சனி, 23 டிசம்பர், 2017

ஜீவகாருண்யம்


10.06.1934- புரட்சியிலிருந்து...



இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்குவார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியாதையும், ஜீவகாருண் யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால், சாப்பிட்டால் அவர்களிடம் குரோதமும், வெறுப்பும் கொள் ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு முகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கட்சிகளும் உண்டாகின்றன. இந்துக்களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப்படும் வகுப்பார், மாட்டு மாமிசம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக்காரர்கள் என்று கருதுவதாகவும், அதனாலேயே அவர்களைத் தொடுவதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப் படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதைச் சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப் பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்து கிறார்கள். அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டு விட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகாருண்யம் பலப்பல ஜீவன்கள் பெயரால் எத்தனையோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பட்சி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப்படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம். மக்கள் சமுக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்து கிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடைமுறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமான தென்றே சொல்லலாம்.
- விடுதலை நாளேடு,22.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக