவத் கீதை, இராமா யணம், வேதங்கள், உபநிசத்துக்கள் ஆகியவற்றைக் கல்வித்திட்டத்தில் இணைக்க விரும்புகின்றவர்கள் அவற் றுள் பொதிந்துள்ள உட்கருத்துகளை நடைமுறைப்படுத்தி இந்துத்துவக் கொள்கைகளைத் திணிப்பதற்காகவே என்பதுதான் உண்மை நிலை.
(நிறைவு)
 -விடுதலை ஞா.ம.,25.10.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக