10.06.1934- புரட்சியிலிருந்து...
முதலில் கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லு கிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன்.
நான் அறிந்த மட்டில் ஆட்டைக் கால்களைக் கட்டிக் கீழே தள்ளி கொம்பைப்பிடித்து ஒருவர் அமிழ்த்துக் கொண்டு வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க ஒருவர் நன்றாக மூச்சுவிடாமல் கட்டி சத்தம் போடாமல் செய்து ஒருவர் விதர்களை கிட்டி போட்டு நசுக்க, மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்து கிழித்து அதன் சிற்சில உறுப்புகளைத் தனித்தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப் படுகிறதாம்.
இது சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக் கூடிய ஜாதியார் செய்யக்கூடியதா? அகிம்சைக்காரருக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள் மேல் ஜாதிக் காரர்களா? இவர்களுக்குப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா?
மற்றவர்களைப் பார்த்து கீழ் ஜாதியார் என்றும், ஜீவகாருண்யமில்லாத வர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் பாவிகள் என்றும் பாதகர்கள் என்றும் அழைக்க இவர்களுக்கு உரிமை உண்டா? யோசித்துப் பாருங்கள்.
ஆடு, கோழியைத் தலைகீழாகப் பிடிப்பதையும், தர, தரவென்று இழுப்பதையும் ஜீவஇம்சை என்று சட்டஞ்செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்யவேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதைத் தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள்.
இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதிதானே மனிதர்க்கும் ஏற்படும். மத சம்பந்தத்தில் அரசாங்கம் நுழைவ தில்லை என்று சொல்லி அரசாங்கம் சுலபமாய் தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் நாளைக்கு நரமேதியாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைப் பாதகம் செய்தால் மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்குமா?
அது போலவே இப்போது கருதி இப்படிப்பட்ட மூர்க்கத் தனமான சித்திரவதைக் கொலைகளையும், இம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக்கூடாது?
- விடுதலை நாளேடு,22.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக