திங்கள், 16 நவம்பர், 2015

நாற்றம் பிடித்த இந்து மதம்! (முந்தைய - கண்ணதாசன்)



பக்தியினால்தான் நாடு முன்னேறும்! என்று அறிவுரை வழங்கியுள்ளார் ஒரு பரமபக்தர். யாரவர் எந்த மடத்து அதிபதி? எந்த கோயில்பூசாரி? என்றெல்லாம் மூளையைக் குழப்ப வேண்டாம், நண்பர்கள். அதிகாரம் கைக்கு வராதா மீண்டும்? என்று அடிக்கடி பக்தி பண்ணிக்கொண்டிருக்கும் ஆச்சாரியார்-தான் மேற்கண்ட அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆச்சாரியாருக்கு, திடீர் திடீரென்று இது மாதிரி சித்தப்பிரமை ஏற்படுவது வழக்கம். சமீபகாலத்து அரசியலில் அவருக்கு விழுந்த பலமான அடி, இப்போது அவரை பரம பைத்தியமாக ஆக்கிவைத்துள்ளது. தினசரி அவரது மூளையில் என்னென்ன உதிக்கின்றனவோ, அவற்றாலெல்லாம் நாடு முன்னேறும் என்று உறுதியாக முடிவு-கட்டுகிறார். அவரது கண்களில் திடீரென்று ஒரு பனைமரம் தட்டுப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அன்றையப் பத்திரிகைக்கு, பனைமரத்தால் நாடு முன்னேறும்! என்றொரு அறிக்கை விடுவார். தற்செயலாக ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றே நாட்டை முன்னேற்றும்! என்று ஆணித்தரமாக அறைவார். அவரது அரசியல் வாழ்வில் இதெல்லாம் சாதாரணச் சம்பவங்கள்.
கடவுள் சிலைகளை...
இந்த நாட்டை இவ்வளவு காலமாக பக்தி எவ்வளவு முன்னேற்றி இருக்கிறது என்பது பிஞ்சு மூளைகளுக்குக்கூட நன்றாகத் தெரியும்.
வெளிநாட்டிலிருந்து வருகிற ஒருவனை அழைத்து, பக்கத்தில் உட்காரவைத்து, இந்திய உபகண்டத்தின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை விளக்கமாகக் கூறி, இந்த நாட்டைச் சீர்படுத்துவதற்கு ஒரு திட்டம் சொல் என்று கேட்டால், முதல் முதலில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளை எல்லாம் உடைத்து கடலில் போடு என்றுதான் கூறுவான்! அவ்வளவு அலங்கோலத்தை இந்த நாட்டில் பக்தி உண்டுபண்ணியிருக்கிறது!
மனிதன் மனதை முழுக்க முடக்கி வைத்து தேரைப்பிள்ளை யாக்கி வைத்திருக்கிறது பக்தி. தன்னம்பிக்கை அணுவளவும் இன்றி, மனிதன் அச்சத்தின் அடிமையாகி, கோழையாய், பேடியாய், ஆமையாய் ஆனதற்கு அறிவற்ற பக்தியே காரணம் என்பதை, குன்றிமணி அளவு மூளையுள்ளவன் கூடக் கண்டுகொள்ள முடியும். தெளிவற்ற மனோபாவம், சீர்குலைந்த வாழ்க்கை நிலை, இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாய் நிற்பது பக்திதான் என, நாட்டின் நல்வாழ்வில் உண்மையிலேயே அக்கறை கொண்டோர் சுலபமாகக் கூறிவிடுவர்.
கண்ணனிடத்தில் பக்தி கொண்ட மீரா...
கண்ணனிடத்திலே பக்தி கொண்ட மீரா, தன் கணவனின் வாழ்வைப் போர்க்களமாக்கி, அணுஅணுவாய் அவன் வாழ்வைச் சிதைத்த கதையிலிருந்து, சிவநேசன் ஒருவன் பிள்ளைக்கறி சமைத்ததுவரை, பலவிதக் கதைகளும் பக்தியின் இழித் தன்மையைத்தான் பாடுகின்றன.
பக்தியினாலே வாழ்வில் நல்லின்பங் கண்டவன் ஒருவனை இதுவரை எந்த ஏடும் எடுத்தோதவில்லை. ஒவ்வொருவனும் வாழத்தெரியாத வரட்டுத்தனத்தில் பக்தனாக மாறி, நடைப்பிணமாய் வாழ்ந்து 
செத்திருக்கின்றான்.
பகுத்தறிவில் வாழ்க்கையை சமைத்துக் கொண்டவன்தான் வாழ்வாங்கு வாழ்ந்து சுகம் பெற்றிருக்கிறான். வீர வரலாற்றிற்கும் புராணத்திற்கும் உள்ள பேதமை, பகுத்தறிவின் உயர்வையும், பக்தியின் கேவலத்தன்மையையும் எடுத்துக்காட்ட நல்ல உதாரணமாகும்.
மூடத்தனம் ஒரே சொத்து!.......
பக்தியைப்பற்றிப் பேசுகிறவன் காண்கிற சுகத்தை, பக்தி செய்பவன் காணுவதே இல்லை. பக்திப்பிரசாரகன், அதைத் தொழிலாகவே நடத்துகிறான். பக்தி செய்யப்போகிறவன் அதற்குப் பலியாகிறான். இன்று பக்திபற்றி பிரசாரம் செய்யும் அரசியல் விதவையாம் ஆச்சாரியாருக்கு உண்மையிலேயே பக்தி கிடையாது. அவரது சீடராம் சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரோ, மற்றையத் தமிழர்களோ திருப்பதிச்சாமிக்கு மயிர்கொடுப்பதுபோல் ஆச்சாரியார் குடும்பத்தினர் கொடுப்பதில்லை.
தமிழன் மயிரில்தான் கடவுள்களுக்கும் ஏகப்பட்ட பிரியம்! இப்படி மயிர்வாங்கிச் சாமிகளும் தமிழ்நாட்டில் ஏராளம். இளித்த வாயர்களிடம் எதைச் சொன்னாலும் ஏற்பார்கள் என்பது ஆச்சாரியாருக்கு நன்றாய்த் தெரியும். தாடியிலும் மீசையிலும் பக்தி தொங்குவதாகக் கருதுகிற மூடத்தனம் இந்த நாட்டின் ஒரே சொத்து என்பதும் அவருக்குப் புரியும்.
நாற்றம் பிடித்த இந்துமதம் - உற்பத்தியான கிருமிகளே கடவுள்கள்!
எனவே, அறிவுள்ள எவனுமே ஏற்கமுடியாத பக்திப் பிரசாரத்தை அவர் சுலபமாகச் செய்கிறார். பக்கமேளங் கொட்ட, தமிழனாகப் பிறந்து தொலைத்த சில சோற்றுச் சுவர்களும் போகின்றன.
நாற்றம் பிடித்த இந்துமதமும் அதில் உற்பத்தியான கிருமிகளாம் கடவுள்களும் தனது வர்க்கத்திற்குச் சோறு போடுவது தடைப்பட்டுவிடக் கூடாது என்பது ஆச்சாரியார் வேலை. தாளம்போடப் போகிறவர்களுக்கு கூலிக் கவலை. இதற்கிடையில் இருபதாம் நூற்றாண்டிலும் இவ்வளவு மகத்தான மூடர்கள் இருக்கிறார்களே என்பது நமது கவலை.
அபாரமான நகைச்சுவை!
எண்ணிப் பார்த்தால், ஆச்சாரியார் செய்யும் பக்திப் பிரசாரம், அவருடைய மூளைபற்றிய சந்தேகத்தைக் கிளப்புவது புரியும். பக்தியினால் நாடு முன்னேறும் என்று அவர் புலம்புவது, நினைத்து நினைத்துச் சிரிக்க வேண்டிய அபாரமான நகைச்சுவையாகும்.
(இன்று அர்த்தமுள்ள இந்து மதம் எழுதும் இதே கண்ணதாசன் 1.1.1955 தென்றல் இதழில் எழுதிய கட்டுரைதான் இது! மதவாதிகள் சுயநலவாதிகள் என்பதற்கு கண்ணதாசனின் பிறழ்வே ஆதாரம்.)
-உண்மை இதழ்,1-15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக