திங்கள், 9 நவம்பர், 2015

பூசாரிகளின் யோக்கியதை!

இந்துமத அறக்கட்ட ளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக் கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.
நாங்கள் தேசத்தின் பல்வேறு  பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.
பொருளறியாத புலம்பலே மந்திரம்!
அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.
தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.
சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?
ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தெய் வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.
-விடுதலை,2.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக