செவ்வாய், 10 நவம்பர், 2015

பக்தர்கள் பதறாமல் சிந்திப்பார்களா?



- கலி.பூங்குன்றன்
ஆண்டவனைத் தரிசிக்கப் போன வர்கள் அலறினார்கள்! கடவுள் கடாட்சத் துக்காக வேண்டி ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டிப் பயணம் செய்த பக்தர்கள் பதறினார்கள்.
யாத்திரை சென்றவர்கள் பல லட்சம்; பலியானவர்கள் பல்லாயிரம் என்னும் கொடுஞ் செய்தி மண்ணையே உலுக்குகிறது.
பிணங்கள்ஆற்றில் அடித்துச் செல்லுவதை நேரில் பார்த்தோம். எங்களைச் சுற்றி எங்கும் பிணங்கள்! பிணங்கள்!!. பிணங்கள் மீதே படுத்துக் கிடந்தோம்! எங்கள் உடைமைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து இழுத்துக் கொண்டே போயின!
பிணங்கள்மீது இருந்த துணிமணி களைப் பறித்து நாங்கள் உடுத்திக் கொண்டோம்!
குருதியை உறையச் செய்யும் செய்திகள் கொத்துக் கொத்தாக! ஒவ்வொரு நாளும் வடக்கே கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்றவர்களின் நிலைதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக ஏடுகளைப் புரட் டினாலும், தொலைக்காட்சிப் பெட்டி களைத் திருகினாலும் அலை அலையாக இந்த அவலச் செய்திகள்தான்.
சிவனின் சடையிலிருக்கும் கங்கை நதியே கரை புரண்டு மக்களைக் காலி செய்து விட்டது -_ ஏன் சிவன் கோயில் களையே மண்மூடச் செய்துவிட்டது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளுக்கு மக்கள் பக்தர்கள் தலை வைத்துப் படுக்க முடியாதாம்.
ஏனிந்த நிலை? வானிலை அறிக்கை கள்முன் கூட்டியே அறிவிக்கப்ப டவில்லையா? இதற்குமுன் எந்தக் கால கட்டத்திலும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் மொழியில் ருத்ரதாண்டவம் நடைபெற்றது ஏன்?
சுற்றுச்சூழல் பாதிப்புதான் இதற்குக் காரணம் என்று அறிவியலாளர் சொல்லுகிறார்கள். காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் புதிது புதிதாகக் கட்டப்படுகின்றன. மலைகளை உடைத்து மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தியாதி _- இத்தியாதி இயற்கை அழிப்பால் ஏற்பட்ட இழப்பு என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானம் பகர்கிறது.
இதற்கிடையே பக்தி வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பதற்றம் _ பகீர் என்று கலக்கம்.
யாத்திரை சென்ற இடங்களில் உள்ள பகவான்கள் பற்றிக் கட்டுக்கட்டாக பிர தாபங்கள் அள்ளிவிடப்பட்டுள்ளனவே. அவற்றை நம்பித்தானே பக்தர்கள் படையெடுக்கின்றனர். கிழடுகள் கூட அல்லவா கிளம்பி விட்டனர்.
பாவங்களை - எல்லாம் கரையேற்ற பகவானைத் தேடியல்லவா சென்றுள்ளனர். பகவான் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தம்மை நாடி வந்த பக்தர்களையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை.
மக்கள் உயிர் இப்படி மலிவாகப் பறி போனது கண்டு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் பதைபதைக்கின்றனர்.
இல்லாத கடவுளை நம்பி இன்னு யிரை இழந்து விட்டனரே என்ற எண் ணம் நம் நெஞ்சங்களை அழுத்துகிறது.
தன் காலை முதலை கவ்வியபோது ஆதிமூலமே! என்று கஜராஜனாகிய யானை அலறியபோது, பறந்தோடி வந்து சங்கு சக்கரத்தை ஏவி முதலையைக் கொன்று தன் பக்தனான யானையைக் காப்பாற்றினான் விஷ்ணு என்றெல்லாம் எழுதி வைத்துள்ளனரே
துரோபதையின் மானத்தைக் காப்பாற்ற பீஸ்பீஸாகத் துணிகளை வழங்கிய கிருஷ்ண பகவான் உத்தரகாண்டில் ஆடைகளை இழந்து அம்மணமாக நின்றவர்களுக்கு ஆடைகளை வழங்கிட ஓடி வரவில்லையே ஏன்?
எத்தனை எத்தனை அவதாரம் எடுத்து தன் பக்தர்களை எல்லாம் பகவான் காப்பாற்றினார் என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து வைத்துள் ளனரே _- அந்தப் பகவானின் பாதார விந்தங்களைத் தேடிப் பக்திப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் எல்லாம் பதறப் பதற மாண்டு மடிந்துள்ளனரே -_ அந்த மகேசுவரன்கள் எல்லாம் உதவிக் கரம் நீட்டவில்லையே! இராணுவ வீரர்கள் தானே தங்கள் உயிரையும் பணையம் வைத்து உதவிக்கு ஓடோடி வந்து பல்லாயிரக்கணக்கான பகத்ர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த நிலையில் உயிருக்கு இறுதி கெடு வந்த நேரத்தில் எத்தனை எத்தனைக் கடவுள்களை அழைத்திருப்பார்கள்? எத்தனைக் கோவிந்தாப் போட்டு இருப்பார்கள்.
எத்தனை சிவசிவா குரல் கொடுத் திருப்பார்கள்? கேதார்நாத்தில் குடிகொண் டிருந்த கடவுள் கேளாக் காதினனாக இருந்தது ஏன்? பத்தரிநாத் பகவான் பார்வை பக்தர்கள் பக்கம் பாய மறந் ததேன்? கங்கோத்ரி கடவுள் தன் கடாட் சத்தைக் கொட்டாமல் எங்கே போனான்? யமன் வந்து தன் பக்தர்களைப் பாசக் கயிறு போட்டு இழுத்தபோது யமு னோத்ரி ஈசன் எங்கு சென்றான்? எங்கு சென்றான்? இந்தக் கேள்விகளைப் பகுத்தறிவுவாதி எழுப்புவது எதையும் குத்திக் காட்டி ஆனந்தமாய்த் துள்ளிக் குதிக்கவல்ல.
பக்தி என்னும் பெயரால் பகுத்தறிவை இழந்ததால் இப்படிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதாபமாக மாண்டு போனார்களே, -இவற்றைப் பார்த்த பிறகா வது நம் மக்களுக்கு நல்ல புத்தி வராதா? வரக் கூடாதா? என்ற நல்லெண்ணத்தின் உந்துதலால் தான் எழுதுகிறோம் - நிகழ்வுகள் தரும் நெற்றியடிப் பாடங் களைப் படிக்கத் தவறினால், இன்னும் என்னென்ன இழப்புகளை எதிர்காலத்தில் சந்திக்க நேருமோ என்ற தொலை நோக்கோடு எழுதப்படுபவைதான் இவை.
கொண்டாட்டத்தோடு அல்ல _- குமுறும் நெஞ்ச அலைகளின் துயரக் குரல் இவை.
இதற்கு முன்பும் கூட இதுபோன்ற இழப்புகள் துயரங்கள், விபத்துகள் நடந் திருக்கின்றன.
அவற்றிற்குப் பிறகும்கூட இந்தப் பக்திப் பிடியில் சிக்கிய மக்கள் திருந்திய பாடில்லையே என்று தீராத வேதனையின் வெளிப்பாடுதான் இவை.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை இப்பொழுதாவது உணர வேண்டாமா என்ற வேண்டுகோள்தான் இந்த எழுத்துகளுக்கு அடிப்படை!
சர்வசக்தி என்பதும் சர்வப் பொய்; தயாபரன் என்பதும் தரை மட்டமான பொய்; கடவுளை நம்பினால் கைவிட மாட் டான் என்பது கடைந்தெடுத்த பொய் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட் டினாலாவது சுதாரித்துக் கொள்ள மாட் டார்களா? என்ற நல்லெண்ணத்தோடு கூறப்படுவதுதான் இது.
சிலைகளை வணங்குவது சீலமா?
திக்குவாய் குறைதீர திருப்பந்துறை முருகப் பெருமான். (மதுரை மணி 10.11.2007).
கணித அறிவை மேம்படுத்த இன்னம்பூர் இறைவன். (குங்குமம் 3.5.2007).
குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி (நெல்லையில்).
திருமணம் கைகூட திருவீழிமிழலை  அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) (தினத்தந்தி இலவச இணைப்பு - 27.7.2010).
வழக்குகளில் வெற்றி பெற சொல்லங்கு வெட் டுடையார் காளிகோயில் சிவகங்கை. (ராணி 16.5.2010).
வீடு கட்ட உதவும் கடவுள் -_ திருப்புகழூர்.
அக்னீஸ்வரர் (குங்குமம் 16.7.2009).
இழந்த பொருளைப் பெற - தஞ்சபுரீஸ்வரர் கோயில் _ திருவையாறு (தினத்தந்தி ஆன்மீக மலர் 26.2.2010).
இப்படியெல்லாம் ஏடுகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன; ஆன்மீக சிறப்பு இதழ்களில் வண்டி வண்டியாக எழுதித் தள்ளு கிறார்களே இவையெல்லாம் உண்மைதானா?
கடன் தீர்ப்பதிலிருந்து கல் யாணம் ஆவது வரை குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று கும்பிடு தண்டம் போடுவதன்மூலம் நிறை வேறும் என்றால் மனித முயற்சிக்கு இடம் உண்டா? அரசுகளின் தேவைதான் என்ன?
இப்படி எல்லாம் நம்பி கோயில் கோயி லாகச் சென்று கண்ட பலன் என்ன? உத்தரக் காண்டில் உள்ள கோயில்களுக்குச் சென் றவர்களும் இவை களுக்கு மேலான எதிர் பார்ப்புப் பேராசை களுடன் தானே?
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது பக்திக்கும், அனுப வத்துக்கும் ஒவ்வாததை ஒருக்காலும் நம்பிப் பின்பற்ற மாட்டான். கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அனேக மாய் பேராசையினாலும், பயத்தினா லும் ஏற்படுகிறதேயல்லாமல் உண்மையைக் கொண்டதன்று
என்று கூறும் தந்தை பெரியாரின் சிந் தனை இந்த விடயத்தில் துல்லியமானதே!
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத் துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்ப மாட்டான் (விடுதலை 17.10.1962) என்றும் தந்தை பெரியார் கூறினார்.
கோயில் கோயிலாக திரிபவர்கள் நேர்த்திக் கடன்களைக் கழிப்பவர்கள் மனத்தில் இருப்பதெல்லாம் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்; மக்கள் எல்லாம் சுபீட்சமாக வாழ வேண்டும் என்றா வேண்டுதல் செய்கிறார்கள்? மாறாக தான் தனது குடும்பம் இவற்றின் நலன் எனும் பேராசையைத் தாண்டி இருப்பதில்லையே! இதனைத் தான் தந்தை பெரியார் மிகக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கோயிலுக்குச் செல்லுவது -_ சிலை களைக் கும்பிடுவதில் கூட ஆன்மீகத் துக்குள்ளேயே பல்வேறு கருத்துகள் உண்டு.
உத்தர கீதை
அக்நிரதேலோத் விஜாதீநாம்
முநிநாம் ஹிருதிதைவதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸமதர்சிந
பொருள்: துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம். ஸ்கந்தபுராணம்
ஞானயோக காண்டம்
நாடி சத்திராத்தியம்
தீரத்தே தாதையக்ஞே
காஷ்டே பாஷாணகேபதா
சிவம் பஸ்யதி
மூடாத்மாசி லோதே ஹெபர் திஷ்டித
மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும் தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும் கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக்கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக்கிறார்.
சாகதபலசன சுலோகா
அபஸுதேலாப நீஷநாம்
காஷ்டலோஷ்ட்டேஷீ மூடாராம்
யுக்தஸ் யாத்மநி தேலதா
சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில்; சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில்; முட்டாள்களுக்குத் தெய்வம் கல்லிலும், கட்டையிலும்; யோகி களுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே
மகா நிர்வாணா
எவம்குணா நுஸாரேண ரூபாணி
வவிதாநி சக்ல பிதாநி
ஹிதார்த்தாய பக்தாநி
அல்பமே தஸாம்
இவ்வித குணங்களை யனுசரித்துப் பலவித உருவங்கள் அற்ப புத்தியுடை யவர்களுக்காகக் கற்பிக்கப்பட்டன.
வால்மீகர் சூத்திரஞானம்
தாளென்ற உலகத்தில் சிறிதுபேர்கள் சடைப்புலித்தோல் காஷாயம் தாவடம்பூண்டு
ஊளென்ற சிவபூசை தீட்சையென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோமென்பார்
கானென்ற காட்டுக்குள்ளே அலைவார்கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே
நில்லென்ற பெரியோர்கள் பாஷையாலே
நீடுலகம் தனக்குள் நாலுவேதம்
வல்லமையாம் சாஸ்திரங்கள் இருமூன்றாக
வயிறு பிழைக்கப் புராணங்கள் பதினெட்டாகக்
கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந்தங்கள்
காட்டினர் அவரவர் பாஷையாலே
தொல்லுலகில் நாற் சாதி
அநேகஞ்சாதி தொகுத்தார்கள்
அவரவர்கள் பிழைக்கத்தானே
சிலை வணக்கம் என்பதுபுத்தி குறைந்தவர்களுக்குத்தான் என்று ஆன்மீக சாத்திரங்களே கூறு கின்றனவே!
உத்தரகாண்டுக்கும் இமய மலையின் அடிவாரத்துக்கும் செல்லுவது - கேதார்நாத் பத்ரிநாத் என்று யாத்திரை சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ள கோயில் களில் உள்ள சிலைகளைக் கும்பிடுவது எல்லாம் அற்பப் புத்தியுடையது என்று கூறப் பட்டுள்ளதே இதற்கு என்ன பதில்?
இந்த சாத்திரங்கள் சமாச்சாரங்கள் எல்லாம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் எழுதி வைத்தது இல்லையே! ஆன்மீக கொழுந்துகள் தானே எழுதி வைத்துள்ளார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் துவிஜாதி என்று கூறப்படும் பூணூல் மேனிகளான பார்ப்பனர்களுக்குக் கட வுள்கள் அக்னிதானே - அப்படி இருக்கும் போது இவர்கள் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை தேவை!
பக்தர்களைப் பகவான் காப்பாற்றுகிறானா?
கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலியாவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவ்வப்போது நடப்பதுதான்.
அந்த நேரத்தில் கொஞ்சம் சலசலப்பு அதற்குப்பின் - வழக்கத்தால் மாடுகளும் செக்குச் சுற்றும் எனும் தன்மையில் பக்த யாத்திரை கிளம்பி விடுவார்கள்.
இவ்வளவு அமளிகள் -_ அவலங்கள் நடத்தும் பத்ரிநாத் பனிலிங்கத்தைச் சேவிக் கப் பக்தர்கள் பயணம் என்று சேதி வரு கிறதே -_ எங்குப் போய் முட்டிக் கொள்ள?
எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பட்டியல்:
இந்தியாவில் நடந்த பெரிய நெரிசல்கள்!
ஏப்ரல் 14, 1986 : அரித்வார் பாலத்தில் நெரிசல்: 46 பேர் சாவு.
நவம்பர் 9, 1986 : அயோத்திராமன் கோயில் நெரிசல்; 32 பேர் சாவு.
பிப்ரவரி 18, 1992 : கும்பகோணம் மகாமக விபத்து; 60 பேர் சாவு.
ஜூலை 15, 1996 : உஜ்ஜெய்னி மற்றும் அரித்வார் நெரிசல்; 60 பக்தர்கள் பலி.
ஜுன் 1997 : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கின் போது யாகத் தீப்பற்றி பந்தல் எரிந்து 42 பேர் பரிதாப மரணம்.
1999 : மகர ஜோதியின் போது கூட்ட நெரிசலில் 53 பக்தர்கள் பலி!
ஆகஸ்டு 27, 2003 : நாசிக் கோதாவரி கும்பமேளா நெரிசல்; 41 பேர் சாவு, 150 பேர் காயம்.
சனவரி 2004 : சிறீரங்கம் புரோகிதத் திருமணத்தில் தீப்பற்றி மணமகன் உட்பட 52 பேர் மரணம்.
ஜனவரி 25, 2005 : மராட்டிய மாநிலம் சதாராவிலுள்ள குலபாய் கோவில் நெரிசல்; 340 பேர் சாவு.
நவம்பர் 4, 2006 : பூரி ஜெகந்நாத் கோவில் விழா நெரிசல்: 4 பேர் பலி, 24 பேர் காயம்.
ஆகஸ்டு 13, 2007 : ஜார்கண்ட் வைத்தியநாத் கோவில் நெரிசல்: 11 பேர் சாவு, 30 பேர் காயம்.
அக்டோபர் 14, 2007 : வதோதரா அருகே மாகாளி கோவில் நெரிசல் , 6 பேர் சாவு, 12 பேர் காயம்.
ஜனவரி 3, 2008 : விஜயவாடா அருகே கனக துர்க்கா கோவில் நெரிசல்,  6 பேர் சாவு, 12 பேர் காயம்.
மார்ச் 27, 2008 : மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் கோவில் விழாவில் நெரிசல்: 9 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஜூலை 4, 2008 : பூரி ரத யாத்திரை நெரிசல்; 6 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஆகஸ்டு 3, 2008 : இமாச்சலப் பிரதேசம் - பிலாஸ்பூர் - மலைக்கோயில் விழா நெரிசல்; 150 பேர் சாவு.
இதற்கெல்லாம் என்ன பதில்?
தன்னை நாடி வந்த பக்தர்களையே காக்க முடியாத கடவுள்மீது சக்தியை ஏற்றி வாய் கிழியப் பேசுவதில் பொருள் இருக்க முடியுமா?
பக்தியின் சாயமும், கடவுள் சக்தியின் நிறமும் வெளுக்க ஆரம்பித்தவுடன் என்ன செய்வார்கள் தெரியுமா?
ஏதோ கடவுள் குற்றம் நடந்திருக் கிறது? இரவில் பக்தர்கள் அந்தக் கோயில்களில் தங்கியதால் கடவுளுக்குக் கோபம் என்று திசை திருப்புவார்கள்?
கடவுளுக்குக் கோபம் வரும்; - தம் பக்தர்களைப் பலி கொள்ளும் என்றால் அதற்குப் பெயர்தான் கடவுளா? என்ற கேள்வி எழும். கருணையே உருவான வன் கடவுள் என்ற கதையெல்லாம் கந்தையாகி விடாதா?
காளஸ்தி கோயில் கோபுரம் நெடுஞ் சாண்  கிடையாக விழுந்தது என்றவுடன், மக்கள் பகவான் சக்தியைக் கேலி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து, அதற்கொரு புதுக்கதை ஜோடித்து விடுவார்கள்.
சாந்தி கழிக்க வேண்டும் என்று கிளப்பி விடுகிறார்கள்; ஏதோ நடக்கப் போகிறது _ அதற்கான அறிகுறி இது என்று கதை கட்டுவார்கள். அதிலும் பார்ப்பனப் புரோகிதக் கும்பலுக்குதான் கொண்டாட்டம் வருமானம்.
கோயில் இருந்தாலும் லாபம், இடிந்தாலும் கொள்ளை லாபம்! இப்படி ஒரு சுரண்டல் தந்திரத்தை உலகில் வேறு எங்கு காண முடியும்?
சிறீரங்கத்தில் வைதீகக் கல்யாணத் தின்போது ஓம குண்டத்தில் தீயால் பந்தல் தீப்பிடித்து மணமகன் உட்பட 52 பேர் பலியானார்கள் என்றவுடன், பார்ப்பனச் சுரண்டல் தொழிலான வைதிகக் கல் யாணக் கடையை இழுத்து மூட வேண் டிய நிலை  ஏற்பட்டால் என்னாவது? மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற அச்சம் உலுக்க, காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் - செய்தார் தெரியுமா?
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயி லில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தில் மோட்ச விளக்கை ஏற்றச் சொன்னார்.
புரிகிறதா? ஓம குண்டத் தீப்பற்றி கருகிச் செத்தவர்களை மோட்சத்துக்கு அனுப்புகிறார்களாம். இந்தச் சாமர்த்தியம் யாருக்கு வரும்?
தீயிலேயே மோசமான தீ பக்தீயா யிற்றே. அந்தப் பலகீனத்தைப் பயன்படுத்தி பக்தர்களை மேலும் மேலும் முட்டாள் களாக்கி  சுரண்டல் தொழிலை ஜாம் ஜாம் மென்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.
உலகம் போற்றும் உத்தமராகக் கருதப்பட்ட காந்தியார் அவர்களை நாதுராம் கோட்சே என்னும் இந்து வெறிக் கொடியவன் படுகொலை செய்த நேரத்தில், அந்தக் கோபம் இந்து மதத்தின் மீதும் பார்ப்பனர்கள்மீதும் திரும்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் என்ன செய்தார் அன்றைய காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி தெரியுமா?
எல்லாப் பாவங்களுக்கும் தோஷம் கழிப்பது ஸ்நானம் செய்வதன் மூலமாகத் தான்! இந்துக்கள் அனைவரும் அதனைச் செய்யுங்கள் என்று சொன் னாரே பார்க்கலாம்.
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டு மானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம் தான் கடவுள், மதம், கெட்ட இடமாகும் (விடுதலை 24.4.1967) என்றாரே தந்தை பெரியார் - எண்ணிப் பாருங்கள்  - பொருத்திப் பாருங்கள் - புத்திக்குப் புரியும்.
கூட்டிக் கழித்துப் பாருங்கள் வைதி கத்தின் வண்டவாளம் புரியும். பகுத்தறி வின் பரிமாணமும் பளிச்சிடும்!
பக்திக்கொள்ளை!
உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் பக்தர்கள். அந்த நேரத்தில்கூட சாமியார்கள் என்ன செய்தார்களாம் -  பொருள்களை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கியில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். செத்துப் போன பக்தர்களின் உடல்களை வெட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்திருக்கின்றனர். பெண்களிடம் பூசாரிகள் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார்கள் - பக்தியின் ஒழுக்கம் இதுதான்.
-விடுதலை 29.6.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக